search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்தன் டாடா"

    • மற்றவர்களின் கனவுகளுக்கு ரத்தன் டாடா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்றாகும்.
    • தனிப்பட்ட முறையில், பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, தனது 86-வது வயதில் கடந்த மாதம் 9-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது சிறந்த வாழ்க்கை மற்றும் அசாத்திய பணிகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கட்டுரை ஒன்றை எழுதி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ரத்தன் டாடா நம்மை விட்டுப் பிரிந்து ஒரு மாதம் ஆகிறது. அவர் நம்மிடையே இல்லாதது, பரபரப்பான பெரு நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரையிலும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் ஆழமாக உணரப்படுகிறது. நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அது எதிரொலிக்கிறது.

    இளைஞர்களுக்கு ரத்தன் டாடா ஓர் உத்வேகமாக இருந்தார். கனவுகள் தொடரத் தகுந்தவை என்பதை நினைவூட்டிய ஆளுமை. வெற்றி என்பது இரக்கம் மற்றும் பணிவுடன் இணைந்திருக்கும் என்பதை ஞாபகப்படுத்தியவர்.

    அவரது தலைமையிலான டாடா குழுமம் உலக அளவில் பிரபலம், நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை பெற்று புதிய உச்சத்தை தொட்டது. இருப்பினும், அவர் தனது சாதனைகளைப் பணிவுடனும், கருணையுடனும் எளிதாக ஏற்றுக்கொண்டார்.

    மற்றவர்களின் கனவுகளுக்கு ரத்தன் டாடா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்றாகும். அண்மை காலங்களில், இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்புக்கு வழிகாட்டியாகவும், பல நம்பிக்கைக்குரிய முயற்சிகளில் முதலீடு செய்பவராகவும் இருந்தார்.

    இளம் தொழில்முனைவோர்களின் நம்பிக்கைகளை, விருப்பங்களை அவர் புரிந்துகொண்டார். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க அவர்களிடம் இருக்கும் திறனை அங்கீகரித்தார். அவர்களின் முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம், கனவுகாணும் தலைமுறைக்கு தைரியமான முடிவுகளை எடுக்கவும், எல்லைகளை நோக்கி முன்னேறவும் அதிகாரம் அளித்தார்.

    மும்பையில் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான புகழ்பெற்ற தாஜ் ஓட்டலை விரைவாக திறந்தது, இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது, பயங்கரவாதத்திற்கு அடிபணிய மறுக்கிறது என தேசத்திற்கு அணிதிரளும் ஓர் அறைகூவலாக மாறியது.

    தனிப்பட்ட முறையில், பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நாங்கள் குஜராத்தில் நெருக்கமாக பணியாற்றினோம். அங்கு அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த பல திட்டங்கள் உள்பட விரிவான முதலீடுகளை செய்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு, ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்சுடன் நான் வதோதராவில் இருந்தேன். இந்தியாவில் சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலை வளாகத்தை நாங்கள் கூட்டாகத் தொடங்கி வைத்தோம். ரத்தன் டாடாதான் இதற்கான பணிகளைத் தொடங்கினார். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அவரது வருகை இல்லாதது பெரும் குறை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    நான் மத்திய அரசு பொறுப்புக்கு சென்ற பிறகும் எங்களுடைய நட்பு தொடர்ந்தது. நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் அவர் ஓர் உறுதியான பங்குதாரராக இருந்தார். குறிப்பாக, 'தூய்மை இந்தியா' இயக்கத்திற்கு ரத்தன் டாடா அளித்த ஆதரவு என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தூய்மை, சுகாதாரம், துப்புரவு ஆகியவை இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொண்டு, இந்த வெகுஜன இயக்கத்திற்குக் குரல் கொடுப்பவராக இருந்தார்.

    அவரது இதயத்திற்கு நெருக்கமான மற்றொரு செயல் மருத்துவம். குறிப்பாக புற்றுநோய்க்கு எதிரான போராட்டம். 2 ஆண்டுகளுக்கு முன்பு அசாமில் நடந்த நிகழ்ச்சியில், மாநிலத்தில் பல்வேறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாங்கள் இணைந்து தொடங்கி வைத்ததை நினைவுகூர்கிறேன். அந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில், தனது இறுதி ஆண்டுகளை மருத்துவத்திற்கு அர்ப்பணிக்க விரும்புவதாக திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

    உடல்நலம் மற்றும் புற்றுநோய் சிகிச்சையை எளிதில் அணுகும் வகையிலும், குறைந்த செலவுடையதாகவும் மாற்றுவதற்கான அவரது முயற்சிகள் நோய்களுடன் போராடுவோர் மீதான ஆழ்ந்த ஒத்துணர்வில் வேரூன்றியிருந்தன.

