என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றவிட்டது.
    • தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.

    சென்னை:

    சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- நாளை (இன்று) காலை 6 மணி வரை ஒட்டு மொத்த தி.மு.க. மற்றும் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி 'கெட் அவுட் மோடி' என்று டுவீட் போடுங்கள். நானும் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று டுவீட் போடுகிறேன். யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று பாருங்கள்.

    தி.மு.க. ஐ.டி. விங்கிற்கு சவால் விடுகிறேன். 24 மணி நேரம் தருகிறேன். பா.ஜ.க. மற்றும் தி.மு.க. 2 கட்சிகளும் போடும் டுவீட்டில் எவ்வளவு வித்தியாசம் என்று நாளை மறுநாள் (சனிக்கிழமை) கணக்கு பார்ப்போம் என்று தெரிவித்து இருந்தார்.

    அதன்படி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் #GetOutStalin என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள செய்தியில்,

    ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் உள்ள இந்த தி.மு.க. தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவி நீக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார். 



    • ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர்
    • ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.

    மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) உத்தரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார்.

    ரேபரேலியில் பேரணியின்போது பேசிய அவர், இரண்டு இந்தியாக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்காக கொரோனாவின் போது, லட்சக்கணக்கான பெருநிறுவன கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    மறுபுறம், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்கான இந்தியா உள்ளது. நமக்கு இரண்டு இந்தியாக்கள் இருக்க முடியாது. நமக்கு ஒரே இந்தியா வேண்டும்.

    நாம் எப்படி இந்த நிலையை அடைந்தோம்?. மோடி அரசாங்கம் பணமதிப்பிழப்பு போன்ற கொள்கைகளை செயல்படுத்தியதன் மூலம் சிறு வணிகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த நாட்டில் ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.

    காந்தி, அம்பேத்கர், நேரு ஆகியோர் இந்த அரசியலமைப்பை நமக்குக் கொடுத்தார்கள். அவர்கள் சிறைக்குச் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார்கள்.

    இன்று, ஆட்சியில் இருப்பவர்கள் இந்த அரசியலமைப்பைத் தாக்குகிறார்கள். யாராவது இந்தியாவைப் பிரிக்க முயற்சித்தால், அதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்த நாட்டை வெறுப்பு நிறைந்ததாக மாற்றும் அவர்களின் முயற்சியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்த நாடு அன்பின் நாடு, எப்போதும் அன்பின் ஒன்றாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து தலித் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் ஆங்கிலம் பேச மாட்டேன் என்று கூறுகிறார். தலித் மாணவர்கள் ஆங்கிலம் கற்று உயர் இடங்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் எண்ணம். அதிகாரத்துக்கு வர ஆங்கிலம் ஒரு கருவி என்று தெரிவித்தார்.

    இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் எத்தனை தலித் தலைவர்கள் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய ராகுல், இந்த அமைப்பு உங்களை ஒவ்வொரு நாளும் தாக்குகிறது, பாதிக்கும் மேற்பட்ட நேரங்களில் அது உங்களை எப்படித் தாக்குகிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாது.

    அரசியலமைப்பின் சித்தாந்தம்தான் உங்கள் சித்தாந்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் தலித்துகள் இல்லையென்றால், இந்த நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் கிடைத்திருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

    • இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
    • பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!

    உலகத் தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!

    இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!

    அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!

    உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என்று தெரிவித்துள்ளார்.

    • 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்க தேவையில்லை.

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும்  21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை DODGE அறிவித்தது.

    இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாகவும், தங்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு வழங்கி வந்த இந்த நிதி குறித்து முந்தைய ஜோ பைடன் அரசை டிரம்ப் சாடியுள்ளார்.

    மியாமி நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், " இந்திய தேர்தல்களுக்காகவும், வங்கதேசத்தில் அரசியல் சூழலை சீரமைப்பதற்காகவும் அமெரிக்க மக்களின் வரிப்பணம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

    ஆசியா ஏற்கனவே நன்றாகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்க தேவையில்லை.

    இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு ஏன் ரூ.182 கோடி வழங்க வேண்டும். அங்கு வேறு யாரையோ வெற்றி பெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது. இது குறித்து இந்திய அரசாங்கத்திடம் பேச வேண்டும்" என்று சந்தேகம் கிளப்பியுள்ளார். 

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
    • திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-9 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அஷ்டமி காலை 9.40 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: அனுஷம் நண்பகல் 1.47 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம்: சித்த, மரணயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருக்கோகர்ணம், ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீமுத்தாலம்மன் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம் பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை, லால்குடி சப்தரிஷி ஈஸ்வரர் கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-பாசம்

    கடகம்-அன்பு

    சிம்மம்-ஆசை

    கன்னி-உறுதி

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- நற்செயல்

    மகரம்-தாமதம்

    கும்பம்-திடம்

    மீனம்- பயணம்

    • பெஞ்சமின் நேதன்யாகு அவசர பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்
    • குண்டுகள் அதே பாணியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் நேரக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

    இஸ்ரேலில் நேற்று (வியாழக்கிழமை) இரவு பேருந்துகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. மத்திய இஸ்ரேல், டெல் அவிவ் அருகே ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன.

    மேலும் இரண்டு பேருந்துகளிலும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இருப்பினும், குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் காலியாக நிறுத்தப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.

    குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இஸ்ரேலிய காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் அனைத்து முக்கிய இஸ்ரேலிய நகரங்களிலும் பேருந்துகள் மற்றும் ரெயில்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

    பேருந்து குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு  அவசர பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

     

    காவல்துறை முதற்கட்ட அறிக்கையில், இவை சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டுகள் அதே பாணியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் நேரக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் பிணை கைதிகள் பரிமாற்றம் நடந்து வரும் சூழலில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

    போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்தது.

    போரின்போது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இஸ்ரேலிய பிணை கைதிகளின் உடல்களை நேற்று இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது.
    • இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது.

    வாஷிங்டன்:

    கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த

    காஷ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், ஐசிசி தொடரில் (ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) முகமது ஷமி 19 இன்னிங்சில் மொத்தம் 60 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    இதன்மூலம் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர் கானை (32 இன்னிங்சில் 59 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி ஷமி முதலிடம் பிடித்துள்ளார்.

    அடுத்தடுத்த இடங்களில் ஜவகல் ஸ்ரீநாத் (47 விக்கெட்), ஜடேஜா (43 விக்கெட்) ஆகியோர் இருக்கின்றனர்.

    • டெல்லி முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பவன் கல்யாண் பங்கேற்றனர்.
    • அப்போது, நீங்கள் இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளீர்களா என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். டெல்லியின் 4-வது பெண் முதல் மந்திரி குப்தா ஆவார்.

    தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி ரேகா குப்தாவின் பதவியேற்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினரை பிரதமர் மோடி வரவேற்றார்.

    மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடினார்.

    இந்நிலையில், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண், பிரதமர் மோடி இடையிலான உரையாடல் கவனத்தை ஈர்த்தது.

    இதுதொடர்பாக பவன் கல்யாண் கூறுகையில், பிரதமர் எப்போதும் என்னுடன் நகைச்சுவையாகப் பேசுவார். அவர் என் உடையைப் பார்த்து, நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இமயமலைக்குச் செல்கிறேனா என கேட்டார். அதற்கு பிரதமரிடம், தான் இன்னும் எங்கும் செல்லவில்லை. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. இமயமலை காத்திருக்க முடியும் என நகைச்சுவையாகக் கூறினார்

    • ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார்.
    • போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி கிறிஸ்தவர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திவந்தார். தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

    இதற்கிடையே, ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் மருத்துவ நிலையில் முன்னேற்றம் உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மத்தேயு புரூனி கூறுகையில், மருத்துவ ஊழியர்களால் மதிப்பிடப்பட்ட ரத்த பரிசோதனைகள், குறிப்பாக அழற்சி குறியீடுகளில் சிறிது முன்னேற்றத்தை காட்டுகின்றன. மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனித்து வருகிறார் என தெரிவித்தார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, எல்-சால்வடாரின் மார்சலோ-குரோசியாவின் மேட் பாவிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 2-6, 6-3, 10-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-2, 7-6 (7-2) என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செக் நாட்டு வீராங்கனையான முச்சோவா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ×