search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tsunami"

    • நிலநடுக்கம் எதிரொலியால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்பு.
    • ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    2024ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, 50 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

    ஜப்பானில் இதற்கு முன் 2011ல் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நிலநடுக்கம் எதிரொலியால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால், ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வெளியிடப்பட்ட உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு அரசு கைவிட்டது.

    இருப்பினும், பள்ளமான பகுதிகளில் உள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவுவாகியுள்ளது.
    • இஷிகாவா மாகாணத்தில் 1.2 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் சுனாமி அலை எழுந்தது.

    புத்தாண்டின் முதல் நாளிலேயே ஜப்பானை சுனாமி தாக்கியது. ஜப்பானின் இஷிகவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவுவாகியுள்ளது.

    இஷிகாவா மாகாணத்தில் 1.2 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் சுனாமி அலை எழுந்தது.

    இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களில் சுனாணி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

    அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

    தற்போது வரை பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

    இந்நிலையில், ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பு தொடர்பாக அங்குள்ள இந்தியர்களுக்காக தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, +81-80-3930-1715 (திரு. யாகுப் டாப்னோ), +81-70-1492-0049 (திரு. அஜய் சேதி), +81-80-3214-4734 (திரு. டி.என். பர்ன்வால்), +81-80-6229-5382 (திரு.எஸ்.பட்டாச்சார்யா), +81-80-3214-4722 (திரு. விவேக் ரத்தீ).

    மேலும், sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in ஆகிய மின்னஞ்சல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 3 பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
    • மக்கள் கட்டிடங்களின் மேல்தளத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

    நில நடுக்கங்களுக்கு அதிக சாத்தியம் உள்ள நாடான ஜப்பானில், ரிக்டர் அளவுகோளில் 7.6 எனும் அளவில் வட மத்திய ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

    இதனையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி நிறுவனம், இஷிகாவா, நிகாடா மற்றும் டொயாமா ஆகிய கடற்கரையோர பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இஷிகாவாவை மையமாக கொண்டு உருவான தொடர் நில அதிர்வுகளால் கடல் அலைகள் 16.5 அடி வரை உயரும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

    அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

    தற்போது வரை பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

    • பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு!
    • முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்!

    சென்னை:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்டோரும் உலகளவில் 2 லட்சத்துக்கும் மேலானோரும் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் இந்நாள் சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    அந்த வகையில் இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு!

    சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்! அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்! என கூறியுள்ளார்.

    • கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர்.
    • கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்த படி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் 19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை கடலூர் மாவட்டத்தில் தாக்கியதில் சுமார் 610 பேர் பேரலையில் சிக்கி உயிரி ழந்தனர். இதன் நினைவு தினம் இன்று கடை பிடிக்கப் பட்டது. மீனவ கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சுனாமி தினத்தை அனுசரித்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம் பட்டினம் மற்றும் சோனாங் குப்பம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர். பின்னர் கடற்கரை ஓர மாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பலர் தாங்கள் கொண்டு வந்த பால் மற்றும் கூடை நிரம்ப கொண்டு வந்த பூக்களையும் கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்த படி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கொண்டுவந்த மலர் வளையம், மலர்கள் மற்றும் மெழுகுவத்தி ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தி னர். இறந்த குடும்பத்தின ரையும் மற்றும் உறவினர்களை நினைத்துக்கொண்டு பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனை பார்த்த அனைவரும் கண் கலங்கியபடியே சென்றனர். மேலும் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். கடந்த 19 ஆண்டுக்கு முன்பு சுனாமி பேரலை தாக்கிய போது எப்படி இருந்ததோ அதே போல் இன்றும் அழுகை மற்றும் அலறல் குரல் நிலைத்திருந்தது. இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.

    • பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    குளச்சல்:

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இந்திய கடல் பகுதியையும் சுனாமி விட்டு வைக்கவில்லை. இதில் தமிழகத்தின் குமரி மாவட்டம் பெரும் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதத்தை சந்தித்தது. சுனாமி பேரலையில் சிக்கி கடற்கரை கிராமங்கள் சின்னாபின்னமாகின.

    மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி சொத்த விளை, குளச்சல் கொட்டில் பாடு, பிள்ளை தோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ஏராளமானோர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தனர். கொட்டில்பாடு பகுதியில் 199 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப் பட்டன. சுனாமி பேரலை தாக்கியதன் நினைவாக கடற்கரை கிராமங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு ஆண்டு தோறும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி 19-ம்ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.


    இதையொட்டி கொட்டில் பாடு சுனாமி காலணியில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. நினைவு ஸ்தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அலெக்ஸ் ஆலயத்தில் 199 பேர் நினைவாக நினைவு திருப்பலி நடந்தது. ஆலய பங்குத்தந்தை ராஜ், மற்றும் பங்குத் தந்தை சர்ச்சில் உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தும், பூக்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சுனாமியின் போது குளச்சல் பகுதியில் பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் நினைவாக இன்று இரவு 7 மணிக்கு உதவி பங்குத் தந்தை தலைமையில் நினைவு திருப்பலி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து கல்லறை மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் பலியானவர்கள் நினைவாக அந்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.


    இதுபோல் சுனாமியில் ஏராளமான முஸ்லிம்கள் பலியானார்கள். அவர்களின் உடல்கள் ரிபாய பள்ளி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் 118 பேரை பலி கொண்ட மணக்குடியிலும் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புனித அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணியப்பன் தலைமையில் நினைவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக 118 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டம் சென்றனர். அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

    • இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
    • உவரியில் ஜெபம் முடிந்து ஊர்வலமாக சென்று கடலில் அஞ்சலி செலுத்தினர்.

