என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கு - திண்டுக்கல் வியாபாரியிடம் கேரள போலீசார் விசாரணை
    X

    சபரிமலை கோவில் - பாலசுப்பிரமணிக்கு சொந்தமான அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த கேரள போலீசார்

    சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கு - திண்டுக்கல் வியாபாரியிடம் கேரள போலீசார் விசாரணை

    • எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர்.
    • பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    திண்டுக்கல்:

    கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் புதிதாக தங்கத்தகடுகள் பதிக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது கிலோ கணக்கில் தங்கநகை மாயமானது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ண போற்றி என்பவர் முதல் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலும் சிலைகள் மாயமாகின. இதுதொடர்பாக கேரள மாநிலம் எஸ்.ஐ.டி. என்ற அமைப்பின் டி.ஒய்.எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அப்போது பதவியில் இருந்த சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள் உட்பட பலர் சிக்கியுள்ளனர்.

    இந்த நகை திருட்டு வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் சபரிமலை நம்பூதிரி, திண்டுக்கல் ராம்நகரை சேர்ந்த மணி (எ) பாலசுப்பிரமணி உட்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    அதன் பேரில் எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர். அவர்களுடன் திண்டுக்கல் போலீசாரும் விசாரணைக்கு சென்றனர். பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். பாலசுப்பிரமணிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் வைத்து கேரள போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நகை திருட்டு வழக்கில் திண்டுக்கல் வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×