என் மலர்
உலகம்

அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட தெலுங்கானா இளைஞர். இனவெறி காரணமா? - Linkedin பதிவால் பரபரப்பு
- கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.
- பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் இந்திய மென்பொருள் பொறியாளர் அந்நாட்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் மகிபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (30 வயது)
அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் கடந்த செப்டம்பர் 3 அன்று அவரது அமெரிக்க அறை நண்பருடன் ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சாண்டா கிளாரா காவல் துறை (SCPD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி , காலை 6:08 மணியளவில் ஒரு வீட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு 911 என்ற எண்ணில் அழைப்பு வந்தது.
சந்தேக நபர் வீட்டில் ஒரு பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாக அழைப்பாளர் கூறினார். SCPD அதிகாரிகள் வந்து சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவர் இனவெறியால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிஜாமுதீன், தான் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்ட பதிவில், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.
மேலும், பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில், தனது உணவில் விஷம் கலக்கப்பட்டு கொலை முயற்சி நடந்ததாகவும், அநீதிக்கு எதிராகப் போராடியதால் குடியிருப்பை விட்டு வெளியேற்றப்படுவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் உதவி கோரியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






