என் மலர்tooltip icon

    இந்தியா

    • பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நவம்பர் மாதம் நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தொடங்கி உள்ளது. அக்டோபர் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

    இதையடுத்து பீகார் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்திக்கும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    அதுபோல காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதாதளம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலில் களம் இறங்க உள்ளது.

    பீகாரில் ஆட்சியை கைப்பற்ற இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளை தொடங்கி உள்ள நிலையில் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின்படி பீகார் மாநில பெண்களுக்கு சுயதொழில் செய்து வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.

    இந்த புதிய திட்டத்தின்படி பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு 75 லட்சம் பெண்களும் தாங்கள் விரும்பும் சுயதொழிலை தொடங்கிக் கொள்ளலாம். குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த திட்டத்தின் நிதி உதவி வழங்கப்படுகிறது.

    பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.10 ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த பணத்தை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    சுய தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்கள் அந்த 10 ஆயிரம் ரூபாயை தங்களது பிற வாழ்வாதார செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பீகார் மாநில பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சந்தை வழிகாட்டும் உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.

    இந்த தொழிலில் திறம்பட செயல்படும் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் அடுத்தக்கட்டமாக தொழிலை மேம்படுத்த ரூ.2 லட்சம் வரை மானிய உதவி வழங்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    75 லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்த திட்டத்துக்கு 7,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பீகார் மாநில பெண்களிடம் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனைத்து சமுதாய பெண்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த நிதி உதவி செய்யப்படும். இந்த நிதி உதவியை பெறும் பெண்கள் மகளிர் சுயஉதவி குழுவுடன் இணைந்து செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    • 2004-2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் செயல்பட்டார்.
    • வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவரது வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை நம்மை தொடர்ந்து வழிநடத்தும்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் நாட்டின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் இன்று தனது 93வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    1931 செப்டம்பர் 26 பஞ்சாபில் சீக்கிய குடும்பத்தில் பிறந்த மன்மோகன் சிங் 1982-85 காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றினார். பின் காங்கிரஸ் அரசில் 1991-96 காலகட்டத்தில் இந்தியாவின் நிதியமைச்சாராக பணியாற்றினார்.

    இந்த காலத்தில் அவரின் தலைமையில் நாட்டில் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. இதன் பின் 2004-2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் செயல்பட்டார்.

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, உள்ளிட்ட முக்கிய மற்றும் பொருளாதார சீர்திருந்தங்கள் அவரின் ஆட்சிக் காலத்தின் சிறப்புகளாக வரையறுக்கப்படுகிறது.

    இந்நிலையில் அவரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு தற்போதைய பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் நாட்டுக்கு அவர் செய்த பங்களிப்பை நாம் நினைவு கூறுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

    தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான அவரது துணிச்சலான முடிவுகள், வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவரது வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை நம்மை தொடர்ந்து வழிநடத்தும்.

    அவரது எளிமை, பணிவு மற்றும் நேர்மை ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.  

    • வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
    • நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், கட்டாயம் மறு சரிபார்ப்புக்கு அனுப்ப வேண்டும்.

    புதுடெல்லி:

    பீகார் மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை இந்திய தேர்தல் கமிஷன் நடத்தி முடித்துள்ளது. இதன் மூலம் சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்

    தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக நீக்கப்படுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க மோசடியை தடுக்க புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    அதாவது வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஆனால் அதன் முடிவுகள், மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, அனைத்து சுற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    தற்போதைய மாற்றத்தின்படி, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.

    அதாவது 20 சுற்று எண்ணிக்கை என்றால், 18-வது சுற்று எண்ணிக்கை முடிந்த பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் பிறகு கடைசி 2 சுற்று வாக்குகள் எண்ணப்படும். அதே நேரம் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், கட்டாயம் மறு சரிபார்ப்புக்கு அனுப்ப வேண்டும்.

    இது தொடர்பாக மாநில தேர்தல் கமிஷனர்களுக்கு, தேர்தல் கமிஷன் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

    முன்பு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், வீட்டில் இருந்தே வாக்களிக்க வசதியாக அவர்களுக்கும் தபால் வாக்குகள் கொடுக்கப்பட்டுள்ளதால், தபால் வாக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. அதன் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய முறை வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் செயல்முறையை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் கடந்த 6 மாதங்களில் 29 முக்கியமான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது என்றனர்.

    • ஊரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
    • பிள்ளைகளின் மனம் மாறும் வரை இந்த நூதன தண்டனை அளிப்பார்கள்.

