என் மலர்
உலகம்

பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை.. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!
- இதுவரை வங்கதேச மக்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல துபாய் அல்லது தோஹா வழியாகச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
- கராச்சியிலிருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்குச் சரக்குக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விமானச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், நேற்று 150 பயணிகளுடன் டாக்காவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.
2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் முதல் வழக்கமான நேரடி விமானச் சேவை இதுவாகும்.
இதுவரை வங்கதேச மக்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல துபாய் அல்லது தோஹா வழியாகச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் இனி வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
2024-இல் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு வீழ்ந்த பிறகு, இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார். அவரது தலைமையின்கீழ் அந்நாடு பாகிஸ்தானுடன் தனது உறவை மேம்படுத்தி வருகிறது. அதே சமயம், இந்தியாவுடனான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே 2024 நவம்பரில் கராச்சியிலிருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்குச் சரக்குக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விமானச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.






