என் மலர்
உலகம்

ராணுவ தளபதி அசிம் முனீருக்காக அரசியலமைப்பை திருத்தும் பாகிஸ்தான் அரசு
- இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
- பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏதுவாக அந்நாட்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. பீல்டு மார்ஷல் உச்சபட்ச பதவி என்பதால் அதில் உள்ளவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய அந்நாட்டு அரசியலமைப்பில் இடமில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசியலமைப்பு 243 பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் , பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தலைமை பதவியாக இது அமையும். நேற்று தாக்கலான அரசியலமைப்பு திருத்த மசோதாவில் ராணுவ தளபதியே, பாதுகாப்பு படைகளின் தலைவராகவும் பதவி வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று அதிபருக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.






