என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன்.
    • உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள்.

    தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.

    டசெல்டோர்ப் விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஜெர்மனியில் அவரது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களால் ஏற்பாடு செய்த நூற்றுக்கணக்கான அயலக தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டின் சிறப்பை வெளிநாடுகளில் மேம்படுத்துவதற்கும் பங்களித்த ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல தமிழ்ச் சங்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

    இதைத்தொடர்ந்து டசெல்டோர்பில் இன்று உயர்நிலை முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார்.

    இந்நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என்று ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.

    தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது #DravidianModel அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!

    உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இந்நிலையில், கர்நாடகாவின் தொட்டபல்லாபூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் அந்த விபத்தில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து ஊர்வலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் விபத்து ஏற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-16 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி நள்ளிரவு 1 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : கேட்டை இரவு 7.14 மணி வரை பிறகு மூலம்

    யோகம் : சித்த/ அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ சொக்கநாதர் வளையல் விற்றருளிய காட்சி. இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமாள் புறப்பாடு. கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    திருவிடை மருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி. திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பாலாபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-தாமதம்

    கடகம்-வாழ்வு

    சிம்மம்-பணிவு

    கன்னி-நலம்

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-விருத்தி

    தனுசு- ஆக்கம்

    மகரம்-பரிசு

    கும்பம்-தனம்

    மீனம்-இன்பம்

    • நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
    • திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். நாளை மதியம் சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார்.

    நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்றையதினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி தங்குகிறார். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திரவுபதி முர்மு திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார்.

    மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். திரவுபதி முர்மு பங்கேற்கும் நந்தம்பாக்கம் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதபோல அவர் கவர்னர் மாளிகையில் தங்குவதாலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வருகிறது.
    • பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளுடன் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்ய இந்தியா முடிவு

    இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் வகையில், 2026ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பிரான்சின் Naval Group உடன் இணைந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பலையும், ஜெர்மனியின் ThyssenKrupp நிறுவனத்துடன் இணைந்து Stealth நீர்மூழ்கி கப்பலையும் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை அரசுக்கு சொந்தமான மசகான் டாக் லிமிடெட் (MDL) மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான கடற்படை குழுமத்தால் கூட்டாக கட்டப்படும் என்று கூறப்படுகிறது.

    • அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்.

    2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான டி.என் ஏ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இவர் அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். அன்னை பிலிம் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக தணல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    ரிஷபம்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

    மிதுனம்

    இடம், வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய கூட்டாளிகளால் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இனிமை தரும் விதம் இடமாற்றம் அமையும்.

    கடகம்

    எதிரிகள் விலகும் நாள். எதிர்பாராத தொகை இல்லம் வந்து சேரும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும். கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    தைரியத்தோடும், தன்னம்பிகையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    துலாம்

    பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர்.

    விருச்சிகம்

    தேடிய வேலை திடீரென கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். பயணங்களால் பலன் உண்டு.

    தனுசு

    பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    மகரம்

    விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.

    கும்பம்

    அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். உதவி செய்வதாய் சொன்னவர்கள் ஒத்துழைப்பு தருவர். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மீனம்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். நூதன பொருள் சேர்க்கை உண்டு.

    • இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தினர்.
    • இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியர்கள் குடியேற்றத்துக்கு எதிராக அந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    கான்பெராவில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதேபோல், சிட்னியில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியேற்றத்துக்கு எதிராக பேரணிகள் நடந்தன. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர்.

    இந்தியர்களுக்கு எதிரான இந்தப் பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், இது வெறுப்புணர்வை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியது.

    ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாகும். இதில் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செப்டம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

    இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,737.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,789-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.

    தலைநகர் டெல்லியில் ரூ.1,580, கொல்கத்தாவில் ரூ.1,684, மும்பையில் ரூ.1531.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 100 பந்துகளில் 168 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து தோற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான "The Hundred" கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஓவல் இன்வின்சிபிள்ஸ், டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தது. வில் ஜாக்ஸ் 72 ரன்னும், ஜோர்டான் காக்ஸ் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் ஓவல் இன்வின்சிபிள் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஓவல் இன்வின்சிபிள் அணியின் கேப்டன் சாம் பில்லிங்ஸ் கேப்டனாக தொடர்ந்து 3 முறை தனது அணிக்கு கோப்பை வாங்கித் தந்துள்ளார் என்பதால் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 16 மற்றும் 13-ம் தேதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்னெக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-3), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான ஆன் லி உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ×