என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பரபரப்பாக செயல்படும் நாள். பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
ரிஷபம்
திறமை வெளிப்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பயணத்தில் பிரபலமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இடம், வீடு வாங்கும் சிந்தனை மேலோங்கும்.
மிதுனம்
சங்கடங்கள் அகன்று சந்தோஷம் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். நாளை வரும் என்று நினைத்த பணம் இன்றே வரலாம். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
கடகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகன பராமரிப்புச்செலவு உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
சிம்மம்
நன்மைகள் நடைபெறும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
கன்னி
கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வர்.
துலாம்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வளர்ச்சி கூடும். இழப்புகளை ஈடு செய்ய புது முயற்சி எடுப்பீர்கள். எதிர்பாராத தொகை கைக்கு கிடைக்கும். பயணங்கள் பலன் தரும்.
விருச்சிகம்
யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப் பெறுவீர்கள்.
தனுசு
தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. இடம், வாங்க விற்க எடுத்த முயற்சி கைகூடும். திருமணத்தடை அகலும்.
மகரம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலத்தில் அச்சுறுத்தல் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
உறவினர் பகை அகலும் நாள். இல்லம்தேடி சுபச் செய்தியொன்று வரலாம். தொழில் முன்னேற்றம் கருதி புதியவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். வருமான பற்றாக்குறை அகலும்.
மீனம்
செல்வநிலை உயரும் நாள். திருமண பேச்சுகள் முடிவாகும். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- நம் தாய்மடி எனச் சொன்னோம்!
- இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!
மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பட்டினப்பாலையின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நம் தாய்மடி எனச் சொன்னோம்!
இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!
அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சஸ்திரஹத பிதுர் மகாளயம்.
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-4 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி நள்ளிரவு 1.02 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : மகம் காலை 9.57 மணி வரை பிறகு பூரம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை பவனி
இன்று மாத சிவராத்திரி. சஸ்திரஹத பிதுர் மகாளயம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. அருணந்தி சிவாச்சாரியார் குரு பூஜை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்க ளில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கவனம்
ரிஷபம்-உண்மை
மிதுனம்-யோகம்
கடகம்-விருத்தி
சிம்மம்-கட்டுப்பாடு
கன்னி-நற்செயல்
துலாம்- பயணம்
விருச்சிகம்-கடமை
தனுசு- பாராட்டு
மகரம்-பொறுமை
கும்பம்-வெற்றி
மீனம்-நிறைவு
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார்.
- பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படத்துடன் அவரின் புகைப்படத்தை ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் என்று கூறப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார். அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர் அவரது பள்ளி ஆசிரியராக இருந்தார்.
மேக்ரான் தற்போது பிரான்சின் அதிபராக இரண்டாவது மற்றும் இறுதி பதவிக்காலத்தில் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே மேக்ரான்ஒரு வினோதமான பிரச்னையை எதிர்கொண்டுள்ளார்.
அவர் தனது மனைவி ஒரு ஆண் அல்ல பெண் தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேக்ரான் உடைய மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரோன் ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாகவும், பாலின மாற்றத்திற்கு உட்பட்டு பெண்ணாக மாறியதாகவும் பல காலமாக வதந்திகள் பரவி வருகின்றன.
உண்மையில் இந்த சர்ச்சை 2017 இல் பிரான்சில் தொடங்கியது. நடாஷா ரே என்பர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பிரிஜிட் மேக்ரோனின் உண்மையான பெயர் ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ் என்று கூறினார்.
மேலும் பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படம் என்று நம்பப்படும் ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் எனவும் வீடியோவில் நடாஷா கூறியிருந்தார்.

இதுதொடர்பான அவதூறு வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நாடாஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே அமெரிக்க தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் பிரிஜிட் மேக்ரோன் ஒரு ஆண் என்று பேசி வந்தார். அவருக்கு எதிராக மேக்ரான் தம்பதியினர் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கின் ஒரு பகுதியாக, பிரிஜிட் மேக்ரான் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மேக்ரானின் வழக்கறிஞர் டாம் கிளேர் தற்போது தெரிவித்துள்ளார்.
- சிங்கப்பூரில் இன்டர்போல் அமைப்பின் 25-வது ஆசிய பிராந்திய மாநாடு நடைபெற்றது.
- மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் உள்ள காவல் துறையினர் இணைந்து சர்வதேச குற்றங்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்பட்டு வருவது இன்டர்போல் காவல் அமைப்பாகும்.
இந்நிலையில் இன்டர்போல் அமைப்பின் ஆசியக் குழுவின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 25-வது ஆசிய பிராந்திய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வாகி உள்ளது.
இந்தியாவில் இன்டர்போல் விவகாரங்களுக்கு பொறுப்பான மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்தியா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்ட்டது, குற்ற கும்பல்கள், சைபர் குற்றங்கள், மனிதக் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்புப் பிரச்சினைகளில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
இதன்மூலம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,
- இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.
சூடானில் துணை ராணுவப் படை (RSF) மசூதி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு டார்பூரில் உள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,
தாக்குதலுக்குப் பிறகு, மசூதி இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன.
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.
குறிப்பாக எல் ஃபாஷர் நகரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன.
- தனது 24 வயதில் இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சுரேகா சேர்ந்தார்.
- இன்று, இந்திய ரயில்வேயில் 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60 வயது)
எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்து, 1989 ஆம் ஆண்டு தனது 24 வயதில் இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சுரேகா சேர்ந்தார்.
இதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை சுரேகா யாதவ் பெற்றார்.
இதன்பின் 1996 ஆம் ஆண்டு சரக்கு ரெயில் ஓட்டுநரான சுரேகா, 2000 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில்களை ஓட்டத் தொடங்கினார்.
