என் மலர்tooltip icon

    உலகம்

    • போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 போ கொல்லப்பட்டனர்.
    • காசாவில் சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

    பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 போ கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

    இந்நிலையில், "ஈரானை விட பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல்தான்" என அறிவித்து Oxford Union Society தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான விவாத சங்கமான Oxford Union Society-யில், பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.

    • இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
    • இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.

    இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.

    இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை GenZ போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது.
    • இதற்காக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்துகிறது.

    பெர்லின்:

    ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.

    இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி ராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது.

    இதற்காக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்கவேண்டும்.

    இந்த ராணுவ சேவையானது ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது

    இதுதொடர்பான மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இடதுசாரி கட்சியினர் இந்த கட்டாய ராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    • கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் நகரில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பில் ரெயில் பணிமனை கட்டும் பணி நடந்து வந்தது.

    இதில் 36 புதிய டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே, கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

    அதன்பின் யாரும் எதிர்பாரா வகையில் திடீரென அவரே அந்த டிராம் வண்டியை சிறிது தூரத்துக்கு ஓட்டிச் சென்றார்.

    அதன்பிறகு டிராம் வண்டிக்குள் பொதுமக்களுடன் பயணித்தார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    • பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்தது.
    • இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    ஸ்டாக்ஹோம்:

    ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த பேருந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்தச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பேருந்தின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    • துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடந்தியுள்ளது.
    • இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷியா உக்ரைன் போருக்கான அதிக நிதியை ஈட்டும் நிலையில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் இரவோடு இரவாக ரஷியாவின் துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடந்தியுள்ளது.

    இந்த துறைமுக நகரம் ரஷியாவின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையம் ஆகும்.

    இந்த நிலையில் உக்ரைன் தாக்குதலில் நகரத்தின் மதிப்புமிக்க உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷியா உக்ரைன் போருக்கான அதிக நிதியை ஈட்டும் நிலையில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்த தாக்குதலில் துறைமுகம், எண்ணெய் டெர்மினல் மற்றும் ரஷியாவின் S400 வான் பாதுகாப்பு அமைப்பு சேதமடைந்ததாக உக்ரைன் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் அப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. முன்னதாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியத்தில் 7 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.    

    • சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.
    • உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் புகார்கள் அளித்து வந்தனர்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன.

    இறக்குமதி வரி உயர்ந்ததால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.

    இந்தநிலையில் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களின் மீதான வரிகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

    இந்த புதிய வரி விலக்கு வருகிற 20-ந்தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நிர்வாக உத்தரவு மூலம் தேயிலை, பழச்சாறு, கோகோ, மசாலா பொருட்கள், வாழைப் பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரிகள் நீக்கப்படுகின்றன.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறுமபோது," காபி போன்ற சில உணவுகள் பொருட்கள் மீதான வரியை நாங்கள் குறைத்துள்ளோம்" என்றார்.

    உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் புகார்கள் அளித்து வந்தனர். இது சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் உள்ளூர் தேர்தலில் எதிரொலித்தது.

    இந்த தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்தது. இதற்கு விலைவாசி உயர்வு பிரச்சினைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எச்-1பி விசா திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக டிரம்ப் கட்சியினர் தகவல்.
    • அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் ஓரம் கட்டப்படுகிறார்கள்.

    அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகளவில் இந்தியர்கள்தான் பெற்று உள்ளனர்.

    இதற்கிடையே எச்-1பி விசாவுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (ரூ.88 லட்சம்) உயர்த்தியது. எச்-1பி விசா திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக டிரம்ப் கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் எச்-1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியான மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார்.

    எச்-1பி விசா திட்டத்தை அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன. இதன் மூலம் அமெரிக்க ஊழியர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் ஓரம் கட்டப்படுகிறார்கள்.

    இதனால் எச்-1 பி திட்டத்தை முழுமையாக நிறுத்தும் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர போகிறேன். அமெரிக்கர்கள் உலகின் மிகவும் திறமையான மக்கள், மேலும் எனக்கு அமெரிக்க மக்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. நான் எப்போதும் அமெரிக்கர்களை முதன்மைப்படுத்துவேன்.

    எனது மசோதா ஊழல் நிறைந்த எச்-1பி திட்டத்தை நீக்கும் என்றார். சமீபத்தில் அதிபர் டிரம்ப், எச்-1பி விசா தொடர்பான தனது கருத்தில் இருந்து பின்வாங்கினார். அமெரிக்காவுக்கு திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் தேவை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பான் பிரதமர் தசைச்சி பேச்சு இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
    • சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    தைவான் தொடர்பாக ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை சீன அரசு எச்சரித்துள்ளது.

    கடந்த வாரம் டோக்கியோவில் பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். ஜப்பான் பிரதமர் தசைச்சி பேச்சு இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.

    மேலும், ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, ஜப்பான் பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், ஜப்பான் பிரதமரின் பேச்சு சீனா-ஜப்பான் பரிமாற்றங்களுக்கான சூழலைக் கடுமையாக பாதிக்கும். ஜப்பானில் உள்ள சீன குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

    • டேங்கர் லாரியில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்தது.
    • இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணம் வெதர்போர்டு நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த ஓட்டலுக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

    இதையடுத்து அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டன.

    இதுகுறித்து மீட்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்ததும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 36 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்தச் சம்பவத்தால் அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    • தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் இந்தியா-வைச் சேர்ந்த 'Farmlane பிரைவேட் லிமிடெட்' என்ற ரசாயன நிறுவனமும் அடங்கும்.
    • அமெரிக்க கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

    ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தயாரிப்பு திட்டங்களுக்கு ஆதரவளித்ததாகக் கூறி, இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

    தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் இந்தியா-வைச் சேர்ந்த 'Farmlane பிரைவேட் லிமிடெட்' என்ற ரசாயன நிறுவனமும் அடங்கும்.

    இந்த நிறுவனம், ஆகிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட மார்கோ கிளிங்கே நிறுவனத்துடன் இணைந்து, ஏவுகணை மோட்டார்களில் பயன்படுத்தப்படும் சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்க்ளோரேட் போன்ற ரசாயனப் பொருட்களை ஈரான் பெற உதவியதாக அமெரிக்க கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த ஜூலை மாதம், ஈரான் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆறு இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.    

    • தனி விமானம் மூலம் 153 பாலஸ்தீனர்கள் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையம் வந்தடைந்தனர்.
    • அதிகாரிகள் அவர்களை தரையிறங்க அனுமதிக்காமல் விமானத்திலேயே காத்திருக்க வைத்தனர்.

    150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களுடன் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமானம நிலையம் வந்த தனி விமானத்தில் (charter plane) இருந்து, அவர்களை இறங்க அனுமதிக்காததால் 12 மணி நேரம் உள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா மாநிலத்தில் உள்ள ஜோகன்னஸ்பர்க் ஓ.ஆர். டாம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை தனி விமானம் ஒன்று தரையிறங்கியது.

    இந்த விமானத்தில் 9 மாத கர்ப்பிணி உள்பட 153 பாலஸ்தீனர்கள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரேல் முத்திரை கொண்ட ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தென்ஆப்பிரிக்காவில் எங்கு தங்குவார்கள் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை.

    இதனால் அதிகாரிகள் அவர்களை விமானத்தில் இருந்து இறக்க அனுமதிக்கவில்லை. சுமார் 12 மணி நேரம் விமானத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் கூட தங்கவைக்கப்படவில்லை.

    சுமார் 12 மணி நேரம் கழித்து தென்ஆப்பிரிக்க மந்திரி தலையிட, அவர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர். பின்னர் தொண்டு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு தங்க இடம் கொடுக்க முன்வந்ததால், அவர்கள் தென்ஆப்பிரிக்கா தங்க அனுமதிக்கப்பட்டனர்.

    இஸ்ரேல்- காசா இடையிலான சண்டையில் காசா மக்களுக்காக தென்ஆப்பிரிக்கா குரல் கொடுத்தது. அப்படி குரல் கொடுத்த தென்ஆப்பிரிக்கா, இவ்வாறு செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு விமானங்களில் இதுபோன்று பாலஸ்தீனர்கள் வந்துள்ளனர். அவர்கள் காசாவில் இருந்து வந்தவர்களாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இவர்களுக்கான தனி விமானம் ஏற்பாடு செய்தது யார் என்பது தெரியவில்லை.

    இந்த விமானம் கென்யாவின் நைரோபியில் தரையிறங்கிய பின்னர், ஜோகன்னஸ்பர்க் வந்துள்ளது.

    ×