என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    • இந்திய திரைப்படங்கள் பாடல்களால் தம்மை ஆக்கிக்கொண்டவை.
    • இங்கு எப்படி சில்க் ஸ்மிதாவோ அதுபோல உலகளவில் மோனிகா பெலூச்சி.

    காட்சிகளால் கட்டமைக்கப்படுபவையே படம். ஆனால் இதிலிருந்து சற்று வேறுபட்டது இந்திய திரைப்பாணி. இந்திய திரைப்படங்கள் பாடல்களால் தம்மை ஆக்கிக்கொண்டவை. அதிலும் தென்னிந்திய திரைப்படங்களில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதேபோல் பாடல்களுக்கு. இப்போது ஒருசில படங்கள் பாடல்கள் இல்லாமல் எடுக்கப்படுகின்றன. ஆனால் அப்படங்கள் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றன. பாடல்கள் இல்லாமல் படமா? என்று. ஆனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரையுலகம் நூற்றாண்டு காலமாக இந்தப் பாணியைத்தான் பின்பற்றுகிறது.

    இங்கு திரைப்படத்திற்கு உயிரோட்டத்தை கொடுப்பது பின்னணி இசையும், பாடல்களாகவுமே உள்ளது. திரைப்படம் சரியான முறையில் எடுக்கப்படாமல் இருந்தாலும் கூட அதன் இசைக்காக படம் சில நாட்கள் ஓடி லாபத்தை ஈட்டிய நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன. ஒரு வலியை, உணர்வை இல்லை ஒட்டுமொத்த கதையையும் காட்சியிலேயே கொடுக்க முடியும்.

    ஆனால் அதை இசையாக கொடுத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்தது தென்னிந்திய சினிமா. காட்சிக்கு ஏற்றவாறு அமையும் பாடல் வரிகளும், அவைகளுக்காக இசைக்கப்படும் இசையும்தான் படத்தை இன்னும் தனித்து காட்டும். அதனால்தான் இப்போதைய பாடல்களைவிட, 90ஸ், 80ஸ் காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தனித்து நிற்கின்றன. அவை பலருக்கு இப்போது துணையாக உள்ளன.


    இளையராஜா, ஏ.ஆர். ரகுமான்

    ஆனால் இந்த தோணி இப்போது முற்றிலுமாக மாறிவருகிறது. அதாவது ஒரு படம் வணிகரீதியாக வெற்றிப்பெற உணர்ச்சிகளை தாண்டி, கவர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.  கவர்ச்சி பாடல்கள் ஒரு விளம்பர நோக்கம் என அனைவரும் அறிவோம். ஆனால் எதற்கு தென்னிந்திய சினிமா இப்படி கீழ் இறங்கிறது என்று தெரியவில்லை? உச்ச நட்சத்திரங்களும் இந்த செயல்முறைக்கு துணை நிற்கின்றனர். 

    இந்த வரிசையில் சமீபமாக வெளிவந்த முக்கியப் படம்தான் கூலி. கூலியின் வணிகரீதியாக வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒரு பாடல்தான் 'மோனிகா பெலூச்சி'. மோனிகா பெலூச்சி பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்க, 'நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ, கவர்மண்டுக்கு கேட்ருச்சி' எனும் வடிவேலு காமெடிபோல, கேட்கவேண்டிய மோனிகா பெலூச்சிக்கு கேட்டுச்சி. அவர்களே வியந்து இந்தப் பாடல் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இதில் கூலி படம் புகழ்பெற்றதோ இல்லையோ, மோனிகா பெலூச்சி இந்திய ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். 

    அதாவது கூலி பாடலுக்கு முன்புவரை மோனிகா பெலூச்சியை அறியாதவர்கள் பலர். அவர்கள் அனைவரும் யாருடா அது என  கூகுளில் தேட இணையம் முழுவதும் நிறைந்தார் மோனிகா பெலூச்சி. ஜூலையிலிருந்து ஆகஸ்ட் வரை இவர்தான் வைரல். மோனிகா பெலூச்சி சுனாமி உண்டாச்சு என்பதுபோல இரண்டுமாதம் மோனிகா அலைதான்.


    மோனிகா பெலூச்சி

    யார் மோனிகா பெலூச்சி?

    மோனிகா. இந்த பெயருக்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று ''தனித்துவம்''. பெயரைப் போலவே தனித்துவமான அழகி. அட்டகாசமான மாடல். இத்தாலி நடிகையான, இவர், ஹாலிவுட் மட்டுமல்லாமல், இங்கிலாந்து, பிரான்ஸ் மொழி படங்களிலும் நடித்தவர், The Raffle என்கிற இத்தாலி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் Bram Stoker"s Dracule மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இவர் புகழ் பாடினால் நீளும். சுருக்கமாக சொன்னால் இங்கு எப்படி சில்க் ஸ்மிதாவோ அதுபோல உலகளவில் மோனிகா பெலூச்சி.

    • பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    புதுடெல்லி:

    காலை நேரத்தில் அந்த அரசு கலை அறிவியல் கல்லூரி பரபரப்புடன் காணப்பட்டது. வகுப்புகள் ஆரம்பித்து புரொபசர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.

    பி.ஏ. வரலாறு வகுப்பில் புரொபசர் சண்முகம் போர்கள் குறித்து மாணவர்களுக்கு நடத்திக் கொண்டிருந்தார். அந்தக் காலத்திய போர் முறைகள் குறித்து விளக்கினார்.

    அப்போது திடீரென எழுந்த பாலாஜி என்ற மாணவன், சார் இப்போதுள்ள நவீன கருவிகள் அப்போது இருந்தால் நீண்ட நாட்களாக போர் நடந்திருக்காது அல்லவா என கேட்டான். அதற்கு, ஆமாம் என சிரித்தவாறே சண்முகம் கூறினார்.

    உடனே பாலாஜி, இப்போதுகூட உலக அளவில் உக்ரைன் ரஷியா இடையிலான போர் 3 ஆண்டைக் கடந்தும் நடந்து கொண்டு இருக்கிறதே என கேட்டான்.

    அது ஆயுத விற்பனை அரசியல் எனக்கூறிய புரொபசர், இந்தியா பாகிஸ்தான் போர்கள் குறித்து பாடம் எடுத்தார்.

    பாலாஜி உடனே எழுந்து, ஆமாம் சார் இந்தியா கூட ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை எடுத்ததே, உலக நாடுகளும் நமக்கு பாராட்டு தெரிவித்ததே என நினைவு கூர்ந்தான்.

    ஆமாம், நீ கூறியது சரிதான் என்ற சண்முகம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஏன் நடந்தது என்பது குறித்து அளித்த விளக்கம் வருமாறு:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்.

    இத்தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.

    இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ம் தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.


    இந்த நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை 5 பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றில் F-16 மற்றும் JF-17 போன்ற நவீன விமானங்களும் அடங்கும்.

    இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இந்த மோதல் முடிவுக்கு வந்தது.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி இந்து பெண்கள் பலர் தங்கள் கணவனை இழந்தனர். சிந்தூர் என்றால் பொட்டுஅல்லது திலகம் என்று பொருள். பயங்கரவாத தாக்குதலில் கணவனை இழந்த இந்து பெண்கள் தங்கள் பொட்டினை இழந்ததால் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டன.


    அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தின் மக்களவையில் ஜூலை 28-ம் தேதியிலும், மாநிலங்களவையில் ஜூலை 29-ம் தேதியிலும் விவாதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது என சொல்லி முடித்தார்.

    புரொபசரின் விளக்கத்தைக் கேட்ட சண்முகம், வம்பு சண்டைக்குப் போகக்க் கூடாது, வந்த சண்டையை விடக் கூடாது என்பது இதுதானே சார் என கேட்டபடியே, பாடங்களுக்கான குறிப்புகளை எடுக்கத் தொடங்கினான்.

    • உலக கோப்பை செஸ் வரலாற்றில் இளம் வயதில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தரோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இந்தியாவின் திவ்யா தேஷ்முக் ஜார்ஜியாவின் பாடுமியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பையை வென்றார்.

    2025-ம் ஆண்டில் செஸ் உலகில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன. இதோ சில முக்கியமான தகவல்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

    அதன்படி முதலில் உலக கோப்பை செஸ் வரலாற்றில் இளம் வயதில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தரோவ் (Javokhir Sindarov) சாம்பியன் பட்டம் வென்றார். அவர் FIDE உலகக் கோப்பை 2025-ஐ வென்றார். இந்தியாவின் கோவாவில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 27 வரை நடந்த இந்தத் தொடரில், இறுதிப் போட்டியில் சீனாவின் வெய் யி (Wei Yi)-யை டைபிரேக்கரில் வீழ்த்தினார்.


    பிரக்னானந்தா டாடா ஸ்டீல் சாம்பியன்:

    இந்திய வீரர் ஆர். பிரக்னானந்தா (R Praggnanandhaa) ஜனவரி 17 முதல் பிப்ரவரி 2 வரை நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஸீயில் நடந்த டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரை வென்றார். உலக சாம்பியன் குகேஷ் (Gukesh Dommaraju)-ஐ ப்ளிட்ஸ் ப்ளேஆஃபில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இது பிரக்னானந்தாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று.


    மேக்னஸ் கார்ல்சனின் நார்வே செஸ் வெற்றி:

    ஜூன் 6 வரை ஸ்டாவாங்கரில் நடந்த நார்வே செஸ் 2025-ஐ உலகின் நம்பவர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) ஏழாவது முறையாக வென்றார்.


