என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
- இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் (west bank) சட்டவிரோதமாக ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.
நோ அதர் லேண்ட் படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த ததகவலை பகிர்ந்துள்ளார். "எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால், இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது" என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.

இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற நோ அதர் லேண்ட் படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
இந்த படத்தை மசாஃபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தாம் பல்லா கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொன்றிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.
பயங்கரவாதிகள்(பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
- வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை
- வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?
இந்தியை தவிர வேறுமொழி தெரியாதவர்கள், எங்களை 3 மொழிகள் கற்றுக் கொள்ள சொல்கிறார்கள் என்று திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய கலாநிதி வீராசாமி, "நாடு முழுவதும் உள்ள வறுமையின் நிலையை நீங்கள் கணக்கிட்டு பார்த்தால் தென்னிந்திய மாநிலங்களின் வறுமை குறியீடு 0.5 முதல் 2% வரை தான் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் பல ஆண்டுகால முயற்சியினால் வறுமை ஒழிக்கப்ட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வறுமை குறியீடு 9 -10% ஆகவும் பீகாரில் 20% ஆகவும் உத்தரபிரதேசத்தில் 15 -20% ஆகவும் உள்ளது.
தமிழ்நாட்டின் கடந்த 50 ஆண்டுகளை எடுத்து பாருங்கள். 1967 பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியும் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி தான் செயல்பட்டு வருகிறது.
நாங்கள் வறுமை என்று பேசுவது நீங்கள் சொல்வது போல வருடத்திற்கு ரூ.27,000 சம்பாதிப்பவர்கள் பற்றி அல்ல. வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாதா மாதம் ரூ.1,000 வழங்குகிறோம்.
அரசுப்பள்ளியில் இருந்து கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குகிறோம். இதனால் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் (GER) 25%. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதைய GER விகிதம் 52%.
10 ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது தமிழ்நாடு, ஆனால் எங்களுக்கு திரும்ப கிடைத்தது ரூ. 2.4 லட்சம் கோடிதான்.
தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது கூட மத்திய அரசு பேரிடர் நிதி வழங்குவதில்லை.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் ரூ.2,157 கோடி கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு மிரட்டுகிறது.
எங்களுக்கு அந்த ரூ.2,157 கோடி வேண்டாம் என்றும் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தால் கூட மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எங்களது முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 3 மொழி கொள்கையை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படி இருக்க வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை. வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?
அவர்கள் 3 மொழியை கற்பதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் 3 மொழிகளை கற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
இருமொழி கொள்கை தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளது. சுதந்திரம் அடையும்போது இந்தியாவின் ஏழ்மையான 3 ஆவது மாநிலத்தில் இருந்து தற்போது 2 ஆவது பணக்கார மாநிலமாக உயர்ந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
- சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
- டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.
இருப்பினும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
- டெல்லி அணியில் முதலில் ஸ்டப்சும், அசுதோசும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
- கடைசி ஓவரில் டெல்லியின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது.
விசாகப்பட்டினம்:
ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது.
நிக்கோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்னும் (6 பவுண்டரி, 7 சிக்சர்), மிச்சேல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். ஸ்டார்க் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 210 ரன் இலக்கை 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது. அந்த அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன் எடுத்து (5 பவுண்டரி, 5 சிக்சர்) வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். விப்ராஜ் 15 பந்தில் 39 ரன் (5 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்டப்ஸ் 22 பந்தில் 34 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஷர்துல் தாக்கூர், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
201 ரன் குவித்தும் தோற்றதால் லக்னோ அணி கேப்டன் ரிஷப்பண்ட் ஏமாற்றம் அடைந்தார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-
எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. போதுமான ரன்களை குவித்தோம். நடுவில் நாங்கள் எங்கள் ரன் வேகத்தை இழந்து இருக்கலாம். ஆனாலும் இந்த ஆடுகளத்தில் 209 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். இந்த தோல்வி மூலம் நாங்கள் அடிப்படைகளை சரி செய்ய வேண்டும். இதில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.
