என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
    • இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம்.

    புதுடெல்லி:

    டெல்லியில் 9-வது மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நான் 'மேக் இன் இந்தியா' பற்றி பேசியபோது, பலர் அதை கேலி செய்தனர். அவர்களின் காலத்தில் புதிய தொழில்நுட்பம் இந்தியாவை அடைய கணிசமான நேரம் பிடித்தது. ஒரு காலத்தில் 2 ஜி உடன் போராடிய நாடு தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் இணைப்பை அடைந்துள்ளது.

    இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 ஜி ஸ்டேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பெரிய உள்நாட்டு சாதனையாகும். இதன் மூலம், உலகில் இந்த திறனைக் கொண்ட 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இன்று இந்தியாவில் ஒரு ஜி.பி. வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு கப் டீயின் விலையை விடக் குறைவு.

    டிஜிட்டல் இணைப்பு இனி ஒரு சலுகையோ அல்லது ஆடம்பரமோ அல்ல. அது தற்போது ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம். நாங்கள் சீர்திருத்தங்களின் வேகத்தை அதிகரித்து வருகிறோம்.

    இந்தியா மொபைல்கள், செமிகண்டக்டர்ஸ் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல்
    • வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நேற்று முன் தினம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.

    வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

    அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார். இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேசிய கவாயின் தங்கை, "இது ஒரு நபரின் தனிப்பட்ட தாக்குதல் அல்ல, மாறாக ஒரு நச்சு சித்தாந்தத்தால் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இந்த வகையான அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதலை நாம் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பிற்கு எதிராக யாராவது செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம் ஆகும்" என்று தெரிவித்தார்.

    • காவல் துறையினர் உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டு உள்ளார்.
    • த.வெ.க. முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் வெளியில் வராமல் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வருகிறார்.

    கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    தமிழக வெற்றிக்கழகத்தின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தமிழக போலீஸ் டி.ஜி.பி., மற்றும் மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதால் மத்திய பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கரூர் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக திட்டமிட்டு உள்ளேன். இதற்கு காவல் துறையினர் உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இந்நிலையில் கரூர் செல்ல உள்ள விஜய்க்கு பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

    டி.ஜி.பி.யிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க. வழக்கறிஞர்கள், பாதுகாப்பு கோரியதாக கூறி விட்டு சென்றனர்.

    த.வெ.க. குறித்தும், விஜய் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.

    எதுவுமே கூறாமல் செல்கிறீர்களே என செய்தியாளர்கள் கேட்டபோது, சாரி சார் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    • ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
    • த.வெ.க தரப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு முறையீடு செய்யப்பட்டது

    சென்னை:

    கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று த.வெ.க தரப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு முறையீடு செய்யப்பட்டது

    இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி த.வெ.க வினரின் மனுவை நாளை மறுநாள் (10-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு இணைத்து விசாரிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
    • குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள்.

    சென்னை:

    போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அன்புமணி கண்டம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எந்த அளவுக்கு வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.

    வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன், தடயங்களை அழிக்கும் நோக்குடன் சிறுமியின் உடலையும் எரித்ததாக அதேபகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் பிணையில் வந்த தஷ்வந்த் தமது தாயையும் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் மும்பையில் கைது செய்யப்பட்ட அவருக்கு குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனையும், மொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் செங்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்தத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட காணொலி மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானவை அல்ல, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று கூறி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்!

    தாயை கொலை செய்த வழக்கிலும் பிறழ்சாட்சியத்தை பயன்படுத்தி கடந்த மாதம் தஷ்வந்த் விடுதலையான நிலையில், இப்போது இந்த வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளார். இந்த வழக்கில் தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? என்ற வினா எழுகிறது. இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை. 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தஷ்வந்துக்கு பிணை கிடைத்தது. அப்போதிலிருந்தே இந்த வழக்கு தடம் மாறத் தொடங்கி விட்டது.

    தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும். டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் கூட ஒத்துப்போகும் வகையில் இல்லாததால் தான் தண்டிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனித மிருகத்துக்குக் கூட தண்டனை பெற்றுத்தர முடியவில்லை என்றால் நமது சட்ட செயலாக்க அமைப்பும், வழக்கு நடத்துவதற்கான கட்டமைப்பும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம். இதற்காக அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும்.

