என் மலர்
உலகம்
- இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல.
- சீனா எங்களது 3-வது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜிஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் மனைவி மெலனியாவின் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தின் சிறப்புக் காட்சி நடந்தது. இதில் பங்கேற்ற டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது என்றார்.
இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறும்போது, "இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல. சீனா உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் ஆகும். ஹாங்காங்குடன் சேர்த்து, சீனா எங்களது 3-வது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது. எனது பயணத்தின் மூலம், வேலைவாய்ப்புகளுக்கும் செல்வத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் பல வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளோம்" என்றார்.
- அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிதி நிலை சரியும் அபாயம்.
- உறுப்பு நாடுகள் தங்களது கடமைகளை முழுமையாகவும், சரியான நேரத்திலும் நிறைவேற்ற கோரிக்கை.
அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று ஐ.நா. தலைவர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் "அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் நிறைவேற்ற வேண்டும். அல்லது உடனடி நிதிச் சரிவைத் தடுக்க, உறுப்பு நாடுகள் நமது நிதி விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கடிதத்தில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடவில்லை. ஐ.நா.வுக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது.
அமெரிக்கா தற்போது ஐ.நா.வின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்திற்கு 2.16 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும். மேலும் இந்த ஆண்டுக்கு 767 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டியுள்ளது.
வெனிசுலா 38 மில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது வெனிசுலா பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளது.
அமெரிக்கா 2025 இறுதியில் 1.568 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளது. இது 2024-ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு என அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
- பஞ்சாப் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- கைபர் பக்துன்வா மாகாணத்தில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
லாகூர்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் 3 மாகாணங்களில் தனித்தனி நடவடிக்கைகளில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 52 பயங்கரவாதிகளைக் கொன்றனர்.
பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை, ராணுவம் இணைந்து தலிபான் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் படையினரை குறிவைத்து அதிரடி வேட்டை நடத்தினர்.
பஞ்சாப் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தானில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 41 பேரும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரு தளபதி உட்பட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
- ஈரானை நோக்கி அமெரிக்கா போர்க்கப்பல்களை நகர்த்தி வருகிறது.
- ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
டாலருக்கு நிகரான ஈரானின் பண மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். போராடியவர்களை ஒடுக்க ஈரான் அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப்புடையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். அத்துடன் போர்க்கப்பல்களை ஈரான் நோக்கி நகர்த்த உத்தரவிட்டார். அமெரிக்க போர்க்கப்பல்களும் முன்னோக்கி வருகின்றன. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
ஈரான்- அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக துருக்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்தான்புல் சென்றுள்ளார்.
துருக்கி சென்றுள்ள அப்பாஸ் அராக்சி, "பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருக்கிறோம். அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு முதலில் பேச்சுவார்த்தைகளின் வடிவம், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் தலைப்பு ஆகிய அனைத்தையும் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதுபோன்று போருக்கும் தயாராக உள்ளது" என்றார்.
- ஹமாஸ்க்கு எதிரான போரினால் கடந்த 2024-ல் இருந்து எல்லை மூடப்பட்டது.
- ஹமாஸ் தாக்குதலின்போது உயிரிழந்தவரின் உடல் பாகம் கிடைத்ததும், இஸ்ரேல் எல்லையை திறக்கிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரினால் கடந்த 2024-ம் ஆண்டு எகிப்து உடனான காசாவின் முக்கிய எல்லையை இஸ்ரேல் மூடியது. இந்த நிலையில் நாளை முதல் இந்த எல்லை (Rafah) திறக்கப்படும் என காசாவிற்கு வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் உள்ள இஸ்ரேலிய இராணுவ அமைப்பு {கோகாட் (COGAT)} தெரிவித்துள்ளது.
ஆனால் மக்களின் வரையறுக்கப்பட்ட நடமாட்டத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்படுவது டிரம்பின் காசாவின் போர் நிறுத்தத் திட்டத்திற்கான முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக் காவல்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் இந்த எல்லைப் பகுதியாக வெளியேறும் மற்றும் நுழையும் நபர்களை இஸ்ரேலும் எகிப்தும் சரிபார்க்கும்.
காசாவில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அனுமதி பெற்று மீண்டும் காசா திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
- அனைத்து கனடா விமானங்களுக்கும் சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்யும்.
- பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல்.
அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாக இந்த வரி நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், அனைத்து கனடா விமானங்களுக்கும் சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்யும் என்றார்.
இந்த நிலையில் மேற்கு கனடாவில் எண்ணை வளம் மிக்க ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறும்போது, கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
- அலி அன்சாரி என்ற ஈரானிய வங்கியாளர் பெயரில் பல சொத்துக்கள் அனைத்தும் வாங்கப்பட்டுள்ளது.
- ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி (56), வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களைக் ரகசியமாக குவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.
லண்டனின் மிகவும் விலையுயர்ந்த பகுதியான Bishops Avenue வில் சொகுசு பங்களாக்கள் முதல் ஜெர்மனியின் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரை மோஜ்தபாவின் ரகசிய சொத்துக்கள் பல இடங்களில் பரவியுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைபடி, அமெரிக்காவின் தடைகள் அமலில் இருந்தபோதிலும், ஷெல் நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் மூலம் இந்தச் சொத்துக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அலி அன்சாரி என்ற ஈரானிய வங்கியாளர் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டில் மட்டும் ஒரே ஒரு கட்டிடத்திற்காக சுமார் ரூ. 300 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் ஸ்பெயினின் மல்லோர்கா பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளும் இவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் வங்கிகள் வழியாக வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டு இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
ஈரான் பொருளாதார நெருக்கடியால் அத்தியவிசய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வரும் சூழலில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈ
- மியான்மரில் ஆதிக்கம் செலுத்தி வந்த நான்கு பெரிய குற்றக் குடும்பங்களில் 'மிங்' குடும்பமும் ஒன்று.
- இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஐடி வேலை என்று ஆசை காட்டி கடத்திச் சென்று இவர்கள் சித்திரவதை செய்து வந்தனர்.
மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பல சைபர் மோசடி கும்பல்கள் இயங்கி வருகின்றன.
இவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இளைஞர்களை வேலைவாய்ப்பு ஆசை காட்டி அழைத்துச் சென்று அவர்களை இதுபோன்ற சைபர் மோசடிகளை செய்ய வற்புறுத்தி வருகின்றனர்.
இவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு போலி அழைப்புகளை செய்தும் ஆன்லைன் மூலமாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் மியான்மரை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் பல ஆயிரம் கோடி ரூபாய் சைபர் மோசடிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் 'மிங்' குடும்பத்தினர்.
மியான்மரின் கோகாங் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நான்கு பெரிய குற்றக் குடும்பங்களில் 'மிங்' குடும்பமும் ஒன்று.
இவர்கள் ரகசிய இடங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சிறைபிடித்து, அவர்களைக் கொண்டு ஆன்லைன் மோசடிகளைச் செய்து வந்தனர்.
இந்தக் கும்பல் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி செய்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Romance Scam மூலம் முதலீடு செய்ய வைத்துப் பணத்தைப் பறிப்பது இவர்களது முக்கிய உத்தியாகும்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஐடி வேலை என்று ஆசை காட்டி கடத்திச் சென்று இவர்கள் சித்திரவதை செய்து வந்தனர்.
இவர்களிடம் சிறைப்பட்டிருந்தவர்கள் தப்பிக்க முயன்றபோது, 14 சீனக் குடிமக்களை இந்தக் கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. இது சீன அரசாங்கத்தைப் பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
இந்தக் கும்பலின் தலைவர் மிங் ஜுய்சாங் -ஐ கைது செய்ய 2023 நவம்பர் மாதம் சீனா பிடிவாரண்ட் பிறப்பித்தது.
மியான்மர் அதிகாரிகள் இவரைக் கைது செய்ய முயன்றபோது, அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக மியான்மர் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் இவருடைய மகன் மிங் குவோபிங் மற்றும் பேத்தி மிங் சென்சென் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சீனா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் விசாரணைக்கு பின் சீனாவின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நேற்று இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
எல்லையோரங்களில் நடக்கும் சூதாட்டம், போதைப்பொருள் மாபியா மற்றும் ஆன்லைன் மோசடிகளை முற்றிலும் ஒழிக்கும் வரை தங்களது வேட்டை தொடரும் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- இதுவரை வங்கதேச மக்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல துபாய் அல்லது தோஹா வழியாகச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
- கராச்சியிலிருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்குச் சரக்குக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விமானச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், நேற்று 150 பயணிகளுடன் டாக்காவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.
