என் மலர்tooltip icon

    உலகம்

    • இயற்கை சீற்றங்களால் உலகின் 7 சதவீதம் முதல் 8 சதவீதம் நிலப்பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்பு.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு.

    2025-ம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தக போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், 2026-ல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.

    ஆனால், பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

    பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் 2026 குறித்த அவரின் கணிப்பு விவாதப்போருளாகி வருகிறது.

    பாபா வாங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு கடந்த ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம்.

    * உலகெங்கும் ஏற்பட்டுள்ள போர் அபாயங்கள் காரணமாக இந்த ஆண்டு 3-ம் உலகப்போர் தொடங்கும் வாய்ப்பு.

    * சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு, வெள்ளம், கடும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு.

    *இயற்கை சீற்றங்களால் உலகின் 7 சதவீதம் முதல் 8 சதவீதம் நிலப்பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்பு.

     

    * ஏ.ஐ. தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு. 2026 அதற்கான திருப்புமுனை ஆண்டாக அமையலாம்.

    * விண்வெளியிலிருந்து மர்மபொருள் உலகில் வந்திறங்கும் வாய்ப்பு. ஏலியன்களுடன் மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படலாம்.

    * ரஷியாவில் அரசியல் தலைமை மாற்றம் ஏற்படலாம். இதனால் உக்ரைன்-ரஷியா போரில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழலாம்.

    * நோய் உருவாகுதலை அறியும், அதனை தடுக்கும், அதிநவீன புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என பாபா வாங்கா கூறியுள்ளார். இதனால் பலர் அச்சத்தில் உள்ளனர். 

    • ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
    • தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

    வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பபடுகிறது.   

    • சிட்டி ஹால் கட்டிடத்திற்கு அடியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத பழைய சப்வே ரெயில் நிலையத்தில் பதவியேற்றார்.
    • டிரம்ப் இவரை 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்' என்றும் இவருக்கு வாக்களித்தால் நியூ யார்க் நகருக்கான நிதியை நிறுத்துவேன் எனவும் தெரிவித்தார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவரான 34 வயது ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கின் மேயராக இன்று பதவியேற்றார்.

    நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.

    புத்தாண்டு நாளான இன்று அதிகாலை (அமெரிக்க நேரப்படி), நியூயார்க் சிட்டி ஹால் கட்டிடத்திற்கு அடியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய சப்வே ரெயில் நிலையத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

    இந்தப் பதவியேற்பு விழாவின் போது அவர் அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திருக்குர்ஆன் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

    நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    "இது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்" என்று பதவியேற்ற பிறகு மம்தானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மம்தானி நியூயார்க் மேயராகப் பணியாற்றுவார்.

    தேர்தலின்போது டிரம்ப் இவரை 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்' என்றும் இவருக்கு வாக்களித்தால் நியூ யார்க் நகருக்கான நிதியை நிறுத்துவேன் எனவும் மக்களை மிரட்டி இருந்தார்.

    ஆனால் டிரம்ப் உடைய மிரட்டலை புறக்கணித்து நியூ யார்க் மக்கள் மம்தானியை தங்கள் தலைவராக தேர்வு செய்தனர். 

    • அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.
    • நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:-

    அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது.

    அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.

    போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் விரும்பினாலும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்தவொரு தீர்வும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.

    உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடிய அல்லது ரஷியாவைத் தூண்டிவிடக்கூடிய சலுகைகள் மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படக்கூடாது. நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.

    • இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
    • 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்கள் காணப்பட்டன.

    தலைநகர் மாஸ்கோவின் அருகே உள்ள நோவ்கோரோட் பகுதியில் அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து கடந்த டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உக்ரைன் 91 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டி இருந்தது.

    ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

    இந்நிலையில் நோவ்கோரோட் பகுதியில் உள்ள புதினின் இல்லத்தைத் தாக்க உக்ரைன் அனுப்பியதாகக் கூறப்படும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    அந்த வீடியோவில், 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்களுக்கு அருகில் ரஷிய வீரர் ஒருவர் நிற்பது போன்ற காட்சிகள் உள்ளன.

