என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இன்று தைபூசம்.
    • சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில் தெப்ப உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-29 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 7.50 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: பூசம் இரவு 7.31 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று தைபூசம். சுவாமிமலை முருகப் பெருமான் போராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். வடலூர் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வண்டியூர் எழுந்தருளி தெப்ப உற்சவம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில் தெப்ப உற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திரு மஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார பூஜை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் ஆண்டு நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-உவகை

    கடகம்-அன்பு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-உயர்வு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- கவனம்

    மகரம்-அமைதி

    கும்பம்-செலவு

    மீனம்-சுபம்

    • அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.
    • அதிபர் மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பாரிஸ்-இல் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க சென்றிருக்கும் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டியணைத்து வரவேற்றார். இதன்பிறகு நடந்த இரவு விருந்தில் பிரான்ஸ்-இல் உள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.

    பிரான்ஸ்-இல் அதிபர் மேக்ரானை சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ""எனது நண்பர் அதிபர் மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி பாரிசில் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் உரையாடுகிறார்" என்று தெரிவித்துள்ளது.

    இரு நாடுகள் சுற்றுப் பயணமாக முதலில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்துபேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    பாரிசில் AI உச்சி மாநாட்டிற்கு இணை தலைமை தாங்கும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். பிறகு வணிகத் தலைவர்களுடன் உரையாற்ற உள்ளார்.

    • 100 நாட்களுக்கு மேலாகியும் இந்த இரு வாக்குறுதிகளையும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.
    • தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேசவேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள இலங்கை கடற்படை, அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளின் மீனவர்கள் நலனுக்கான கூட்டு பணிக்குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அப்போது இரு நாட்டு மீனவர் அமைப்புகளின் பேச்சுகளுக்கு விரைவாக ஏற்பாடு செய்யவேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதை இலங்கை தரப்பு ஏற்றுக்கொண்டது. ஆனால், அதன்பின் 100 நாட்களுக்கு மேலாகியும் இந்த இரு வாக்குறுதிகளையும் இலங்கை அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை.

    தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேசவேண்டும். மீனவர்கள் நலன் தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்தவேண்டும். அதையும் மீறி தமிழக மீனவர்களுக்கு எதிரான செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டால் அதன் மீது தூதரக நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வீட்டு முன்பு கியாஸ் குழாயில் தீப்பிடித்து எரிந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மக்கள் அனைவருமே தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.

    உப்பள்ளி:

    கர்நாடகத்தில் உப்பள்ளி, மங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு கியாஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உப்பள்ளி டவுனில் ராஜட்கிரி முதுல் கிராசில் உள்ள கியாஸ் குழாயில் திடீரென்று கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

    இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த கியாஸ் குழாய் வீட்டு முன்பாக செல்கிறது. இதனால் வீட்டு முன்பு கியாஸ் குழாயில் தீப்பிடித்து எரிந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அலறியடித்தப்படி சுற்றுச்சுவரை ஏறி குதித்து வெளியேறினர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அனைவருமே தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே இதுபற்றி கியாஸ் வினியோக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கியாஸ் வினியோகத்தை நிறுத்தினர்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி உப்பள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் ரசாயன நுரையை பயன்படுத்தி கியாஸ் குழாயில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயை முழுமையாக தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

    இந்த தீவிபத்தால் சில வீடுகளின் முன்பு நின்ற மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. பின்னர் கியாஸ் வினியோக அதிகாரிகள், ஊழியர்கள் வந்து கசிவு ஏற்பட்ட இடத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை.
    • 4-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றும் மம்தா நம்பிக்கை தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசும்போது, 'டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. வென்று விட்டது.

    எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. நான் தனித்தே போட்டியிடுவேன். நாம் மட்டுமே போதும்' என கூறினார்.

    மாநிலத்தில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் 4-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றும் மம்தா நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும் எனக்கூறிய மம்தா பானர்ஜி, இல்லாவிட்டால் தேசிய அளவில் பா.ஜ.க. கட்டுப்படுத்துவது இந்தியா கூட்டணிக்கு கடினமாக இருக்கும் என்றும் கூறினார்.

    • காஷ்மீரின் நிலைமை குறித்து உமர் அப்துல்லா அமித் ஷாஷாவுக்கு விளக்கமளித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    • துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பின் போது, ஜம்மு காஷ்மீரின் நிலைமை குறித்து முதல்-மந்திரி உமர் அப்துல்லா அமித் ஷாவுக்கு தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அண்மையில் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் தற்கொலை செய்துகொண்டு ஒருவர் மரணித்தது, வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் உள்ள சோதனைச் சாவடியில் நிற்காததால் லாரி ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து உமர் அப்துல்லா அமித் ஷாஷாவுக்கு விளக்கமளித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உமர் அப்துல்லா, அமித் ஷாவை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய சேவைகள் மற்றும் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    • இந்திய-பிரான்ஸ் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இரு தலைவா்களும் உரையாற்ற உள்ளனர்.
    • இந்தியா்கள் சில நாள்களுக்கு முன் நாடுகடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். பிரான்சில் அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்திய-பிரான்ஸ் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இரு தலைவா்களும் உரையாற்ற உள்ளனர்.