36 ஆண்டுகள் ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
ரெயில்வேயில் ஓட்டுநர்களாக மாறிய அனைத்து பெண்களுக்கும் சுரேகா யாதவின் வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளது. இன்று, இந்திய ரயில்வேயில் 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.
பணியின் இறுதியாக பயணமாக மராட்டியத்தின் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியின் ஹச்ரத் நிஜாமுதின் ரெயில் நிலையம் இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை சுரேகா யாதவ் இயக்கினார்.
அப்போது அவருக்கு ரெயில்வே சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
- வெளியே சென்று வீடு திரும்பும் போது காரணம் கூறாமல் கைது செய்யப்பட்டனர்.
- ரெனால்ட்ஸ் தம்பதியை விடுதலைச் செய்ய தலிபான்களிடம் கத்தார் அரசு மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் எட்டு மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தம்பதியினர் விடுவிக்கப்பட்டனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் பாமியன் மாகாணத்தில் பீட்டர் ரெனால்ட்ஸ் (80) மற்றும் அவரது மனைவி பார்பி (76) வசித்து வந்தனர். அங்கு கல்வி மற்றும் பயிற்சி அமைப்பை அவர்கள் இணைந்து நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியே சென்று வீடு திரும்பும் போது காரணம் கூறாமல் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி மேற்கு நாடுகள் வலியுறுத்தி வந்தன. மேலும் ரெனால்ட்ஸ் தம்பதியை விடுதலைச் செய்ய தலிபான்களிடம் கத்தார் அரசு மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் பல தரப்பின் தொடர் வலியுறுத்தலின் பேரில் பீட்டர் மற்றும் அவரது மனைவி பார்பீ ஆகியோரை தலிபான் அரசு தற்போது விடுதலைச் செய்துள்ளது.
அவர்கள் இருவரும், நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் இங்கிலாந்து திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்பதியினர் ஆப்கானிஸ்தான் சட்டத்தை மீறியதாகவும், நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான வைக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிடவில்லை.
அமெரிக்க படைகள் வெளியேறிய பின் கடந்த 2021 இல் ஆட்சிக்கு வந்த தாலிபான் அரசாங்கத்தை இங்கிலாந்து அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.
- பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் இந்திய மென்பொருள் பொறியாளர் அந்நாட்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் மகிபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (30 வயது)
அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் கடந்த செப்டம்பர் 3 அன்று அவரது அமெரிக்க அறை நண்பருடன் ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சாண்டா கிளாரா காவல் துறை (SCPD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி , காலை 6:08 மணியளவில் ஒரு வீட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு 911 என்ற எண்ணில் அழைப்பு வந்தது.
சந்தேக நபர் வீட்டில் ஒரு பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாக அழைப்பாளர் கூறினார். SCPD அதிகாரிகள் வந்து சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவர் இனவெறியால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிஜாமுதீன், தான் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்ட பதிவில், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.
மேலும், பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில், தனது உணவில் விஷம் கலக்கப்பட்டு கொலை முயற்சி நடந்ததாகவும், அநீதிக்கு எதிராகப் போராடியதால் குடியிருப்பை விட்டு வெளியேற்றப்படுவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் உதவி கோரியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- எனது கவிதைகளில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும்.
இஸ்ரேல் நடத்தி வரும் போரில் காசா மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
கடந்த 2023 அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் பீரங்கிகள் மூலம் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இது ஒரு இனப்படுகொலை என என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசா மக்களின் பாதுகாப்புக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தினர்.
இதில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், "ஒரு அநியாயத்திற்கு எதிராகப் பேசுவது அரசியல் என்றால் நாங்கள் அரசியல் தான் பேசுவோம்.
நாம் மவுனமாக இருந்தால் பாதிப்புகள் மோசமாகவே இருக்கும். ஒரு கவிஞன் சொன்னான், எனது கவிதைகளில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும். பறவைகளின் சத்தம் எனக்குக் கேட்க வேண்டும் என்றால் யுத்த விமானங்களின் சத்தம் அடங்க வேண்டும் என்கிறான்.
ஒரு மனிதனின் உடலில் காயம் ஏற்பட்டிருந்தால் மவுனமாக இருந்தால் கூட அது சரியாகிவிடும். ஆனால், ஒரு நாட்டிற்கு நாட்டு மக்களுக்குக் காயம் ஏற்படும்போது மற்றவர்கள் அமைதியாக இருந்தால் அந்தக் காயம் அதிகரிக்கவே செய்யும். எனவே நாம் தொடர்ந்து போராட வேண்டும். வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை. அதற்குத் துணையாக இருக்கும் அமெரிக்காவும் காரணம். மவுனமாக இருக்கும் மோடியும் தான் காரணம். இதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதரும் காரணம் தான்" என்றார்.
- கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், கடம்ப மரக்கன்றை பரிசாக அனுப்பி வைத்தார்.
கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார். இதற்கு பதிலாக கடம்ப மரக்கன்றை மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்ததாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்தது.
காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்றும் பிரிட்டன் தூதரகம் கூறியது.
இந்நிலையில் நேற்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில் பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும்.
- ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலில் வர்த்தகம், ஃபென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் சீனாவுக்குச் செல்வதாகவும், தொடர்ந்து ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்றும் அவர் தெரிவித்தார்.
டிக்டாக் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காகவும் டிரம்ப் தனது நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதல் காரணமாக இருதரப்பும் பரஸ்பரம் வரிகளை அதிகரித்தன.
பேச்சுவார்த்தைக்கு பின் ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இந்த ஒப்பந்தம் நவம்பரில் முடிவடைகிறது.