    இன்று அவரை நாம் நினைவுகூரும்போது, அவர் கற்பனை செய்த சமூகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த சமூகத்தில் வணிகம் நன்மைக்கான சக்தியாக செயல்பட முடியும்; அந்த சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரின் திறனும் மதிப்புக்குரியது; அந்த சமூகத்தில் அனைவரின் நல்வாழ்விலும் மகிழ்ச்சியும், முன்னேற்றமும் அளவிடப்படும்.

    அவர் தொட்ட வாழ்க்கையிலும், அவர் வளர்த்த கனவுகளிலும் அவர் உயிர் வாழ்கிறார். இந்தியாவை சிறந்த, கனிவான, நம்பிக்கையான இடமாக மாற்றியதற்காக தலைமுறைகள் அவருக்கு நன்றியுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
    • 'அமிதாப் எனக்கு கொஞ்சம் கடன் கொடுக்க முடியுமா? என் ரத்தன் டாடா என்னிடம் கேட்டார்.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்தியில் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அமிதாப் பச்சன் மறைந்த ரத்தன் டாடா குறித்து தனது அனுபவங்களை அந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    ரத்தன் டாடா குறித்து அந்நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் பச்சன், "ஒருமுறை நானும் ரத்தன் டாடாவும் லண்டனுக்கு விமானத்தில் ஒன்றாக பயணம் செய்தோம். ஹீத்ரோ விமான நிலையத்தில் நாங்கள் தரையிறங்கினோம். அப்போது ரத்தன் டாடாவால் அவரது உதவியாளரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது விமான நிலையத்தில் இருந்த போன் பூத்திருக்கு சென்று வெளியே வந்த டாடா என்னிடம் வந்து 'அமிதாப் எனக்கு கொஞ்சம் கடன் கொடுக்க முடியுமா? போன் செய்ய என்னிடம் பணம் இல்லை' என்று கூறினார்.

    ரத்தன் டாடாவுடன் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் டாடா என்னிடம் வந்து என்னை என்னுடைய வீட்டில் இறக்கி விட முடியுமா? நான் உங்கள் வீட்டிற்கு பின்னால் தான் வசிக்கிறேன். என்னிடம் கார் இல்லை என்று கூறினார். உங்களால் இதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இது நம்பமுடியாதது" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ. 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
    • சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு உள்ளது

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா [86] உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி காலமானார். அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவை அடுத்து டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில் ரத்தன் டாடா தனது சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்று எழுதிவைத்துள்ள உயில் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ. 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் உள்ளன.

    உயிலில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு வகை 'டிட்டோ' என்ற வளர்ப்பு நாய்க்கு தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார். மேலும் டிட்டோவை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

     

    அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். தவிர, சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு என்று உயிலில் ரத்தன் டாடா கூறியுள்ளார். அதேபோல் தன்னுடைய நண்பரான இளைஞர் சாந்தனு நாயுடுவுக்கு சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    மேலும் சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனையும் ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். மேலும் அவரது அறக்கட்டளை, சகோதரர், சகோதரிகள், வீட்டு பணியாளர்கள் மற்றும் பிறருக்கும் தனது சொத்தில் பங்களித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்கையும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

    • ஒருவரது பேச்சினை மறந்து விட வாய்ப்புகள் உண்டு.
    • இரும்பு, மின் சக்தி, துணி ஆலை, ஓட்டல் என பரந்து விரிந்தது.

    டாடா என்று சொன்னாலோ-டாடா குடும்பம் என்று சொன்னாலோ மறைந்த ரத்தன் டாடா அவர்களின் வியத்தகு சாதனைகளும், வியத்தகு தர்ம சிந்தனைகளுமே நம் மனதிற்கு வரும். இவை நம் நாடு பெற்ற நன்மைகள் ஆகும். சமூக நலன், ஏழைகள் நலன் இவற்றை மனதில் கொண்டு தலைமுறை தலை முறையாய் இறைவனிடம் தவம் இருந்து வரம் பெற்று வந்தவர்கள் போலும்.

