என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட நவீன மீரா
    X

    2025 REWIND: கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட நவீன மீரா

    • பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.
    • பிருந்தாவனத்தின் கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தை பிரசாதமாக பெற்றார்.

    லக்னோ:

    அது ஒரு தனியார் அலுவலகம். அங்கு பணிபுரியும் சுப்ரமணிக்கு மறுநாள் திருமணம். அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கு பத்திரிகை வைத்து, கண்டிப்பாக திருமணம், வரவேற்பு ஆகியவற்றுக்கு வரும்படி அழைப்ப்பு விடுத்திருந்தான்.

    திருமணத்துக்கு முந்தைய தினம். அலுவலகத்தில் மாலை நேரம் இடைவேளை. டீக்கடையில் நின்று சூடாக வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மகேஷ். அப்போது எதிரில் கந்தன் வருவதைக் கண்டான்.

    வாடா கந்தா, சாயந்தரம் சுப்ரமணி ரிசப்ஷன் எப்படி போறே? என கேட்டான். அனைவருடன் தான் செல்ல வேண்டும் என பதிலளித்தான் கந்தன்.

    கல்யாணத்தை பண்ணி பார், வீட்டை கட்டிப் பார்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்கன்னு பேச்சை தொடர்ந்தான் மகேஷ்.

    ஆமாண்டா, எவ்வளவு செலவு? எதையும் சுருக்க முடியாதுடா. கண்டிப்பா செய்தே ஆகணும். இல்லைன்ன ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குறை சொல்ல ஆரம்பிச்சுடறாங்க என்றான் கந்தன்.

    ஆமாடா, இப்படியும் திருமணங்கள் நடக்குற வேளையில், சில விநோதமான திருமணங்களும் நடக்குது பார் அதுதான் ஆச்சரியம். போன வாரம் கூட உத்தர பிரதேசத்தில் அப்படி ஒரு வித்தியாசமான திருமணம் நடந்துச்சு என்றான் மகேஷ்.

    அப்படி என்னடா விநோதம் என கேட்டான் கந்தன்.

    உ.பி.யில் நடந்த விநோதமான திருமணம் குறித்து மகேஷ் கூறியதன் சுருக்கம் இதுதான்:

    இந்தியா என்பது பல்வேறு கலாசாரங்களும் மொழிகளும் ஒன்றிணைந்த ஒரு நாடு. அதனால்தான் இங்கு மாநில வாரியாக உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி என அனைத்திலும் வேறுபாடு இருக்கிறது.

    இந்திய கலாசாரத்தில் திருமண விழா என்பது மிக முக்கிய விஷயமாக உள்ளது. திருமணத்தில் மாறுதல்கள் இருந்தாலும் இந்தியா முழுவதும் திருமணம் குறித்த முக்கியத்துவம் மாறுவதில்லை. வடமாநிலங்களில் உள்ள சில கிராமங்களில் விநோத திருமணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர்மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார் பிங்கி என்ற இளம்பெண்.


    உ.பி.யின் படோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிங்கி சர்மா (28). இவருக்கு திருமணம் செய்துவைக்க பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வந்துள்ளனர் அவரது பெற்றோர். பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.

    பட்டப்படிப்பை முடித்துள்ள பிங்கி சர்மா 3 மாதத்துக்கு முன் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றார். அப்போது கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தைப் பிரசாதமாக பெற்றார்.

    காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்தேன். காய்ச்சல் குணமானது எனக்கூறிய அவர், இந்த சம்பவங்கள் கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என உறுதியாக தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய பிங்கி, இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்ததார்.

    பிங்கியின் இந்த முடிவு பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்தது. அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்தனர். ஆனால் பிங்கி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, டிசம்பர் 6-ம் தேதி பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் பிங்கிக்கும் திருமணம் நடைபெற்றது.

    வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்றே கிருஷ்ணர் சிலைக்கும், பிங்கி சர்மாவுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

    திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.

    இந்தியாவில் நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சில கிராமங்களில் இதுபோன்ற விநோத திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது எனக்கூறி முடித்தான் மகேஷ்.

    ஆமாண்டா, கேட்ட எனக்கே இவ்வளவு ஆச்சரியமா இருக்குது என்றால் அதில் கலந்து கொண்டவர்கள் எப்படி இருந்திருப்பாங்க என சொன்ன கந்தன், சரி, வா சுப்ரமணி ரிசப்ஷனுக்கு போய்ட்டு வரலாம் என கிளம்பினான்.

    Next Story
    ×