என் மலர்
2025 - ஒரு பார்வை
- கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
- அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.
கூட்ட நெரிசல்..!
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களை வடமாநிலங்களில் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததா என்றால் அது கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
அதன்பிறகு அரசியல் வரலாற்றில் மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் இதுவரை இல்லாத மிகவும் சோகமான, கருப்பு நாளாக 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி மாறியது.
தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி மக்கள் சந்திப்பு என்ற அரசியல் பரப்புரை கூட்டங்களை நடத்தி வந்தார். அதன்படி, 27-ந்தேதி சனிக்கிழமை மதியம் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்றுவதை காண காலை முதலே மக்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

குறுகிய இடத்தில் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். மேலும் காலை முதல் தண்ணீர், உணவு ஏதுமின்றி வெயிலில் இரவு வரை காத்திருந்ததுதான் கொடுமை. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வராத விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்து மக்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசும்போதே கூட்டத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் பேசிமுடித்துவிட்டு சென்றதும் அங்கு கூடியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சம்பவ இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையே பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கூட்ட நெரிசல் குறித்து தெரிந்ததும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலில் கரூர் நகர காவல்துறையினர் விசாரணை தொடங்கிய நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. எனினும் இவ்வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணையை கண்காணிக்க உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, விசாரணையை தொடங்கி நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையின் போது இறந்தவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தார்களா, மூச்சுத் திணறி இறந்தார்களா, அல்லது அதிர்ச்சியில் இறந்தார்களா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு த.வெ.க.வினரே முழு காரணம் என்று குற்றம்சாட்டப்படும் நிலையில், த.வெ.க.வினரோ ஆளும் கட்சியின் சதிதான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்று தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வருகிறது.
எது, எப்படியோ... கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் எவராலும் மறக்கமுடியாத துயர நிகழ்வாக மாறிவிட்டது. இந்நிகழ்விற்கு பிறகு மக்கள் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.
மேலும் அரசியல் சார்ந்த கூட்டமோ, இல்லை வேறு எந்த கூட்டமாக இருந்தாலும் சரி முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் செல்வதை தவிர்ப்பது நல்லது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கடந்து அரசியல் கட்சிகள், தலைவர்கள், மக்கள் என அனைவரும் அவரவர் பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டனர். எனினும், இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அதிலிருந்து மீண்டுவர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
- ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
- "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது
கடந்த 2023 அக்டோபர் முதல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை மற்ற அரபு நாடுகள் வேடிக்கை பார்த்த நிலையில் ஈரான் அதற்கு எதிராக செயல்பட்டு வந்தது.
இந்த சூழலில்தான் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. இது மத்திய கிழக்கில் போருக்கு வித்திட்டது.
சுமார் 12 நாட்கள் நீடித்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர், மேலும் பல கட்டமைப்புகள் சேதமடைந்தன.
போர்.. ஆமாம் போர்!
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை இஸ்ரேல், தனது இருப்புக்கே நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இதனை சீர்குலைக்க இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் அது போதாது என்று முடிவெடுத்தது. எனவே ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
சரியாக ஜூன் 13 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்களையும் ராணுவ வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், டிரோன்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பல போதும்மக்களும், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் வேறெந்த நாட்டையும் விட வலுவான ராணுவ கட்டமைப்பை கொண்ட ஈரான், இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கியது.
"ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது. இதனால் போர் மூண்டது. இதில் இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா களமிறங்கியது.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசியது. மேலும் ஈரான், காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் என்ற மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.

இதற்கிடையே இஸ்ரேலும் ஈரானும் இணைந்து தன்னை குறிவைப்பதை உணர்ந்த ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி தலைமறைவானார்.
ரகசியான நிலத்தடி மறைவிடத்தில் அவர் தஞ்சமடைந்தார். தான் ஒரு வேலை மரணித்தால் தனது உச்ச தலைவர் பொறுப்புக்கு 3 பேரின் பெயர்களை அவர் முன்மொழித்ததாகவும் தகவல் உள்ளது.

இஸ்ரேல் மீது மழையாக பொழிந்த ஈரான் ஏவுகணைகளை THAAD அமைப்பு இடைமறித்த அதே வேலையில், பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா நேரடியாக போரில் குதித்தது.
நிலத்தடியில் உள்ள ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை அனுப்பி 'பங்கர் பஸ்டர்' என்ற நிலத்தடி இலக்குகளை தாக்கும் சக்திவாய்ந்த குண்டுகளைவீச செய்தார் டிரம்ப்.
இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மூன்றும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் ஈரான் இதுநாள் வரை இதை மறுத்து வருகிறது.
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் க்ரோஸி கூறியதே இதற்கு சான்று.
உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக இஸ்ரேல் அறிவித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. இதனால் இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு சீனா, ரஷியா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரம் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஆதரவளித்தன.
அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதுடன், இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, கத்தார் போன்ற நாடுகளின் சமரச முயற்சியுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் விலைகள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தன.
ஜூன் 23 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவித்தார்.

