என் மலர்
உலகம்
- ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப்பை பயன்படுத்தி தாக்கியது.
- போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
முப்படைகள் இணைந்து நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வான்படை சார்பில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கிடையே பாகிஸ்தான் கூற்றுப்படி, அந்நாட்டு ராணுவம், 3 ரஃபேல் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் தாக்கி அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தி, சண்டையில் இழப்புகள் சகஜம் என்று பொத்தாம்பொதுவாக பதில் கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதலில் இறங்கியது. தொடர்ந்து சர்வதேச தலையீட்டின் பின் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என்று கூறப்படுவதன் காரணமாக அவ்விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாள், மே 8 அன்று, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் பங்குகள் 1.75 சதவீதம் உயர்ந்தன.
ஆனால் அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் ரஃபேலை வீழ்த்தியதாக கூறப்படுவதன் காரணமாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. குறிப்பாக திங்களன்று(மே 12 அன்று) , இந்த நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிவைக் கண்டன. அன்றைய தினம் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் சுமார் 292 யூரோக்களாக இருந்தது. நாள் முழுவதும் அது 291 யூரோக்களுக்கும் 295 யூரோக்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.
ஒருபுறம், ரஃபேல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட அதே நேரத்தில், J-10 போர் விமானங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.

திங்களன்று (மே 12 அன்று) CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இந்த J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது. இந்த J-10 மூலமே 3 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்படுகிறது.
- காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
- அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம்.
இஸ்லாமாபாத்:
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
முன்னதாக இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. இந்த கருத்தை பாகிஸ்தான் மந்திரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிடவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்காப்புக்காக தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் வழக்கமான திறன்கள் போதுமான அளவு வலுவாக இருப்பதால், தாக்குதலை வான்வழியாகவும் தரைவழியாகவும் முறியடிப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். இந்தியாவைத் தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை பாகிஸ்தான் பரிசீலிக்கவில்லை.
இந்தியாவின் தாக்குதல்கள் ஒரு போர் ஆகும். நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா அதன் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான நீண்டகால பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இரு தரப்பினருக்கும் கண்ணியத்தை வழங்கும் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாதையை நிறுவ பாகிஸ்தான் ஆவலுடன் இருக்கிறது. காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை. அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம். வரவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் நீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்றார்.
- உயிரிழந்த ஹபீஸ் அப்துல் ரவூஃப் என்பவர் ஒரு சாதார மனிதர்
- ஹபீஸ் அப்துல் ரவூஃப் தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.
காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ் தானுக்குள் புகுந்து அங்கிருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் தீவிரவாதிகள் யூசுப் அஸ்ஹார், அப்துல் மாலிக் ரவூப், முதாசீர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்களது இறுதி சடங்கு பாகிஸ்தானில் உள்ள முரிட்கே பகுதியில் நடைபெற்றது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டி னன்ட் ஜெனரல் பயாஸ் ஹூசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிக்கே டியர் முகமது புர்கான், பஞ்சாப் மாகாண காவல்துறை ஆய்வாளர் ஜெனரல் உஸ்மான் அன்வர் மற்றும் மாலிக் சோஹைப் அகமது ஆகியோர் கலந்து கொண்ட னர்.
இந்த இறுதி சடங்கில் அமெரிக்காவின் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப் பட்ட ஹபீஸ் அப்துல் ரவூப் தலைமையில் பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட குவாரி அப்துல் மாலிக், காலித், முதாசீர் ஆகியோர் ஜமாஅத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாகவும், முரிட்கேயில் உள்ள மசூதியின் காப்பாளர்களாகவும் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.
இவர்களின் உடல்கள் பாகிஸ்தான் தேசியக் கொடியால் சுற்றப்பட்டு பாகிஸ்தான் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மட்டு மின்றி பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்-மந்திரி மரியம் நவாஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மருமகள் ஆகியோர் கலந்து கொண்டு, கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்தனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைபாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த வீடியோ மூலம் சர்வதேச தீவிரவாதியான ஹபீஸ் அப்துல் ரவூப் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஹபீஸ் அப்துல் ரவூப் 1999-ம் ஆண்டு முதல் லஸ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினராகவும், தடை செய்யப்பட்ட பலா-இ-இன்சானியத் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடை பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹபீஸ் அப்துல் ரவூப்பை 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் கொண்ட சாதாரண மனிதர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானில் பொதுச்சேவைகள், பொது உறவுகள் அமைப்பின் அதிகாரியான அகமது செரீப் சவுத்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஹபீஸ் அப்துல் ரவூப் 1973-ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரது குடும்ப விவரங்கள் அனைத்தையும் நீங்கள் காணலாம்" என காட்டினார்.
இதற்கிடையே, ஆபரே ஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் அதிகாரிகள் பங்கேற்ற புகைப்படத்தை இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டு பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்தார். இது பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையேயான நேரடி தொடர்பை காட்டுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
- விபத்தின் போது காரை சவுரவ் பிரபாகர் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
- அவர்களின் குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ் லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.
திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை விட்டு வெளியேறி ஒரு மரத்தில் மோதிய பின்னர் பாலத்தில் மோதியது. இந்த விபத்தில் சவுரவ் பிரபாகர், மானவ் பட்டேல் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காரில் பயணித்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தின் போது காரை சவுரவ் பிரபாகர் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும் போது, கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்களான மானவ் படேல், சவுரவ் பிரபாகர் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தோம்.
இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களின் குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
- தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- ஸ்டார்மர் பிரதமரின் அதிகாரப்பூர்வ டவுனிங் தெரு இல்லத்தில் வசித்து வருகிறார்.
வடக்கு லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தீ விபத்தில் வீட்டின் ஒரு கதவு சேதமடைந்தது.
ஜூலை மாதம் பதவியேற்றதிலிருந்து, ஸ்டார்மர் பிரதமரின் அதிகாரப்பூர்வ டவுனிங் தெரு இல்லத்தில் வசித்து வருகிறார். விபத்து குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
- இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான பள்ளி ஜனநாயக ஆதரவு இயக்கத்தால் நடத்தப்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு தீவிரமான சண்டை எதுவும் இல்லை.
தாக்குதலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) இந்த சம்பவத்தை கண்டித்தது.
மியான்மர் ராணுவம் அரசு ஊடகங்கள் மீதான தாக்குதலை மறுத்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், நேரில் கண்ட சாட்சிகளும் சுயாதீன ஊடக அறிக்கைகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சாகைங் பகுதியில் இதுபோன்ற தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன. அதில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தும் உள்ளனர்.
- 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோ பள்ளியில் பணிபுரிகிறார்.
- மாணவர்களுக்கு அவர்களின் வீட்டுப்பாடம் முதற்கொண்டு செய்துகொடுத்து வலையில் வீழ்த்தினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 12 வயது மாணவனுடன் சுமார் 10 மாதங்களாக அவர் உறவு வைத்துள்ளார். சிறுவனுக்குக் காதல் கடிதங்கள் அனுப்புவது, தொலைப்பேசியில் அரட்டை அடிப்பது, சாட்டிங் செய்வது என ஆசிரியை ஜாக்குலின் இருந்துள்ளார்.
அந்த காதல் கடிதங்களையும், சாட்டிங் குறுஞ்செய்திகளையும் பார்த்து சந்தேகமடைந்த பையனின் தாய் போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஜாக்குலின் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு விஷயங்கள் தெரிய வந்தன. ஜாக்குலின் மா அந்தப் பையனுடன் மட்டுமல்ல, மற்ற சில மாணவர்களுடன் உறவு வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களுக்கு பரிசுகள், உணவு மற்றும் சிறப்பு கவனம் கொடுத்து அவர்களின் வீட்டுப்பாடம் முதற்கொண்டு செய்துகொடுத்து தனது வலையில் அவர்களை வீழ்த்தியுள்ளார் ஜாக்குலின். இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தில் ஜாக்குலின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.
- மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.
மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கசாபா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
உள்ளூர் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.
வெள்ளத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர், சுமார் 150 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த வெள்ளப்பெருக்கினால் கசாபா நதியின் நீர்மட்டம் உயர்ந்து, பெரிய பாறைகள், மரங்கள் மற்றும் சேறு கிராமத்திற்குள் பாய்ந்து வீடுகளை அழித்தது.
வெள்ளம் நீரினால் பரவும் நோய்கள், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்று உள்ளூர் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கனமழை காரணமாக நிவாரணப் பணிகளும் சிரமங்களை எதிர்கொள்கின்றன. கசாபா கிராமம் டாங்கன்யிகா ஏரியின் கரையில் அமைந்துள்ளது மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.
பேரழிவைத் தொடர்ந்து காங்கோ அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவியைக் கோரியுள்ளது.
- அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு அனுப்பப்பட்ட நல்லெண்ண சைகையாகும்.
- அலெக்சாண்டர் இஸ்ரேலிய இராணுவ முகாமில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டு ரகசிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தார்.
பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.இதில் 1,200 பேர் வரை உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 52,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் போது பல பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
இந்நிலையில் ஹமாஸ் தங்களிடம் இருந்த கடைசி அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதி ஐடன் அலெக்சாண்டரை விடுவித்துள்ளது. அவர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இஸ்ரேலிய இராணுவமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
சிப்பாய் அலெக்சாண்டர் இஸ்ரேலிய இராணுவ முகாமில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டு ரகசிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரின் விடுதலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு அனுப்பப்பட்ட நல்லெண்ண சைகையாகும்.
கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் பயணம் புறப்பட்டுள்ள சூழலில் இந்த விடுதலை நிகழ்ந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தனி விமானத்தில் அமெரிக்காவில் இருந்து புறப்படும் டிரம்ப், இன்று (செவ்வாய்க்கிழமை) சவுதி தலைநகர் ரியாத் சென்று, புதன்கிழமை நகரில் நடைபெறும் வளைகுடா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். பின் அங்கிருந்து கத்தாருக்குச் சென்று வியாழக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது பயணத்தை முடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்.
- இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம்.
இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்த் அவர் கூறியதாவது:-
இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.
இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.
இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை. உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.
- பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை.
- இன்று பிற்பகல் 1.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று பிற்பகஙல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.
இன்று பிற்பகலில் 1.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட அதிர்வால், ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.
உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். இது பல பெரிய பிளவுகளால் கடக்கப்படுவதன் விளைவாக, பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை.
- இஸ்லாமிய ஷரியாவில் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
- "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
இது நாட்டின் "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன.
இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்" என்று கூறினார்.
இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. முன்னதாக பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தாலிபான் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.






