வங்கதேசத்தில் இடைக்கால அரசைக் கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டம்!

அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
வங்கதேசத்தில் இடைக்கால அரசைக் கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டம்!
Published on

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.

கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை இடைக்கால அரசு ரத்து செய்தது. இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன.

இந்நிலையில், வங்கதேச பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை ரத்து செய்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கண்டித்து அந்நாட்டில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருபுறம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் வழக்குகளை கண்டித்து அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால் வங்கதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com