என் மலர்tooltip icon

    உலகம்

    • ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் குதித்தனர்.
    • கடந்த 28-ந் தேதி தொடங்கிய இப்போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.

    தெஹ்ரான்:

    ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது. டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டின் நாணயமான ரியால் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதையடுத்து ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் குதித்தனர். கடந்த 28-ந் தேதி தொடங்கிய இப்போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. முதலில் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கிய போராட்டம் , நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. குறிப்பாக கிராமப்புற மாகாணங்களில் போராட்டங்கள் நடந்தது.

    இந்த நிலையில் ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. தலைநகர் தெஹ்ரானில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள அஸ்னா நகரில் மக்கள் சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர்.

    அங்கு போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஈரானின் சஹார்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது.

    ஈரானில் போராட்டம்-வன்முறையில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதே உயிரிழப்புக்கு காரணம் என்று ஆர்வலர் குழுக்கள் குற்றம் சாட்டி உள்ளன. இதற்கிடையே போராட்டக்காரர்கள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • 1,200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

    ஆப்கானிஸ்தானின் ஹெராத், கந்தஹார், ஹெல்மண்ட் உள்ளிட்ட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் அங்கு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஹெராத் மாகாணத்தின் கப்கான் மாவட்டத்தில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். 1,200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கனமழை-வெள்ளம் காரணமாக நாட்டின் மத்திய, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் முழுவதும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளன என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது யூசுப் ஹம்மாத் தெரிவித்தார்.

    • பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலைத் திட்ட ஊழல் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் கொல்லப்பட்டார்.
    • உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), 2025 ஆம் ஆண்டு உலகளவில் பத்திரிகையாளர்கள் கொலைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி 2025 இல் உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளனர். 2024 இல் 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கொல்லப்பட்ட பத்ரிக்கையாளர்களில் 118 பேர் ஆண்கள் மற்றும் 10 பேர் பெண்கள் ஆவர். 

    கொல்லப்பட்டவர்களில் 74 பேர மேற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் குறிப்பாக 56 பத்திரிகையாளர்கள் காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

    காசா

    தொடர்ந்து ஆப்பிரிக்காவில் 18 பேர், சீனா உள்ளிட்ட ஆசியா-பசிபிக் நாடுகளில் 15 பேர், அமெரிக்காவில் 11 பேர், ஐரோப்பிய நாடுகளில் 10 பேர் பணியின்போது கொல்லப்பட்டனர்.

    இந்தியாவில் கடந்த ஆண்டில் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலைத் திட்ட ஊழல் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் கொல்லப்பட்டதை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    முகேஷ் சந்திராகர்

    இதுதவிர்த்து உலகளவில் பணியின்போது விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொலைகளுக்கு மேலாக, உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ஆசியா-பசிபிக் பிராந்தியம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக சீனாவில் 143 பேரும், மியான்மரில் 49 பேரும் சிறையில் உள்ளனர்.



    • முறைகேடாக கிரீன் கார்டு பெற பலர் திருமணம் செய்து கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.
    • பலர் வேலை, படிப்பு, வசதி ஆகியவற்றுக்காக வெவ்வேறு இடங்களில் இருப்பதாக கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

    அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு விசாக்களில் செல்கிறார்கள். இவர்களில் ஏராளமானோர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

    இந்த கிரீன் கார்டு ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது.

    இதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எளிதாக கிரீன் கார்டு கிடைக்கும். அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும். ஆனால் முறைகேடாக கிரீன் கார்டு பெற பலர் திருமணம் செய்து கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன் கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளது.

    அதன்படி அமெரிக்கக் குடிமகனைத் திருமணம் செய்து கொள்வது மட்டுமே கிரீன் கார்டுக்கு உத்தரவாதம் அளிக்காது என்று அமெரிக்க குடிவரவு துறை அறிவித்துள்ளது.

    அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தற்போது திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. குடியுரிமை பெறுவதற்காக மட்டுமே திருமணம் நடந்ததா? அல்லது அவர்கள் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டார்களா? என்பதை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்வார்கள்.

    கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால், அவர்களின் கிரீன் கார்டு விண்ணப்பத்துக்கு சிக்கல் ஏற்படும். ஒன்றாக வாழ்வதுதான் உங்களுக்கு கிரீன் கார்டைப் பெற்றுத் தரும். பலர் வேலை, படிப்பு, வசதி ஆகியவற்றுக்காக வெவ்வேறு இடங்களில் இருப்பதாக கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

    நீங்கள் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால் அந்த திருமணத்தை பற்றி அதிகாரிகள் கேள்வி கேட்பார்கள். உங்களுக்குத் திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு வேண்டுமென்றால், நீங்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்றனர்.

    • சமூக, பொருளாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
    • கடந்த ஆண்டு 10 கோடிக்கும் குறைவான குழந்தைகளே அங்கு பிறந்துள்ளன.

    உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவில் சுமார் 140 கோடி பேர் வசிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த கடந்த 1994-ம் ஆண்டு ஒரு குழந்தை கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து முதியோர் மக்கள் தொகை உயர்ந்தது. இது சமூக, பொருளாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து ஒரு குழந்தை கொள்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் தற்போது ஒரு குழந்தை முறைக்கு பழகி விட்டனர். இதனால் கடந்த ஆண்டு 10 கோடிக்கும் குறைவான குழந்தைகளே அங்கு பிறந்துள்ளன. இந்தநிலையில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தற்போது கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் போன்றவற்றுக்கு அரசாங்கம் 13 சதவீதம் வரி விதித்து உள்ளது.

    • கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
    • தைவானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்தது.

    பீஜிங்:

    சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.

    தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது. கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.

    இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

    • தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
    • அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் நடந்த டிரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஆண்டுக்கணக்கில் நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

    இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ரஷியாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் உக்ரைன் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

    டிரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ரஷிய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

    • தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
    • வங்கதேசத்தில் 15 நாளில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி மற்றும் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் (29), என்ற இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற இந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஷரியத்பூர் மாவட்டத்தில் மேலும் ஒரு இந்து ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் 50 வயதான கோகோன் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்திய ஒரு குழு அவரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

    கடந்த 15 நாளில் வங்கதேசத்தில் இந்துக்கள்மீது நடத்தப்பட்ட 4-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2025 டிசம்பர் 25-ந்தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியும் என கூறினார்.
    • தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டார்.

    கானா நாட்டைச் சேர்ந்த 30 வயதான எபோ நோவா என்ற நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொள்கிறார். அவர் சாக்கு உடை அணிந்து கொண்டு மக்களுக்காக உண்ணாவிரதம், பிரார்த்தனை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு வரவிருக்கும் பேரழிவு குறித்து எச்சரிப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    அந்த வீடியோவில், 2025 டிசம்பர் 25-ந்தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியப்போகிறது. உலகம் அழியும்போது மக்களைக் காப்பாற்ற கடவுளின் உத்தரவின் பேரில், பைபிளில் வருவது போல 8 பெரிய கப்பல்களை (பேழைகளை) கட்டி வருவதாக கூறினார்.

    இவரது பேச்சைக் கேட்ட மக்கள் அதை நம்பி, பேழைகளைக் கட்டுவதற்கு பலர் தங்கள் உடைமைகளை விற்று பணத்தை அவருக்குக் கொடுத்துள்ளனர். மேலும் அந்த பேழையில் இடம் பிடிக்க அவரை தேடிச் செல்லவும் தொடங்கினர்.

    இந்த நிலையில் தான், தன்னை தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டார். அதாவது, அவர் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், அதனை ஏற்றுக்கொண்ட கடவுள் உலக அழிவை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

    இந்நிலையில், டிசம்பர் 25-ம் தேதி உலகம் அழியப்போகிறது" என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவா என்பவரை கானா நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

    எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கூறி காவல்துறை கைது செய்தது.

    • ஓவியத்தின் தொடக்க விலை ரூ.8.5 லட்சமாக இருந்தது.
    • மேடையிலேயே இசைக்கு ஏற்ப நடனமாடியபடி இயேசுவின் உருவப்படத்தை வரைந்தார்.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப்பிற்கு சொந்தமான 'மார்-ஏ-லாகோ' (Mar-a-Lago) இல்லத்தில் ஒரு தொண்டு நிறுவன ஏல நிகழ்ச்சி நடைபெற்றது.

    வெனெசா ஹோரபியூனா என்ற பிரபல கிறிஸ்தவ ஆன்மீக ஓவியர், மேடையிலேயே இசைக்கு ஏற்ப நடனமாடியபடி இயேசுவின் உருவப்படத்தை வரைந்தார்.

    இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் ஏலத்தில் இயேசு ஓவியத்தை சுமார் ரூ.23 கோடிக்கு விற்றார்.

    டிரம்ப் அந்த ஓவியத்தில் தனது கையெழுத்தைப் போட்ட பிறகு, அதன் மதிப்பு உயர்ந்து இறுதியில் $2.75 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு சுமார் ₹23 கோடி ஆகும்.

    வெனெசா ஹோரபியூனா என்ற ஓவியர் வரைந்த இந்த ஓவியத்தின் தொடக்க விலை ரூ.8.5 லட்சமாக இருந்தது.

    இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் டிரம்ப் St. Jude's குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஒரு உள்ளூர் ஷெரிப் அலுவலகத்தின் தொண்டு பணிகளுக்காக வழங்கப்பட்டது.

    • இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.
    • விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை அதிகாரிகள் கவனித்தனர்.

    கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.

    வான்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

    விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை உடனடியாகக் கைது செய்தனர். கனடா சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும்.

    விமானி கைது செய்யப்பட்டதால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்படும் வரை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அந்த விமானி மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    • ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
    • தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 100 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

    வெடிப்புக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் எனச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×