    பரபரப்பான தற்போதைய காலகட்டத்தில் வயதான பெற்றோரை பெரும்பாலான பிள்ளைகள் கவனிப்பதில்லை. அவர்களது சொத்துகளை மட்டும் எழுதி வாங்கிவிட்டு அவர்களை வீதிக்கு அடித்து விரட்டும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நூதன முறையில் தண்டனை வழங்க வந்திருக்கிறது தாத்தாக்கள் சங்கம்.

    தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் மோதே கிராமத்தில்தான் இந்த தாத்தாக்கள் சங்கம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிள்ளைகள் யாராவது வயதான பெற்றோரை கவனிக்காமலோ துன்புறுத்துவதாகவோ தகவல் தெரிந்தால் இவர்கள் தண்டிக்கும் விதம் புதுமையாக இருக்கும்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தை சேர்ந்த பல பெற்றோரின் சொத்துகளை பறித்துக்கொண்டு பல பிள்ளைகள் அவர்களை விரட்டி விட்டனர். இதனை தடுப்பதற்காகவே தாத்தாக்கள் சங்கம் உருவாக்கப்பட்டது.

    கடந்த 2010-ம் அப்போதைய அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கட்டம் ராஜி ரெட்டி ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து இந்த சங்கத்தை ஏற்பாடு செய்தார். அது மட்டுமின்றி இந்த சங்கத்தை பதிவு செய்தும் வைத்திருக்கிறார். இதில் ஊரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

    இந்த ஊரில் பெற்றோரை அவரது மகன் அல்லது மகள் சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் தாத்தாக்கள் சங்கம் வெளியே சென்று புகார் செய்ய வாய்ப்பு அளிக்காது. அதே சமயம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்காது. உடனடியாக அந்த மகன் அல்லது மகளை தாத்தாக்கள் சங்க உறுப்பினர்கள் அழைத்து எடுத்து சொல்கிறார்கள். அப்போதும் கேட்காவிட்டால் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

    அதற்கு மேலும் முரண்டுபிடித்தால் 40 உறுப்பினர்களும், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டின் முன்பு வைத்து சமைத்து, பாதிக்கப்பட்ட வயதான பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள்.

    பிள்ளைகளின் மனம் மாறும் வரை இந்த நூதன தண்டனை அளிப்பார்கள். வீட்டு முன்னேயே சென்று 40 பேரும் சமைத்து அவர்களும் சாப்பிட்டு பராமரிக்காத பெற்றோருக்கும் சாப்பாடு வழங்குகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் மனம் மாறும்வரை அவர்கள் வீட்டின்முன் சமைத்து பெற்றோருக்கு கொடுத்து தங்கள் எதிர்ப்பை இந்த விதமாக தெரிவிக்கிறார்கள்.

    இத்துடன் பிள்ளைகள் தாத்தாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனி தங்கள் பெற்றோரை நல்லபடியாக பார்த்துக்கொள்வதாக உறுதி பத்திரம் எழுதி தருகிறார்கள்.

    • இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது.
    • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க முடியாது.

    புதுடெல்லி:

    காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் கொடூர தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி அழைப்பு விடுத்து உள்ளார். இதுதொடர்பாக, நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

    பாலஸ்தீன பிரச்சினையில் மோடி அரசின் பதிலும், ஆழ்ந்த அமைதியும் மனிதாபிமானம் மற்றும் தார்மீகத்தைக் கைவிடுவதாக உள்ளது.

    இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்பீடுகள் அல்லது அதன் மூலோபாய நலன்களை விட, பிரதமர் மோடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் இடையேயான தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் முதன்மையாக இயக்கப்படுவதாகத் தெரிகிறது.

    இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது. மேலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க முடியாது.

    உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக அமெரிக்காவில் இதைச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் சமீபத்திய மாதங்களில் மிகவும் வேதனையான மற்றும் அவமானகரமான வழிகளில் தோல்வி அடைந்துள்ளன.

    உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தனி நபரின் புகழ் பாடும் வகையிலோ, வரலாற்று பெருமைகளில் ஓய்வெடுக்கவோ முடியாது.

    அது தொடர்ச்சியான தைரியத்தையும் வரலாற்று தொடர்ச்சியின் உணர்வையும் கோருகிறது. இந்தியாவின் மவுனமான குரல், பாலஸ்தீனத்துடனான அதன் பற்றின்மையைக் காட்டுகிறது.

    பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இணைந்து விட்டது. நீண்ட காலமாகப் போராடி வரும் பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முதல் படியாக இது உள்ளது.

    193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 150-க்கு மேற்பட்ட நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

    பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு பல ஆண்டாக ஆதரவளித்து வந்த இந்தியா, 1988 நவம்பர் 18-ம் தேதி பாலஸ்தீனத்தை நாடாக முறையாக அங்கீகரித்து, இந்த விஷயத்தில் ஒரு தலைவராக இருந்தது.

