என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பயனர்களுக்கு 149 ரூபாய் முதல் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
- சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்யும்.
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒன்றிணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய ஸ்ட்ரீமிங் தளத்தை இன்று [பிப்ரவரி 14] அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக இந்த ஜியோ ஹாட்ஸ்டார் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் 60% பங்குகளை வைத்துள்ளது. டிஸ்னி 37% பங்குகளை வைத்துள்ளது.

இரண்டு தளங்களிலும் இருந்த ஓடிடி கண்டென்ட்டுகளை இனி ஒரே தளத்தில் பார்க்கலாம். தற்போது இதில் இருக்கும் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், லைவ் ஷோக்கள் போன்றவற்றை இலவசமாகப் பார்க்கலாம். இடையில் வரும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா கட்ட வேண்டியிருக்கும்.
இரு தளங்களிலும் ஏற்கனவே சந்தா கட்டியுள்ள பயனர்களுக்கு அவர்களின் சந்தா காலம் முடியும் வரை இந்த சேவை தொடரும். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் புதிதாக சந்தா கட்ட தேவையில்லை.
ஜியோ சினாவில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்க முடியும். ஆனால் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டிகள் சந்தா முறைக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் சில நிமிடங்களுக்கு பின் வீடியோ லாக்- இன் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சந்தா செலுத்தினால் மட்டுமே விளம்பரம் இன்றி அதிக குவாலிட்டியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

புதிய பயனர்களுக்கு 149 ரூபாய் முதல் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மொபைல் வெர்ஷனுக்கு ரூ. 149, சூப்பர் திட்டத்திற்கு ரூ. 299 மற்றும் விளம்பரம் இல்லாத பிரீமியம் திட்டத்திற்கு ரூ. 349 என மூன்று மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் கூடுதலாக NBCUniversal Peacock, Warner Bros, Discovery, HBO மற்றும் Paramount ஆகிய சேனல்களின் படங்கள் மற்றும் தொடர்கள் இதில் காணக்கிடைக்கும்.
மேலும் IPL, WPL மற்றும் ICC நிகழ்வுகள் போன்ற முக்கிய கிரிக்கெட் போட்டிகளையும், பிரீமியர் லீக், விம்பிள்டன், புரோ கபடி மற்றும் ISL போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்யும்.

- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக ஜெயலலிதா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் 1991-96 வரை ஜெயலலிதாமுதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஜெயலலிதா வசித்த வீட்டில் சோதனை நடத்தியதில், தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த நகைகள், பொருட்கள் அனைத்தும் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நாகரத்னா, சதீஷ் சந்திரா அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, பிப். 14, 15ல் ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி சட்டமன்ற தேர்தல் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- தேர்தல் முடிவு வெளியாகி 6 நாட்கள் ஆகியும் முதல்வர் யார் என்பது குறித்து பாஜக முடிவு எடுக்கவில்லை.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியான நிலையில் இன்னும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதற்கு முக்கிய காரணம் முதல்வர் யார்? அவருடைய அமைச்சரவையில் இடம் பெறுவது யார்? என்பதை இன்னும் பாஜக மேலிடம் முடிவு செய்யவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா (இவர் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் மேலும் 4 பேர் முதலமைச்சர் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
இந்த நிலையில்தான பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மூன்று நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றார். அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர், அவருடைய அமைச்சரவையில் இடம பெறுபவர்கள், சபாநாயகர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 15 பேர் கொண்ட பட்டியலை பாஜக மேலிடம் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இருந்து 9 பேரை தேர்வு செய்ய வேண்டுமாம். இந்த 9 பேரும் பிரதமர் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதனால் பிரதமர் அமெரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவதற்காக பாஜக மேலிடம் காத்திருக்கிறது.
பிரதமர் மோடி இந்தியா திரும்பியதும், டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்குள் டெல்லி முதல்வர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் டெல்லி மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி தேர்வு செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
அவ்வாறு முடிவு எடுக்கப்பட்ட உடன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 17 அல்லது 18-ந்தேதி நடைபெற வாய்ப்புள்ளது. பிப்ரவரி 20 அல்லது 21-ந்தேதி புதிய முதல்வர் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
- நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் இல்ல திருமண விழா, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
முதலமைச்சர் வருகையை யொட்டி நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விழா முன்னேற்பாடு பணிகளிலும் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணிகள் நடைபெறுவதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது முன்னேற்பாடுகள் குறித்தும், போலீசார் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
- சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
- எதிர்க்கட்சியாக இருந்தால் தேர்தலுக்கு முன் பிரமாண்ட பொதுக்கூட்டங்களை ஜெயலலிதா நடத்துவார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.
இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்தால் தேர்தலுக்கு முன் பிரமாண்ட பொதுக்கூட்டங்களை ஜெயலலிதா நடத்துவார். அவரது பாணியில் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
விஜயின் அரசியல் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தவாறு மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார்
- சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம் .
பயிற்சி மையத்தில் தனது மகளுடன் பேசியதற்காக மாணவன் ஒருவரைப் பெண்ணின் தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.
கடந்த பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை, பயிற்சி மையத்தில் ஒரு மாணவர் ஆபீஸ் ரூமுக்குள் ஆசிரியர் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதல் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
காயமடைந்த மாணவர் கார்த்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் அந்த மையத்தில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார். அதே மையத்தில் படித்து வரும் ஒரு பெண் மாணவியுடன் தொலைப்பேசியில் கார்த்திக் பேசி வந்துள்ளார்.
பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட் இதைப் பற்றி அறிந்ததும், இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். உரையாடலின் போது, ராச்சாத் திடீரென ஒரு கத்தியை எடுத்து கார்த்திக்கை பலமுறை சரமாரியாகக் குத்தினார்.
சம்பவ இடத்திலிருந்த ஒரு ஆசிரியர் தலையிட்டு அவரை தடுத்தார். சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம். பலத்த காயங்களுடன் கார்த்திக்கை மீட்டு பயிற்சி மைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட்டை கைது செய்தனர்.
- எந்த சூழ்ச்சியாலும் அ.தி.மு.க. சின்னத்தை முடக்க முடியாது.
- தி.மு.க., அ.தி.மு.க.வின் பலத்தை குலைக்க சதி செய்து வருகிறது.
சென்னை:
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்களின் ஒருவரான செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். மறைவின்போது, ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து அவருடன் பணியாற்றிய முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர். செங்கோட்டையன் கட்சியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர்.
அ.தி.மு.க.வில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட போதும் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பணியாற்றிய அவர், எந்த நேரத்திலும் அ.தி.மு.க. இயக்கத்திற்காக கடைசி வரையில் நிச்சயமாக உறுதுணையாக இருப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா கொடுத்த அதே மரியாதையை எடப்பாடி பழனிசாமியும் கொடுத்து வருகிறார்.
ஓ.பி.எஸ் நிபந்தனை இன்றி அ.தி.மு.க.வில் இணைய தயார் என்று கூறும் அதே நேரத்தில் மற்றொருபுறம் இரட்டை இலை சின்னத்தை கேவிட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார். இதில் என்ன இரட்டை மனநிலை இரட்டை நாக்கு என காட்டமாக கூறினார்.
மேலும் நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு விசாரிக்கலாம் என்பதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற, மாநிலங்கள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியினுடைய அதிகாரமிக்க பொதுக் குழு உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் அ.தி.மு.க. சின்னம் குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை.
தேவையற்று சிலர் அவுளை மெல்லுவது போல் பேசக் கூடாது என்பதற்காக தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல் செய்தோம்.
மேலும் எந்த சூழ்ச்சியாலும் அ.தி.மு.க. சின்னத்தை முடக்க முடியாது என்றும் கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி சட்ட முறைப்படி வெல்லுவார்.
தி.மு.க. ஏதாவது ஒரு வகையில் அ.தி.மு.க.வின் பலத்தை குறைக்கவும் ஒற்றுமையை குலைக்க சதி செய்து வருகின்றனர்.
இதேபோல் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதால் கூட்டம் அதிகமாக சேரும் என்பதால் மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது என்பது முழுக்க முழுக்க அவரது பாதுகாப்புக்காக என்றால் அதில் எந்த கருத்தும் இல்லை, சந்தோசம். ஆனால் மாறாக சுயநலமாக பா.ஜ.க. அரசு அவரை தன் வசம் இழுத்துக் கொள்ளு மேயா னால் அது குறித்த கருத்துக் களை பா.ஜ.க.வின் வரலாற்றை திரும்பி பார்த்தால் உங்களுக்கு தெரியும்.
எந்த ஒரு மாற்று அரசியல் கட்சி தலைவர்களின் கருத் துக்களை பெற்று கட்சியை வழிநடத்தக் கூடிய இடத்தில் அ.தி.மு.க. இல்லை. அ.தி.மு.க. கட்சி விவகாரம் குறித்து ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கோட்டையன் குறித்து மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த உதயகுமாரும் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. எனவே அவர் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்துவார்.
செங்கோட்டையன் பொறுத்தவரை அ.தி.மு.க.வில் மூத்த தலைவர். அவரை நாங்கள் அனை வரும் மதிக்கிறோம்" என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்ட பரவையில் நிரு பர்களுக்கு பேட்டியளிக்கையில், "அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை. அனைவரும் ஒற்றுமை யாக இருக்கிறோம்" என்று கூறினார்.
