search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas tube"

    அத்திப்பட்டு புதுநகர் கொசஸ்தலை ஆற்றில் ‘கியாஸ்’ குழாய் பதிக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பொன்னேரி:

    எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மணலி தொழிற்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு குழாய் மூலம் திரவ இயற்கை வாயு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் கொசஸ்தலை ஆற்று படுகையில் கியாஸ் குழாய் அமைக்கப்படுகிறது.

    இதற்கு எண்ணூர் அனைத்து மீனவ கிராமங்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கியாஸ் குழாயில் பாதிப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதுபற்றி அறிந்ததும் ஏராளமான மீனவர் கிராம கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்கள் கியாஸ் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது, ‘‘கொசஸ்தலை ஆற்றில் கியாஸ் குழாய் பதிக்கப்படுவதால் விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

    ஏற்கனவே வட சென்னை அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கொசஸ்தலை ஆறு வழியாக கியாஸ் குழாயை பதிக்க விடமாட்டோம்.

    இந்த திட்டத்துக்காக கடற்கரை மண்டல ஒழுங்கு முறை அறிவிப்பாணை, சுற்றுப்புறசூழல் ஆணையரிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறப்படவில்லை. மேலும் காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு சட்டத்தின் கீழ் எந்தவித அனுமதியும் பெறவில்லை’ என்றனர். #tamilnews
    ×