     இந்த வீடியோ நகைப்புக்குரியது என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. இத்தகைய போலியான ஆதாரத்தை உருவாக்க ரஷியா இரண்டு நாட்கள் ஆகியுள்ளதாக உக்ரைன் செய்தித் தொடர்பாளர் கிண்டலாக தெரிவித்தார்.

    இதற்கிடையில், அமெரிக்கவின் சி.ஐ.ஏ புலனாய்வு அமைப்புநடத்திய ஆய்வில், உக்ரைன் புதினின் இல்லத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று முடிவுக்கு வந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. 

    • கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
    • 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை.

    வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா சென்றார்.

    அங்கு பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்துப் பேசினார். கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

    கடந்த ஏப்ரலில் காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்திற்குப் பிறகு, இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்தச் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இது வெறும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று கூறியுள்ளது.

    இத்தகைய பலதரப்பு நிகழ்வுகளில் சந்திப்பதும், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இயல்பான ஒன்று என்றும், இது முறையான ராஜதந்திரப் பேச்சுவார்த்தை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.  

    • நாடு முழுவதும் ராணுவத்திற்குப் பின்னால் ஒற்றுமையாக இருக்கிறது.
    • உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷியா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின், புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரையாற்றினார். இதில் உக்ரைன் போர்க்களத்தில் உள்ள ரஷிய வீரர்களை பாராட்டினார்.

    அவர் கூறியதாவது:-

    போர்க்களத்தில் உள்ள எங்களின் நாயகர்களான உங்கள் (ரஷிய வீரர்கள்) மீதும், நமது வெற்றியின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

    ரஷியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மற்றும் நான் உங்களுக்கு உறுதிஅளிக்கிறோம். புத்தாண்டின் இந்தத் தருணத்தில் வீரர்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்.

    நாடு முழுவதும் ராணுவத்திற்குப் பின்னால் ஒற்றுமையாக இருக்கிறது. உங்களை பற்றி மக்கள் நினைக்கிறார்கள். உங்களை நம்புகிறார்கள்.

    நமது அனைத்து வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நாங்கள் உங்களையும் எங்கள் வெற்றியையும் நம்புகிறோம்.

    உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷியா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும். ரஷியா மக்களின் ஒற்றுமை, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு புதின் கூறினார்.

    • கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    ஜெர்மனி நாட்டின் பிரபல வங்கியாக ஸ்பார்கசி உள்ளது. நாட்டின் மிக பழமையான வங்கிகளில் ஒன்றான ஸ்பார்கசி 1774-ம் ஆண்டில் அந்த நாட்டின் பெருவணிகர்களின் கூட்டு முயற்சியாலும் மன்னர்களாலும் தொடங்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் ஸ்பார்கசி வங்கி அந்த நாட்டின் நிதியை கையாண்டு பெரும் பங்கு ஆற்றியது.

    தற்போது அந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஸ்பார்கசி வங்கியின் கிளை அமைக்கப்பட்டு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் அங்குள்ள ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள கெல்சென்கிர்சென் நகரில் ஸ்பார்கசி வங்கியின் கிளை ஒன்று உள்ளது.

    இந்த வங்கியில் நகரை சேர்ந்த பலர் கணக்கு தொடங்கி வாடிக்கையாளராக இருந்து வருகிறார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கெல்சென்கிர்சென் நகரில் இயங்கி வந்த ஸ்பார்கசி வங்கியும் கடந்த வாரம் முதல் மூடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை அந்த வங்கி கட்டிடத்தில் இருந்து தீ பரவியதற்கான எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது. இதனால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வங்கியை சோதனையிட்டனர்.

