என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர்.
    • பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    திண்டுக்கல்:

    கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் புதிதாக தங்கத்தகடுகள் பதிக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது கிலோ கணக்கில் தங்கநகை மாயமானது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ண போற்றி என்பவர் முதல் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலும் சிலைகள் மாயமாகின. இதுதொடர்பாக கேரள மாநிலம் எஸ்.ஐ.டி. என்ற அமைப்பின் டி.ஒய்.எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அப்போது பதவியில் இருந்த சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள் உட்பட பலர் சிக்கியுள்ளனர்.

    இந்த நகை திருட்டு வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் சபரிமலை நம்பூதிரி, திண்டுக்கல் ராம்நகரை சேர்ந்த மணி (எ) பாலசுப்பிரமணி உட்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    அதன் பேரில் எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர். அவர்களுடன் திண்டுக்கல் போலீசாரும் விசாரணைக்கு சென்றனர். பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். பாலசுப்பிரமணிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் வைத்து கேரள போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நகை திருட்டு வழக்கில் திண்டுக்கல் வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • சுனாமி தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை உருவானது. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, நாகை, வேளாங் கண்ணி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் கன்னி யாகுமரி, மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் ஆகிய இடங்களை பயங்கரமாக தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி பலியானார்கள்.

    குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பலியானவர்கள் நினைவாக அந்தந்த கிராமங்களில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு ஆண்டுதோறும் டிசம்பர் 26-ந்தேதி இறந்த வர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்படி சுனாமி நினைவு தினமான இன்று சுனாமி பேரலைக்கு பலியா னவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கன்னியாகுமரி முக்கடல் சங்கம் கடற்கரையில் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் இன்று காலை நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. ஆலய பங்குத்தந்தை அஜன் சார்லஸ், சாஜன் செசில் தலைமையில் நடந்த திருப்பலியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கல்லறையில் பெண்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

    21 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வடு மாறாத அளவிற்கு உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. கொட்டில்பாடு சுனாமி காலனியில் இருந்து ஊர்வலமாக சென்ற மக்கள் கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்குள்ள ஆலயத்தில் நினைவு திருப்பலி நடந்தது.

    கொட்டில்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், பூ மாலைகள் அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுனாமி 21-வது நினைவு தினத்தையொட்டி இன்று குமரி மாவட்டத்தில் மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை ஓரங்களில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது. குளச்சல் பகுதியில் சுனாமி தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

    • திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு.
    • இந்தியாவில் அதிக அளவில் ஆலையில் பெண்கள் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.

    கள்ளக்குறிச்சியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * உங்களால் முதலமைச்சரான நான், உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

    * எந்த வேலையைக் கொடுத்தாலும் 200 சதவீதம் சிறப்பாக செய்யக்கூடியவர் அமைச்சர் எ.வ.வேலு.

    * கள்ளக்குறிச்சியில் புதிய ஆட்சியர் கட்டிடம் உள்ளிட்ட ரூ.1,773 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளேன்.

    * திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு.

    * சிலர் வாயிலேயே வடை சுடுவார்களே, தி.மு.க. அரசு அப்படி அல்ல. மக்களுக்காக திட்டம் தீட்டி செயல்படுத்தும் அரசு.

    * கள்ளக்குறிச்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை கூற போகிறேன்... நான் ரெடி.. நீங்க ரெடியா..?

    * கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி, நாகலூரில் அங்கன்வாடி கட்டிடம், சுற்றுலா மாளிகை, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    * ரிஷிவந்தியம் கல்லூரிக்கு புதிய கட்டிடம், பிள்ளையார்குப்பத்தில் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    * சங்கராபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்கள், புதிய அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    * கள்ளக்குறிச்சிக்கு புதிய பேருந்து நிலையம், விளையாட்டு வளாகம், சின்னசேலம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் வர உள்ளது.

    * கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3.18 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    * கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 741 பள்ளிகளில் 45 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

    * நான் முதல்வன் திட்டத்தால் ஒரு மாணவி, எஸ்.பி.ஐ. வங்கிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    * கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 143 குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * புதுமைப்பெண் திட்டத்தில் 16,094 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    * கள்ளக்குறிச்சியில் 7965 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

    * விபத்தில் சிக்குவோருக்கான இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 10,000 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.

    * கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தொகுதி வாரியாக செய்யப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    * இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா.

    * இந்தியாவில் அதிக அளவில் ஆலையில் பெண்கள் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.

    * கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்றார். 

    • திமுக ஆட்சிக்கு வந்த பின் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஒருவர் கூட இந்த துறையில் பாதிக்கப்படக் கூடாது என தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

    பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என மக்கள் நல சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:-

    ஒப்பந்த செவிலியர்களுக்கு தொடர்ச்சியாக பணிநிரந்தரம் முதலை்மச்சரின் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்த பின் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், மீதமுள்ள 8000க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

    ஒருவர் கூட இந்த துறையில் பாதிக்கப்படக் கூடாது என தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
    • எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த திட்டத்திற்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றி உள்ளனர்.

    இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எம்.பி.க்கள் மனு அளித்துள்ளோம்.

    ஏனென்றால் அந்தந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு நிதி வழங்குவது சாத்தியமில்லை. மேலும் மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது.

    மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகின்றனர்.

    நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். ஆனால் அவர் தீய சக்தி தி.மு.க., தூய சக்தி த.வெ.க. என கூறியது ஏற்புடையதல்ல. ஏனென்றால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்னும் சில நாட்களில் மேலிட பொறுப்பாளர்கள் பேசுவர். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.

    எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம். எங்கள் தலைவர் ராகுல்காந்தி கூட இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி வாக்குகள் நீக்கப்படுவது ஏற்புடையதல்ல. பீகாரில் கூட கடைசி நேரத்தில் பல வாக்குகள் சேர்க்கப்பட்டது. இந்த எஸ்ஐஆர் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. பீரோவும் உடைக்கப்படவில்லை.
    • இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ராஜன்(வயது65).

    இவர் அந்த பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெபமார்ட்டின். இவர்களுக்கு ரூபா என்ற மகள் உள்ளார்.

    இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ரூபா தனது பெற்றோரின் வீட்டின் அருகேயே வசித்து வருகிறார். ராஜனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்.

    இந்த நிலையில் ராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மனைவி மற்றும் மகள் ரூபாவுடன் சாத்தான்குளத்திற்கு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி விட்டு இன்று காலை கோவைக்கு வந்தார்.

    பின்னர் ரூபா அவரது வீட்டிற்கு சென்று வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு தானாகவே திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தார்.

    ஊருக்கு செல்வதற்கு முன்பாக ரூபா தனது வீட்டில் மொத்தம் 103 பவுன் நகைகளை பீரோவில் பூட்டி வைத்து சென்றிருந்தார். இன்று காலை வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 103 பவுன் நகைகளும் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து அவர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்ததும் கோவை தெற்கு உதவி கமிஷனர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி உள்ள தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. பீரோவும் உடைக்கப்படவில்லை. இதனால் தெரிந்தவர்கள் யாரோ இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும் போலி சாவி தயாரித்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணங்களிலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

    கோவையில் தனியார் பள்ளி ஆசிரியையின் வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் திறந்து வைத்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வருகை தந்தார்.

    முன்னதாக உளுந்தூர்பேட்டையில் காலணி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கள்ளக்குறிச்சி வருகை தந்த முதலமைச்சர் சாலைவலம் மேற்கொண்டார்.

    அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் முதலமைச்சர் பொதுமக்களிடம் கைகுலுக்கியும், கையசைத்தும் சென்றார்.

    இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல நீதிமன்றம்.
    • விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன்.

    சென்னை:

    சுனாமி நினைவு தினத்தையொட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் குஷ்பு, செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கடலில் பால் ஊற்றி வழிபட்டார்கள்.

    பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுள்ளார்.

