என் மலர்tooltip icon

    உலகம்

    • வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர்.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புல்லர்னில் உள்ள 4 பள்ளிகளுக்கு தொடர் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தது.

    அங்குள்ள சன்னிஹில் பள்ளி, யூனியன் பள்ளி, டிராய் மற்றும் பெர்ன் டிரைவ் பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளியில் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு யாரும் உள்ளே செல்லாமல் இருக்க பூட்டப்பட்டது.

    பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர். இறுதியில் அது வெறும் புரளி என தெரியவந்தது.

    இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பங்களால் புல்லர்டன் பகுதி பரபரப்பாக காணப் பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி நிலவியது.

    • இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
    • இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.

    தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இந்தநிலையில் இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என அதிபர் டிரம்ப் சொல்லி வருகிறார். மேலும், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒருவர் கூறும் போது,"இந்தியாவுடன் எங்களுக்கு 2 விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

    நிச்சயமாக எங்களுக்குள் ஒரு பரஸ்பர பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்" என தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது புக்கர் பரிசு.
    • இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய்க்கு அறிவிக்கப்பட்டது.

    லண்டன்:

    இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் புக்கர் பரிசு இங்கிலாந்து அரசாங்கத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் நாடுகளுக்கு வழங்கப்பட்ட இந்த விருது தற்போது உலக நாடுகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தாண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய் எழுதிய பிளெஷ் என்னும் புனைவு நாவலுக்கு அறிவிக்கப்பட்டது.

    கனடாவில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து தற்போது ஹங்கேரி நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இது பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவு குறித்து பேசப்படுவதாக அமைந்துள்ளது.

    லண்டனில் அவருக்கு புக்கர் பரிசுக்கான நினைவு சின்ன கோப்பையும், ரூ.55 லட்சத்திற்கான (66 ஆயிரம் டாலர்கள்) காசோலையும் வழங்கப்பட்டது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு போட்ஸ்வானாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இந்தப் பயணத்தின் போது 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது.

    காபோரோ:

    ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் காபோரோனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது. கலாஹரி பாலைவனத்தில் உள்ள கான்சி நகரத்திலிருந்து 8 சிவிங்கி புலிகள் காப்பகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

    இந்த நிகழ்வில் போட்ஸ்வானாவின் ஜனாதிபதி டூமா கிடியோன் போகோவும் கலந்துகொண்டார். இரு நாடுகளையும் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள், இடமாற்ற செயல்முறை குறித்து ஜனாதிபதிகளுக்கு விளக்கினர்.

    அப்போது பேசிய ஜனாதிபதி முர்மு, இந்தப் பரிசு போட்ஸ்வானாவின் வனவிலங்கு பாதுகாப்புக்கான வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என தெரிவித்தார்.

    அதன்பின் பேசிய போட்ஸ்வானா ஜனாதிபதி டூமா கிடியோன், இந்தியாவின் குனோ தேசிய பூங்காவில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்த சிவிங்கி புலிகள் சேரும். இது அதன் இனத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்கு உதவும். இந்தியாவில் சிவிங்கி புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

    8 சிவிங்கி புலிகளும் போட்ஸ்வானாவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும். வரும் வாரங்களில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். இந்த சிவிங்கி புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்படும். 2022ம் ஆண்டில் இந்தியா சிவிங்கி புலிகள் இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது.

    அப்போது 8 சிவிங்கி புலிகள் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன. 2023ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் வந்தன.

    கடந்த 2022-ல் தொடங்கிய இந்த திட்டத்தின்படி மத்திய பிரதேசத்தின் குனோ உயிரியல் பூங்காவில் தற்போது 27 சிவிங்கி புலிகள் உள்ளன. போட்ஸ்வானாவில் இருந்து வரும் 8 சிவிங்கி புலிகள் உடன் இந்தியாவில் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

    • வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
    • இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

    இதைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.

    புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை நவம்பர் 17-ம் தேதி வெளியிட இருப்பதாக அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

    • அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டது.
    • இந்த திட்டத்துக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.

    கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.

    இதனை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை இடைக்கால அரசு ரத்து செய்தது. இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன.

    இந்நிலையில், வங்கதேச பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை ரத்து செய்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கண்டித்து அந்நாட்டில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒருபுறம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் வழக்குகளை கண்டித்து அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால் வங்கதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    • ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நேதன்யாகு மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
    • ஜனாதிபதி அலுவலகம், "யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

    ஊழல் வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

    ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நேதன்யாகு மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.

    குறிப்பாக அவரும் அவரது மனைவி சாராவும் கோடீஸ்வரர்களிடமிருந்து நகைகள் உள்ளிட்ட 260,000 டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை வாங்கியது, தனக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.