    அப்போது வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளையிடப்பட்டது தெரிந்தது. உடனடியாக வங்கி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் கருப்பு முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று, சொகுசு கார் ஒன்றில் வந்து கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு சாவகாசமாக வங்கி நிலத்தடி லாக்கர் அறைக்குள் துளையிட்டு உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு பெட்டிகளை திறந்து அதில் இருந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடி தப்பியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

    வங்கியில் கொள்ளை போன ரொக்கம் மற்றும் நகைகளில் மொத்த மதிப்பு ரூ.300 கோடி (30 மில்லியன் யூரோ) ஆகும். அவர்கள் வந்த கார் சில நாட்களுக்கு முன்பு கிழக்கு ஜெர்மனியில் திருடப்பட்டது தெரிந்தது. வங்கி கொள்ளை குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களுக்கு வலைவீசி உள்ளதாக தெரிவித்தனர்.

    • மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
    • நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தெஹ்ரான்:

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

    நிலைமை மோசமடைந்ததை அடுத்து மத்திய வங்கி ஆளுநராக இருந்த முகமது ரெசா ஃபர்சின் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஏற்றுக்கொண்டார்.

    அவருக்குப் பதிலாக, ஈரானின் முன்னாள் நிதியமைச்சர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி புதிய மத்திய வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.

    இந்நிலையில், நான்காவது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • சீனாவின் பீஜிங்கில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
    • இதில் பேசிய சீன வெளியுறவு மந்திரி, இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தோம் என்றார்.

    பீஜிங்:

    பீஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யீ, கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றமான சூழலின்போது தாங்கள் மத்தியஸ்தம் செய்ததாகக் குறிப்பிட்டார்.

    சர்வதேச அளவில் மோதல்களைத் தீர்ப்பதிலும், நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதிலும் சீனா நியாயமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறிவரும் நிலையில் சீன மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர்.
    • 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

    காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் 2025-ஆம் ஆண்டு பாலஸ்தீனியர்களுக்கு மற்றுமொரு துயரமான ஆண்டாகவே அமைந்தது.

    காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆண்டாகவும் இது அமைந்தது. 

    காசா போர்

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.

    இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் பாதி பேர் மீடகப்பட்ட நிலையில் 96 பேர் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 26 மாதங்களாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர்.  1.7 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

    சுமார் 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

    இனப்படுகொலை

    செப்டம்பர் 2025-ல் ஐநா விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

    உயிரிழப்புகள், பசி மற்றும் மருத்துவத் தேவைகளைத் தடுத்தல் போன்றவை இதற்கு ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டன.

    மக்களைக் கொல்லுதல், கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதல், வாழ்க்கைச் சூழலை அழித்தல், பிறப்புகளைத் தடுத்தல் ஆகிய 4 குற்றங்களையும் இஸ்ரேல் திட்டமிட்டு தொடர்வதால் காசாவில் இஸ்ரேல் புரிவது இனப்படுகொலையே என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இஸ்ரேலின் தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல, அவை காசா மக்களின் அன்றாட வாழ்வை முடக்குவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

    பசி, பட்டினி, பஞ்சம்:

    இஸ்ரேல் விதித்த கடுமையான தடைகளால் 2025-ல் பஞ்சம் உச்சத்தை அடைந்தது. போர் தொடங்கியதில் இருந்து 461 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்துள்ளனர், இதில் பெரும்பாலான மரணங்கள் 2025-ல் நிகழ்ந்தவை.

    5 வயதிற்குட்பட்ட 54,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    அதன் அறிக்கையின்படி, காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர்.

    காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

    மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    இடிபாடுகளாக எஞ்சிய காசா:

    அக்டோபரில் வெளியான ஐநா அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

    மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.

    போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிக்கை தெரிவித்தது.

    நவம்பரில் வெளியான ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (UNCTAD) கடந்த நவம்பரில் வெளியிட்ட அறிக்கை, காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கிறது.

    அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.

    காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

     அடிப்படை தேவைகளுக்கு அலைமோதும் காசா மக்கள்:

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காசாவின் அடிப்படை உள்கட்டமைப்பை முற்றிலுமாக முடக்கியுள்ளன.

