என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • குடிநீர், கழிவறை வசதிகள், முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்
    • பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5ஆம் தேதி அரசு வெளியிட்டது.

    தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    அதன்படி கூட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே தொண்டர்களை அனுமதிக்க வேண்டும்; முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்; அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50% மேல் மக்கள் கூடினால் அது விதிமீறலாகக் கருதப்படும்; குடிநீர், கழிவறை வசதிகள், முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்; அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் நடத்த 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5ஆம் தேதி அரசு வெளியிட்டது. 

    இந்நிலையில் அரசியல் கட்சிகளின் சாலைவலங்களை முறைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியமில்லாத வகையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளால் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

    • தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்பட்டனது.

    தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் என்ற பாணியை கையில் எடுத்துவிட்டது. விலை உயர்ந்தாலே உச்சம் என்ற போக்கிலேயே 'கிடுகிடு'வென அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

    அந்த வகையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து காணப்பட்டது.

    நேற்றும் தங்கம் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்த நிலையில் சவரன் ரூ.1,26,000-க்கு விற்பனையாகிறது.

    சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்பட்டனது.

    சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2,800 குறைந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்க ரூ.950 குறைந்த நிலையில் ரூ.15,850க்கு விற்பனையாகிறது.

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா ரூ.10,000 ஒரு கிலோ ரூ.405 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

    • கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.
    • நிருபரை மீட்க சம்பவ இடத்திற்கு எஸ்.பி.ஜோஸ் தங்கையா அனுப்பி வைத்துள்ளார்.

    கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    கடந்த 2022ம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அளவுக்கு அபராதம் விதித்தும் கல்குவாரி செயல்பட்டு வருவதாகப் கூறப்பட்டது.

    இதைதொடர்ந்து, புகார் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற திருச்சி செய்தியாளர் கதிரவனை சுற்றிவளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.

    கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதியில் குவாரியில் இருந்து நிருபர், ஒளிப்பதிவாளர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரம் கடந்த நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.

    திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட கும்பல் நிருபர், ஒளிப்பதிவாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    சம்பவ இடத்தில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீதும் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    4 பேரையும் கும்பல் கடத்திய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் யாரையும் தொடர் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுதொடர்பாக தகவல் அறிந்த நிலையில், நிருபரை மீட்க டிஎஸ்பி தலைமையிலான காவல் படையை சம்பவ இடத்திற்கு எஸ்.பி.ஜோஸ் தங்கையா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வௌியானது.

    இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் உள்ளிட்ட 4 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    • 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.
    • வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும்.

    சென்னை:

    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தே.மு.தி.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

    கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயே களமிறங்கினார்.

    இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 8.4 சதவீத வாக்குகளை பெற்றது. முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. சாதித்து காட்டியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலில் 10 சதவீதமாக கூடியது.

    இப்படி 2 தேர்தல்களில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க. 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இந்தத் தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் அப்போது 7.9 சதவீதமாக இருந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்.

    இப்படி கட்சியை தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் கவனம் ஈர்த்த தே.மு.தி.க. இதன் பின்னர் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை. 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.

    2016-ம் ஆண்டு தேர்தலில் அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி தே.மு.தி.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

    அந்த தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை களமிறங்கின. 103 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 2.4 ஆக குறைந்தது.

    இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன் காரணமாக டி.டி.வி. தினகரனுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் மொத்தம் 60 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதம் 0.43 ஆக அடியோடு சரிந்தது.

    இப்படி தமிழக தேர்தல் களத்தில் தே.மு.தி.க. எப்படி எழுச்சி பெற்றதோ அதே போன்று வீழ்ச்சியையும் சந்தித்திருக்கிறது.

    இது போன்ற சூழலில் தான் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தே.மு.தி.க. தயாராகி வருகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு மீண்டும் தோல்வியே பரிசாக கிடைத்தது. மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக அ.தி.மு.க. உறுதி அளித்திருந்த நிலையில் அதனை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் அ.தி.மு.க. மீது தே.மு.தி.க. கடும் கோபத்திலேயே உள்ளது.

