என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக புஜாரா சமீபத்தில் அறிவித்தார்.
    • முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் நட்சத்திர வீரரான செதேஷ்வர் புஜாரா சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி புஜாராவுக்கு கடிதம் எழுதி பாராட்டினார். அதில் கூறியுள்ளதாவது:

    நீங்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்ததை அறிந்தேன். உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறுகிய வடிவிலான கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் நீங்கள் நீண்ட வடிவிலான ஆட்டத்தின் அழகை நினைவூட்டினீர்கள்.

    களத்தில் நீண்ட நேரம் பேட் செய்யும் திறன் பெற்ற நீங்கள், இந்திய பேட்டிங் வரிசையின் அச்சாணியாக திகழ்ந்தீர்கள். நீங்கள் களத்தில் இருக்கும் போது அணி பாதுகாப்பான நபரின் கையில் உள்ளது என ரசிகர்கள் உணர்ந்தனர்.

    உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை, குறிப்பாக வெளிநாட்டு சவாலான சூழ்நிலைகளில், அசாதாரண திறமையும் உறுதியும் கொண்ட தருணங்களால் நிறைந்துள்ளது.

    உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெறுவதற்கு அடித்தளமாக இருந்த உங்கள் ஆட்டத்தை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

    மிகவும் வலிமையான பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் உறுதியாக நின்று, அணிக்காக பொறுப்பை ஏற்பது என்றால் என்ன என்பதை காட்டினீர்கள்.

    ராஜ்கோட்டை கிரிக்கெட் வரைபடத்தில் இடம்பெறச் செய்த உங்கள் பங்களிப்பு, ஒவ்வொரு இளைஞருக்கும் பெருமையின் ஆதாரமாக இருக்கும்.

    நீங்கள் கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, எழுச்சியடையும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.உங்கள் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியிடம் இருந்து பாராட்டு கடிதம் கிடைத்தமைக்கு பெருமை அடைகிறேன் என புஜாரா குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    • சென்ட்ரல், எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சென்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    மேக வெடிப்பு காரணமாக நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தகது.

    • சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சேர்ந்த நவாஸ் (35 வயது) த/பெ.அன்வர் என்பவர் கத்தார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கார் டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 25.8.2025 அன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    கத்தார் நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 277 ரன்களை எடுத்தது.
    • பென் கர்ரன், சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்தனர்.

    ஹராரே:

    இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 79 ரன்னில் அவுட்டானார். சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்து 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 122 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி 49.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    • SIRஇல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அதை மீண்டும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
    • எங்களிடம் அவர்களின் ரசீதுகளும் உள்ளன. இப்போது இந்த உண்மையை மறுக்க முடியாது.

    பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் 65 லட்சம் பேரை நீக்கி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

    தேர்தலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பாஜகவுக்கு சாதமான தேர்தல் ஆணையத்தின் நகர்வு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில் SIRஇல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அதை மீண்டும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா பேசுகையில், "எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் எந்தப் புகாரும் வரவில்லை என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது. உண்மை என்னவென்றால், SIR-ல் முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் 89 லட்சம் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

    எங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் புகார் அளிக்கச் சென்றபோது, தேர்தல் ஆணையம் அவர்களின் புகார்களை நிராகரித்தது. அரசியல் கட்சிகளால் அல்ல, தனிநபர்களால் மட்டுமே புகார்களை ஏற்க முடியும் என்று தேர்தல் ஆணையம் எங்கள் வாக்குச்சாவடி முகவர்களிடம் கூறியது.

    பீகாரில் உள்ள 90,540 வாக்குச்சாவடிகளில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்வு காரணமாக 25 லட்சம் வாக்காளர்களும், உயிருடன் இல்லாததால் 22 லட்சம் பேரின் பெயர்களும் நீக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட முகவரிகளில் 9,70,000 வாக்காளர்களின் இல்லாததால் போனதால் நீக்கப்பட்டதாக ஆணையம் கூறுகிறது.

    100க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்ட மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 20,368 ஆகும். மேலும் 200க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,988 ஆகும். 7,613 வாக்குச்சாவடிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    635 வாக்குச்சாவடிகளில் இடம்பெயர்ந்தோர் பிரிவில் நீக்கப்பட்ட பெயர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்று அவர் கூறினார். இந்த புள்ளிவிவரங்களை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். ஒரே வாக்காளருக்கு இரண்டு EPIC எண்கள் வழங்கப்பட்ட பல வழக்குகள் இருக்கின்றன.

    எங்களிடம் அவர்களின் ரசீதுகளும் உள்ளன. இப்போது இந்த உண்மையை மறுக்க முடியாது. நாங்கள் வழங்கிய தரவுகள் தேர்தல் ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்டு சரிபார்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தவறுகளை சரிசெய்ய வீடு வீடாகச் சென்று மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று தெரிவித்தார்.

    • ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது.
    • 67வது விருது வழங்கும் விழாவில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்தியாவின் முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான 'எஜுகேட் கேர்ள்ஸ்' 2025 ஆம் ஆண்டுக்கான ரமோன் மாக்சேசே விருதை வென்றுள்ளது.

    ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் இந்த விருது, சமூக சேவையில் அசாதாரண தைரியத்தையும் தன்னலமற்ற சேவையையும் வெளிப்படுத்திய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் 'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் இந்திய அமைப்பாக வரலாறு படைத்துள்ளது.

    ராஜஸ்தானில் 2007 ஆம் ஆண்டு சஃபினா ஹுசைன் என்பவரால் தொடங்கப்பட்ட எஜுகேட் கேர்ள்ஸ், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பள்ளி செல்லாத பெண்களுக்கு கல்வி கற்பிக்க செயல்படுகிறது.

    ரமோன் மகசேசே விருது அறக்கட்டளை (RMAF) இன் கூற்றுப்படி, எஜுகேட் கேர்ள்ஸ் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்களைப் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

    RMAF மூலம் 2025 வெற்றியாளர்களுக்கு நவம்பர் 7 ஆம் தேதி பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறும் 67வது விருது வழங்கும் விழாவில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  

    • 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.
    • விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

    தி.மு.க. அரசு முருகன் மாநாடு நடத்தியபோது, அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது

    தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டது. இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

    திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் அதில் எட்டாவது தீர்மானத்தில், அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறினார்கள்.

    தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டது, இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை. மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

    சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள், காமாட்சிபுரம் ஆதினம் இரண்டாவது குரு மகா சன்னிதானம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
    • மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

    சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

    சென்னை பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கரை ஒதுங்கும் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 

    • நடப்பாண்டில் ஜூன் வரை 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.
    • அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் ஆவர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    2001 க்கு பிறகு கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எண்ணிக்கையில் இந்த அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக துறையின் தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் (NTTO) தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

    அதன்படி, நடப்பாண்டில் ஜூன் வரை 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை அமெரிக்கா சென்றவர்கள் 2.3 லட்சம் பேர் ஆவர்.

    ஒரே ஆண்டில் இந்த எண்ணிக்கை 5.5 சதவீதம் சரிந்துள்ளது.

    இந்தியர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா செல்லும் வெளிநாடினர் விகிதமும் குறைந்துள்ளது.

    2024 ஜூன் உடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் இல் 6.2 சதவீத சரிவு விகிதம் உள்ளது. 

    அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன், இந்தியா, பிரேசில் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் ஆவர். 

    • ரெயில் அத்திப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது மாடு ஒன்று சிக்கியதால் ரெயில் நிறுத்தம்.
    • ரெயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயிலில் மாடு சிக்கியதால் சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் அத்திப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது மாடு ஒன்று சிக்கியதால் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ரெயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.

    • தனது க்ராக்ஸ் ஷூக்களை கழற்றிவிட்டு ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றார்.
    • அதனால் பாம்பு கடித்ததை பிரகாஷால் உணரமுடியவில்லை

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து ஐடி ஊழியர் ஒருவர் பரிதாபகமாக உயிரிழந்தார்.

    இறந்தவர் பெங்களூருவின் பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டைச் சேர்ந்த மஞ்சு பிரகாஷ் ஆவார்.

    டிசிஎஸ் ஊழியரான பிரகாஷ்,நேற்று, அருகிலுள்ள கரும்புக் கடைக்குச் சென்றுவிட்டு மதியம் 12.45 மணியளவில் வீடு திரும்பியதாகவும், பின்னர் தனது க்ராக்ஸ் ஷூக்களை கழற்றிவிட்டு ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    சிறிது நேரம் கழித்து, ஷூவின் அருகே பாம்பு இறந்து கிடப்பதைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள், அறைக்குச் சென்று பிரகாஷை பார்த்தனர். பிரகாஷ் வாயில் நுரை தள்ளியதாகவும், காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    பின்னர் பிரகாஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

    2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் பிரகாஷின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதன் பின் பிரகாஷின் ஒரு காலில் எந்த உணர்வும் இல்லை. அதனால் பாம்பு கடித்ததை பிரகாஷால் உணரமுடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.  

    • வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர்.
    • கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

    மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்கிற பெண் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மணமகன் வீட்டார் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து, கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

    கடந்தாண்டு திருமணத்தின்போது மணமகன் வீட்டார் 300 சவரன் நகை கேட்டபோது பெண் வீட்டார் 150 சவரன் தந்ததாகவும், மீதியை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரிதர்ஷினியின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    ×