    காசாவின் ஒரே மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்த மின் விநியோக அமைப்பில் 80% சிதைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும், சிறிய ஜெனரேட்டர்கள் மூலமும் மிகக் குறைந்த அளவே மின்சாரத்தைப் பெறுகின்றனர்.

    இஸ்ரேலின் குண்டுவீச்சுகள் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் மற்றும் தண்ணீர் பம்பிங் நிலையங்களை அழித்ததால் மக்கள் உப்பு மற்றும் உலோக வாடை வீசும் பாதுகாப்பற்ற தண்ணீரை அருந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குழந்தைகளுக்கு தோல் வியாதிகள் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை உண்டாக்கி வருகிறது.

    மருத்துவமனைகள் போதிய மருந்துகள், மின்சாரம் மற்றும் உபகரணங்கள் இன்றி இயங்குகின்றன. மருத்துவர்கள் மொபைல் போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் அவலநிலை நீடிக்கிறது.

    சாலைகள் தகர்க்கப்பட்டுள்ளதால், மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மக்களைச் சென்றடைவதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது.

    வெனிஸ் வெளிச்சம்

    இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.

    பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.

    ஐநா பொதுச் சபையும், தனி நாடு அங்கீகாரமும்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்சனை முதன்மையாக விவாதிக்கப்பட்டது.

    "தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை" என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

    இந்த ஐநா பொதுச்சபை கூடுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா,போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன.

    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் வைத்து, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.

    இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்தது. இதை இஸ்ரேலும், அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தது.

    டிரம்ப் அமைதி திட்டமும், கண்துடைப்பு போர் நிறுத்தமும்:

    அக்டோபர் 10, 2025 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    காசாவில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட அரசாங்கத்தை அமைப்பது, இஸ்ரேலியப் படைகளுக்குப் பதிலாக சர்வதேச அமைதிப் படையை நிலைநிறுத்துவது இதில் அடங்கும்.

    மேலும், ஒப்பந்தப்படி, டிசம்பர் 9-க்குள், ஹமாஸிடம் எஞ்சியிருந்த இஸ்ரேல் பணய கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர். பதிலாக, இஸ்ரேல் சிறையிலிருந்த பாலஸ்தீனியர்களை விடுவித்தது.

    போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை.

    தீவிரவாதிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், நவம்பர் 30 வரை மட்டும் 352 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    2025-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையிலும், காசா மக்களின் துயரமும் கண்ணீரும் முடிவுக்கு வந்தபாடில்லை.  இதற்கிடையே 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் காசாவில் பல உதவி அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

    • இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருக்கும்போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிடும்.
    • கிரிபாட்டியின் மற்ற பகுதிகளும் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டைக் கொண்டாட தொடங்கிவிடும்.

    உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவு புத்தாண்டை கொண்டாட தொடங்கியது. இந்திய நேரப்படி, கிரிட்டிமாட்டியில் புத்தாண்டு சுமார் 8.5 மணிநேரம் முன்னதாகவே பிறக்கிறது. அதாவது இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருக்கும்போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிடும்.

    அந்தவகையில் தற்போது கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிபாட்டி  2026-ஆம் ஆண்டை வரவேற்று, உலகின் முதல் நாடாக புத்தாண்டு கொண்டாட தொடங்கியது. கிரிபாட்டி தீவைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சத்தாம் தீவில் (GMT +13:45) வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட மக்கள் 2026 ஐ வரவேற்று கொண்டாட தொடங்கிவிட்டனர்.

    உலக நாடுகள் ஒவ்வொன்றும் சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்டும் இயங்குவதால் நாட்டுக்கு நாடு கொண்டாட்ட நேரம் வேறுபடுகிறது. பசிபிக் நாடான கிரிபாட்டியின் மற்ற பகுதிகளும் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டைக் கொண்டாட தொடங்கிவிடும். 


    ×