    திருமாவளவன் மனநிலை இதுதான், இதுவே கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என அவரால் கூற முடியுமா? இந்து மெஜாரிட்டி அதிகமாக உள்ளதால் தொடர்ந்து மண்டையில் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது கூட்டணியில் இருப்பவர்கள் கோவிலுக்கு போவார்கள், பட்டை பூசுவார்கள், தீபம் ஏற்றுவார்கள், வீட்டில் பூஜை நடத்துவார்கள் இதையெல்லாம் நாலு சுவற்றுக்குள் நடக்கும் மக்களுக்கு தெரியாது என நினைப்பார்கள்.

    வருகிற தேர்தலில் எந்த கோவிலுக்கும் போக வேண்டாம், எந்த சர்ச், மசூதி பள்ளிவாசலிலும் திருமாவளவன் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல நீதிமன்றம். மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து ப.சிதம்பரம் விமர்சிக்கிறார்.

    அவர்கள் ஆட்சி காலத்தில் ராஜீவ்காந்தி பெயரில் திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் நாங்கள் மோடி பெயரை எந்த திட்டத்துக்காவது சூட்டினோமா? ராகுல் காந்தி வாக்கு இயந்திரத்தில் தவறு உள்ளது என கூறினார் ஆனால் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அப்படி எதுவும் இல்லை என கூறினார். காங்கிரசில் உள்ள பல நபர்கள் வாக்கு இயந்திரத்தில் எந்த குளறுபடிகளும் இல்லை என கூறி வருகிறார்கள். சொல்வதற்கு வாய் உள்ளது என வாய்க்கு வந்தபடி எதையும் கூற கூடாது. யோசித்து பேச வேண்டும்.

    விஜயும் சீமானும் ஆர்.எஸ்.எஸ் பிள்ளைகள் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறுகிறார்.

    அப்போ திருமாவளவன் யாரின் பிள்ளை, தி.மு.க. வின் பிள்ளையா, காங்கிரஸ் பிள்ளையா? அ.தி.மு.க. கூட்டணியில் பாஜகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன். விரைவில் பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார்கள். பா.ஜ.க. கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக வந்த கணக்குகள் வதந்தி மட்டுமே என்றார். 

    • ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தற்போது விமானங்களில் இருமுடிக்குள் தேங்காய் எடுத்து செல்லலாம் என்று விதிவிலக்கு அளித்துள்ளது.
    • சென்னையில் இருந்து வழக்கமாக கொச்சி செல்வதற்கு ரூ.3,681 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

    ஆலந்தூர்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் செல்கிறார்கள்.

    ரெயில் மற்றும் சாலை மார்க்கமாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது கூடுதல் நேரம் ஆகிறது. இதையடுத்து சமீப காலமாக ஐயப்ப பக்தர்கள் விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து வாகனங்களில் சபரிமலை செல்கின்றனர்.

    இதனால் இந்திய விமான நிலைய ஆணையம் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தற்போது விமானங்களில் இருமுடிக்குள் தேங்காய் எடுத்து செல்லலாம் என்று விதிவிலக்கு அளித்துள்ளது. ஐயப்ப பக்தர்களுக்காக, கொடுக்கப்பட்டுள்ள, இந்த சிறப்பு சலுகை, வருகின்ற 2026 ஜனவரி 20-ந் தேதி வரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் பலர், சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் அதிக அளவு பயணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை-கொச்சி-சென்னை இடையே, இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் பெருமளவு செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது.

    இதன் காரணமாக சென்னையில் இருந்து, கொச்சி செல்லும் பயணிகள் விமானங்களில், விமான டிக்கெட் கட்டணங்கள் 3 மடங்குக்கு மேல், அதிகரித்து உள்ளன.

    சென்னையில் இருந்து வழக்கமாக கொச்சி செல்வதற்கு ரூ.3,681 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது சென்னை கொச்சி விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கட்டணம் 3 மடங்குக்கு மேல் அதி கரித்து, ரூ.10,500 தொடங்கி, ரூ11,500 வரையில் வசூலிக்கப்படுகிறது.

    அதிலும் சென்னை-கொச்சி நேரடி விமானத்திற்கு மட்டுமே இந்த கட்டணங்கள். அந்த நேரடி விமானங்களில் டிக்கெட்டுகள் கிடைக்காமல், சென்னையில் இருந்து, பெங்களூரு வழியாக கொச்சி சென்றால், டிக்கெட் கட்டணம் ரூ.17 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

    சபரிமலை சீசன் நேரங்களில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, கொச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு சென்னை-கொச்சி இடையே, சபரிமலை சீசன் காலங்களில் தினமும் 9 விமானங்களும், கொச்சி-சென்னை இடையே 9 விமானங்கள் என மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்பட்டன.

    ஆனால் இந்த ஆண்டு, சென்னை-கொச்சி இடையே 7 விமானங்களும், கொச்சி-சென்னை இடையே, 7 விமானங்களும் என மொத்தம் 14 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

    4 விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள், கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் வசதி கருதி, சபரிமலை சீசன் முடியும் வரையில், சென்னையில் இருந்து கொச்சிக்கு, கூடுதல் விமான சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
    • ஒரு சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அடித்தளம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. சார்பில் கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை ரத்து செய்யவில்லை. நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை ரத்து செய்யவில்லை.

    அதேபோல கடந்த நான்கரை ஆண்டு காலம் மடிக்கணினி வழங்கவில்லை. தற்போது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல 10 லட்சம் மடிக்கணினியை வாக்கு வங்கி உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

    ஒரு சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அடித்தளம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதிலே அடிப்படைக் கல்விக்கான பள்ளிகளில் நாம் சரியான அடித்தளம் அமைத்தால்தான் சரியாக இருக்கும்.

    இன்றைக்கு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து தொழிற் கல்வியில் ஒரு சகாப்தம் படைத்தார் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு வாக்களிக்கிற உரிமை உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த அரசு மடிக்கணினி வழங்க அக்கறை செலுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலே நாம் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்காக அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 46-வது வார திண்ணை பிரசாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையான கூட்டணி வெல்வது நிச்சயம் என்று கூறினார். 

    • சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வாளகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காவல் வாகனத்தை ஏற மறுத்து இடைநிலை ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    2009ம் ஆண்டுக்குப்பின் பணி வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் விக்டோரியா பொது அரங்கத்தினைப் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
    • விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

    ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ந்தேதி திறந்து வைத்தார்.

    சென்னையின் அடையாளமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூர்ந்து கட்டப்பட்டது. இந்த அரங்கம் சென்னையின் சமூக, பண்பாட்டு வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது. முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், தற்போது அருங்காட்சியகமும், கலை மேடையும் கொண்ட ஒரு பொது பண்பாட்டு தளமாக மாற்றப்பட்டுள்ளது.

    விக்டோரியா பொது அரங்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியானது, அரங்கம் கட்டுவதற்கு உதவிய ஆதரவாளர்கள், கட்டிடக் கலைஞர், ஒப்பந்ததாரர், இங்கு உரையாற்றிய தலைவர்கள், நீதிக்கட்சியின் எழுச்சி, நாடகமும் சினிமாவும், விளையாட்டுகளின் வரலாறு ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்கிறது. வெளிப்புறப் பகுதியில் டிராம் வண்டி, தொல்லியல் காட்சிப் பகுதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

    * பொதுமக்கள் அனுமதி : விக்டோரியா பொது அரங்க அருங்காட்சியகக் கண்காட்சியை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.

    * முன்பதிவு முறை: சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://chennaicorporation.gov.in/gcc/] மூலம் VICTORIA PUBLIC HALL என்பதைத் தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.

    * கட்டணம்: இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட எவ்விதக் கட்டணமும் இல்லை.

    * முக்கிய நிபந்தனை: இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

    * நேரம்: காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம்.

    * பார்வையாளர்கள் எண்ணிக்கை: ஒவ்வொரு ஒன்றரை மணி நேர இடைவெளிக்கும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    * கலை அரங்கம்: விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.

    * நிகழ்ச்சிகளுக்கான அனுமதி: கலை மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பதிவு செய்த பிறகு, நிகழ்ச்சியின் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி உறுதி செய்யப்படும்.

    ×