இருப்பினும், ஆரம்பத்தில் போர் நிறுத்த மீறல்கள் இருந்தன. ஜூன் 25 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. எனவே 12 நாட்கள் மோதலுக்கு பிறகு இந்த போரானது முடிவுக்கு வந்தது.
12 நாள் மோதலில் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் தோராயமாக 1,190 பேர் வரை ஈரானில் பலியாகினர். அவர்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சரிசமமாக அடங்குவர்.
ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் உயிரிழப்புகள் மிக குறைவு என்றபோதும் இஸ்ரேலில் பல உள்கட்டமைப்புகள் கடும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் அழிக்கப்பட்டது.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து வார்த்தை மோதல்கள் தொடர்ந்தன. அயத்துல்லா காமேனியை இஸ்ரேல் தாக்க தயாராக இருந்ததாவதும், அவரை அசிங்கமான மரணத்திலிருந்து தான் காப்பாற்றியதாகவும் அமெரிக்க அதிபர் அதிபர் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார்.

அதேநேரம், போர் நிறுத்தத்திற்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயத்துல்லா காமேனி, அமெரிக்காவின் செல்ல நாய் இஸ்ரேல், வேரிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் என்றும் அது ஈரானை தாக்கி பெரிய தவறுசெய்துவிட்டதாகவும் அதன் விளைவை அது அனுபவிக்கும் என்றும் எச்சரித்தார். மேலும் எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் புகட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மொத்தத்தில் மத்திய கிழக்கு தொடங்கி மூன்றாம் உலகப் போராக உருவாக வாய்ப்புகள் அதிகம் கொண்ட இந்த மோதல் முடிவடைத்திருந்தாலும், இந்த அமைதி தாற்காலிகமே என புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.
- தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி அன்று திடீரென ராஜினாமா செய்தது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

அவரது ராஜினாமா கடிதத்தில் "உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக" தான் விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவரது திடீர் முடிவு பல ஊகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு அவரது உடல்நலக்குறைவைத் தாண்டி, வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தன்கரிடம் சமர்ப்பித்தன.

இதனை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. ஊழல் ஒழிப்பு குறித்து அரசு வேறு வழியில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தன்கரின் இந்த நடவடிக்கை, அரசுடன் அவருக்கு பிளவு ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆளும் கட்சி தன்கர் மீது அவநம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரத் தயாரானதாகக் கூறப்பட்டது. இதிலிருந்து தப்பிக்கவே அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் பரவலாக பேசப்பட்டது.
ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கவில்லை. இது தன்கரை அவமதிக்கும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவருக்குத் துணை ஜனாதிபதி பதவியை அளிக்கும் திட்டம் ஆளும் கட்சிக்கு இருந்தது என்றும், அதற்காகவே தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இதற்கிடையே, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் ஆவார்.
இவருக்கு எதிராக, இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி.சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். இதில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜூலை 21 அன்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு, செப்டம்பர் 12 அன்று சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
சர்ச்சைக்கிடமாக ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது உயர் அரசியலமைப்புப் பதவியான மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
- 2025-ம் ஆண்டில் 10 விளையாட்டு வீரர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.
- அதில் ஒரு விளையாட்டு வீரர் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு இந்த ஆண்டே விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
திருமணமான பலர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற கோர்ட்டுக்கு செல்வது அதிகமாக உள்ளது. பிரபலங்கள் முதல் ஏழை எளிய மக்களும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்வது தற்போதைய காலங்களில் எளிதாக மாறிவிட்டது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டில் விவாகரத்து பெற்ற விளையாட்டு வீரர்கள் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுஸ்வேந்திர சாஹல். அவர் அவரது மனைவி தனஷ்ரீ வர்மா (Dhanashree Verma, நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர்) உடனான திருமணம் வாழ்க்கை 2020-ல் தொடங்கியது. அவர்கள் 2023 முதல் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், மார்ச் 2025-ல் விவாகரத்து உறுதிப்படுத்தப்பட்டது.

முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக். 2025 தொடக்கத்தில் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் (Aarti Ahlawat) உடனான திருமணத்தில் பிரிவு ஏற்பட்டதாக பல வதந்திகள் பரவின. அவர்கள் சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்க்கை வாழ்ந்த பிறகு, சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்ததாகவும், தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

ரியான் லோச்டே (Ryan Lochte): ஒலிம்பிக் நீச்சல் வீரர். அவரது மனைவி கெய்லா ரீட் (Kayla Reid) ஜூன் 4, 2025 அன்று விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

டைரீக் ஹில் (Tyreek Hill): NFL (அமெரிக்கன் கால்பந்து வீரர்) மியாமி டால்பின்ஸ் அணி. அவரது மனைவி கீடா (Keeta) ஏப்ரல் 2025 இல் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இது அவர்களது இரண்டாவது முறை விவாகரத்து முயற்சி.

டிராவிஸ் ஹண்டர் (Travis Hunter): NFL வீரர். அவரது மனைவி லீனா லெனீ (Leanna Lenee) ஆகஸ்ட் 2025-ல் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார், மேலும் $40 மில்லியன் இழப்பீடு கோரினார். இவர்கள் இந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மாட் கலில் (Matt Kalil): முன்னாள் NFL வீரர். அவரது மனைவி ஹேலி கலில் (Haley Kalil) நவம்பர் 2025 இல் விவாகரத்து கோரினார். அவர்களது பிரிவுக்கு அவரது உடல் அளவு தொடர்பான பிரச்சினைகள் காரணமாகக் கூறப்பட்டது.

இமான் ஷம்பெர்ட் (Iman Shumpert): முன்னாள் NBA (பாஸ்கெட்பால்) வீரர். மார்ச் 2025 இல் அவரது மனைவி டெயானா டெய்லர் (Teyana Taylor) உடனான விவாகரத்து இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

பாஸ்டியன் ஷ்வெயின்ஸ்டெய்கர் (Bastian Schweinsteiger): முன்னாள் கால்பந்து வீரர் (ஜெர்மன்). டிசம்பர் 2025-ல் அவரது மனைவி அனா இவானோவிச் (Ana Ivanovic) உடனான 9 ஆண்டு திருமணம் முடிவுக்கு வந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அனா இவானோவிச் (Ana Ivanovic): முன்னாள் டென்னிஸ் வீராங்கனை (செர்பியன், முன்னாள் உலக நம்பர் 1). மேலே குறிப்பிட்ட அதே வழக்கில், அவர் நவம்பர் 2025-ல் விவாகரத்து கோரினார்.

ஆஸ்கர் டி லா ஹோயா (Oscar De La Hoya): பாக்ஸிங் வீரர். நவம்பர் 2025-ல் அவரது மனைவி மில்லி கோரெட்ஜர் (Millie Corretjer) உடனான விவாகரத்து தீர்வு அடைந்தது. அவர்களது பிரிவு 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

- இந்தாண்டு பல நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர்.
- இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்
2025 ஆம் ஆண்டு இந்திய திரை பிரபலங்களுக்கு மகழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் இந்த வருடம் புதிய வெளிச்சம் பெற்றது.
பல நடிகர், நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர். இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த விதமும் அதற்கு ரசிகர்கள் பொழிந்த வாழ்த்து மழையும் இணையத்தை ஆக்கிரமித்தன.
அவ்வகையில் 2025-இல் குழந்தை பெற்ற இந்திய திரை பிரபலர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1. சினேகன் - கன்னிகா:
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு துவக்கத்தில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு காதல் கவிதை என நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டினார்.

2. பிரேம்ஜி:
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இந்தாண்டு இறுதியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துனர். தனது 47 வயதில் பிரேம்ஜி தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இந்தாண்டு துவக்கத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டினார்.

4. மாதம்பட்டி ரங்கராஜ்... ஜாய் கிரிசில்டா
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் அப்பா நான் தான் என்று ஒப்புக்கொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ், DNA பரிசோதனை தயார் என்று தெரிவித்துள்ளார்.

5. விக்கி கவுசல் - கத்ரீனா கைப்
பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதியில் அவர்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.

6. கியாரா அத்வானி
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் நடிப்பில் இந்தாண்டு கேம்சேஞ்சர், வார் 2 படங்கள் வெளியாகின.
கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடந்தது.
இதையடுத்து கியாரா அத்வானி தாய்மை அடைந்திருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்தாண்டு இறுதியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

7. பரினீதி சோப்ரா
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது.

