என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: கோவை, மதுரை மெட்ரோவுக்கு மறுப்பு- தமிழக அரசின் தவறா?... மத்திய அரசின் திமிரா?
- கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
- குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
மெட்ரோ ரெயிலால் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிவதால் மெட்ரோ ரெயில் சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இதனை தொடர்ந்து, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த திட்ட அறிக்கையில் மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ. 10,740 கோடியிலும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
ஆனால் மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை மறுத்த மத்திய அரசு அதனை ஆய்வு செய்வதாகவும், கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது. இதனால் இவ்விவகாரம் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து, கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கிடைக்காததற்கு தி.மு.க. அரசுதான் காரணம். திட்ட அறிக்கை முறையாக தயாரிக்கப்படாததால் மத்திய அரசு நிராகரித்ததாகவும், 2026ல் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோவைக்கு மெட்ரோ நிச்சயம் கொண்டுவரப்படும் என்றும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மக்கள் நலத் திட்டங்களை அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க. முடக்கி வைப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் வானதி கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
வானதி சீனிவாசன் கூறியதுபோல் 2026-ல் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வராவிட்டால் அதற்கு கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிரந்தரமாக மத்திய அரசு அனுமதி மறுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே.






