என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: உலகையே தனது பெயரை உச்சரிக்க வைத்த இந்தியர்: யார் இந்த சுபான்ஷு சுக்லா
- சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்தனர்.
- அங்கு ஆராய்ச்சி பணிகள் நிறைவடைந்ததும் ஜூலை 15-ம் தேதி பூமி திரும்பினர்.
புதுடெல்லி:
வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் வேதா. அவர் பாடத்தை எளிமையாக புரியும்படி நடத்துவதால் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தின் மீது தனி மரியாதை.
அவர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அறிவியல் துறை சார்ந்த வேலைகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்போம் என அவரிடம் தெரிவித்திருந்தனர்.
அன்று முதல் வகுப்பு அறிவியல்.வேதா சார் வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சார் உள்ளே வரலாமா என பாண்டியன் கேட்டான்.
ஏண்டா லேட் என கேட்ட வேதா சார், சரி உள்ளே வந்து பாடத்தைக் கவனி என்றார்.
அன்றைய பாடத்தில் விண்வெளி பயணம் குறித்த செய்தி வெளியானதைப் பற்றி மாணவர்கள் அவரிடம் கேட்டனர்.
அப்போது விண்வெளி துறையில் இந்தியா செய்துள்ள சாதனைகள் பற்றி விரிவாகக் கூறிய வேதா சார், விண்வெளி பயணம் பற்றியும் எடுத்துரைத்தார். சமீபத்தில் லக்னோவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டதையும் விளக்கினார்.
வேதா சார் சொன்னதன் சாராம்சம் இதுதான்:
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில் சுக்லாவுடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
அவர்கள் 4 பேரும் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள்வரை தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். ஆராய்ச்சி பணிகள் நிறைவடைந்ததும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமி திரும்பினர்.
சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் பயணித்த விண்கலம் வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதன்மூலம் 41 ஆண்டுகளில் தனியார் விண்வெளிப் பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.
விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த சுக்லாவை அவரது குடும்பத்தினர் மற்றும் மத்திய மந்திரிகள், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா உள்பட பலர் வரவேற்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது சுக்லா, விண்வெளியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து விவரித்தார்.
மேலும், சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதை வரவேற்று மத்திய மந்திரிசபை தீர்மானம் நிறைவேற்றி பாராட்டு தெரிவித்தது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைப் பூர்வீகமாகக் கொண்ட சுபான்ஷு சுக்லா, இந்திய விமானப்படை அதிகாரி மற்றும் இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்ட மாணவர்கள், சார் அப்போ நாமும் வருங்காலத்தில் விண்வெளிக்கு சுற்றுப்பயணம் செய்யலாமா என ஆவலுடன் கேட்டனர்.
கண்டிப்பாக, விண்வெளி பயணம் விரைவில் சாத்தியமாகி விடும் என பதிலளித்தார் வேதா சார். அத்துடன் அவரது வகுப்பும் முடிந்தது.
மாணவர்கள் அனைவரும், டேய் இன்னும் ஒரு 10 வருஷத்துலே நாம் விண்வெளியில மீட் பண்ணுவோம்டா என அடுத்த வகுப்புக்கு தயாராகினர்.