2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் முதல் வழக்கமான நேரடி விமானச் சேவை இதுவாகும்.
இதுவரை வங்கதேச மக்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல துபாய் அல்லது தோஹா வழியாகச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் இனி வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
2024-இல் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு வீழ்ந்த பிறகு, இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார். அவரது தலைமையின்கீழ் அந்நாடு பாகிஸ்தானுடன் தனது உறவை மேம்படுத்தி வருகிறது. அதே சமயம், இந்தியாவுடனான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே 2024 நவம்பரில் கராச்சியிலிருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்குச் சரக்குக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விமானச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
- மிகவும் விலையுயர்ந்தது ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 'ஸ்டெர்லிங் சில்வர்' ரெயில் சிலை ஆகும்.
- ஜில் பைடனுக்கு, சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த காஷ்மீர் பஷ்மினா சால்வையை மோடி பரிசளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் குறித்த விவரங்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி, முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கிய பரிசுகளில் மிகவும் விலையுயர்ந்தது ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 'ஸ்டெர்லிங் சில்வர்' ரெயில் சிலை ஆகும். இது 2024 ஜூலை மாதம் வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு, சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த காஷ்மீர் பஷ்மினா சால்வையை மோடி பரிசளித்துள்ளார்.
2023-ல் ஜோ பைடனுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் ஒரு பிரத்யேகமான சந்தனக் மரப் பெட்டி, கைவேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளி விநாயகர் சிலை ஆகியவை அடங்கும்.
முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கு, ரூ.1.11 லட்சம் மதிப்பிலான 'கிருஷ்ண ராசலீலா வெள்ளிப் பெட்டி' வழங்கப்பட்டுள்ளது. அவரது கணவர் டக்ளஸ் எம்ஹாப்பிற்கு ரூ.49,000 மதிப்பிலான உடையில் அணியும் கஃப்லிங்க்ஸ் வழங்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கு காஷ்மீர் பஷ்மினா சால்வை வழங்கியுள்ளார்.
அதேபோல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நடராஜர் வெண்கலச் சிலையை வழங்கியுள்ளார்.
அமெரிக்கச் சட்டப்படி, அந்நாட்டு அதிகாரிகள் பெறும் பரிசுகளின் மதிப்பு 480 டாலருக்கு மேல் இருந்தால் அதன் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
அதன்படி, மோடி வழங்கிய இந்தப் பரிசுகள் அனைத்தும் தற்போது அமெரிக்கத் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
- அசாதாரண குளிர்காலத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன்.
- இந்த தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்பு கொண்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறிய தாவது:-
உக்ரைனில் கடுமையான உறைபனி நிலவும் நிலையில், தலைநகர் கீவ்மற்றும் பிற நகரங்கள் மீது ஒரு வாரத்திற்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ரஷிய அதிபர் புதினிடம் கேட்டு கொண்டேன். இந்த அசாதாரண குளிர்காலத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன்.
இந்த தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்பு கொண்டார். இது சிறப்பான முடிவு. இதை உக்ரைன் தரப்பில் முதலில் நம்ப முடியவில்லை. அவர்கள் மிகவும் மோசமான சூழலில் போராடி வருவதால் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர் என்றார். ஆனால் இது தொடர்பாக ரஷியாவிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
- ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க உடன்படவில்லை.
- மின்சாரமின்றி மக்கள் கடும் குளிரில் தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சித்ததை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த போரானது 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டு வர கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பொறுப்புடன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதன் விளைவாக கடந்த வாரம் வெல்லக்கிழமை முதல் முறையாக அமெரிக்கா - ரஷியா - உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்றது. பிப்ரவரி 1-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி "மிகச் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன" என்று டிரம்ப் ட்வீட் செய்தார்.
இருப்பினும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள 20 சதவீத உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உடைய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடைய உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கீவ், கார்க்கிவ் உள்ளிட்ட நகரங்களின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் மின்சாரமின்றி மக்கள் கடும் குளிரில் தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே உக்ரைனில் நிலவும் கடும் குளிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் மின்சாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ரஷிய அதிபர் புதினுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை ரஷியா ஏற்றுக்கொண்டதாகவும், ஒரு வார காலத்திற்கு தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






