என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"காசா போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை.. மோடியும் தான் காரணம்" - பிரகாஷ் ராஜ்
- இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- எனது கவிதைகளில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும்.
இஸ்ரேல் நடத்தி வரும் போரில் காசா மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
கடந்த 2023 அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் பீரங்கிகள் மூலம் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இது ஒரு இனப்படுகொலை என என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசா மக்களின் பாதுகாப்புக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தினர்.
இதில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், "ஒரு அநியாயத்திற்கு எதிராகப் பேசுவது அரசியல் என்றால் நாங்கள் அரசியல் தான் பேசுவோம்.
நாம் மவுனமாக இருந்தால் பாதிப்புகள் மோசமாகவே இருக்கும். ஒரு கவிஞன் சொன்னான், எனது கவிதைகளில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும். பறவைகளின் சத்தம் எனக்குக் கேட்க வேண்டும் என்றால் யுத்த விமானங்களின் சத்தம் அடங்க வேண்டும் என்கிறான்.
ஒரு மனிதனின் உடலில் காயம் ஏற்பட்டிருந்தால் மவுனமாக இருந்தால் கூட அது சரியாகிவிடும். ஆனால், ஒரு நாட்டிற்கு நாட்டு மக்களுக்குக் காயம் ஏற்படும்போது மற்றவர்கள் அமைதியாக இருந்தால் அந்தக் காயம் அதிகரிக்கவே செய்யும். எனவே நாம் தொடர்ந்து போராட வேண்டும். வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை. அதற்குத் துணையாக இருக்கும் அமெரிக்காவும் காரணம். மவுனமாக இருக்கும் மோடியும் தான் காரணம். இதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதரும் காரணம் தான்" என்றார்.