    ஆர்வமுள்ள, சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இவர் ஒரு முன் உதாரணம். ஒளி விளக்கு எனலாம்.

    இந்த கட்டுரை 'மா மனிதர்' என்று நம்மை கூற வைக்கும் அவரது மனித நேயத்தினைப் பற்றியது ஆகும்.

    அக்டோபர் 9, 2024 அன்று மறைந்த ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

    உயர்ந்த ஆத்மா என்பது தன் விலைமதிப்பின்மையை என்றுமே வாய் பேச்சின் மூலம் காண்பிக்காமல் அதன் செயல்களின் மூலமே தெரிய வரும். அந்த ஆத்மாவின் விலை மதிப்பின்மையை பிரபஞ்சம் தானே வெளிப்படுத்தும்.

    இந்த சொற்றொடர்கள் யாரை குறிப்பிடுகின்றன என்பது அனைவருக்கும் எளிதாய் புரியும். 'ரத்தன் டாடா' அவர்களே, நீங்கள் ஒரு புனித ஆத்மா என்று என் மனதில் முணுமுணுப்பது வெளி வந்ததே உங்களைப் பற்றி மற்றவர்கள் புரிய வேண்டும். அறிய வேண்டும் என்பதால்தான். இந்த உலகமே உரத்த குரலில் எழுந்து, பேச்சு, ஒளிபரப்பு என நொடி விடாது பேசி பேசி கதறிக் கொண்டு இருக்கின்றதே. என் தவிப்பின் வடிகாலாக நானும் எழுதி உங்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன். இது என் ஆத்ம திருப்தி, அவ்வளவே, இவை நான் படித்து அறிந்த குறிப்புகள் ஆகும்.

    நான் இந்தியன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். இந்தியா என் நாடு. இந்தியர்கள் என் மக்கள் என்று சொல்லி எங்கள் முன்னேற்றத்திற்கு என்னென்னவோ செய்தீர்களே. அப்புறம் எதற்காக எங்களை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டீர்கள்? விண்ணுலகம் தேவர்கள் நலத்தைக் காக்க நீங்கள் வேண்டும் என அழைத்து சென்று விட்டதோ? மற்றொரு விண்வெளி இவ்வளவு நல்லவர் எங்களுக்கு வேண்டும் என கடத்தி சென்று விட்டதோ? இருக்காது... இருக்காது... எங்களை விட்டு நீங்கள் எங்கும் செல்ல மாட்டீர்கள். இங்கேயே இயற்கையோடு கலந்து பரவி இருக்கின்றீர்கள் தானே? எங்களது மூச்சு காற்றில் கலந்து விட்டீர்கள் தானே? ஆம். அப்படித்தான் அப்படியேதான். அப்படியானால் இனி மக்கள் அனைவரிடமும் நாட்டுப் பற்று இன்னமும் கூடும். உழைப்பும், சாதனைகளும் இன்னமும் கூடும். உங்களைப் போலவே செயலால் நடத்திக் காட்ட மக்கள் மேலும் உத்வேகம் பெறுவர்.

    ஒருவரது பேச்சினை மறந்து விட வாய்ப்புகள் உண்டு. செயலினைக் கூடமறந்து விடுவர். ஆனால் ஒருவரின் ஆழ் நெஞ்சில் உணர்த்தும் உண்மையினை யாராலும் மறக்க முடியாது.

    ஆக மக்களின் ஆழ் நெஞ்சில் குறிப்பாக இந்திய மக்களின் ஆழ் நெஞ்சில் நீங்கள் உணர்த்தியுள்ளவைகளை யாராலும் மறக்க முடியாது.

    * தேசிய பற்று என்பதினை உங்கள் செயல்கள் மூலம் எங்கள் ரத்தத்தில் மேலும் வலுப்படுத்தியவர் நீங்கள்.


    * சம்பாதிப்பதில் ஒரு சிறிய பகுதியினையாவது இயலாத மக்களுக்கு அளிக்க வேண்டும். இது அனைவருமே வலியுறுத்துவதுதான். ஆனால் நீங்களோ சம்பாதித்ததில் 60 சதவீதத்துக்கும் மேல் மக்களுக்காக அளித்தவர்.

    * சமையலறை முதல் சமுதாயத்தில் காணும் அனைத்திலும் ஊடுருவி நிற்பவர்.