    இது போன்ற சூழலில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று இன்னும் முடிவெடுக்காத அந்த கட்சி தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். இதனை கருத்தில் கொண்டு சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    அ.தி.மு.க, தி.மு.க. 2 கட்சிகளிடமும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஒரு மேல் சபை எம்.பி. பதவியை ஒதுக்கி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தே.மு.தி.க. பிரதானமாக முன் வைத்திருக்கிறது. இதுவே 2 கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு தடைக்கல்லாகவே இருந்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    தே.மு.தி.க.வுக்கு 10 இடங்கள் வரையில் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் தே.மு.தி.க.வோ, பா.ம.க.வுக்கு இணையாக தங்களுக்கு 17 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு சிறிய கட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அவற்றுக்கெல்லாம் தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டி இருப்பதால் 10 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறு தே.மு.தி.க.விடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதனை அந்த கட்சி ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் வரை ஒதுக்கி தருவதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள தே.மு.தி.க. தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் தே.மு.தி.க. 2 கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாலேயே தே.மு.தி.க. இன்னும் கூட்டணி முடிவை எடுக்காமல் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் பலரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

    இதன் காரணமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா எடுக்கும் முடிவு அந்த கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

    இது தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் தொடர்ந்து ஒரே வரியிலேயே பிரேமலதா பதில் அளித்து வருகிறார்.

    இன்னும் கூட்டணிக்கு கால அவகாசம் உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் என்பதே அவரது பதிலாக இருந்து வருகிறது.

    • கறிக்கோழி வளர்ப்பிற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்தது. இதில் அரசு அலுவலர்கள், விவசாய சங்கத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்த தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியும், சட்டை மற்றும் சேலைகளில் கருப்பு பேட்ச் அணிந்தும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் கூட்டத்தை துவங்கி வைத்ததும் பேசிய விவசாயிகள், கறிக்கோழி பண்ணை கூலி உயர்வு தொடர்பாக அறவழியில் போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோரிக்கைகளை முன்வைத்தும் கண்ணில் கருப்பு துணி கட்டி வந்ததாகவும், தமிழக அரசு உடனடியாக கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பரமசிவம் கூறுகையில்,

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பிற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கறிக்கோழி வளர்ப்பிற்கு தற்போது வரை 6 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்து சிறையில் அடைத்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார். 

    • கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது.
    • புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. அதனை மாற்றி புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கஞ்சிக்குழியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் பொன் சாலமன் தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடீஸ் அகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அனைவரும் இனிப்புகள் வழங்கினார்.

    முன்னதாக அவருக்கு பொன்னாடை போர்த்தி காங்கிரஸ் கட்சினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கிளாட்சன் விபின், துணை தலைவர் குமாரி, வார்டு உறுப்பினர்கள் பாலம்மான், சுபியான், சுஜின் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், மணிகண்டன், ஜெபா, வின்சென்ட், பகவத்சிங் உட்பட கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவிலேயே ஆவின் நிறுவனம் தான் மிகக் குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது.
    • ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் குறைவான விலையில் பால் கிடைக்கும்போது, அதை முழுமையாக கொள்முதல் செய்யாமல், கர்நாடகத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக பால் உற்பத்தியாளர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. தமிழ்நாட்டு உழவர்களுக்கு துரோகம் செய்து விட்டு, அண்டை மாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்குவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    பால் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களின் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில் தினமும் 1.70 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் முதல் 34 லட்சம் லிட்டர் வரை தான் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த பால் உற்பத்தியில் 17.60% முதல் 20% வரை தான். ஆவின் நிறுவனம் நினைத்தால் தமிழ்நாட்டில் அதன் பால் கொள்முதல் அளவை இரட்டிப்பாக்குவது கூட சாத்தியம் தான். ஆனால், அதைச் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்து பால் கொள்முதல் செய்யும் முயற்சியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

    இந்தியாவிலேயே ஆவின் நிறுவனம் தான் மிகக் குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது. இதை பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததைத் தொடர்ந்து பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற கொள்முதல் விலையுடன் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் கூட கட்டுபடியாகக்கூடிய விலை அல்ல.

    அதே நேரத்தில் கர்நாடகத்தில் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42 கொள்முதல் விலையுடன், ரூ.5 ஊக்கத் தொகை சேர்த்து ரூ.47 வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ.38-க்கும் ஒரு லிட்டர் பசும்பால் கிடைக்கும் நிலையில், அதைக் கொள்முதல் செய்யாமல் கர்நாடகத்தில் லிட்டருக்கு ரூ.2 அதிக விலை கொடுத்து பசும்பாலை கொள்முதல் செய்வதும், அதை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர போக்குவரத்துச் செலவாக லிட்டருக்கு ரூ.3 செலவழிப்பதும் வணிகரீதியாக அறிவார்ந்த செயல் அல்ல. ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் பாலை கர்நாடகத்திலிருந்து ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டால் தினமும் ரூ.50 லட்சமும், மாதத்திற்கு சுமார் ரூ.15 கோடியும் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும்.

    ஏற்கனவே ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.525 கோடிக்கும் கூடுதலாக இழப்பை சந்தித்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டால், ஆண்டு இழப்பு மேலும் ரூ.200 கோடி வரை அதிகரிக்கக் கூடும். அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆவின் நிறுவனத்திற்கும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு முடிவை ஆவின் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் எதற்காக எடுத்தன? என்பதை உழவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஒருவேளை ஆவின் நிறுவனத்திற்குத் தேவையான பால் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வது தான் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தான் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு வகை செய்யும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே ஒரு முறை தான் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பின் 2023-ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகையும் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. கடைசியாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு 25 மாதங்களாகும் நிலையில், அதன்பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.

    அதேநேரத்தில் ஆவின் நிறுவனத்தை விட தனியார் பால் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுவும் கூட ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு குறைந்ததற்கு காரணமாக இருக்கக்கூடும். சிக்கலுக்குத் தீர்வு என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக அண்டை மாநிலத்திற்கு சென்று அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்வது சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலாக்கவே வகை செய்யும். எனவே, கர்நாடகத்தில் இருந்து பால் கொள்முதல் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்; மாறாக, பசும் பால் கொள்முதல் விலையை கர்நாடகத்திற்கு இணையாக லிட்டருக்கு ரூ.45 வீதம் உயர்த்தி வழங்குவதன் மூலம் கொள்முதலை அதிகரிக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • 4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    1-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    2-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    3-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள்.
    • ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கவுரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 26-ந்தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    காவலாளி சிக்கந்தரிடம் வேலை கேட்டு அடைக்கலமான நிலையில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரி மீது சிக்கந்தருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து மது போதையில் சிக்கந்தர் தனது நண்பர்களோடு சேர்ந்து முனிதா குமாரியை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் தான் சிக்கந்தரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கவுரவ் குமார், முனிதா குமாரி, 2 வயது ஆண் குழந்தை ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொன்று தனித்தனியாக மூட்டை கட்டி வீசியது தெரிய வந்தது.

    முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் வீசிய கொலையாளிகள் கவுரவ் குமாரின் உடலை நடுரோட்டில் போட்டுச் சென்றதால் இந்த கொலை சம்பவம் உடனடியாக வெளியில் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து குழந்தையின் உடலை அதே பகுதியில் கூவத்தில் மீட்ட போலீசார் கடந்த 4 நாட்களாக பீகார் வாலிபரின் மனைவி முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடி வந்தனர்.

    கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முனிதா குமாரியும், குழந்தையும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே கடந்த 4 நாட்களாக பெருங்குடி குப்பை கிடங்கில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    பெருங்குடி குப்பை கிடங்கில் தெரு நாய்கள் புகுந்து உடலை தூக்கி சென்று விடக்கூடாது என்பதற்காக இரவு, பகலாகவும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்தனர்.

    ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பீகார் வாலிபரின் மனைவியான முனிதா குமாரியின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

    பீகார் வாலிபர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையின் உடல் ஏற்கனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் முனிதா குமாரின் உடலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்காக பீகார் வாலிபர் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். 3 பேரின் உடல்களும் ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

    கொலையுண்ட முனிதா குமாரி காவலாளி சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முனிதா குமாரியின் பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் கற்பழிக்கப்பட்டாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    பீகார் வாலிபரின் மனைவி உடல் கிடைத்ததை தொடர்ந்து இந்த வழக்கில் உரிய முறையில் துப்பு துலக்கி கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    3 பேர் கொலை வழக்கில் வீடியோ பதிவு காட்சிகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. இதுபோன்று மேலும் பல தகவல்களை சேகரித்து கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகர போலீசார் இந்த வழக்கு விசாரணையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இன்னும் 3 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்றார்.

    • நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 750-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • காலை உணவு தரமற்ற முறையில் துர்நாற்றம் வீசியுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கிட சமீபத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாத காலமாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 750-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் தொடங்கிய சில நாட்கள் மட்டுமே உணவின் தரம் நன்றாக இருந்ததாகவும், அதன் பின்னர் வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்ற முறையில் துர்நாற்றம் வீசியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் அந்த சாப்பாடுகளை சாப்பிடாமல் அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசினர். மேலும் கடந்த சில நாட்களாகவே தரமற்ற முறையில் உணவு இருப்பதாகவும் அதனை சாப்பிட முடியாமல் குப்பை தொட்டியில் வீசி வருவதா கவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன்.
    • வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும்.

    திருமங்கலம்:

    திருப்பரங்குன்றத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகிறது. காந்தியின் நினைவு நாளை ஒருமைப்படுத்தும் நாளாக பார்க்கிறேன்.

    சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பேசி உள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை தலைமை நியமித்த குழு தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்தித்து பேசி உள்ளேன்.

    என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் தன்மானம் முக்கியமானது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பதையும் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாநில தலைவரும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது.

    இந்தியா கூட்டணி என்பது பாராளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை ஒட்டிய காங்கிரஸ் சகோதரர்களை பாராட்டுகிறேன்.

    வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அங்கு அமைப்பு ரீதியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்த உள்ளோம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வந்தே மாதரம் என்று சொல்வது மட்டும் கிடையாது. திருப்பி அடிக்கவும் தெரியும். முதலில் தேர்தல் அறிவிக்கட்டும். கூட்டணி முடிவான பின் தொகுதி பங்கீடு பற்றி பிறகு பேசுவோம் என்றார். 

    • கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வம் நாடகமாடுகிறார்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பல்வேறு முறை சட்டசபையில் பேசியிருக்கிறேன். தொகுதி வாரியாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மதுரை மேற்கு தொகுதியில் 10 திட்டங்களை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் ஒரே ஒரு திட்டம் மட்டும் செயல்முறைக்கு வந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தி.மு.க. அரசுக்கு எதிராக சுனாமி போல தமிழக மக்கள் வெகுண்டு எழுந்து உள்ளனர்.

    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.

    நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால் நாங்களும் அவரை விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோது மக்களோடு மக்களாக நின்றார். மக்கள் துயரங்களில் பங்கெடுத்தார். மக்களுக்கான திட்டங்களை செய்தார்.

    ஆனால் அவரோடு விஜயை ஒப்பிட முடியாது. அவர் அறைக்குள் இருந்து அரசியல் செய்கிறார். கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க அவரால் முடியவில்லை. இது வினோதமாக இருக்கிறது. அவரை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

    கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது. 1991-ல் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்றார். பின்பு அவரும் அந்த பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் தொடர்ந்து பத்திரிகைகளில் தனது உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி கட்சியை வளர்த்தார். எனவே தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க. பேசக்கூடாது.

    அ.தி.மு.க. மக்களுக்கான இயக்கம். வருகிற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பத்திரிகைகள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர், அ.தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகள் தெரிந்து எப்படி நடக்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா? இதை முறைப்படி எப்படி தெரிவிக்க வேண்டும்.

    எனவே ஓ.பன்னீர் செல்வம் இந்த விஷயத்தில் நாடகமாடுகிறார். கருணாநிதி, ஸ்டாலின் நாடகங்களை எல்லாம் பார்த்து விட்டோம். எனவே ஓ.பன்னீர் செல்வத்தின் நாடகம் எங்களிடம் எடுபடாது என்றார். 

    ×