என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: ராகுல் காந்தி வைத்த ஹைட்ரஜன் குண்டு- வாக்குத் திருட்டு குற்றச்சாட்டால் அதிர்ந்த அரசியல் களம்
    X

    2025 REWIND: ராகுல் காந்தி வைத்த 'ஹைட்ரஜன் குண்டு'- வாக்குத் திருட்டு குற்றச்சாட்டால் அதிர்ந்த அரசியல் களம்

    • 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
    • புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.

    இந்தியாவில் பல்வேறு மாநிங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பகிரங்கமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.

    கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து ராகுல் காந்தி அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஆதாரங்களை வெளியிட்டார்.

    அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

    அதன்படி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை கடந்த நவம்பர் 5ம் தேதி அன்று ராகுல் காந்தி ஒவ்வொன்றாக வெளியிட்டார். இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை.

    நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன்.

    ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார்.

    5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

    பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார், பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்.

    பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள், உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.

    மேலும் அவர், அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார் அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.

    நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக gen z தலைமுறையினர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்.

    பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் இந்த பெண்மணி ஹரியானாவின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளை செலுத்தி இருக்கிறார்.

    பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்தப் பெண்மணி நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அதனால்தான் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளிவிடாமல் தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது.

    இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதுகளின் வெவ்வேறு அடையாள அட்டைகளை வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக ராகுல் காந்தி வெளியிட்டார்.

    ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது . இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.

    ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர்.

    ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.

    ஹரியானாவை தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

    மேலும் அவர், "பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

    ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.

    இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.

    வாக்கு திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.ஐ.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.

    பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.

    பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.

    பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று ராகுல் காந்தி கூறினார்.

    Next Story
    ×