    இந்தியா நீண்ட காலமாக ஒரு நுட்பமான அதேநேரம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அமைதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

    நீதி, அடையாளம், கண்ணியம், மனித உரிமைகளுக்காக பாலஸ்தீன மக்கள் போராடி வரும் நிலையில் பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • பெங்களூரு வெளிப்புற ரிங் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்.
    • விப்ரோ வளாக சாலையை பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கக்கோரி கடிதம்.

    பெங்களூருவின் வெளிப்புற ரிங் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஒரு சில கி.மீ. தூரத்தை கடக்க பல மணி நேரம் ஆகிறது. இதற்கு கர்நாடக அரசு ஒரு நிரந்தரமாக தீர்வை காண முடியாமல் தவித்து வருகிறது.

    விப்ரோ நிறுவனத்திற்கு சர்ஜாபூரில் வளாகம் உள்ளது. இந்த வளாகளத்தில் வாகனங்கள் சென்று வர சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கக்கோரி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாகிய ஆசிம் பிரேம்ஜி-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த நிலையில் ஆசிம் பிரேம்ஜி சித்தராமையாகவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார். நாங்கள் சர்ஜாபூரை வளாகத்தை சிறப்பு பொருளாதார மண்டலாக வைத்துள்ளோம். உலகளாவிய சேவை பணிகளுக்கான அந்த இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடுமையான அணுகுதல் கட்டுப்பாடு உள்ளது.

    பொதுப் பாதைக்காக அல்லாமல் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரத்யேக தனியார் சொத்து என்பதால், குறிப்பிடத்தக்க நிர்வாகம் மற்றும் சட்டரீதியான சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். மேலும், தனியார் சொத்துக்கள் வழியாக பொது வாகன இயக்கம் ஒரு நிலையான, நீண்டகால பயனுள்ளதாக தீர்வாக இருக்காது என பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

    • ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வீரர்களுடன் கைக்குலுக்க மறுப்பு.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடரில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுத்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

    சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என சைகை காட்டினர். இதனால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் ஐசிசி-யில் புகார் அளித்துள்ளன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் இது தொடர்பாக கூறுகையில் "அரசியல் டென்சனில் இருந்து கிரிக்கெட் ஸ்பிரிட் எப்போதும் தனித்து இருக்க வேண்டும். கார்கில் போரின்போது 1999 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது வீரர்கள் கைக்குலுக்கினர். இரு தரப்பினரிடமிருந்தும் பழிவாங்கும் சைகைகள் விளையாட்டு மனப்பான்மையின்மையை வெளிப்படுத்துகிறது" என்றார்.

    • போதை மறுவாழ் மையத்தில் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டதால் கடுங்கோபம் அடைந்துள்ளார்.
    • கொஞ்சம் காய்கறி, சப்பாத்தி, பிஸ்கட் போன்றவைகளை மட்டுமே வழங்கியுள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 35 வயதான சச்சின் என்பரை உறவினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இவருக்கு குறைந்த அளவு உணவே வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஒருநாள் முழுவதும் குறைந்த அளவு காய்கறிகள், சில சப்பாத்திகள் மட்டுமே வழங்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்து உறவினர்கள் உணவு கொண்டு வந்தால், கண்ணில் காட்டமாட்டார்களாம். சில நேரங்களில் ஒரேயோரு பிஸ்கட் மட்டுமே வழங்குவார்களாம்.

    இதனால் கோபம் அடைந்த சச்சின் ஸ்பூன், டூத் பிரஷ், பேனா போன்றவற்றை கழிவறைக்கு எடுத்துச் சென்று, அங்குவைத்து இரண்டு மூன்ற தூண்டுகளாக உடைத்து சாப்பிட்டுள்ளார். சில நேரம் உள்ளே செல்லவில்லை என்றால், தண்ணீர் குடித்து விழுங்குவாராம்.

    இதனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு வயிறு வலியால் துடித்துள்ளா். அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை நடத்தும்போது, வயிற்றுக்குள் ஸ்டீல் ஸ்பூன், டூத்பிரஷ் போன்றவை இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

    • பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் சிஸ்டத்தை இந்தியா சஸ்பெண்ட் செய்தது.
    • இந்தியாவுக்கான நீரை வேறு வழிகளில் பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனடிப்படையில் சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்கு பகிரப்பட்டு வந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியதால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா சஸ்பெண்டு செய்துள்ளது.