    இனிவரும் காலங்களிலாவது இது போன்ற கொடிய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • மோடியின் சாதனைப் பயணம் 2001-ம் ஆண்டு தொடங்கியது.
    • பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நரேந்திர மோடியின் இந்த சாதனைப் பயணம் 2001-ம் ஆண்டு புஜ் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் தடுமாறி கொண்டிருந்த நிலையில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் தொடங்கியது. அதன்பின் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் 135 நாள்கள் அந்தப் பதவியில் தொடர்வதன் மூலம், ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக அந்த பதவியில் நீடிக்கும் 2-வது தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை போல் இரு தரப்பும் எந்த ஒரு பரஸ்பர குற்றச்சாட்டையே அவதூறையோ பரப்பக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • சீமான், அவரது ஏஜெண்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இந்த நிலையில், நடிகை குறித்து அவதூறு பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

    நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தனது சொல், செயல்களால் நடிகைக்கு ஏற்பட்ட வலி, காயத்திற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக சீமான் தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    நடிகைக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள், குற்றச்சாட்டுகளையும் திரும்பப்பெறுவதாகவும் நடிகை குறித்து எந்த ஊடகத்திலும் எந்த கருத்தையும் இனி தெரிவிக்க மாட்டேன் என்றும் சீமான் பிரமான பத்திரத்தில் உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை கூறியதை தொடர்ந்து வழக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும், பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை போல் இரு தரப்பும் எந்த ஒரு பரஸ்பர குற்றச்சாட்டையே அவதூறையோ பரப்பக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே, சீமான், அவரது ஏஜெண்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. நான் சீமானால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வாழ்வாதாரத்துக்கான உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடிகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

    • அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கம்போல இருந்த காவல்துறை இன்றைக்கு மக்கள் நம்பிக்கை இழந்து போய் விட்டது.
    • நீங்கள் மன்னராட்சிக்கு மகுடம் சூட்ட களைகளை எடுக்க தயங்கிறீர்கள்.

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நடைபெற்று வரும் ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் எங்கே போகிறது தமிழ்நாடு, இன்றைக்கு தாய் தமிழ்நாடு தலைகுனிந்து இருக்கிறது என்ற வேதனையில் தமிழக மக்கள் உள்ளார்கள்.

    திருவண்ணாமலை சேர்ந்த காவலர்கள் இருவர் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை, பெற்ற தாயின் முன் பாலியல் சம்பவம் செய்திருப்பது இந்தியாவே பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. மக்களுக்கு காவல் அரணாக இருக்க வேண்டிய காவல்துறையை இன்றைக்கு பெண்களுக்கு எதிரான குற்றசெயலில் ஈடுபட்டுள்ளது.

    காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு கூட பாலியல் துன்புறுத்தல் என்ற செய்தி வெளிவருவது மிகவும் வேதனைக்குரியது.

    பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் காவல்துறை ஈடுபட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும் என்று கடந்த 2025 சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் கொண்டு வந்த பின்பு இது போன்ற பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    சட்ட திருத்தத்திற்கு பின் அதை செயல்படுத்த அரசு தவறி விட்டதா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?

    அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை சம்பவம் வரை பாலியல் சம்பவங்கள் நீண்டு கொண்டு தான் போகிறது. இன்றைக்கு குழந்தைகள், தாய்மார்கள், பெரியவர்கள் என அனைத்து பெண்களும் வீட்டில் மற்றும் பொதுவெளியில் செல்ல பாதுகாப்பை உறுதி செய்வதை அரசு தவறிவிட்டது.

    இதுகுறித்து எடப்பாடியார் ஆதாரத்துடன் சட்டமன்றத்தில் பதிவு செய்தார், மக்கள் மன்றத்தின் பதிவு செய்தார், ஊடகங்களில் அறிக்கை வாயிலாக உரிமைக்குரல் எழுப்பி வருகிறார். ஆனால் அரசு இதை செவிடன் காதில் ஊதிய சங்கு போல அக்கறை கொள்ளவில்லை .

    மக்களுக்கு பாதுகாப்பான அரணாக நிற்க வேண்டிய அரசு அதை உறுதி செய்ய வேண்டும். எடப்பாடியார் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூறவில்லை மக்களுக்கு பாதுகாப்புடன் அரசு இருக்க வேண்டும் என்று தான் கூறுகிறார்.

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் தமிழக காவல்துறை இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக இருந்தது.

    கருணாநிதி காவல்துறை ஈரல் கெட்டு விட்டது என்று கூறினார் அவர் சொன்ன வார்த்தை இன்றைக்கு அவரது மகன் ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை ஈரல் கெட்டு தான் போய்விட்டது காவல்துறையில் களைகளை எடுக்க ஸ்டாலின் தயங்குவது ஏன்?

    அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கம்போல இருந்த காவல்துறை இன்றைக்கு மக்கள் நம்பிக்கை இழந்து போய் விட்டது. மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்போது நீங்கள் செய்ய தவறியதை சரி செய்து காவல்துறையில் களைகளை புடுங்கி எறிந்து காவல்துறைக்கு இழந்த பெருமையை மீட்டுத் தருவார்.

    நீங்கள் மன்னராட்சிக்கு மகுடம் சூட்ட களைகளை எடுக்க தயங்கிறீர்கள், நிச்சயம் இந்த மன்னராட்சிக்கு முடிவு கட்டி 2026 இல் எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி மலரும், அப்போது தமிழக காவல்துறை இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக உயர்த்தி காட்டுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
    • அந்த தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார்.

    2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அந்த தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார்.

    அதனை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சில அதிரடி மாற்றங்கள் அவ்வபோது இந்திய அணியில் நடந்து வருகிறது.

    அந்த வகையில் வெளிநாட்டு தொடர்களில் இடம் கிடைக்காத விரக்தியில் அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ரோகித், விராட் ஆகியோர் ஒரே நாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

    அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் மற்றும் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை நீக்கி விட்டு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இப்படி இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் அரங்கேறி உள்ளது.

    இந்நிலையில் சீனியர் வீரர்கர் அவர்களாகவே வெளியேறும் வகையிலான சூழலை கம்பீர் உருவாக்கினார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறினார்.


    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வுபெற கவுதம் கம்பீரே காரணம் மூத்த வீரர்கள் கம்பீரின் முடிவுகளை எதிர்க்கலாம் என்பதால் அவர்களாகவே வெளியேறும் வகையிலான சூழலை உருவாக்கினார்.

    இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.

    • பண்டிகை நாளில் விடுமுறை எடுப்பதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
    • பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநில அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும்.

    இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். மற்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் அவர்கள் எங்கிருந்தாலும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பண்டிகை நாளில் விடுமுறை எடுப்பதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

    அத்தகைய மக்களுக்கு அமெரிக்கா ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. குறிப்பாக அந்த நாட்டில் அதிக இந்திய மக்கள் தொகை இருப்பதால், கலிபோர்னியா தங்களுக்குப் பிடித்த தீபாவளிப் பண்டிகையை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்துள்ளது. மாநிலத்தில் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரித்து, ஆளுநர் கவின் நியூசம் நேற்று முன்தினம் ஒரு புதிய மசோதாவில் கையெழுத்திட்டார்.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இந்திய-அமெரிக்க சமூகங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். இந்தப் புதிய சட்டத்தின்படி, பொதுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளி நாளில் விடுமுறை அறிவிக்கப்படும். மேலும், இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநில அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும்.

    • திருமாவளவன் வந்த கார் தனது பைக் மீது மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீது சனாதன ஆதரவு வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்திய முயற்சியை கண்டித்து நேற்று விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த தனது பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீசார் விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீலான ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "எனது வண்டியின் முன்னாள் இருசக்கர வண்டியின் ஒரு இளைஞர் போய் கொண்டிருந்தார். அந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் எனது வண்டியை கவனித்து திடீரென வாகனத்தை நிறுத்தி விட்டு எனது வாகனத்தை நோக்கி வந்து சத்தம் போட்டார்.

    நான் நமது வையை நிறுத்தாமல் செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் வாகனம் செல்லமுடியாதபடி அந்த இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.

    இதை அறிந்து எனது பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அந்த இளைஞரை தள்ளிபோகுமாறு கூறினர். ஆனால் நான் காருக்குள் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டே அந்த இளைஞர் சத்தம் போட்டு பேசிக்கொண்டே இருந்தார்.

    நமது கட்சியை சேர்ந்த தோழர்கள் அவரிடம் தள்ளிபோகுமாறு கூறியுள்ளனர். அனால் அவர்களிடமும் அவர் முறைத்து பேசியிருக்கிறார். அப்போது அந்த இளைஞருக்கும் கட்சி தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவப்பட்ட கட்சி தோழர்கள் அந்த இளைஞரை அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் அந்த இளைஞரை கூட்டி கொண்டு சென்றனர். இது தான் நடந்தது.

    பிரச்னை செய்தது அந்தத் தம்பிதான். இருசக்கர வாகனம் மீது எனது கார் மோதியதாக வெளியான தகவல் தவறு. ஆனால் ஊடகங்கள் இதை பெருக்கி, நாம் திட்டமிட்டே அந்த இளைஞரை அடித்தது போல அவதூறு செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞரின் பைக் மீது மோதவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை விசிக தியூனை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
    • வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது. வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    ×