என் மலர்tooltip icon

    உலகம்

    • வங்கதேசத்தில் இருந்து தப்பியோடிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
    • ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    வங்கதேசத்தில் கடந்த வருடம் போராட்டம் வெடித்தது. இதனால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் மீது முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு பல வழக்குகளை பதிவு செய்தது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா முன்னணி வெளிநாடு மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மீடியாக்களுடன் உரையாடினார். இந்த நிலையில் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரை அழைத்து, இந்த விசயம் தங்களுக்கு மிகக் கவலை அளிக்கிறது. ஷேக் ஹசீனா மீடியாக்களை சந்திப்பதை உடடினாக துண்டிக்க வேண்டும் என்ற வங்கதேசம் வேண்டுகோள் விடுத்ததாக, இந்திய அரசிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

    • ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
    • இன்று காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார், காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.

    கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உள்ளிட்ட பல மருத்தவர்கள் சிக்கினர்.

    முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக இன்று காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டெல்லி கார் வெடி விபத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,"

    டெல்லி கார் வெடி விபத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

    துயர்மிகு நேரத்தில் இந்தியாவிற்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்" என்றார்.

    • டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது
    • திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை

    அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன.

    இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.

    H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

    இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், H-1B விசா திட்டம் குறித்து தனது முந்தைய நிலைப்பாடுகளில் இருந்து மாறி, அதற்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், "தனது நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும் சிக்கலான, பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை, உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம்" என்று தெரிவித்தார்.

    • அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
    • பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    இதையடுத்து 758 மீட்டர் நீளமுள்ள ஹாங்கி பாலத்தில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.



    • நமது முழு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அமைப்பையும் அழிக்க யாரும் விரும்பமாட்டார்கள்.
    • சர்வதேச கல்விக் கட்டணத்தை நம்பி உள்ள பல்கலைக்கழகங்களையும் பாதிக்கும்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்தநிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக டிரம்ப் திடீரென்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    அவர் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் மாணவர்களில் பாதி பேரை நீக்கிவிட்டு, நமது முழு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அமைப்பையும் அழிக்க யாரும் விரும்பமாட்டார்கள்.

    நான் அதைச் செய்ய விரும்பவில்லை. சர்வதேச மாணவர்கள் இருப்பது நன்மை பயக்கும் என்று நான் நம்புகிறேன். நான் உலகத்துடன் ஒத்துப்போக விரும்புகிறேன்.

    பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்பட வெளிநாட்டு மாணவர்களை நம்பி உள்ளன. சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைவது அமெரிக்காவில் உள்ள பாதி கல்லூரிகளை வணிகத்திலிருந்து வெளியேற்றக்கூடும்.

    வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பொரு ளாதாரத்திற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை பங்களிக்கிறார்கள். உள்நாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக செலுத்துகிறார்கள். நான் அவர்களை விரும்புகிறேன் என்பதைவிட அதை ஒரு வணிகமாகவே பார்க்கிறேன்.

    வெளிநாட்டு மாணவர் சேர்க்கையைக் குறைப்பது சிறிய கல்லூரிகளையும், வரலாற்று ரீதியாக சர்வதேச கல்விக் கட்டணத்தை நம்பி உள்ள பல்கலைக்கழகங்களையும் பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி கார் வெடிப்பில் பலியானவர்களுக்காக அதே மைதானத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
    • டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பூடான் மன்னர் இரங்கல் தெரிவித்தார்.

    பிரதமர் மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று காலை தனி விமானம் மூலம் பூடான் சென்றார். தலைநகர் திம்புவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

    நேற்று சாங்லிமெதாங் மைதானத்தில் நடந்த பூடான் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்க்சுக் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, டெல்லி கார் வெடிப்பு சம்பவம் பற்றி குறிப்பிட்டார்.

    இதையடுத்து டெல்லி கார் வெடிப்பில் பலியானவர்களுக்காக அதே மைதானத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்க்சுக் தலைமையில், ஆயிரக்கணக்கான பூடான் மக்கள் முன்னிலையில் பிரார்த்தனை நடந்தது.

    கார் வெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு பூடான் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் பூடான் பயணத்தின்போது, டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பூடான் மன்னர் இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • முன்னாள் அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்சே தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
    • அதிபராக தேர்வான கேத்தரின் 1997-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினாா்.

    டப்ளின்:

    ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இடதுசாரியான கேத்தரின் கோனொலி (வயது 68) சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார்.

    அவருக்கு அங்குள்ள இடதுசாரி கட்சிகளான சின் பெயின், தொழிலாளர் கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

    இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே அவர் 63 சதவீதம் வாக்குகளை பெற்றார். எனவே அவர் அபார வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்சே தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

    அதிபராக தேர்வான கேத்தரின் 1997-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினாா். 2006-ம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த கட்சியில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக தொடர்ந்தார். மேலும் இஸ்ரேல்-காசா போரில் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்ததன் மூலம் சர்வதேச அளவில் அவர் கவனம் பெற்றார்.

    இந்தநிலையில் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழா அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதன்மூலம் நாட்டின் 10-வது மற்றும் மூன்றாவது பெண் அதிபராக அவர் பதவியேற்றார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • C-130 ரக விமானம் அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
    • விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

    அஜர்பைஜான்-ஜார்ஜியா எல்லைக்கு அருகே துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.

    துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில், C-130 ரக விமானம் அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளது. 

    ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் அந்த விமானத்தில் இருந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஜார்ஜியா அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

    விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

    • குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
    • குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.

    குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

    குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான், மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான் பிரதிநிதிகள் இந்திய ஆதரவுடன் நடத்தினர் என்று தெரிவித்தார். 

    • சிரியாவில் மோதல் ஏற்பட்ட பிறகு கடந்த 8-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
    • 6-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டுள்ளன.

    சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டு நடைபெற்றுள்ளது. திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருட்டுப் போனது இன்று காலை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    சிரியாவின் தொல்பொருட்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கான இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர், 6 சிலைகள் திருடப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு அதிகாரி பல சிலைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் சரியான எண்ணை அவர் குறிப்பிடவில்லை. அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடாததால், இரண்டு அதிகாரிகளும் பெயரை குறிப்பிடவில்லை.

    50 வருட ஆசாத் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, கொள்ளை நடக்க வாய்ப்புள்ளதாக கருதி அருங்காட்சியகம் மூடப்பட்டது. கடந்த ஜனவரி 8-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

    சிரியாவில் மார்ச் 2011-ல் மோதல் தொடங்கிய பிறகு, அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை டமாஸ்கஸுக்கு கொண்டு வந்தனர்.

    • மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
    • இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர்.

    இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் உடனே மீட்புப் பணிக்கு விரைந்து சென்றனர்.

    இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. உயர் அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் அமைந்த இந்த பரபரப்பான பகுதியில் நடந்த இச்சம்பவம் அங்கு பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டுகிறது.

    இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    சிட்னி:

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்கிறது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    ×