    தூத்துக்குடி:

    கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷிய கடற்பரப்பில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது.

    அதன் தாக்கத்தால் பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை சுனாமி என்னும் ஆழிப்பேரலை அழித்து சென்றது. இதில் தமிழகத்தில் ஏராளமான உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.

    நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவத்தை நினைவு கூரும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதனை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த சங்கு குழி மீனவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதில் செயலாளர் முருகையா, துணைத்தலைவர் மாரிலிங்கம், பொருளாளர் விமலேசன் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    உவரியில் ஜெபம் முடிந்து ஊர்வலமாக சென்று கடலில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள சுனாமி ஸ்தூபியில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
    • பகவத்கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து, வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள சுனாமி ஸ்தூபியில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தியை கைகளில் ஏந்தியவாறு கடற்கரையில் இருந்து அமைதி பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது பகவத்கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டது.

    சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபிக்கு வந்து கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • சுனாமியின்போது சொந்தங்களை இழந்த குடும்பங்கள் ஏராளம்.
    • சுனாமிக்கு பிறகு எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் சோக கீதமே மேலோங்கி இருந்தது.

    தமிழ்நாட்டின் கிழக்கு பகுதி எல்லையாக வங்கக் கடலோரம் விளங்கி வருகிறது. வடக்கே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தொடங்கி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் வரை 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கரையோர பகுதியில் 13 மாவட்டங்களும், 561 மீன்பிடி கிராமங்களும் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மீனவ மக்களுக்கு தொழில் தருவது கடல், பொழுதுபோக்கு இடமாக அமைவது கடற்கரை. அலையோடு விளையாடியே பழக்கப்பட்ட அவர்களுக்கு, கடற்கரை வரை வந்து முத்தமிடும் அலைகள், நம் வீட்டு முற்றம் வரை வந்து மிரட்டும் என்று உணர்த்திய ஆண்டு 2004.

    19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்குள் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் ஆர்ப்பரித்து எழுந்து 14 நாடுகளின் கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது.

    "உலகம்தான் அழிகிறதோ?" என்ற மரண பயத்தில் உயிர் பிழைக்க ஓடிய மக்களையும் தயவுதாட்சண்யம் இன்றி சுனாமி அரக்கன் வாரிச் சுருட்டிக்கொண்டான். இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் வசித்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்து போனார்கள். 43 ஆயிரத்து 786 பேர் இன்றுவரை காணவில்லை.

    தமிழகத்திலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். பொருட்சேதமும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்பட்டது.

    சுனாமியின்போது சொந்தங்களை இழந்த குடும்பங்கள் ஏராளம். கடற்கரையோரம் அன்றைக்கு எழுந்த மரண ஓலம், அலைகளின் ஓசையையே அடங்கச் செய்துவிட்டது. சுனாமிக்கு இரையான கட்டிடங்கள், சுவடுகளாக இன்னும் பல இடங்களில் காட்சிப்பொருளாக இருக்கின்றன.

    சுனாமிக்கு முன்னால் எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் காதல் மனம் வீசியது. ஆனால், சுனாமிக்கு பிறகு எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் சோக கீதமே மேலோங்கி இருந்தது.

    இன்றைக்கு வங்கக் கடற்கரையோர கிராமங்களில், சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று மறைந்தவர்களை மனதில் நினைத்து, கடலில் பால் ஊற்றி, பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அலைகள் ஓய்வதில்லை. அதுபோல், சுனாமி நினைவுகளும் ஓயப்போவதில்லை. காலங்கள் கடந்தாலும் நினைவுகள் தொடரும்.

    • சுனாமியால் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடிக்கிறது.
    • கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சென்னை கடலோர பகுதிகளிலும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி கோர தாண்டவம் ஆடிய தினம் நிகழ்ந்து 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆறாத வடுக்களாகவே பொதுமக்களை வாட்டுகிறது. சுனாமியால் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடிக்கிறது.

    சென்னை உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நாளை (26-ந்தேதி) கடற்கரை பகுதிகளில் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையடுத்து நாளை கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன் பிறகு கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், பலியானவர்களின் குடும்பத்தினர், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    • நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியம்.
    • சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை.

    வனாடு அல்லது வனுவாட்டு குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுகள், ஆத்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

    இந்நிலையில், வனாடுவின் தெற்கே இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    கடலில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில், இசங்கல் நகரத்திலிருந்து 123 கிலோமீட்டர் தெற்கிலும், தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 338 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிடுகையில், "நிலநடுக்கத்தின் எதிரொலியால் வனாடு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியமாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.

    இருப்பினும், சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை.

    பூகம்பங்கள், புயல் சேதம், வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக வனாடு உள்ளதாக உலக இடர் அறிக்கையின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.

    பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் இருந்ததாகவும், நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.

    கடந்த மாத தொடக்கத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

    நவம்பர் 17 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சாரங்கனி, தெற்கு கோடாபாடோ மற்றும் டாவோ ஒக்சிடென்டல் மாகாணங்களில் இறப்புகள் பதிவாகின. அதே நேரத்தில் 13 பேர் காயமடைந்தனர். இது ஏராளமான மக்களை பீதிக்குள்ளாக்கியது மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமானது.

    ×