    இந்நிலையில் நேதன்யாகு மீதான வழக்கை கைவிடும்படி டிரம்ப், இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இஸ்ரேலிய நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து, நேதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், நேதன்யாகுவுக்கு எதிரான நடவடிக்கை அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாதது என்றும் டிரம்ப் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

    டொனால்டு டிரம்பின் பெரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நேதன்யாகு கூறினார். இருப்பினும் இந்த கடிதத்திற்கு பதிலளித்த இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம், "யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே தன் மீதான ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற நேதன்யாகு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

    • இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.
    • அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வரலாற்றில் மிகப்பெரிய பொது முடக்கத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொள்கிறது.

    அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய அரசு முடக்கம், எந்த மாற்றமும் இல்லாமல் 43வது நாளாக இன்று வரை தொடர்ந்தது.

    இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர். 670,000 பேர் வேலை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அத்தியாவசிய சேவைகளை கூட அணுக முடியவில்லை.

    அமெரிக்காவில் உள்ள 40 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் இந்த நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனுடன், அமெரிக்காவில் வேலையின்மையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 4.6 சதவீதமாக இருந்த சராசரி வேலையின்மை விகிதம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    டிரம்பின் பிடிவாதமே இந்த பணிநிறுத்தம் தொடரக் காரணம் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறினர்.

    இந்நிலையில் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிதி மசோதாவை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது .

    மசோதாவுக்கு ஆதரவாக 222 உறுப்பினர்களும், எதிராக 209 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஆறு ஜனநாயகக் கட்சியினரும் மசோதாவை ஆதரித்தனர்.

    இந்த மசோதா செனட்டில் நிறைவேற்றப்பட்டு, பிரதிநிதிகள் சபைக்கு சென்றடைந்துள்ளது. இதன் மூலம் தற்காலிகமாக வரும் ஜனவரி 30 ஆம் தேதி வரை அமெரிக்காவில் அரசு சேவைகளுக்கான நிதி விடுவிக்கப்படும்.

     இந்த நிதி மசோதாவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.  இதனைத்தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்க உள்ளது. 

    இருப்பினும், விமான சேவைகள் உட்பட அமெரிக்கா இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சிறிது நேரம் ஆகும்.  

     முன்னதாக பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அமைப்பான காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிடப்பட்டது.

    1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • வெள்ளை மாளிகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பானது நடைபெற்றது.
    • வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சிரியா அதிபர் அகமது அல்-ஷரா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். சிரியா அதிபர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தது இதுவே முதல்முறையாகும்.

    வெள்ளை மாளிகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பானது நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, சிரியா அதிபருக்கு வாசனை திரவியத்தை அதிபர் டிரம்ப் பரிசளித்தார்.

    அப்போது, "இது ஆண்களுக்கான வாசனை திரவியம், இதோ," என்று டிரம்ப் சிரியா அதிபரிடம் கூறினார். மேலும் அவர் அந்த வாசனை திரவியத்தை சிரியா அதிபர் மீது தெளித்து, "இது மிகச் சிறந்த வாசனை திரவியம்" என்று கூறினார். பின்னர் அவர், "மற்ற வாசனை திரவியங்கள் உங்கள் மனைவிக்கானது. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?" என்று டிரம்ப் கேட்க, அவரும் ஒன்றே ஒன்று தான் என பதிலளித்ததால் உலகத் தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

    இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது.
    • மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.

    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இருநாடுகளிடையே ராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது. மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், டோக்கியோவில் நாடாளுமன்ற கூட்டத்தில் சனே தகைச்சி பேசினார். அப்போது, தைவான்மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது

    ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு மன்னிப்பு கோரி சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    • ஜி7 நாட்டின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு கனடாவில் நடைபெற்றது.
    • இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

    ஒட்டாவா:

    ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது.

    இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

    இந்நிலையில், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்க் ரூபியோவை நேரில் சந்தித்து உரையாடினார்.

    முன்னதாக கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெரு நாட்டில் சரக்கு வேன் மீது பேருந்து வேகமாக மோதியது.
    • இதில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 37 பேர் பலியாகினர்.

    லிமா:

    பெரு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லாத சாலைகள், உரிய எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமை ஆகியவற்றால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

    இந்நிலையில், பெரு நாட்டை சிலி நாட்டுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் சரக்கு வேன் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

    லாமோசாஸ் என்ற நிறுவனத்தின் பேருந்து காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்தில் இருந்து அரேக்விபா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 60 பேர் இருந்தனர்.

    வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்றின் மீது பேருந்து மோதியது. மோதிய வேகத்தில் 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே 37 பேர் பலியாகினர்.

    விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். மீட்புப் பணிகளில் இறங்கிய அவர்கள் இடிபாடுகளில் இருந்த 37 சடலங்களை மீட்டனர்.

    படுகாயம் அடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது.

    ×