என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் வள்ளி-கும்மி நடனம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-ந்தேதி நேரில் கண்டுகளிக்கிறார்
- பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
- மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார். மேலும் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
நீலகிரி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 6-ந்தேதி மாலை கோவை வருகிறார். கோவையில் 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் வள்ளி-கும்மி நடனத்தை அவர் நேரில் பார்வையிடுகிறார்.
இந்த நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் நித்தியானந்தம் நிருபர்களிடம் கூறிய தாவது:-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளி-கும்மி நடனம் நடந்தது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் அசாம் மாநிலத்தில் 11 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற நடனமே சாதனையாக இருந்தது.
அதை பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சி முறியடித்து உள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் பங்கேற்ற 16 ஆயிரம் பேருக்கு பாராட்டு விழா வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் வள்ளி-கும்மி நடனமும் நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிடுகிறார்.
வள்ளிக்கும்மி ஆடுவதால் பெண்களுக்கு உடல் வலிமையும், மன வலிமையும் அதிகரிக்கிறது. தற்போது அதை பாரம்பரிய கலையில் ஏராளமான கிராமங்களில் பெண்கள் இந்த கலையை கற்று வருகின்றனர்.
இந்த கலையை ஊக்கப்படுத்த கொங்குநாடு கலைக்குழு தொடங்கப்பட்டு உள்ளது. பாராட்டு விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, துணை செயலாளர் பிரேம், மாவட்ட செயலாளர்கள் தனபால், ரமேஷ், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.