    இந்த நிலையில் 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, சிந்து நதி நீர் அமைப்பில் (பல ஆறுகள் இணைந்தது) உள்ள ஆறுகளின் நீரை வடஇந்திய மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கென ஒரு திட்டத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்துள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம் மூத்த அமைச்சர்களிடையே நடைபெற்றுள்ளது. பீஸ் நதியை சிந்து நதியுடன் இணைப்பது தொடர்பான முழு திட்ட அறிக்கை (detailed project report) தயாரிக்கப்பட இருப்பது குறித்து குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பியன் நதியை 14 கி.மீ. சுரங்கம் மூலம் சிந்து நதியுடன் இணைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை தயாரிக்க எல்&டி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அடுத்த வருடத்திற்குள் தயாராகும் எனக் கூறப்படுகிறது.

    சிந்து நதி நீரை 113 கி.மீ. கால்வாய் மூலம் வடமாநிலங்களுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தண்ணீரம், ரத்தமும் ஒன்றாக பயணிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டாக தெரிவித்தது. அதில் இருந்த சிந்து நதி நீரில் இந்தியாவுக்கான பகிர்வை எப்படி பயன்படுத்தலாம் என மத்திய அரசு தொடர்ந்த யோசனை செய்து வந்தது.

    இந்த திட்டத்தில் 14 கி.மீ. தூரம் சுரங்கம் அமைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சுரங்கம் அமைக்க மலைப்பாறைகள் குறித்த முழு ஆய்வு அவசியம். பாறைகள் பலவீனமாக இருந்தால், சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. DPR அறிக்கை பெற்ற பிறகு கட்டுமான பணி தொடங்கும் எனத் தெரிகிறது.

    இந்த சுரங்கப்பாதை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள உஜ் பல்நோக்கு திட்டத்துடன் இணைக்கப்படும், இது ராவியின் துணை நதியான உஜ் நதியிலிருந்து பீஸ் படுகைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டமாகும்.

    • இந்த வகை ஏவுகணை 2,000 கி.மீ. வரை பாயக்கூடிய திறன் கொண்டது.
    • ஏவுகணைக்கு ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சர் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.

    நாட்டிலேயே முதல்முறையாக ரெயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) 2,000 கி.மீ. வரை பாயக்கூடிய இந்த வகை ஏவுகணைக்கு ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சர் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.

    'அக்னி பிரைம்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

    • உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
    • மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும்.

    இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரெயில் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இது உலகின் மிக ஆடம்பரமான ரெயில்களில் ஒன்றாகும்.

    இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு சிறப்பு ரெயிலில் பயணம் செய்தார். அவர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல இந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்கான ஜனாதிபதி அறை, டீலக்ஸ் அறைகள், உணவகங்கள், ஓய்வறைகளைக் கொண்ட பெட்டிகள் சொகுசு ரெயிலில் உள்ளன.

    இன்று காலை 8 மணிக்கு திரவுபதி முர்மு பயணம் செய்த மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரபிரதேசத்தின் பிருந்தாவன் சாலை ரெயில் நிலையத்தை காலை 10 மணிக்கு சென்றடைந்தது.

    பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீபாங்கே பிகாரி கோவில், நிதிவன்-குப்ஜ கிருஷ்ணா கோவில் ஆகியவற்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் மற்றும் பூஜை செய்தார். பின்னர் அவர் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வழிபடுகிறார். அதன்பின் மாலையில் அந்த சிறப்பு ரெயிலில் டெல்லிக்கு புறப்படுகிறார்.

    இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும். மூத்த ரெயில்வே ஊழியர்களுக்காக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக 2 என்ஜின்கள் இருக்கும். ஒரு என்ஜின் இயங்கும் அதே வேளையில், மற்றொரு என்ஜின் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய உடன் பயணிக்கும் என்றார். ஜனாதிபதியின் இந்த பயணத்தை தொடர்ந்து ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பிற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டன.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து தனது சொந்த ஊரான ராய்ரங்பூருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.
    • இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.

    பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த உத்தரபிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-யை தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மோடி பார்வையிட்டார். இக்கண்காட்சியில் ரஷியாவும் பங்கேற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    உலகளவில் பல்வேறு இடையூறுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்து வருகிறது. எந்த தடைகளும் நம்மை தடுக்கவில்லை.

    இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.

    சுயசார்பு இந்தியா திட்டத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. சிப் முதல் கப்பல் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடு சுயசார்புடையதாக மாற வேண்டும், ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும்.

    நமது ஆயுத படைகள் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகின்றன. இந்தியாவில் ஒரு துடிப்பான பாதுகாப்பு த் துறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ரஷியாவுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏ.கே-203 துப்பாக்கிகளின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும். ஒவ்வொன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற அடையாளத்தைக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறோம்.

    அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.

    2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்துள்ளோம். அத்துடன் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து, வரிகளை குறைப்பதைத் தொடர்வோம். ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களின் செயல்முறை வரும் நாட்களிலும் தொடரும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ×