என் மலர்tooltip icon

    உலகம்

    • உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை காயமடைந்தனர்.

    தனது பேச்சுக்கள் மூலம் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 செப்டம்பர் முதல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலருமான உமர் காலித், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரது ஜாமீன் மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.

    இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி மூத்த உறுப்பினர்களான ஜிம் மெகவர்ன் மற்றும் ஜேமி ரஸ்கின் தலைமையில், பிரமிளா ஜெயபால், ரஷீதா த்லைப் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

    அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ராவிற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    உமர் காலித் விசாரணை ஏதுமின்றி 5 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு எதிரானது.

    குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே என்ற விதியின்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்.

    விசாரணையைத் தாமதப்படுத்தாமல், சர்வதேசச் சட்டங்களின்படி வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க எம்.பி.க்களும் குரல் கொடுத்துள்ளனர்.

    அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும், இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

    சிஏஏ

    2019 இல் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கிறது.

    ஆனால், குடியுரிமை வழங்குவதில் இருந்து முஸ்லிம்களை விலக்குவதால், இது பாகுபாடு காட்டுவதாகவும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்பட்டது.

    இது நாடு முழுவதும் பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது.
    • ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.

    அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் குயின் கிரீக் நகரில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அதில் 4 பேர் பயணம் செய்தனர்.

    அந்த ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.

    தகவல் அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணை நடத்தி வருகின்றன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. 

    • வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.
    • வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தன. குண்டுகள் வெடித்ததில் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன. வெடிப்பு சத்தங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். தலைநகர் கராகசில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதை நடத்தியது யார் என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் சமீபகாலமாக அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் வெனிசுலா மீது தாக்குதல் நடந்துள்ளது.

     

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். மேலும் வெனிசுலாவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று டிரம்ப் கூறி இருந்தார். இந்த நிலையில்தான் வெனிசுலாவில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் பட்டாசு வெடித்தனர்.
    • இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    பெர்ன்:

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின.

    மெக்சிகோ சிட்டி:

    தெற்கு மெக்சிகன் மாநிலமான குரேரோவில் 6.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    இதனால் உயரமான கட்டடங்கள் குலுங்கின. அச்சத்தால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு மெக்சிகோ அதிபர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பூகம்ப எச்சரிக்கை மணி ஒலித்ததால் செய்தியாளர் சந்திப்பு தடைபட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

    • காத்மண்டுவில் இருந்து 50 பயணிகளுடன் புத்தா ஏர் விமானம் புறப்பட்டது.
    • பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கியது.

    காத்மண்டு:

    நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து 50 பயணிகளுடன் புத்தா ஏர் விமானம் புறப்பட்டது. பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கியது.

    அப்படி தரையிறங்கும்போது அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. இதையடுத்து விமானிகள் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக நிறுத்தினர்.

    விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2025-ல் டெஸ்லா 1.64 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
    • இது 2024 வருடத்தை விட 9 சதவீதம் குறைவு.

    உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனம் விற்பனை நிறுவனம் என்ற பெயரை கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு வருடமாக டெஸ்லாவின் விற்பனை வெகுவாக குறைந்த நிலையில், இந்த பெயரை சீன நிறுவனத்திடம் இழந்துள்ளது.

    2025-ல் டெஸ்லா 1.64 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 வருடத்தை விட 9 சதவீதம் குறைவு.

     சீனாவின் BYD நிறுவனம் 2025-ல் 2.26 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

    விற்பனை குறைவு, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும், பங்குச் சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு ஏறக்குறைய 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.
    • அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.

    71 வயதான ஜாக்கி சான் 'Unexpected Family" என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சீன தலைநகர் பீஜிங்-இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாக்கி சான் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்வில் பேசிய ஜாக்கி சான், அண்மையில், காசா குழந்தைகளின் துயரங்களை விவரிக்கும் வீடியோ ஒன்றை பார்த்து மனமுடைந்தேன். 

    அந்த வீடியோவில், ஒரு பாலஸ்தீன சிறுவனிடம், பெரியவனானதும் நீ என்னவாக விரும்புகிறாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்தச் சிறுவன் எவ்வித உணர்ச்சியுமின்றி, மிகச் சாதாரணமாக, "எங்கள் ஊரில் குழந்தைகள் வளர்வதே இல்லை. ஏனெனில் வளர்வதற்கு முன்பே கொல்லப்பட்டு விடுகிறோம்" என்று பதிலளித்தான்.

     அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.

    என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.

    நாம் முதுமையை ஒரு சுமையாக நினைக்கிறோம். ஆனால் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அந்த முதுமை மறுக்கப்படுகிறது. அவர்கள் வளர்வதற்கு முன்பே போரினால் சிதைக்கப்படுகிறார்கள்.

    வன்முறை என்பது ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருந்தால், மரணத்தைப் பற்றி அந்தச் சிறுவனால் இவ்வளவு சாதாரணமாகப் பேச முடியும் என்பதுதான் உலகிற்கு அது சொல்லும் செய்தி" என்று உருக்கமாக தெரிவித்தார்.

    2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசா போரில் இதுவரை 71,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 23 மாதங்களில் காசாவில் 1 மணி நேரத்துக்கு 1 குழந்தை கொல்லப்பட்டுள்ளது.

    • புத்தாண்டு இரவு உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • ரஷியாவின் ராணுவ இலக்குகளை மட்டும் இலக்கு வைத்ததாக உக்ரைன் விளக்கம்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான சண்டை 4 வருடங்களாக நடைபெற்று வருகிறது. சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திதான் வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைனின் ஆக்கிரமிப்பு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கஃபே மற்றும் ஓட்டல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 27 பேர் உயிரிழந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

    கெர்சன் பிராந்தியத்தில் உள்ள கோர்லி கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐந்து மைனர்கள் உள்பட 31 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் இந்த குற்றச்சாட்டு உக்ரைன் மறுத்துள்ளது. உக்ரைன் பொதுப்படைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரோ லிகோவி இது தொடர்பாக கூறுகையில் "உக்ரைன் படைகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ரஷியாவின் ராணுவ இலக்குகள், எரிபொருள் மற்றும் எரிசக்தித் துறை தொழிற்சாலைகள் மற்றும் பிற சட்டப்பூர்வ இலக்குகளுக்கு எதிராக மட்டுமே தாக்குதல்களை நடத்துகின்றன.

    நடந்துகொண்டிருக்கும் அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதற்காக, தவறான தகவல்களையும் பொய்களையும் ரஷியா மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறது.

    புத்தாண்டு தினத்தன்று இரவு உக்ரைன் ராணுவம் தாக்கிய இலக்குகளின் தெளிவான பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கெர்சன் பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் மீதான தாக்குதல்கள் இடம்பெறவில்லை" என்றார்.

    • அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடியால் ஈரான் கடுமையாக பாதித்துள்ளது.
    • ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதார தடைகளால் ஈரான் பல ஆண்டுகளாக நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஈரானில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வன்முறையில் அடக்கப்பட்டால், அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா தலையிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    தனது சமூக ஊடக தளமான Truth Social இல் வெளியிடப்பட்ட அவர் வெளியிட்ட பதிவில், ஈரான் அமைதியான முறையில்  போராடுபவர்களை  சுட்டுக் கொன்றால், அது அவர்களின் வழக்கம் என்றாலும், அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும்.நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மதிப்பு வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடியால் ஈரான் கடுமையாக பாதித்துள்ளது.

    இதனை எதிர்த்து அரசை கண்டித்து கடந்த 28-ந் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. முதலில் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கிய போராட்டம் , நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. குறிப்பாக கிராமப்புற மாகாணங்களில் போராட்டங்கள் நடந்தது.

    பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. தலைநகர் தெஹ்ரானில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள அஸ்னா நகரில் மக்கள் சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர்

    ஈரானின் சஹார்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. போராட்டம்-வன்முறையில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.

    ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதார தடைகளால் ஈரான் பல ஆண்டுகளாக நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    • விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறல்.
    • விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்வதாக ஆய்வில் தகவல்.

    கார்களில் உள்ள தானியங்கி அல்லது மறைக்கப்பட்ட பவர் டோர் ஹேண்டில்களை தடை செய்ய சீன அரசு புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

    சமீபகாலமாக எலக்ட்ரிக் கார்களில் (EV) அழகிற்காகவும், காற்றின் வேகத்தைத் தாங்கிச் செல்வதற்காகவும் (Aerodynamics) கதவின் உட்புறமாக மறைந்திருக்கும் ஹேண்டில்கள் பிரபலமாகின. ஆனால், இதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    விபத்து ஏற்பட்டு காரின் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, கதவுகள் திறக்காமல் பயணிகள் உள்ளேயே சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. பல விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறிய நிகழ்வுகள் சீனாவில் பதிவாகியுள்ளன.