டெல்லி அணியில் முதலில் ஸ்டப்சும், அசுதோசும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் விப்ராஜ்- அசுதோஷ் ஜோடி தங்கள் பணியை சிறப்பாக செய்தது. இந்த ஜோடி எங்கள் வெற்றியை பறித்து விட்டது. கடைசி ஓவரில் டெல்லியின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. பேடில் பட்டதால் ஸ்டம்பிங் செய்ய வாய்ப்பு தவறியது.
இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்ட ரிஷப்பண்ட் நேற்று டக் அவுட் ஆனார். 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்கவில்லை.
லக்னோ அணி 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 27-ந்தேதி எதிர்கொள்கிறது. டெல்லி அணி அடுத்த போட்டியில் ஐதராபாத்தை 30-ந்தேதி சந்திக்கிறது.
- பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
- கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.
பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.
கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
- சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் தொடர்பான செய்திகள் அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
- சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15-ம் நாள் அதாவது வருகிற 29-ந்தேதி இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாப்படி சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசி பூரட்டாதி 3-ம் பாதத்தில் இருந்து குருவின் வீடான மீன ராசி பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
இதனால் 12 ராசிகளுக்குமான பொதுப்பலன், சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் தொடர்பான செய்திகள் அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.
இந்த நிலையில், வருகிற 29-ந்தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், வாக்கிய பஞ்சாக முறைப்படி அடுத்த ஆண்டு அதாவது 2026-ல் தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் கவலையில் ஆழ்ந்த ராசிக்காரர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
- கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவின் முன்னாள் வளர்ச்சி மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
வருகிற 27ந்தேதி கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
- சேப்பாக்கத்தில் 28-ந் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணியில் இருந்து ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது.
www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
- மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார். மேலும் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
நீலகிரி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 6-ந்தேதி மாலை கோவை வருகிறார். கோவையில் 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் வள்ளி-கும்மி நடனத்தை அவர் நேரில் பார்வையிடுகிறார்.
இந்த நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் நித்தியானந்தம் நிருபர்களிடம் கூறிய தாவது:-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளி-கும்மி நடனம் நடந்தது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் அசாம் மாநிலத்தில் 11 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற நடனமே சாதனையாக இருந்தது.
அதை பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சி முறியடித்து உள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் பங்கேற்ற 16 ஆயிரம் பேருக்கு பாராட்டு விழா வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் வள்ளி-கும்மி நடனமும் நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிடுகிறார்.
வள்ளிக்கும்மி ஆடுவதால் பெண்களுக்கு உடல் வலிமையும், மன வலிமையும் அதிகரிக்கிறது. தற்போது அதை பாரம்பரிய கலையில் ஏராளமான கிராமங்களில் பெண்கள் இந்த கலையை கற்று வருகின்றனர்.
இந்த கலையை ஊக்கப்படுத்த கொங்குநாடு கலைக்குழு தொடங்கப்பட்டு உள்ளது. பாராட்டு விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, துணை செயலாளர் பிரேம், மாவட்ட செயலாளர்கள் தனபால், ரமேஷ், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன் நகையும், கிண்டி எம்.ஆர்.சி. மைதானம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையும், சைதாப்பேட்டையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரியில் ஒரு பெண்ணிடமும், பள்ளிக்கரணையில் ஒரு பெண்ணிடமும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
காலையில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒரே நேரத்தில 7 இடங்களில் நடைபெற்றுள்ள நகை பறிப்பு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,185-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720
23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
21-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,160
20-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-03-2025- ஒரு கிராம் ரூ.110
23-03-2025- ஒரு கிராம் ரூ.110
22-03-2025- ஒரு கிராம் ரூ.110
21-03-2025- ஒரு கிராம் ரூ.112
20-03-2025- ஒரு கிராம் ரூ.114






