என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.பிக்கள்"

    • உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை காயமடைந்தனர்.

    தனது பேச்சுக்கள் மூலம் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 செப்டம்பர் முதல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலருமான உமர் காலித், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரது ஜாமீன் மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.

    இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி மூத்த உறுப்பினர்களான ஜிம் மெகவர்ன் மற்றும் ஜேமி ரஸ்கின் தலைமையில், பிரமிளா ஜெயபால், ரஷீதா த்லைப் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

    அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ராவிற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    உமர் காலித் விசாரணை ஏதுமின்றி 5 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு எதிரானது.

    குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே என்ற விதியின்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்.

    விசாரணையைத் தாமதப்படுத்தாமல், சர்வதேசச் சட்டங்களின்படி வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க எம்.பி.க்களும் குரல் கொடுத்துள்ளனர்.

    அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும், இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

    சிஏஏ

    2019 இல் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கிறது.

    ஆனால், குடியுரிமை வழங்குவதில் இருந்து முஸ்லிம்களை விலக்குவதால், இது பாகுபாடு காட்டுவதாகவும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்பட்டது.

    இது நாடு முழுவதும் பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார்.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.

     

    அவர் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியதாவது, 'மக்களவைத் தேர்தல் முடிவுகளால் மன ரீதியாக பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவினரும் அரசியலமைப்பை மதிப்பது போல் தற்போது நாடகமாடத்  தொடங்கியுள்ளனர்.

    ஆனால் உண்மை என்னவென்றால் தற்போது அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் பாராளுமன்றதில் 146 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதே ஆகும். எனவே இந்தியா கூட்டணி இந்த புல்டோசர் சட்டங்களை பாராளுமன்றத்தில் பொறுத்துக் கொண்டிருக்காது' என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசை எதிரித்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் எதிர்கட்சிகளைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனவே எதிர்கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான எம்.பிக்கள் அவையில் இல்லாமலே புதிய கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தும் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. 

    ×