என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீய சக்தி தி.மு.க., தூய சக்தி த.வெ.க என விஜய் கூறியது ஏற்புடையதல்ல - விஜய்வசந்த் எம்.பி.
- மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
- எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த திட்டத்திற்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றி உள்ளனர்.
இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எம்.பி.க்கள் மனு அளித்துள்ளோம்.
ஏனென்றால் அந்தந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு நிதி வழங்குவது சாத்தியமில்லை. மேலும் மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது.
மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகின்றனர்.
நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். ஆனால் அவர் தீய சக்தி தி.மு.க., தூய சக்தி த.வெ.க. என கூறியது ஏற்புடையதல்ல. ஏனென்றால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்னும் சில நாட்களில் மேலிட பொறுப்பாளர்கள் பேசுவர். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.
தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.
எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம். எங்கள் தலைவர் ராகுல்காந்தி கூட இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி வாக்குகள் நீக்கப்படுவது ஏற்புடையதல்ல. பீகாரில் கூட கடைசி நேரத்தில் பல வாக்குகள் சேர்க்கப்பட்டது. இந்த எஸ்ஐஆர் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