8. ராஜ்குமார் ராவ்
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், 2021 ஆம் ஆண்டு பத்ரா லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு ராஜ்குமார் ராவ் - பத்ரா லேகா தம்பதிக்கு இந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதி தங்களது 4 ஆம் ஆண்டு திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
- சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்தனர்.
- அங்கு ஆராய்ச்சி பணிகள் நிறைவடைந்ததும் ஜூலை 15-ம் தேதி பூமி திரும்பினர்.
புதுடெல்லி:
வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் வேதா. அவர் பாடத்தை எளிமையாக புரியும்படி நடத்துவதால் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தின் மீது தனி மரியாதை.
அவர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அறிவியல் துறை சார்ந்த வேலைகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்போம் என அவரிடம் தெரிவித்திருந்தனர்.
அன்று முதல் வகுப்பு அறிவியல்.வேதா சார் வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சார் உள்ளே வரலாமா என பாண்டியன் கேட்டான்.
ஏண்டா லேட் என கேட்ட வேதா சார், சரி உள்ளே வந்து பாடத்தைக் கவனி என்றார்.
அன்றைய பாடத்தில் விண்வெளி பயணம் குறித்த செய்தி வெளியானதைப் பற்றி மாணவர்கள் அவரிடம் கேட்டனர்.
அப்போது விண்வெளி துறையில் இந்தியா செய்துள்ள சாதனைகள் பற்றி விரிவாகக் கூறிய வேதா சார், விண்வெளி பயணம் பற்றியும் எடுத்துரைத்தார். சமீபத்தில் லக்னோவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டதையும் விளக்கினார்.
வேதா சார் சொன்னதன் சாராம்சம் இதுதான்:

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில் சுக்லாவுடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
அவர்கள் 4 பேரும் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள்வரை தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். ஆராய்ச்சி பணிகள் நிறைவடைந்ததும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமி திரும்பினர்.
சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் பயணித்த விண்கலம் வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதன்மூலம் 41 ஆண்டுகளில் தனியார் விண்வெளிப் பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.
விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த சுக்லாவை அவரது குடும்பத்தினர் மற்றும் மத்திய மந்திரிகள், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா உள்பட பலர் வரவேற்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது சுக்லா, விண்வெளியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து விவரித்தார்.

மேலும், சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதை வரவேற்று மத்திய மந்திரிசபை தீர்மானம் நிறைவேற்றி பாராட்டு தெரிவித்தது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைப் பூர்வீகமாகக் கொண்ட சுபான்ஷு சுக்லா, இந்திய விமானப்படை அதிகாரி மற்றும் இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்ட மாணவர்கள், சார் அப்போ நாமும் வருங்காலத்தில் விண்வெளிக்கு சுற்றுப்பயணம் செய்யலாமா என ஆவலுடன் கேட்டனர்.
கண்டிப்பாக, விண்வெளி பயணம் விரைவில் சாத்தியமாகி விடும் என பதிலளித்தார் வேதா சார். அத்துடன் அவரது வகுப்பும் முடிந்தது.
மாணவர்கள் அனைவரும், டேய் இன்னும் ஒரு 10 வருஷத்துலே நாம் விண்வெளியில மீட் பண்ணுவோம்டா என அடுத்த வகுப்புக்கு தயாராகினர்.
- டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது.
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
டிட்வா புயல் (Cyclone Detwah) கடந்த நவம்பர் மாதம் (2025) இலங்கை அருகே உருவாகி, தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று, தமிழகம் உட்பட கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த புயல் ஆகும்.
ஒவ்வொரு புயலும் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டப்படுவது வழக்கம். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டது.
டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது. ஏமனுக்கு அருகில் உள்ள 'சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராகக் கூட இது இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. அரபு மொழியில் டிட்வா என்பதற்கு 'அழகான மலர்' என்றும் கூறப்படுகிறது.
டிட்வா புயல் இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தியது.

இலங்கையில் கடந்த நவம்பர் 16-ந்தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 638 பேர் பலியாகி விட்டனர். 190-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார் 700 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்தியா மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது.

டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு ரூ.316 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவற்றால் பெய்து வருகிறது.

இலங்கையில் 'டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந்தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.
'டிட்வா' புயல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நாகையில் வீடுகளில் புகுந்த மழை வெள்ளம்
சில மாவட்டங்களில் கனமழை, வேறு சில மாவட்டங்களில் அதிகனமழை என கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.
டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின. தோட்டக்கலை பயிர்களும் கடும் சேதத்துக்கு உள்ளாகின.

