என் மலர்
உலகம்

மாஸ்கோவுக்கு வாங்க ஜெலன்ஸ்கி.. பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷியா - முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?
- ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க உடன்படவில்லை.
- மின்சாரமின்றி மக்கள் கடும் குளிரில் தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சித்ததை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த போரானது 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டு வர கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பொறுப்புடன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதன் விளைவாக கடந்த வாரம் வெல்லக்கிழமை முதல் முறையாக அமெரிக்கா - ரஷியா - உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்றது. பிப்ரவரி 1-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி "மிகச் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன" என்று டிரம்ப் ட்வீட் செய்தார்.
இருப்பினும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள 20 சதவீத உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உடைய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடைய உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கீவ், கார்க்கிவ் உள்ளிட்ட நகரங்களின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் மின்சாரமின்றி மக்கள் கடும் குளிரில் தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே உக்ரைனில் நிலவும் கடும் குளிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் மின்சாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ரஷிய அதிபர் புதினுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை ரஷியா ஏற்றுக்கொண்டதாகவும், ஒரு வார காலத்திற்கு தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