    ஆனால், இந்தத் தொடரில் உலக சாம்பியனான அவரை கிளாசிக்கல் செஸ்ஸில் குகேஷ் முதல் முறையாக வீழ்த்தினார். இது ஒரு பெரும் பாராட்டை குகேஷ்-க்கு பெற்றுக் கொடுத்தது.


    பெண்கள் உலக சாம்பியன்:

    சீனாவின் ஜு வென்ஜுன் (Ju Wenjun) ஏப்ரல் 3 முதல் 16 வரை ஷாங்காய் மற்றும் சோங்கிங்கில் நடந்த பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2025-ஐ வென்று, தனது ஐந்தாவது உலக தலைப்பைத் தக்க வைத்தார். சீனாவின் டான் ஜோங்கி (Tan Zhongyi)-யை 6.5-2.5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.


    பெண்கள் உலகக் கோப்பை:

    இந்தியாவின் திவ்யா தேஷ்முக் (Divya Deshmukh) ஜூலை 5 முதல் 29 வரை ஜார்ஜியாவின் பாடுமியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை 2025-ஐ வென்றார். இறுதியில் கொனேரு ஹம்பி (Koneru Humpy)-யை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தினார். இது திவ்யாவின் முதல் உலகக் கோப்பை வெற்றி.


    ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம்:

    லெவன் ஆரோனியன் (Levon Aronian) டிசம்பர் மாதத்தில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை 1.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.


    ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ்:

    ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரை ரியாத்தில் நடந்த ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் தொடரை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். இறுதியில் அலிரேசா ஃபிரௌஜாவை (Alireza Firouzja) வீழ்த்தினார்.

    கிராண்ட் செஸ் டூர் 2025:

    பல தொடர்களில், வெஸ்லி சோ (Wesley So) சின்க்ஃபீல்ட் கப்-ஐ வென்றார், மேலும் ஆண்டு முழுவதும் பல இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.



    • இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது
    • இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.

    திரையரங்குகளில் வசூல் எவ்வளவு, எத்தனை நாட்கள் ஓடியது என்ற கணக்குகளை விட, இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது

    "இந்த படம் என்ன?", "யார் நடித்திருக்காங்க?", "கதை உண்மையா?" – இப்படிப் பல கேள்விகளோடே இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.

    2025 REWIND-ல், கலெக்சனை ஒதுக்கி விட்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் எவை?

    ஹிட்–ஃப்ளாப் எல்லையை தாண்டி மக்கள் மனசை கலக்கிய படங்கள் யாவை? இந்த லிஸ்ட், சினிமாவின் இன்னொரு பக்கமான Search Engine சொன்ன மக்கள் தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்

     1. சயாரா

    அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடிப்பில் உருவான காதல் படம் சயாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி ரூ.500 கோடி வசூலை கடந்தது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலை குவிப்பது இதுவே முதல்முறையாகும்.

    இளைஞர்கள் பெரும் ஆதரவை பெற்ற இப்படம் கூகுள் Search-லும் முதல் இடத்தை பிடித்துள்ளது.


    2. காந்தாரா - சாப்டர் 1

    காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்தது.

    இப்படம் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததால் இணையத்திலும் இப்படம் பேசுபொருளாகி இந்த பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.


    3. கூலி

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி படம் இந்தாண்டில் அதிக எதிர்பார்ப்போடு வெளியான படமாகும்.

    அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்திருந்தால் இந்த பட்டியலில் முதல் இடத்தை கூட இப்படம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


    4. வார் 2

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான வார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்தது மற்றும் கியாரா அத்வானியின் பிகினி காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. திரையரங்குகளில் இப்படம் மீதான வரவேற்பு குறைந்தாலும் இணையத்தில் இப்படம் பெரும் பேசுபொருளாகி இப்பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.


    5. சனம் தேரி கசம்

    சனம் தேரி கசம் இந்தாண்டு வெளியான படம் கிடையாது. 2016 ஆம் ஆண்டு வெளியான படம். அப்படியிருக்க இந்த படம் பட்டியலில் இடம்பெற காரணம் ரீரிலீஸ் தான்.

    2016-ம் ஆண்டு ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான சனம் தேரி கசம் படம் ரூ.7 கோடி வசூலை ஈட்டி தோல்வி அடைந்தது. விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

    9 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 7-ம் தேதி இந்தப் படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. காதல் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுது. இந்தப் படம் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

    தற்போது ரீரிலீஸ் கலாச்சாரம் இந்தியா முழுவதும் வைரஸ் போல பரவியுள்ளது. அதன் காரணமாக இப்படம் இந்த பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.


    6. மார்கோ

    மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் மார்கோ திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படம் வரவில்லை என மக்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இந்தி மொழியில் அதிக வசூலித்த மலையாள திரைப்படம் என்ற சாதனையை படைத்த இப்படம் மொத்தமாக 100 கோடி வசூலை கடந்தது. இந்தி பேசும் மக்களிடையே பெட்ரா வரவேற்பால் இந்த பட்டியலில் இப்படம் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.


    7. ஹவுஸ்புல் 5

    அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

    ஹவுஸ்புல் 4 பாகங்கள் பெற்ற வெற்றியால் ஹவுஸ்புல் 5 படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பினால் தான் இப்படம் இந்த பட்டியலில் 7 அம இடம் பிடித்துள்ளது.


    8. கேம் சேஞ்சர்

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

    இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இந்த பட்டியலில் இப்படம் 8 ஆம் பிடித்துள்ளது.


    9. மிசஸ்

    Mrs' என்பது 2025-ல் அதிகம் பேசப்பட்ட இந்திய படங்களில் ஒன்று. மலையாளத்தில் வெளியான The Great Indian Kitchen படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன இந்த படம், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் சந்திக்கும் அதிகாரம், அடக்குமுறை மற்றும் அடையாள இழப்பு போன்ற பிரச்சினைகளை நுணுக்கமாக பேசுகிறது.

    இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள சன்யா மல்ஹோத்ரா, பாரம்பரிய குடும்ப அமைப்பில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணின் மனஅழுத்தத்தையும், அவளின் மௌன எதிர்ப்பையும் மிக யதார்த்தமாக வழிபடுத்தியுள்ளார்.

    பெரிய ட்விஸ்ட், அதிக வசனங்கள் இல்லாமல், அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் சமூக உண்மைகளை சொல்வதே 'Mrs' படத்தின் பலம். பெண்களின் உழைப்பு, சமத்துவம், திருமண வாழ்க்கையில் உள்ள மறைமுக வன்முறை போன்ற விஷயங்களை நேர்மையாக பேசும் இந்த படம், வசூலை விட விவாதத்திலும், தேடலிலும் அதிக கவனம் பெற்றது.


    10. மகாவதார் நரசிம்மா

    அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான மகாவதார் நரசிம்மா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    வெறும் ரூ.15 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.

    வட இந்தியாவில் இப்படம் பெற்ற பெரிய வெற்றியால் இந்த பட்டியலில் இப்படம் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.

    • ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற வந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்தார்.

    தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர். இருப்பினும் ஒரு மாணவர் மேடையில் ஆளுநரை வெளிப்படையாக அவமதித்தது இது முதல் முறையாகும்.

     

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி...

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 759 பேருக்கு பட்டம் வழங்கினார்.

    அப்போது, ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக பட்டம் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதால் நான் அவரிடம் இருந்து பட்டம் பெறுவதை விரும்பாமல் துணைவேந்தரிடம் பட்டம் வாங்கினேன். எனக்கும் அவருக்கும் எந்தவிட ஒரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது. திராவிட மாடலை நான் விரும்புகிறேன். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதால் நான் இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்தார்.

     

    இந்த விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் கலந்து கொள்ளவில்லை.

    இந்த நிகழ்வு பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

     

    இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜன் என்பவரின் மனைவி ஜீன் ஜோசப், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என கூறி உள்ளார். காலம் காலமாக கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க.வினர் அரங்கேற்றி வரும் நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

     

    இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், மாணவி ஒருவர், ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல. அவரது கொள்கை பிடிப்பும், துணிச்சலும் பாராட்டத்தக்கது. இருப்பினும், சபை நாகரிகம் என்பதும் முக்கியமானது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் செயல், ஒரு வகையில் ஏற்புடையது என்றாலும், தனிமனித அணுகுமுறை என வரும்போது சபை நாகரிகமும் முக்கியம். தமிழையும், தமிழ் மக்களையும் ஆளுநர் அவமதித்து பேசி வருகிறார். இதனால், அவரது தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று கூறினார்.

     

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த பிஎச்.டி மாணவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் இருக்கும்போது, பட்டம் வழங்கிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினருக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

    சிலர் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பாகப் பார்க்க, பலர் இது போன்ற ஒரு புனிதமான விழாவை அவமதிப்பது சரியல்ல என கருத்து தெரிவித்தனர்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் புகார் அளித்த மாணவர்...

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்.14-ந்தேதி 39-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.

    அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    மாணவர் பிரகாஷ் அளித்த மனுவில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சில வழிகாட்டிகள் ஆராய்ச்சி அறிஞர்களை ஆராய்ச்சி அறிஞர்களாகக் கருதுவதில்லை, கல்விப் பணிகளைத் தவிர, ஆராய்ச்சி அறிஞர்கள் சில வழிகாட்டிகளின் வீட்டில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகள் உள்ளன. ஆனால் அது பொது விடுதியாக நடத்தப்படுவதால், ஆதி திராவிட (பட்டியலின சாதி) ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மாதாந்திர மெஸ் கட்டணம் செலுத்துவதில் பெரும் சுமை உள்ளது.

    வைவா நேரத்தில், ஆராய்ச்சி அறிஞர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய சில வழிகாட்டிகள் அறிவுறுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, சில வழிகாட்டிகளின் நிர்ப்பந்தத்தால், வைவா வாய்ஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், ஆராய்ச்சி அறிஞர்கள், துறையில் உள்ள சில வழிகாட்டிகளுக்கு பணம், உணவு, தங்கம் வழங்குகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்

     

    இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

    விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

    இதையடுத்து, அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பல்கலையில் முனைவர் பட்டம் பெற பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேலைகளை செய்ய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழங்களில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
    • குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    மெட்ரோ ரெயிலால் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிவதால் மெட்ரோ ரெயில் சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    இதனை தொடர்ந்து, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த திட்ட அறிக்கையில் மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ. 10,740 கோடியிலும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

    ஆனால் மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை மறுத்த மத்திய அரசு அதனை ஆய்வு செய்வதாகவும், கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது. இதனால் இவ்விவகாரம் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

     

    20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!

    அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இதனை தொடர்ந்து, கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கிடைக்காததற்கு தி.மு.க. அரசுதான் காரணம். திட்ட அறிக்கை முறையாக தயாரிக்கப்படாததால் மத்திய அரசு நிராகரித்ததாகவும், 2026ல் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோவைக்கு மெட்ரோ நிச்சயம் கொண்டுவரப்படும் என்றும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மக்கள் நலத் திட்டங்களை அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க. முடக்கி வைப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் வானதி கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    வானதி சீனிவாசன் கூறியதுபோல் 2026-ல் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வராவிட்டால் அதற்கு கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிரந்தரமாக மத்திய அரசு அனுமதி மறுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே.

    • 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
    • புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.

    இந்தியாவில் பல்வேறு மாநிங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பகிரங்கமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.

    கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து ராகுல் காந்தி அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஆதாரங்களை வெளியிட்டார்.

    அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 

    அதன்படி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை கடந்த நவம்பர் 5ம் தேதி அன்று ராகுல் காந்தி ஒவ்வொன்றாக வெளியிட்டார். இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை.

    நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன்.

    ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார்.

    5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

    பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார், பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்.

    பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள், உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.

    மேலும் அவர், அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார் அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.

    நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக gen z தலைமுறையினர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்.

    பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் இந்த பெண்மணி ஹரியானாவின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளை செலுத்தி இருக்கிறார்.

    பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்தப் பெண்மணி நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அதனால்தான் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளிவிடாமல் தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது.

    இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதுகளின் வெவ்வேறு அடையாள அட்டைகளை வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக ராகுல் காந்தி வெளியிட்டார்.

    ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது . இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.

    ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர்.

    ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.

    ஹரியானாவை தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 

    மேலும் அவர், "பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

    ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.

    இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.

    வாக்கு திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.ஐ.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது. 

    பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.

    பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.

    பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று ராகுல் காந்தி கூறினார்.

    • சிஎஸ்கே அணி பந்து மாற்றியதாக நடந்த சம்பவம் சர்ச்சையானது.
    • நடுவர் அவுட் கொடுக்காமலே இஷான் கிஷன் வெளியேறியது சர்ச்சையானது.

    2025-ம் ஆண்டு ஐபிஎல் (IPL 18) தொடரில் பல சர்ச்சைகள் நடந்தன. இந்தத் தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி, மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

    இந்த தொடரில் முக்கிய சர்ச்சைகளில் முதலாவதாக சிஎஸ்கே அணியின் பந்து மாற்றம் (Ball-Tampering)குற்றச்சாட்டு:

    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கலீல் அகமது ஆகியோர் பந்து மாற்றியதாக சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்புடைய வீடியோ ஒன்று வைரலாகி, பந்தை மாற்றியதாக சந்தேகம் எழுந்தது. இது தொடரின் தொடக்க வாரத்திலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அம்பயர் முடிவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய அவுட்டுகள்:

    பல போட்டிகளில் அம்பயர்களின் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. உதாரணமாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அம்பயர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறியது. அதுவரை அவுட் கொடுக்காமல் இருந்த அம்பயர் அவர் வெளியேறுவதை பார்த்ததும் அவுட் கொடுக்கலாமா வேண்டாமா என்பது போல அவுட் கொடுத்தார். இது மற்ற அணி ரசிகர்கள் அம்பானி காசு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    பிட்ச் மற்றும் ஹோம் அட்வான்டேஜ் சர்ச்சை:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரகானே, ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டதாக புகார் கூறினார். இது ஹோம் அட்வான்டேஜ் குறித்த விவாதத்தை தூண்டியது.

    இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக தொடர் இடைநிறுத்தம்:

    மே 9-ஆம் தேதி, எல்லைப் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடர் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டது. தர்மசாலாவில் ஒரு போட்டி நடுவில் கைவிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    டெல்லி கேபிடல்ஸ் அணியின் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஒப்பந்தம்:

    பங்களாதேஷ் வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை ரிப்ளேஸ்மெண்ட் வீரராக ஒப்பந்தம் செய்ததற்கு சமூக வலைதளங்களில் #BoycottDelhiCapitals என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி, அரசியல் பதற்றம் காரணமாக விமர்சனங்கள் எழுந்தன.

    கொண்டாட்ட சோகம்:

    RCB வெற்றிக்குப் பிறகு பெங்களூரு ஸ்டேடியம் வெளியே கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் நடந்தது – இது ஆண்டின் மிக மோசமான சம்பவமாக கருதப்பட்டது.

    இவை தவிர, வீரர்கள் இடையே சண்டைகள், அம்பயர் கொண்டாட்டங்கள் போன்றவையும் சர்ச்சைகளை அதிகரித்தன. இந்தத் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் சர்ச்சைகளையும் தந்தது.

    • 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின.

    செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 

    குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.

    இதனால் மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏஐ ஆப்பு வைத்தது. நடப்பாண்டில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.

    சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.

    கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின. இதன் விளைவாக, பாரம்பரிய பிரிவுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    தொழில்நுட்பம் மட்டுமின்றி உற்பத்தி, நிதி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்துள்ளது.

    2025 இல் அதிக பணிநீக்கம் நடைபெற்ற நிறுவனங்களின் பட்டியல்

    1) இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்தாண்டு 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    2)மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தனது 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    3) தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் (Verizon) 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    4) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏஐ மீது முதலீடு செய்வதால் செலவுகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. குறிப்பாக இதில் பலர் சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் ஆவர்.

    5) ஐ.டி. கம்பெனியான அக்சென்சர் (Accenture) ஏஐக்கு தங்களை தகவமைத்து கொண்டிராத 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    6) இந்தியாவை சேர்ந்த ஐ.டி. சேவை நிறுவனமான டி.சி.எஸ் (TCS) 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஓராண்டில் நடந்த மிகவும் அதிக பணிநீக்கம் ஆகும்.

    7) எலக்ரானிக் உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் (Panasonic) 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.

    8) எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமான செவ்ரான் (Chevron) 8,000 முதல் 10,000 ஊழியர்களை நீக்கியது.

    9) அழகுசாதனப் பொருட்கள்நிறுவனமான எஸ்டீ லாடர் (Estee Lauder) விற்பனைச் சரிவைச் சமாளிக்க 7,000ஊழியர்களை நீக்கியது.

    10) தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிஃபோனிக்கா (Telefonica) 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    செலவுக் குறைப்பு மற்றும் செயல்திறனை அதிகரித்தல், ஏஐக்கு தகவமைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களையே பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கங்களுக்கு மேற்கோள் காட்டி உள்ளன.

    இவை தவிர்த்து பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான பணிநீக்கங்களை இந்தாண்டு மேற்கொண்டுள்ளன. டிசிஎஸ், மைக்ரோசாப்ட், அசென்சர், அமேசான் போன்ற நிறுவனங்களின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களும் இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

    ஏஐ மென்மேலும் வளர்ந்து வருவதால் இந்த பணிநீக்க போக்கு அடுத்தாண்டும் இன்னும் கூடுதலாக தொடரும் என்றே தொழிலுட்ப வட்டாரங்கள் கணிக்கின்றன. ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வேலைகளை தொழில்நுட்பங்கள் பறிக்கும் சைன்ஸ் பிக்ஷன் அதிபுனைவு நினைவாகி வருகிறது. 

    • பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.
    • பிருந்தாவனத்தின் கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தை பிரசாதமாக பெற்றார்.

    லக்னோ:

    அது ஒரு தனியார் அலுவலகம். அங்கு பணிபுரியும் சுப்ரமணிக்கு மறுநாள் திருமணம். அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கு பத்திரிகை வைத்து, கண்டிப்பாக திருமணம், வரவேற்பு ஆகியவற்றுக்கு வரும்படி அழைப்ப்பு விடுத்திருந்தான்.

    திருமணத்துக்கு முந்தைய தினம். அலுவலகத்தில் மாலை நேரம் இடைவேளை. டீக்கடையில் நின்று சூடாக வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மகேஷ். அப்போது எதிரில் கந்தன் வருவதைக் கண்டான்.

    வாடா கந்தா, சாயந்தரம் சுப்ரமணி ரிசப்ஷன் எப்படி போறே? என கேட்டான். அனைவருடன் தான் செல்ல வேண்டும் என பதிலளித்தான் கந்தன்.

    கல்யாணத்தை பண்ணி பார், வீட்டை கட்டிப் பார்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்கன்னு பேச்சை தொடர்ந்தான் மகேஷ்.

    ஆமாண்டா, எவ்வளவு செலவு? எதையும் சுருக்க முடியாதுடா. கண்டிப்பா செய்தே ஆகணும். இல்லைன்ன ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குறை சொல்ல ஆரம்பிச்சுடறாங்க என்றான் கந்தன்.

    ஆமாடா, இப்படியும் திருமணங்கள் நடக்குற வேளையில், சில விநோதமான திருமணங்களும் நடக்குது பார் அதுதான் ஆச்சரியம். போன வாரம் கூட உத்தர பிரதேசத்தில் அப்படி ஒரு வித்தியாசமான திருமணம் நடந்துச்சு என்றான் மகேஷ்.

    அப்படி என்னடா விநோதம் என கேட்டான் கந்தன்.

    உ.பி.யில் நடந்த விநோதமான திருமணம் குறித்து மகேஷ் கூறியதன் சுருக்கம் இதுதான்:

    இந்தியா என்பது பல்வேறு கலாசாரங்களும் மொழிகளும் ஒன்றிணைந்த ஒரு நாடு. அதனால்தான் இங்கு மாநில வாரியாக உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி என அனைத்திலும் வேறுபாடு இருக்கிறது.

    இந்திய கலாசாரத்தில் திருமண விழா என்பது மிக முக்கிய விஷயமாக உள்ளது. திருமணத்தில் மாறுதல்கள் இருந்தாலும் இந்தியா முழுவதும் திருமணம் குறித்த முக்கியத்துவம் மாறுவதில்லை. வடமாநிலங்களில் உள்ள சில கிராமங்களில் விநோத திருமணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர்மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார் பிங்கி என்ற இளம்பெண்.


    உ.பி.யின் படோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிங்கி சர்மா (28). இவருக்கு திருமணம் செய்துவைக்க பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வந்துள்ளனர் அவரது பெற்றோர். பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.

    பட்டப்படிப்பை முடித்துள்ள பிங்கி சர்மா 3 மாதத்துக்கு முன் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றார். அப்போது கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தைப் பிரசாதமாக பெற்றார்.

    காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்தேன். காய்ச்சல் குணமானது எனக்கூறிய அவர், இந்த சம்பவங்கள் கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என உறுதியாக தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய பிங்கி, இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்ததார்.

    பிங்கியின் இந்த முடிவு பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்தது. அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்தனர். ஆனால் பிங்கி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, டிசம்பர் 6-ம் தேதி பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் பிங்கிக்கும் திருமணம் நடைபெற்றது.

    வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்றே கிருஷ்ணர் சிலைக்கும், பிங்கி சர்மாவுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

    திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.

    இந்தியாவில் நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சில கிராமங்களில் இதுபோன்ற விநோத திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது எனக்கூறி முடித்தான் மகேஷ்.

    ஆமாண்டா, கேட்ட எனக்கே இவ்வளவு ஆச்சரியமா இருக்குது என்றால் அதில் கலந்து கொண்டவர்கள் எப்படி இருந்திருப்பாங்க என சொன்ன கந்தன், சரி, வா சுப்ரமணி ரிசப்ஷனுக்கு போய்ட்டு வரலாம் என கிளம்பினான்.

    • லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன.
    • இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.

    பெரும் நட்சத்திரங்கள், நூறு கோடி பட்ஜெட், பிரம்மாண்ட விளம்பரம் அசெய்தால் தான் படம் வெற்றி பெறும் என்ற பார்முலாவை மாற்றி நல்ல கதை, சுவாரசியமான திரைக்கதை ஆகியவற்றால் 2025-ல் சில தமிழ் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தன.

    "சிறிய பட்ஜெட் = சிறிய வசூல்" என்ற பழைய கணக்கை முறியடித்து, லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன. இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.

    OTT, சிங்கிள் ஸ்க்ரீன், மல்டிப்ளெக்ஸ் என எல்லா தளங்களிலும் பொதுமக்களின் பாராட்டும், குடும்ப ஆதரவும் கிடைத்த படங்கள் தான் 2025-ன் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்கள். அவ்வகையில் இந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பல மடங்கு லாபம் கொடுத்த டாப் 5 வெற்றி படங்களை இந்த தொகுப்பில் காணலாம்

    1. டூரிஸ்ட் பேமிலி:

    பட்ஜெட்: ரூ.7 - 8 கோடி

    வசூல்: ரூ.90 கோடி

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவெற்பிற் பெற்று வசூலை வாரி குவித்தது.

    இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் சுமார் ரூ.90 கோடி வசூலை குவித்தது.கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு 10 மடங்கு லாபம் கொடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்துது.

    2. தலைவன் தலைவி:

    பட்ஜெட்: ரூ.25 கோடி

    வசூல்: ரூ.100 கோடி

    விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக உருவான 'தலைவன் தலைவி' படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    ரூபாய் 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ஒரு மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்தது.

    3. டிராகன்:

    பட்ஜெட்: ரூ.35 கோடி

    வசூல்: ரூ.150 கோடி

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.

    லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது.

    பட்ஜெட் அளவில் இப்படம் இந்த பட்டியலில் உள்ள மற்ற படங்களைவிட சற்றுக் கூடுதலானாலும், அதன் அபாரமான வசூல் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது

     4. மாமன்:

    பட்ஜெட்: ரூ.10 கோடி

    வசூல்: ரூ.50 கோடி

    பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக தயாரான இப்படம் கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.

    ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்து கோலிவுட் சினிமா வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    5. குடும்பஸ்தன்:

    பட்ஜெட்: ரூ.8 கோடி

    வசூல்: ரூ.28 கோடி

    இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தில் சான்வி மேகனா கதாநாயகியாக நடித்திருந்தார்.

    ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டது.

    வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.28 கோடி வசூலை குவித்து சிறிய படங்களும் பெரிய வசூலை குவிக்கும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் எடுத்துக்காட்டியது.

    • 1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா.
    • ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும்.

    தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதாகும்.

    இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளானது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப வரையறை செய்யப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள் வெறுமனே மக்கள்தொகையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை தடுத்து நிறுத்தினர்.

    ஆனால், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பை 2026-ம் ஆண்டு நிகழ்த்த உள்ளது.

    1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2026 வரை மாற்றக்கூடாது என்ற திருத்தத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார். இதனால், மக்கள்தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன்பின், 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இன்று வரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் செயல்பாடு இருந்துள்ளது. தற்போது 25 ஆண்டு காலம் நிறைவுபெறும் தருணத்தில் பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் இந்த பிரசாரம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். போதுமான கல்வி மற்றும் பகுத்தறிவு இல்லாத சமூகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது.

    மக்களிடையே 'நாம் இருவர் - நமக்கு ஒருவர்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள்தொகை பெருக்க அளவை குறைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. இதனால் மனித வளக் குறியீடுகளிலும், தனிமனித பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் சராசரி கருவள விகிதம் 2.1% ஆக இருந்து தற்போது 1.4% என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதிர்வரும் 2031-36-ஆம் கால கட்டங்களில் இது மேலும் குறையும் என்று இந்திய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. கருவள விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார விகிதத்தில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.

    தொகுதி மறுசீரமைப்புக்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    தொகுதி மறுசீரமைப்பு என்பதை பற்றி பா.ஜ.க. பேசவே இல்லை என்றும், தி.மு.க. தலைவர் வேண்டுமென்றே இது குறித்த வீண் வாதத்தை கிளப்புகிறார் என்றும், மத்திய அரசின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பேசி வருகின்றனர்.

    19-9-2023 அன்று பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். அரசியல் சாசனத்தின் 128-வது திருத்த மசோதா-2023 என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்கிறது.

     

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று விளக்கம் அளித்தார்.

    அடுத்தாக, 28.05.2023 அன்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பில் 543 மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில் 848 இருக்கைகளுடன் பாராளுமன்றத்தை அமைப்பதன் பின்னணி என்ன? இதற்கு வலுசேர்க்கும் விதமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

     

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டு தனி பெரும்பான்மையோடு நிலைபெற்ற ஆட்சியை தொடர வேண்டும் என்பதன் அடிப்படை தான் தொகுதி மறுசீரமைப்பின் முழு நோக்கம் ஆகும். இது எப்படி சாத்தியமெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31 என குறையும், அதே வேளையில் பா.ஜ.க. ஆளும் பீகார், உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும்.

    2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டால் தென்னிந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதிலிருந்து 103 என குறையும். மக்களவையில் 23.74% உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97% ஆக குறையும். தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இடங்கள் 42ல் இருந்து 34 ஆகும். அதேசமயம், அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றன.

    குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

     

    இதை வலியுறுத்தி கடந்த மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் என 63 அமைப்புகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாமல் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.

    இதில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, தமிழகத்தின் 7.18 சதவிகிதத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22-ந்தேதி பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

     

    2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021-ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.

    1971-2011 இடைபட்ட காலத்தில் உத்தரபிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளாவில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரபிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு நிச்சயம் தீர்வு காணப்படத்தான் வேண்டும். ஆனால், 1952, 1963, 1973-ல் நடைபெற்ற மறுசீரமைப்புபோல அது சுலபமாக இருக்காது என்பது நிச்சயம்.

     

    ×