என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது.
    • இந்த போட்டியின் போது தோனி மற்றும் ஜடேஜாவை தீபக் சாஹர் வம்பிழுத்தார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

    156 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.1 ஓவரில் இலக்கை எட்டி முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்த போட்டியின் போது தோனி மற்றும் ஜடேஜாவை தீபக் சாஹர் சீண்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 7 சீசன்களாக சென்னை அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இந்த முறை மும்பை அணியில் விளையாடுகிறார்.

    இந்த நிலையில் தோனி பேட்டிங் செய்ய வரும் போது, அவர் அருகில் சென்று எதோ கிண்டல் செய்யும் விதமாக பேசினார். ஆனால் தோனி அதை கண்டுகொள்ளாமல் பேட்டிங் செய்வார். போட்டி முடிந்து செல்லும் தோனியிடம் தீபக் சஹார் சிக்கினார். அப்போது தோனி அவரை விளையாட்டுத்தனமாக மட்டையால் அடிக்க முயற்சி செய்வார். அதில் இருந்து தீபக் சாஹர் தப்பித்து விடுவார். அதனை சிரித்தப்படியே தோனி கடந்து செல்வார்.

    தோனி மட்டுமல்லாமல் ஜடேஜாவையும் தீபர் சாஹர் கிண்டலடிப்பார். அப்போது ஜடேஜா பேட்டால் அவரை தாக்குவதுபோல் பாவலா காட்டுவார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
    • வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வணிக நிர்வாகத் தேர்வு வினாத்தாள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு இந்தாண்டு நடைபெற்ற தேர்விலும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் பள்ளி கல்வி வாரியம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வன்முறையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • இரட்டை மாடி வீடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

    அவுரங்கசீப் கல்லறை தொடர்பாக நாக்பூரில் வன்முறை வெடித்தது. மத நூல் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன, இதில் நாக்பூரில் 40 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    இதனிடையே வன்முறை சம்பவம் தொடர்பாக பாஹிம் கான் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே வன்முறையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வன்முறை சம்பவம் தொடர்பாக பேசிய முதல்-மந்திரி பட்னாவிஸ், வன்முறையால் நகரத்தின் 80 சதவீத பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்று கூறியதை அடுத்து நேற்று ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.

    இந்த நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள பாஹிம் கானின் வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு செய்து அதனை செயல்படுத்தி உள்ளது.

    சஞ்சய் பாக் காலனியில் உள்ள பாஹிம் கானின் இரட்டை மாடி வீடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி சார்பில் வீட்டை இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
    • பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விபரங்கள் மற்றும் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.

    இதில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்) மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய 6 கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக நிதி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக காமன்வெல்த் மனித உரிமைகள் முன் முயற்சி (சி.எச்.ஆர்.ஐ.) அமைப்பின் இயக்குனர் வெங்கடேஷ் நாயக் ஒரு ஆய்வை நடத்தி உள்ளார். அதில் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகள் என 22 கட்சிகள் 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது ரூ.11,326 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

    தேர்தல் செயல்பாட்டின் போது ரூ.7,416 கோடி திரட்டி உள்ளன. அதில் ரூ.3,861.6 கோடி செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த நாளில் ரூ.14,848 கோடி மொத்த இறுதி இருப்பு தொகை இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி பா.ஜ.க. அதிகபட்சமாக ரூ.5,921.8 கோடி தொடக்க இருப்பு தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தொடக்க இருப்பு தொகையை அடிப்படையில் 22 கட்சிகளில் 9-வது இடத்தை பிடித்தது. இறுதி இருப்பு தொகை பொறுத்த வரை காங்கிரஸ் 12-வது இடத்தில் உள்ளது.

    சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அவர்களில் 480 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்வின்படி 22 கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் 84.5 சதவீதம் பாஜ.க. திரட்டியுள்ளது. அந்த கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.1,738 கோடி என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    இது 22 கட்சிகளில் மொத்த பிரசார செலவில் 45 சதவீதமாகும். ஊடக விளம்பரங்களுக்காக 22 கட்சிகளும் சேர்ந்து ரூ.992.4 கோடிக்கு மேல் செலவிட்டன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    • மக்களவையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் எழுப்பப்பட்டது.
    • மாநிலங்களவையில் பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய அலுவல் நேரத்தில் பல்வேறு மசோதாக்கள் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    தி.மு.க. எம்.பி. வில்சன் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர், "மாநிலங்களவையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ள நிலையில் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    எனவே சட்டவிதி 267-ன்கீழ் அனைத்து அலு வல்க ளையும் ரத்து செய்து தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்க அளிக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது. இதை வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள்.

    அப்போது மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசினார். அப்போது, கர்நாடகா மாநிலத்தில் மத ரீதியிலான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் இடம் ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. மத ரீதியிலான இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. கர்நாடகா காங்கிரஸ் கட்சி சட்டத்துக்கு எதிராக நடந்து வருகிறது.

