search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H1B"

    • ஹெச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடா நாட்டிற்கு வந்து பணிபுரிய அனுமதி
    • கனடாவில் எங்கும் எந்த ஒரு முதலாளியிடமும் வேலை செய்ய முடியும்

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே மென்பொருள் துறையில் தொழில்நுட்ப மற்றும் உயர் தொழில்நுட்பங்களில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மந்தமான உலக பொருளாதார சூழ்நிலையில், அங்கு வேலை இழந்தோருக்கு வேறு வேலை கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.

    தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கனடா நாட்டில் இருந்து ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

    அமெரிக்க ஹெச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடா நாட்டிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில்  பணி அனுமதி (Open Work Permit Stream) எனும் அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் உருவாக்கும் என்று கனடா குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேஸர் நேற்று அறிவித்தார்.

    கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிப்பதாவது:-

    இப்புதிய முடிவின் கீழ் வரப்போகும் ஜூலை 16 முதல் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் வரை கனடாவில் பணியாற்ற திறந்த பணி அனுமதி (open work permit) பெறுவார்கள். அவர்கள் கனடாவில் எங்கும் எந்த ஒரு முதலாளியிடமும் வேலை செய்ய முடியும். அவர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்கள் ஆகியோருக்கும் அவர்களின் தேவைக்கேற்ப வேலை அல்லது படிப்பு கிடைப்பதற்கு இந்த தற்காலிக குடியுரிமை விசா வழி செய்கிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிய கனடாவிற்கு வரக்கூடிய வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகின் மிகவும் திறமையான நபர்களுக்கான குடியேற்றத்தை கனடாவின் மத்திய அரசு உருவாக்கும்.

    இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.

    இருப்பினும், யார் யார் தகுதி பெறுவார்கள் என்பதை குடிவரவு அமைச்சர் சரியாக விளக்கவில்லை. உயர் தொழில்நுட்ப துறைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் செயல்பாடுகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

    அமெரிக்காவின் ஹெச்-1பி விசா எனப்படும் அனுமதியானது, அங்கே வெளிநாட்டுப் பிரஜைகள், தொழில்நுட்ப துறை உட்பட சில சிறப்புத் தொழில்களில் தற்காலிகமாக அங்கேயே தங்கி வேலை செய்ய அனுமதிக்கிறது. ஆனால், ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பணியை இழந்தால் மீண்டும் 60 நாட்களுக்குள் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும் அல்லது அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனும் கட்டுப்பாடு உண்டு.

    இந்த சூழ்நிலையில் வேலையை இழந்து வேறு வேலையும் கிடைக்காமல் தவிக்கும் இந்தியர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு இனிப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.

    ×