அ.தி.மு.க.வில் செங் கோட்டையன் எழுந்துள்ள சர்ச்சை நாளுக்கு நாள் அதிக ரித்து உள்ளது. அவர் அவர் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவர் அ.தி.மு.க. வை பாதிக்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபட மாட்டார் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
- கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
- ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஞானசேகரனிடமிருந்து செல்போனை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீசார் முதன்மையானதாக கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின்போது பல கோணங்களில் அவரை பேச வைத்து குரலை பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
- தமிழகம் முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த திட்டம்.
- போக்குவரத்து நெரிசலை தவிர்க மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்கள்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'பேர்புரோ 2025' கட்டுமான வீட்டு மனை கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று முதலில் உணர்ந்து கொள்வது கட்டிடங்கள்தான். அந்த வகையில், உங்களுடைய அமைப்பையும், நீங்கள் நடத்தி வரும் இந்த கண் காட்சியையும் வளர்ச்சியின் அடையாளமாகதான் நான் பார்க்கிறேன்.
மக்கள்தொகை பெருக்கம் அதிகம் இருக்கக்கூடிய நாட்டில் மக்களின் எல்லாத்தேவைகளையும் அரசே செய்துவிட முடியாது. உங்களை போன்ற அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
நம்முடைய மாநில மக்கள் தொகையில், 48 விழுக்காடு மக்கள் நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். இதனால் நாம் மிகவும் நகரமய மாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறோம். இது வரும் ஆண்டுகளில் மேலும் உயரும். இதனால், நீடித்து நிலைக்கக்கூடிய வீட்டு வசதிக்கான தேவைகள் அதிகரிக்கும்.
சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மற்றும் இரண்டாம் முழுமைத் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மூன்றாவது முழுமைத் திட்டத்தையும் நம்முடைய அரசுதான் முனைப்போடு தயாரித்துக் கொண்டு வருகிறது.
நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்முயற்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம்தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர பகுதியின் வளர்ச்சியை வழிநடத்தப்போகிறது.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டலத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர், மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மையங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், திருப்பெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுநகர் திட்டங்களின் நோக்கம் என்னவென்றால்…
சென்னையின் நெரி சலைக் குறைக்கவேண்டும், பொருளாதார மையங்களை உருவாக்க வேண்டும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சென்னை மாநகரை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் நோக்கம்.
கடந்த 10 ஆண்டுகளில், இப்படிப் பட்ட திட்டங்கள் தயாரிக்கும் பணி தேக்கமடைந்து இருந்தது. அந்த நிலையை மாற்ற நம்முடைய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஒற்றைச் சாளர முறை மற்றும் இணையதள கட்டிட அனுமதி பெறும் முறை தற்போது நிறை வேற்றப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின்கீழ், மனைப் பிரிவு மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 45 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஒப்புதல் வழங்கு வதற்கான கால அளவு 180 நாட்களிலிருந்து 64 முதல் 90 நாட்களாக குறைந்திருக்கிறது.
குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட முடிவுறு சான்று பெறுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டதால், இதுநாள் வரை 51 ஆயிரம் கட்டிட அனுமதிகள் பெறப்பட்டிருக்கிறது.
அதனால், முன் அனுமதிக்கப்பட்ட 100 கட்டிடத்திட்டங்களை பதிவேற்றி இந்த செயல் முறையை மேலும் செம்மைப்படுத்தி எளிமையாக்கு வதற்கான முயற்சிகளை வீட்டுவசதித் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது.
சென்னையின் உட்பகுதிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து முனையங்களை பரவலாக்கவும், சி.எம்.டி.ஏ மூலமாக கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்களை உருவாக்கியிருக்கிறோம்.
குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது.
சென்னையின் நீண்ட கடற்கரை பகுதியும், ஏரிக ளும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பெரும் கொடைகள். இதை மேம் படுத்த, முதற்கட்டமாக, சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள் மற்றும் 4 கடற்கரைப் பகுதிகளைத் தேர்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த 250 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரித்திருக்கிறது.
இந்தத் திட்டம், பொழுதுபோக்கு சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள், மழைநீரை சேகரித்து வெள்ளத்தை தடுக்கும் அமைப்போடு உருவாக்கப்படும்.
ஸ்பாஞ்ச் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், விளையாட்டு வளாகங்கள், பல்நோக்கு மையங்கள் மற்றும் சந்தைகள், பேருந்து முனையங்கள், சுரங்கப்பாதைகளை நவீனபடுத்துதல், புதிய திட்ட சாலை இணைப்பு பகுதிகளை கண்டறிந்து மறுவடிவமைத்து மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்தால் 196 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், செம்மஞ்சேரியில் அமையவுள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு நகரம், தீவுத்திடலில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த பொருட்காட்சி மையம் மற்றும் போரூர் நகர்ப்புறப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட பரந்து விரிந்த நன்செய் நிலப் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்க திட்டங்கள்.
இதனை செயல்வடிவாக்க தற்பொழுது நடைமுறையில் இருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ஐ புதுப்பிக்கும் செயல்பாடுகளில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முழு ஈடுபாட்டோடு செயலாற்றி வருகிறது.
நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது பல முதலீட்டாளர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவர்கள் பெரும்பாலும் என்னிடத்தில் கேட்டது என்னவென்றால், சென்னை யிலும், மாநிலம் முழுவதும் இன்னும் கூடுதலாக தொழில் பூங்காக்களும், இன்னும் கூடுதல் அலுவலகக் கட்டிடம் தேவைப்படுகிறது என்று சொன்னார்கள். எனவே, தொழில் துறை கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் தொழில் அதிபர்கள், வங்கி அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் இடம்பெற்றுள்ளன.
- எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்-இன் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் எட்டு அணிகள் இரு பிரிவுகளின் கீழ் விளையாடுகின்றன. க்ரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. க்ரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடரில் விளையாடும் அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை ஏற்கனவே ஐ.சி.சி.-யிடம் சமர்பித்து இருந்தன. இந்த நிலையில், அணிகள் தங்களது வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை சமீபத்தில் தான் சமர்பித்தன. அந்த வகையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் எட்டு அணிகளின் வீரர்கள் இறுதிப் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
நியூசிலாந்து:
மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், கேன் வில்லியம்சன், வில் யங், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், வில்லியம் ஓ ரூர்க், லாக்கி ஃபெர்குசன், பென் சீயர்ஸ், மேட் ஹென்றி.
பாகிஸ்தான்:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர், கேப்டன்), பாபர் அசாம், ஃபகார் ஜமான், தையப் தாஹிர், குஷ்தில் ஷா, உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சவூத் ஷகீல், சல்மான் ஆஹா, பஹீம் அஷ்ரப், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாகீன் அஃப்ரிடி.
வங்கதேசம்:
நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), சவுமியா சர்கா, தவ்ஹித் ஹ்ரிடோய், தன்சித் ஹசன், மஹ்மதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஜேக்கர் அலி (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ஹொசைன் எமோன் (விக்கெட் கீப்பர்), ரிஷாத் ஹொசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, நஹித் ராணா, நசும் அகமது, தன்சிம் ஹசன் சகிப்.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் பிரேசர்-மெக்கர்க், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஹார்டி, க்ளென் மேஸ்வெல், சீன் அபோட், பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா.
இங்கிலாந்து:
ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கட், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ஷகிப் மஹ்மூத், மார்க் வுட்.
தென் ஆப்பிரிக்கா:
தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, ராஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), ஹென்றிச் க்ளாசென் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், வியான் முல்டர், கார்பின் போஷ், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிகிடி.
ஆப்கானிஸ்தான்:
ஹஸ்மத்துல்லா ஷாகிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா, செடிகுல்லா அடல், இப்ராகிம் ஜட்ரான், ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), குலப்தீன் நயிப், அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, ரஷித் கான், நங்கெய்லியா கரோட்டி, பசல்ஹக் ஃபரூக்கி, பரீத் அகமது மாலிக், நூர் அகமது, நவீத் ஜத்ரான்.
- சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.
- இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நேற்று [வியாழக்கிழமை] காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் தாயின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடத்தப்பட்ட சிறுவன் 7 வயதான ஷிவாய் குப்தா. சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். குவாலியரில் முரான் பகுதியில் நேற்று சிறுவனை தாய் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்திக்கொண்டு செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தாயின் கண்களில் அவர்கள் மிளகாய்ப் பொடியை வீசியதால் அவர் நிலை தடுமாறி சுதாரிப்பதற்குள் அவர்கள் சிறுவனை கடத்திச் சென்றனர்.
அவர் தனது கணவரிடம் விரைந்து சென்று நடந்த முழு சம்பவத்தையும் கூறினார். தொடர்ந்து இருவரும் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்களைத் தேடும் பணியை போலீசார் தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கிடையில் நேற்று மாலை கடத்தப்பட்ட 7 மணி நேரம் கழித்து சிறுவன் மீட்கப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்தார். சிறுவன் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்திற்காக அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மோகன் யாதவ் கூறினார்.
- ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
- இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் யுவராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், 'ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது' என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பித்தார். அதில் மேல் ஏந்தி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு அளித்தார்.