    * சின்ன சின்ன வரிகளை காரணம் காட்டி வாழ்க்கையே வீனாகப் போய் விட்டதாக புலம்பும் இந்த உலகில்... எத்தனையோ மன வலிகளை ஓரமாய் ஒதுக்கி விட்டு வாழ்வினை பயனுள்ள பிறப்பாக்கியவர் நீங்கள்.

    இத்தோடு நிறுத்தினீர்களா?

    * சமுதாயத்தில் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. வல்லவராக இருந்தாலும் பத்தாது சதா எதிர் நீச்சல் போடும் போராளியாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்த முடியும் என்று வாழ்ந்து காட்டியவராயிற்றே நீங்கள்.

    * ஒரு மனிதன் தன்னை காப்பாற்றி வாழ்வதே சவால்தான் அதிலும் மனைவி, மக்கள், உறவினர் என்று ஆகி விட்டால் வாழ்க்கை பெரும் சவால்தான். திணறி தவிக்கின்றனர். இது உலகம் தோன்றிய நாள் முதலாகவே இப்படித்தான்.

    ஆனால் ஒரு மனிதர் மற்றவர் துயர்களையும் போக்க போராட வேண்டும் என்பது உங்கள் வாழ்வின் மூலம் உலகிற்கு சொல்லிக் கொடுத்த பாடம். உங்களை காலத்தால் தான் மறக்க முடியுமா? அல்லது மறப்பதற்குத்தான் அதற்கு தைரியம் இருக்கின்றதா?

    இந்த உலகம் மாமனிதர்கள் பலரைப் பார்த்திருக்கின்றது. இது அவரவர் காலத்தில் அவர்கள் அனுபவ ரீதியாக பார்த்து வாழ்ந்த ஒன்று. ஆனால் மிக அதிகமாகவே தவறான குணம் கொண்டவர்களையே பார்க்கின்றது.

    பணம் இருப்பவருக்கு கொடுக்க மனம் இருக்காது.

    கொடுக்க நினைப்பவருக்கு பணம் இருக்காது.

    ஆனால் பணமும், குணமும் ஒருசேர கொண்ட உங்களைப் போன்ற பலரால்தான் உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

    அன்பு, கருணை, கொடைவள்ளல், மன உறுதி, சொன்ன வார்த்தை தவறாமை என உங்களை எங்களுக்குத் தெரிந்த பெயரால் அழைக்கலாம். இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை என்பதே உண்மை.

    வாழ்வில் எத்தனையோ சாதித்தும் ஒருவருக்கு தனிமை என்பது ஆழ் மனதில் நீங்காத வலிதான். ஆனால் ஒன்று கவனித்து இருக்கின்றீர்களா?

    பல உயர் ஆத்மாக்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தனிமை என்பது இறைவன் படைப்பின் ரகசியமே.

    இங்கு மக்களிடையே ஒரு பழக்கம் இருக்கின்றது. மனிதனை மனிதனாக மதிக்க மாட்டார்கள். திட்டும் போது 'நாயே' என்று திட்டுவார்கள். நாய் நன்றியுள்ள பிராணி. மனிதனை நாயே என்று கூறுவதற்கு நாய்தான் வருத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட இந்த உலகில் எல்லா நாய்க்கும் சிகிச்சை அளிக்க- இலவச சிகிச்சை அளிக்க மும்பையில் ஒரு மருத்துவமனையே உருவாக்கி அனைத்து உயிர்களுக்கும் அன்பு செலுத்தியவர் நீங்கள்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    ஒருவர் எவ்வளவு படித்துள்ளார், எவ்வளவு செல்வந்தர், என்பது பொருட்டே அல்ல.... ஒருவர் மற்றவரை எப்படி மதிக்கின்றார் என்பதை வைத்தே அவர் உயர்ந்த இடத்தினைப் பெறுகின்றார். நீங்கள் மனிதர் மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களுக்கும் எத்தனை கருணை காட்டியுள்ளீர்கள்.

