என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: துணை ஜனாதிபதி திடீர் ராஜினாமா..! சர்ச்சையும்- பதவியேற்பும்- டெல்லியை புரட்டிய  தன்கர் புயல்
    X

    2025 REWIND: துணை ஜனாதிபதி திடீர் ராஜினாமா..! சர்ச்சையும்- பதவியேற்பும்- 'டெல்லி'யை புரட்டிய 'தன்கர்' புயல்

    • ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.
    • தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.

    இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி அன்று திடீரென ராஜினாமா செய்தது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

    அவரது ராஜினாமா கடிதத்தில் "உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக" தான் விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவரது திடீர் முடிவு பல ஊகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது.

    ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு அவரது உடல்நலக்குறைவைத் தாண்டி, வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசப்பட்டது.

    அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தன்கரிடம் சமர்ப்பித்தன.

    இதனை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. ஊழல் ஒழிப்பு குறித்து அரசு வேறு வழியில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தன்கரின் இந்த நடவடிக்கை, அரசுடன் அவருக்கு பிளவு ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

    இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆளும் கட்சி தன்கர் மீது அவநம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரத் தயாரானதாகக் கூறப்பட்டது. இதிலிருந்து தப்பிக்கவே அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் பரவலாக பேசப்பட்டது.

    ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கவில்லை. இது தன்கரை அவமதிக்கும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவருக்குத் துணை ஜனாதிபதி பதவியை அளிக்கும் திட்டம் ஆளும் கட்சிக்கு இருந்தது என்றும், அதற்காகவே தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.

    இதற்கிடையே, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:

    தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் ஆவார்.

    இவருக்கு எதிராக, இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி.சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். இதில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஜூலை 21 அன்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு, செப்டம்பர் 12 அன்று சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.

    சர்ச்சைக்கிடமாக ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

    சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது உயர் அரசியலமைப்புப் பதவியான மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

    Next Story
    ×