டிட்வா புயல் காரணமாக நவம்பர் இறுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உட்பட) கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
'டிட்வா' புயல் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழையை கொடுத்தாலும், வடமாவட்டங்கள், உள்மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் இயல்பு அளவான 17.7 செ.மீ.-ல், 14.9 செ.மீ. மழைதான் பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு ஆகும். இது நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 3-வது மோசமான மழைப்பதிவாக ஆகிவிட்டது.
இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு 12.5 செ.மீ., 2024-ம் ஆண்டு 14 செ.மீ. பெய்தது இதற்கு முன்பு மோசமான மழைப்பொழிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களை சேர்த்து பார்க்கும்போது, இயல்பான மழை அளவான 35.3 செ.மீ.-ஐ விட 8 சதவீதம் அதிகமாக அதாவது, 38.3 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
சென்னையிலும் நவம்பரில் மோசமான மழைப்பதிவு இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டு புள்ளி விவரங்களுடன் பார்க்கையில், இது 5-வது மோசமான மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.
- இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் நடைபெறும் மோசமான செயல்.
- வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.
வரதட்சணை கொடுமை!
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது, அல்லது காட்சிகள் மாறினாலும் காலங்கள் மாறாது என்ற வாக்கியத்திற்கு ஏற்ப வரதட்சணை கொடுமை என்பது பல நூற்றாண்டு காலமாக தொடரும் கதை.
ஆசை ஆசையாக வளர்க்கும் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் தருணத்தில் பிள்ளை வீட்டார் வாய்க்கு வந்தபடி கேட்டு பெறுவதே வரதட்சணை என்பார்கள். வசதிக்கு ஏற்ப நகை, பணம், வாகனம் என கொடுத்து அனுப்பினாலும் வாழ சென்ற வீட்டில் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே பெரும்பாலானோரின் பதில்.
கேட்ட வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் ராணி மாதிரி வாழவைப்பேன் என்று சொல்லி அழைத்துச் செல்லும் பெண்களை மோசமான வகையில் நடத்தும் செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன. இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் நடைபெறும் மோசமான செயல். இதனால் பாதிக்கப்படுவதே ஆயிரம் கனவுகளுடன் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள், அவர்களின் பெற்றோர் என்பதே நிதர்சனமான உண்மை.

அப்படிப்பட்ட வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்தாண்டு பலரின் மனதில் பாதிக்கப்பட்டது ரிதன்யாவின் மரணம் தான். அது என்ன ரிதன்யாவின் மரணத்தை சொல்றோம் என நினைக்க வேண்டாம். நினைத்ததை பெற விரும்பும் பிள்ளை வீட்டார், திருமணம் ஆகி சில மாதங்கள் வரை பெண்ணை சந்தோஷமாக வைத்திருப்பார்கள். ஆனால் ரிதன்யாவோ திருமணம் ஆன 77 நாட்களில் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தான் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரிதன்யா எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

கோவிலுக்கு செல்வதாக திருமணத்தின் போது தனக்கு கொடுத்த காரை எடுத்துக்கொண்டு சென்ற ரிதன்யா பாதி வழியிலேயே காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் திருமணமான 77 நாட்களுக்குள், வரதட்சணை கேட்டு கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் துன்புறுத்தியதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் மேசேஜ் மூலம் அனுப்பியுள்ளார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்வழக்கு தொடர்பாக கணவர், மாமனார் கைதான நிலையில், மாமியாரை போலீசார் கைது செய்வதற்கு தாமதம் செய்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தற்போது மூவரும் நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், ரிதன்யாவின் தந்தை, அரசியல் தலைவர்களைச் சந்தித்து முறையிட்டார்.
எது, எப்படியோ வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அடுத்து ரிதன்யா போல் மற்றொரு பெண் வரதட்சணை கொடுமையால் மரணிக்கும் முன்பு நீதிமன்றங்கள் இதற்கு சரியான கடிவாளம் போட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- கோவா மாநில முன்னாள் முதல்வரான ரவி நாயக் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.
- காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா மரணமடைந்தார்.
இந்தியாவில் 2025ம் ஆண்டில் மரணமடைந்த முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
* மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் கடந்த மே மாதம் 10ம் தேதி அன்று மரணமடைந்தார்.
* கோவா மாநில முன்னாள் முதல்வரான ரவி நாயக் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.
* அதே நாளில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா மரணமடைந்தார்.
* பாஜக மூத்த தலைவரும், குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான ரவி விஜய் ரூபானி மரணமடைந்தார்.
*மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் டிசம்பர் 12 (இன்று) மரணமடைந்தார்.
இந்த ஆண்டில் மரணமடைந்த இந்த 5 முக்கிய தலைவர்கள் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்..
கிரிஜா வியாஸ்:
கிரிஜா வியாஸ் இந்திய அரசியலில், குறிப்பாகப் பெண்கள் அதிகாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றியவர். அவர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும் கூட.
1946ம் ஆண்டில் ராஜஸ்தானில் பிறந்த இவர் 1991 முதல் 1993 வரை பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைத் துணை அமைச்சராக இருந்தார்.

ஜூன் 2013 முதல் மே 2014 வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சராக பதவி வகித்தார்.
முன்னதாக, 2005 முதல் 2011 வரை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இரண்டு முறை இந்தப் பொறுப்பை வகித்துள்ளார். பெண்கள் உரிமைகளுக்கான கொள்கை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
கிரிஜா வியாஸ் அவர்கள் மே 1, 2025 அன்று, தனது ஜெய்ப்பூர் இல்லத்தில் பூஜையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்து, சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
ரவி நாயக்
கோவா மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமானவர் ரவி எஸ். நாயக். 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி முதல் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை அவர் கோவா மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினார். ரவி நாயக் அவர்கள் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் பலமுறை கோவாவின் துணை முதலமைச்சராகப் (Deputy Chief Minister) பணியாற்றியுள்ளார். கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் (Speaker) இருந்துள்ளார்.

கோவாவின் போண்டா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்தாலும், அரசியல் சூழல் காரணமாகக் கட்சி மாறுதல்களையும் சந்தித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ரவி எஸ். நாயக் அவர்கள் அக்டோபர் 29, 2025 அன்று தனது 79வது வயதில் காலமானார்.
யோகேந்திர மக்வானா
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யோகேந்திர மக்வானா, நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் பல்வேறு முக்கிய மத்திய அமைச்சகங்களில் பணியாற்றி உள்ளார்.
1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் இவர் நிதித் துறை, உள்துறை, வேளாண்மைத் துறை, சுகாதாரத் துறைகளில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இருந்து பலமுறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீண்ட காலம் மத்திய அரசில் பணியாற்றி, முக்கியக் கொள்கை முடிவுகளில் பங்களித்துள்ளார்.சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் உரிமை மற்றும் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா அவர்கள் அக்டோபர் 29, 2025 அன்று, தனது 92வது வயதில் காலமானார்.
விஜய் ரூபானி
பாஜக மூத்த தலைவரும், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆனவர் விஜய் ரூபானி. ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத் முதலமைச்சராக இருந்தார். குஜராத் பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.2014 முதல் 2016 வரை குஜராத் மாநில அரசில் போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் ராஜ்கோட் மாநகராட்சியின் மேயராகவும் (Mayor) நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்கள் ஜூன் 27, 2025 அன்று, தனது 68வது வயதில் அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சிவராஜ் பாட்டீல்
முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் விஷ்வநாத் பாட்டீல், தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் ஆவார்.தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகர். 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார்.

மும்பையில் நவம்பர் 26, 2008 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அவர் தார்மீகப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவைகளில் இவர், பாதுகாப்பு, மக்களவை சபாநாயகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
2010 முதல் 2015 வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் மற்றும் சண்டிகரின் நிர்வாகியாகவும் பணியாற்றினார். சிவராஜ் பாட்டீல் தனது 90-வது வயதில் டிசம்பர் 12, 2025 (இன்று ) அன்று காலமானார்.
- தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- இந்தப் பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.
புதுடெல்லி:
காய்கறி வாங்க மார்க்கெட் சென்று கொண்டிருந்தாள் சுமதி. அப்போது எதிரில் வந்த தோழி ரமாவைப் பார்த்தாள். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, யார் இந்த சார் என கேள்விப்பட்டிருக்கேன். இது என்னடி வேற SIR -புதிதாக இருக்கிறதே என ரமாவிடம் ஆச்சரியமாகக் கேட்டாள் சுமதி.
அதுவா ஒண்ணுமில்ல. தேர்தலுக்கான முதல் கட்ட பணி தான் இது. இதனால் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நிறைய போலி வாக்காளர்களை நீக்க முடியும் எனறாள் ரமா.
ஆனா பல அரசியல் கட்சிகள் இதுக்கு ஏன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களே ஏன்? என்றாள் சுமதி.
இவ்வளவு நாள் தங்களது வாக்கு வங்கியை மெயிண்டெய்ன் பண்ணினவங்களுக்கு இந்த நடவடிக்கையினால அது
குறைஞ்சுடுமோ என்ற பயம்தான் காரணம் என்றாள் ரமா.
ஓ அதுதான் காரணமா? SIR அப்படின்னா என்ன, அதுபத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றாள் சுமதி.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ரமா சொன்னதன் சுருக்கம் இதுதான்:
வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமை, ஒரு குடும்பம் இடம் பெயர்ந்தும் பழைய முகவரி நீங்காமை, ஒரே நபருக்கு இரட்டை பதிவுகள் இருப்பது போன்ற பொதுவான பிழைகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தன.
இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சாதாரண பட்டியல் புதுப்பிப்பால் சரிசெய்ய முடியாத பல பிரச்சனைகள் இருப்பதால், இந்த ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை பெரும் அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பொருத்தமாக உள்ளனவா, இடம் மாற்றியவர்கள் மாற்றமடைந்து உள்ளனரா, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனவா, ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இடம் பெறுகிறதா போன்ற தவறுகளை சரிசெய்வதே இந்தப் பணிகளின் முக்கிய நோக்கமாகும்.

அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல்களை முன்னிட்டு, துல்லியமான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படுவது மிகவும் அவசியமான சூழ்நிலையாக மாறியுள்ளது.
முதலில் பீகாரில் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் அதன்பின் தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
வரைவுப் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது. அதன்பின் ஜனவரி 15 வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் சமர்ப்பிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.

சிறப்பு தீவிர திருத்த பணிகள் பணிச்சுமையை அதிகரித்துள்ளது எனக்கூறி பல ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டது பேசுபொருளானது என கூறினாள் ரமா.
ஓகே நானும் SIR விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துட்டேன், நன்றி என கூறியபடி மார்க்கெட் சென்றாள் சுமதி.
- உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
2025-ஆம் ஆண்டு உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படுகொலைகளால் நிரம்பி உள்ளது.
சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவிய இந்தக் கொலைகள் குறித்த செய்திகள், உலகில் அரசியல் வன்முறையின் ஒரு புதிய, ஆபத்தான சகாப்தத்தை உணர்த்துகின்றன. அவ்வாறாக இந்தாண்டு நடந்த 5 அரசியல் படுகொலைகளை இங்கு காண்போம்.
அமெரிக்கா:
குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்காவில் நிகழ்ந்த இரு முக்கிய கொலைகள், நாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்த சித்தாந்தப் பிளவை அம்பலப்படுத்தின.
சார்லி கிர்க் கொலை: செப்டம்பர் மாதம், டிரம்ப் உடைய தீவிர ஆதரவாளரான பிரபல பழமைவாத அரசியல் ஆர்வலரும் 'டேர்னிங் பாயின்ட் USA' அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

31 வயதே ஆன இவரது மரணம், வலதுசாரி மற்றும் இடதுசாரி சித்தாந்தங்களுக்கிடையில் வளர்ந்து வரும் வெறுப்பைக் குறிக்கும் ஒரு அரசியல் நிகழ்வாக மாறியது.
மெலிசா ஹார்ட்மேன் படுகொலை: மினசோட்டா மாநிலத்தின் ஹவுஸ் சபாநாயகர் எமரிடா மெலிசா ஹார்ட்மேன், ஜூன் மாதம் தனது கணவருடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜனநாயக கட்சி வட்டாரங்களில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த இவரது மரணம், உள்ளூர் அரசியலை உலுக்கியதுடன், அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக் குறித்து தேசிய அளவில் விவாதத்தை எழுப்பியது.
கொலம்பியா:
கொலம்பியா நாட்டில், 2026 அதிபர் தேர்தல் வேட்பாளரும் செனட்டருமான மிகைல் உரைபே டர்பே-இன் மரணம் வளர்ந்து வரும் வன்முறை அரசியலின் மற்றொரு சான்று.

ஜூன் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சுடப்பட்ட மிகைல், ஆகஸ்ட் மாதத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, கொலம்பியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் களத்தையே அடியோடு மாற்றி அமைத்தது.
ஈரான்:
ஜனவரி மாதம், ஈரானின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அலி ரஸினி மற்றும் முகமது மோகிசே ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வந்த இவர்களின் படுகொலை அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
உக்ரைன்:
உக்ரைனிய பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபிய், ஆகஸ்ட் மாதம் லிவிவ் நகரில் கூரியர் வேடமிட்ட ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏற்கனவே ரஷியாவுடன் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இந்த அரசியல் கொலை மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