    இதேபோல், கடும் குளிரில் இந்த ஹேண்டில்கள் உறைந்து போவதும், மழையினால் மின் கசிவு ஏற்பட்டு வேலை செய்யாமல் போவதும் வாடிக்கையாளர்களிடையே புகார்களை அதிகரித்தது.

    இந்த வகை ஹேண்டில்களில் குழந்தைகளின் விரல்கள் சிக்கி காயமடையும் சம்பவங்கள் சீனாவில் அதிகளவில் பதிவாகியுள்ளன.

    ஆய்வுகளின்படி, விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்கின்றன. ஆனால், இந்த எலக்ட்ரானிக் ஹேண்டில்கள் வெறும் 67% மட்டுமே பலன் தருகின்றன என்பது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக, சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையின்படி, ஜனவரி 1, 2027 முதல் சீனாவில் விற்பனை செய்யப்படும் 3.5 டன்களுக்கு குறைவான எடைகொண்ட அனைத்து கார்களிலும் மெக்கானிக்கல் எமர்ஜென்சி ஓப்பனிங் வசதி இருக்க வேண்டும்.

    காரின் மின்சாரம் முழுமையாக நின்றாலும், எந்தக் கருவியும் இன்றி கைகளால் கதவைத் திறக்கும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு கதவிலும் வெளிப்புற ஹேண்டில்கள் கைகளால் பிடித்து இழுக்கும் வகையில் போதிய இடைவெளியுடன் இருக்க வேண்டும்.

    இந்த தடை உத்தரவு 2027ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Oracle of Omaha என்பது வாரன் பஃபெட்-க்கு வழங்கப்பட்ட புனைப்பெயர்
    • உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவர்

    பங்குச்சந்தை உலகின் ஜாம்பவனாக அறியப்படும் வாரன் பஃபெட், சுமார் ஆறு சதாப்தங்களுக்கு பிறகு பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார். தனது வாரிசும், நம்பகமான உதவியாளருமான கிரெக் ஏபலிடம் தலைமை  பொறுப்பை ஒப்படைத்துள்ளார். 

    பங்குச்சந்தையில் லாபம் ஈட்டும் மாயஜாலக்காரர் என புகழப்பெற்ற வாரன் பஃபெட், 1962-இல் பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தை வாங்கினார். பெரும் நஷ்டத்தில் இருந்த அந்த ஜவுளி நிறுவனத்தை, 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்டமான முதலீட்டு நிறுவனமாக மாற்றினார்.

    அதனைத்தொடர்ந்து 1972-இல், அவர் See's Candies நிறுவனத்தை 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். இந்த முதலீடு அவருக்கு பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. 2019-ஆம் ஆண்டிற்குள், இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வரிக்கு முந்தைய வருமானமாக (pre-tax earnings) ஈட்டியிருந்தது. இதனைத்தொடர்ந்து அவர் எடுத்த மற்றொரு சிறந்த யோசனை கோகா-கோலா நிறுவனத்தின் பங்குத்தாரர் ஆனது. இவ்வாறு பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான வாரனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி ஆகும். உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார். 

    Oracle of Omaha என்பது வாரன் பஃபெட்-க்கு வழங்கப்பட்ட புனைப்பெயர் ஆகும். ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை அறிந்து அதில் முதலீடு செய்வது, பங்குச்சந்தையில் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும், குறுகிய கால லாபத்தை எதிர்பார்க்காமல், பல ஆண்டுகள் முதலீட்டைத் தொடர்வது போன்ற அணுகுமுறைகளும், புத்திசாலித்தனமுமே வாரனின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன. 

    யார் இந்த கிரெக் ஏபல்?

    கடந்த 2000 ஆம் ஆண்டில் மிட்அமெரிக்கன் எனர்ஜியை பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) கையகப்படுத்தியபோது அதில் ஏபல் இணைந்தார். பஃபெட் அடிக்கடி ஒரு சோர்வில்லா உழைப்பாளி மற்றும் நேர்மையான தொடர்பாளர் என்று ஏபலை பாராட்டியுள்ளார். 63 வயதுடைய ஏபல், 2018 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் துணைக் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 

    ×