என் மலர்
உலகம்

பிரதமர் மோடி ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகளின் பட்டியலை வெளியிட்ட அமெரிக்க அரசு
- மிகவும் விலையுயர்ந்தது ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 'ஸ்டெர்லிங் சில்வர்' ரெயில் சிலை ஆகும்.
- ஜில் பைடனுக்கு, சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த காஷ்மீர் பஷ்மினா சால்வையை மோடி பரிசளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் குறித்த விவரங்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி, முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கிய பரிசுகளில் மிகவும் விலையுயர்ந்தது ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 'ஸ்டெர்லிங் சில்வர்' ரெயில் சிலை ஆகும். இது 2024 ஜூலை மாதம் வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு, சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த காஷ்மீர் பஷ்மினா சால்வையை மோடி பரிசளித்துள்ளார்.
2023-ல் ஜோ பைடனுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் ஒரு பிரத்யேகமான சந்தனக் மரப் பெட்டி, கைவேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளி விநாயகர் சிலை ஆகியவை அடங்கும்.
முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கு, ரூ.1.11 லட்சம் மதிப்பிலான 'கிருஷ்ண ராசலீலா வெள்ளிப் பெட்டி' வழங்கப்பட்டுள்ளது. அவரது கணவர் டக்ளஸ் எம்ஹாப்பிற்கு ரூ.49,000 மதிப்பிலான உடையில் அணியும் கஃப்லிங்க்ஸ் வழங்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கு காஷ்மீர் பஷ்மினா சால்வை வழங்கியுள்ளார்.
அதேபோல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நடராஜர் வெண்கலச் சிலையை வழங்கியுள்ளார்.
அமெரிக்கச் சட்டப்படி, அந்நாட்டு அதிகாரிகள் பெறும் பரிசுகளின் மதிப்பு 480 டாலருக்கு மேல் இருந்தால் அதன் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
அதன்படி, மோடி வழங்கிய இந்தப் பரிசுகள் அனைத்தும் தற்போது அமெரிக்கத் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.