    கர்நாடகா மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அரசியல் சாசனத்தை மாற்ற நினைக்கிறார். தங்கள் கட்சிக்கு சாதகமாக இட ஒதுக்கீட்டை செய்ய இருப்பது சரியானது அல்ல. இதை காங்கிரஸ் தலைவர் கார்கே ஏற்கிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்," என்றார்.

    ஜே.பி.நட்டா பேசியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும் போது, "நட்டாவின் பேச்சுகளை ஏற்க இயலாது. இஸ்லாமியர்களுக்கு நன்மை தரும் இட ஒதுக்கீட்டை யாராலும் அகற்றி விட முடியாது," என்று கூறினார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்குரல் கொடுத்தனர். இதனால் மாநிலங்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை இன்று 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

    அப்போது சமாஜ்வாடி எம்.பி.க்கள் எழுந்து உத்தர பிரதேசத்தில் கொலை-கொள்ளை அதிகரித்து விட்டது. அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்தார். உடனே சமாஜ்வாடி எம்.பி.க்கள் உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பிடித்தனர்.

    இதை கண்டதும் சபாநாயகர் ஓம்பிர்லா கோபம் அடைந்தார். இப்படி நடந்து கொண்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து மக்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    • ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
    • இந்த வழக்கு நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது.

    தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதனிடையே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பின்பு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது.

    இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை கேப்டன் ருதுராஜ் கையில் கொடுப்பார். அதனை வாங்கி கொண்ட ருதுராஜ், மறைத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்.

    இந்த வீடியோவை வைத்து மும்பை ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் சென்னை அணி பால் டேம்பரிங் செய்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சூதாட்டத்தில் சிக்கியதாக 2 ஆண்டு சிஎஸ்கே அணி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் பால் டேம்பரிங் செய்ததாக பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.
    • இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது.

    இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் தேதி பவுலா மற்று்ம டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

    அங்கு தேவதை போன்ற எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். புகைப்படங்களின் படி மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினம் காணப்படுகிறது. இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

     


    "இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. அது மிகவும் விசித்திரமான விஷயம்," என்று பவுலா ரீகன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    கடற்பகுதிகளில் விசித்திர தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், ரஷிய மீனவர் கடலின் ஆழத்திலிருந்து ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தை பிடித்தார். இது சமூக ஊடகங்களில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 

    • முன்னெடுப்புக்கு ஆதரவு தந்த எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி.
    • பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களை இணைத்து பிரதமரை சந்தித்து முறையிடப்படும்.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும்.

    * தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து முதல் மாநிலமாக 14-ந்தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

    * அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசித்தோம்.

    * சென்னை கூட்டத்தில் 3 மாநில முதலமைச்சர்கள், கர்நாடக துணை முதல்வர், முக்கிய கட்சி தலைவர்கள் நேரடியிலும், ஒடிசா முன்னாள் முதல்வர் காணொலியிலும் பங்கேற்றனர்.

    * தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் உறுதியளிக்க வேண்டும் என தீர்மானம்.

    * தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து சென்னையில் பிறமாநில கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தினோம்.

    * முன்னெடுப்புக்கு ஆதரவு தந்த எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி.

    * பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களை இணைத்து பிரதமரை சந்தித்து முறையிடப்படும் என்றார். 

    • அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.
    • வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

    டீ குடிப்பது உற்சாகமாக உணர வைக்கிறது. உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்க பலர் டீ அருந்துகிறார்கள். அவர்கள் பலமுறை டீ பருகுவதை ரசிக்கிறார்கள்.

    ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிகமாக டீ, காபி குடித்தால் பிரச்சனைகள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.

    ஒரு நாளைக்கு 2-3 கப் டீ, காபி (200-300 மிலி) குடிப்பது பாதுகாப்பானது. ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த அளவை பரிந்துரைக்கிறது.

    தேசிய சுகாதார நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4-5 கப், 400 மி.கி.க்கு மேல் டீ உட்கொண்டால் தூக்கத்தைக் கெடுக்கும் என்று கூறுகிறது. அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.



    வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

    டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு 5 கப் அளவுக்கு மேல் குடிப்பது இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

    அதிகப்படியான டீ உட்கொள்வது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை ஏற்படுத்தும். அமெரிக்க இதய சங்கம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

    உணவுக்கு பிறகு டீ, காபி குடிக்கவும், ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அது அதிகமாக இருந்தால், மூலிகை டீக்களுக்கு மாறுங்கள். இது ஆரோக்கியத்தை பேணுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளனர். 

    • சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது
    • பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:

    * அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்

    * அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    * 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    என்று தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.
    • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக், ஐதராபாத் அணியை முதலில் பேட் செய்ய பணித்தார். அதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது.

    பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. கடந்த ஆண்டு 3 முறை 250 ரன்களை கடந்து இருந்த ஐதராபாத் ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது. அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணி, கவுண்டி அணியான சுர்ரே (தலா 3 முறை) ஆகியவை உள்ளன.

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர். 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரி இதுவாகும்.

    ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி எடுத்த 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். ஏற்கனவே ஐதராபாத் அணி கடந்த ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.

    ×