2025-இல் நிகழ்ந்த இந்த ஆறு படுகொலைகளும் சில நாடுகளின் சம்பவங்கள் என்ற எல்லைகளைத் தாண்டி, சித்தாந்தங்களுக்கிடையே வளர்த்து வரும் வெறுப்பு மற்றும் மோதலை எடுத்துக் காட்டுகிறது.
இவை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு தீவிர எச்சரிக்கை மணியை ஒலிப்பதாக அமைந்துள்ளது.
- நீரஜ் சோப்ரா டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை திருமணம் செய்து கொண்டார்.
- ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் 2-வது திருமணம் நவம்பர் மாதம் நடந்தது.
2025-ம் ஆண்டில், உலகம் முழுவதும் பல விளையாட்டு வீரர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதில், பல திருமணங்கள் தனிப்பட்டவை அல்லது பொது அறிவுக்கு வராதவை. ஆனால் பிரபலமான மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், 23 விளையாட்டு வீரர்கள் (அல்லது வீராங்கனைகள்) திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை திருமணங்களில் இருவரும் விளையாட்டு வீரர்களாக இருந்தால் இருவரையும் தனித்தனியாக குறிக்கும்.
அமெரிக்க கால்பந்து (NFL) வீரர்கள்: ஜோஷ் ஆலன் (பஃபலோ பில்ஸ் குவார்ட்டர்பேக்): நடிகை ஹெய்லி ஸ்டெயின்ஃபெல்ட்டை மே 31, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

ஜாலென் ஹர்ட்ஸ் (பிலடெல்பியா ஈகிள்ஸ் குவார்ட்டர்பேக்): பிரயோனா "பிரை" பர்ரோஸை (மார்ச்/ஏப்ரல் 2025) திருமணம் செய்து கொண்டார்.

டிராவிஸ் ஹன்டர் (NFL வீரர்): லீனா லெனீயை மே 24, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

ஐயன் தாமஸ் (லாஸ் வேகாஸ் ரெய்டர்ஸ் வீரர்): அசாரியா அல்காரினை மே 25, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

லியோனார்ட் வில்லியம்ஸ் (சீஹாக்ஸ் டிபென்சிவ் எண்ட்): ஹெய்லி லூயிஸ் வில்லியம்ஸை 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

கால்பந்து (சாக்கர்) வீரர்கள்:பெதானி இங்கிலாந்து (இங்கிலாந்து & டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஸ்ட்ரைக்கர்): ஸ்டெஃப் வில்லியம்ஸை (முன்னாள் வேல்ஸ் மிட்பீல்டர்) ஜூன் 7, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.
எல்லி கார்பென்டர் (ஆஸ்திரேலியா & லியோன் வீரர்): டேனியல் வான் டி டாங்கை (நெதர்லாந்து & லியோன் வீரர்) ஜூன் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.
கத்ரினா கோரி (ஆஸ்திரேலியா வீரர்): கிளாரா மார்க்ஸ்டெட் (ஸ்வீடன் வீரர்) ஜூன் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.
அல்பா ரெடோண்டோ (ஸ்பெயின் & ரியல் மாட்ரிட் ஃபார்வர்ட்): கிறிஸ்டினா மோன்லியோனை 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்திய விளையாட்டு வீரர்கள்:
நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், ஒலிம்பிக் பதக்க வென்றவர்): டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை ஜனவரி 19, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார். இது இமாச்சல பிரதேசத்தில் தனிப்பட்ட விழாவாக நடைபெற்றது.

ஹிமானி மோர் (டென்னிஸ் வீராங்கனை): நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொண்டார்.
லலித் யாதவ், இந்திய கிரிக்கெட் வீரர் (ஐபிஎல்-இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்), பிப்ரவரி 9, 2025-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.

பிற விளையாட்டுகள்:
ஹாரி சார்லஸ் (ஈக்வெஸ்ட்ரியன்/குதிரை ஓட்டம்): ஈவ் ஜாப்ஸை ஜூலை 26, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.
டியா பிளான்கோ (சர்ஃபிங் வீராங்கனை): ப்ரோடி ஜென்னரை ஜூலை 12, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.
பென் கிரிஃபின் (கோல்ஃப், PGA டூர் வீரர்): டானா மயெராஃபை டிசம்பர் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.
லோகன் பால் (பாக்ஸிங்/ரெஸ்லிங் வீரர்): நினா அக்டாலை ஆகஸ்ட் 15, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் 2-வது திருமணம் நவம்பர் 2025-இல் இன்ஸ்டாகிராம் தான் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். முதல் திருமணத்திற்கு 10 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றது.