    மேலும், மாா்சே நகரில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை இருவரும் திறந்துவைக்க உள்ளனர். பிரான்ஸ் பயணத்தை முடித்துகொண்டு, அங்கிருந்து அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளார்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியா்கள் சில நாள்களுக்கு முன் நாடுகடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக தனது வெளிநாட்டு பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

    அடுத்த சில நாட்கள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். பிரான்ஸ் அதிபர் அழைப்பின் பேரில் செல்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான ஏஐ உச்சிமாநாட்டிற்கு இணை தலைமை தாங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்கு பரந்த பொது நன்மைக்காக ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் ஏஐ தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்" என்றார்.

    • இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.
    • தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன்.

    டி20 லீக் போட்டிகளால் சர்வதேச கிரிக்கெட் தரம் குறைந்து வருகிறது. தலைசிறந்த முன்னாள் வீரர்களை போன்ற வீரர்களை உருவாக்க முடியவில்லை என்று இலங்கை அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டனான அர்ஜுன ரனதுங்கா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரனதுங்கா கூறியதாவது:-

     நான் 1990களின் தொடகத்தில் கேப்டனாக இருந்தபோது, இந்திய அணி கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்ற பேட்டிங் ஆர்டர்களை பெற்றிருந்தது. அவர்களை எங்களால் இரண்டு முறை (டெஸ்ட் போட்டி) ஆட்மிழக்க செய்ய முடியவில்லை. அவர்களை தொடர்ந்து அசாருதீன், தெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, டிராவிட் பின்தொடர்ந்து வந்தார்கள்.

    அவர்களிடம் அற்புதனமாக தரமான வீரர்கள் இருந்தனர். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னை தவறாக நினைக்காதீர்கள். தற்போது அதை போன்ற கிளாஸ் பிளேயர்கள் இந்தியாவில் உள்ளனரா? நான் அப்படி நினைக்கவில்லை. இதை வெளிப்படையாக தெரிவிக்கிறேன். நான் என்னுடைய 1990 இலங்கை அணியுடன், இந்த இந்திய அணிக்கு எதிரான விளையாடினால், என்னால் இரண்டு முறை ஆட்டமிழக்க செய்ய முடியும். இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிப்பேன்.


    நாம் இளைஞர்களுக்கு முறையாக கிரிக்கெட் சொல்லிக்கொடுக்கிறோமா?. இந்தியாவில் கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்றோரை உருவாக்க முடியுமா?. ஒருவேளை தெண்டுல்கர், டிராவிட் போன்று? வெளிப்படைய நீங்கள் சொல்லுங்கள். எனக்கு இதில் சந்தேகம் உள்ளது. இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.

    தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன். அவர்கள் பிரான்சிஸ் கிரிக்கெட்டுகளை விரும்புகின்றனர். நாட்டிற்காக விளையாடவில்லை என்றாலும், பிரான்சிஸ் கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் ஐந்து வருடத்தில் வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் மதிப்பு போய்விடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரான்சிஸ் கிரிக்கெட் மட்டும்தான் இருக்கும்.

    இவ்வாறு ரனதுங்கா தெரிவித்துள்ளார்.

    • விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
    • விஜய் தேவரகொண்டா தற்போது 'VD 12' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது 'VD 12' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

    கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

    'VD 12' திரைப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு 'VD 12' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தின் டீசர் வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்ன வென்றால் தமிழ் டீசரில் நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இச்செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் படத்தின் டீசரின் மேல் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    • 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக நள்ளிரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
    • மறுநாள் வீராயியின் கணவர் முத்து அம்பலமும் (85) தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக பிப்ரவரி 8 நள்ளிரவு உடல்நலக்குறைவால் தூக்கத்திலேயே உயிரிழந்தார்;

    இந்நிலையில் இவருடைய கணவரான 85 வயதுடைய முத்து அம்பலம் மனைவியின் பிரிவு தாங்காது தவித்த நிலையில், நேற்று இரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

    67 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
    • விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை கட்டணம்.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

    இந்நிலையில், தைப்பூசத்தையொட்டி நாளை பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்றும், நாளை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

    பொது விடுமுறை நாளான தைப்பூசம் நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதாக தமிழக அரசு அனுமதித்துள்ளது.

    விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை கட்டணம் சேர்த்து வசூலிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    • தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்.
    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் துக்லக் தர்பார், மகான், காத்துவாக்குல ரெண்டு காதல், கோப்ரா, லியோ போன்ற தொடர் வெற்றித்திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.

    தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை விழா இன்று நடைப்பெற்றது.

     

    இந்த பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், ஜெகதீஷ் கலந்துக் கொண்டனர். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சுரேஷ் இயக்கவுள்ளார்.

     

    படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொள்ளவுள்ளார்.பிலோமின்ராஜ் படத்தொகுப்பை செய்கிறார். படத்தை பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    ×