    உங்கள் முப்பாட்டனார் ஜாம்ஹெட்ஜி பெயரில்தான் வடஇந்தியாவில் ஜாம்ஷெட்பூர் என்ற நகரம் 1912-ல் உருவானது. ஆசிய கண்டத்திலேயே முதல் இரும்பு ஆலையினை இங்கு உருவாக்கியவர் அவர். அகன்ற சாலைகள், இரு புறமும் மரங்கள், அனைத்து மதத்தினருக்கும் கோவில்கள் என மக்களுக்கான அனைத்து வசதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட நகரம் பிரபலமான இடம். 'ஒரு நாட்டில் அதிக இரும்பு லாபமாய் இருந்தால் அதிக தங்கமும் லாபமாய் கிடைக்கும்' என்ற வார்த்தைகளை ஜாம்ஷெட்ஜி தன் இந்தியாவில் இதனை உருவாக்கினார். இந்த இரும்பு ஆலை இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒன்று. டாடா நிறுவனங்களின் அடித்தளமே ஜாம்ஷெட்ஜிதான் எனலாம். 'இந்திய தொழிற்சாலையின் தந்தை' எனவும் இவரை குறிப்பிடுவர்.

    ஜாம்ஷெட்ஜி அவர்களை வெள்ளையர்கள் தங்களது ஓட்டலுக்குள் அனுமதிக்கவில்லை. காரணம் அவரது நிறம். இதன் காரணமாகவே ஜாம்ஷெட்ஜி அவர்கள் 'டாம்' என்ற பிரமாண்ட ஓட்டலை உருவாக்கினார். அனைவரும் அங்கு வந்து உணவருந்தவும் தங்கவும் பிரம்மாண்டமாக ஏற்படுத்தினார். இரும்பு, மின் சக்தி, துணி ஆலை, ஓட்டல் என பரந்து விரிந்தது. இவர்கள் சாம்ராஜ்யம். இவை அனைத்தும் இந்தியாவினை உலகத்தின் முன் தலை நிமிரச் செய்தது.

    சில குறிக்கோள்கள் உள்ளவர்கள் அதனை நிறைவேற்ற மீண்டும் உலகில் பிறந்து தம் குறிக்கோள்களை நிறைவேற்றுவார்களாம். என் தனிப்பட்ட கருத்தாக ஜாம்ஷெட்ஜி டாடா அவர்கள்தான் ரத்தன் டாடாவாக வந்து சென்றுள்ளாரோ என்று தோன்றுகிறது.

    சம்பாதிக்கும் பணத்தினை எல்லாம் அதாவது 65 சதவீதம் அளவிற்கு பல தர்ம காரியங்களில் செலவழிப்பதால் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இல்லை என்பார்கள். இதனை மாற்றி இத்தனை நிறுவனங்கள், இந்த அளவு தர்ம செயல்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் நீங்கள் முதலாவதாக மட்டுமே என்றும் இருப்பீர்கள். மற்றவை வெகு தொலைவில் தான் இருக்கச் செய்யும்.

    எப்போதுமே ஒருவர் தன்னை தனித்தே வைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். யாரிடமும் தாமரை இலை மீது தண்ணீர் போல் ஒட்டாது இருக்க வேண்டும் என்பார்கள். காரணம் இன்று நாம் ஒருவருக்கு மிக முக்கியமான வராகத் தெரியலாம். விழுந்து விழுந்து நம்மோடு ஒட்டி இருக்கலாம். நாளை அவரே நம்மை ஒதுக்கி விடலாம். இது மனதினை அதிகம் வலிக்கச் செய்யும். ஆனால் 'ரத்தன் டாடா' அவர்களே உங்களின் மறைவால் தான் இந்திய மக்களின் மனங்கள் ஆறாத புண் போல் வலிக்கின்றன. இது என்ன அதிசயமோ.

    ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் உங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஒரு வீட்டில் 4 பேர் என்று வைத்தாலும் 50 லட்சம் மக்கள் உங்கள் நிறுவனங்களினால் வாழ்ந்து வருகின்றனர்.

    பணத்தினை உபயோகமாக செலவழிப்பது எப்படி என்பதனை உங்களை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். பல பல கோடி வரை இதுவரை சம்பாதித்த பணத்தினை நாட்டு மக்களுக்கு நன்கொடையாய் கொடுத்து பழகிய உங்கள் குடும்பத்திற்கு "0"ன் மதிப்பு எனபதே தேவையற்றதுதான்.

    'இந்தியா பெருமைப்படும் ஹீரோவே' உங்களை என்றென்றும் வணங்குகின்றோம்.

    • ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
    • ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா' இருந்த வீடியோ வைரல்

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா'அவரது முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    இதனிடையே, ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் 'கோவா' உயிரிழந்து விட்டதாக வாட்சப்பில் ஒரு தகவல் வேகமாக பரவியது. அந்த செய்தியில், ரத்தன் டாடா உயிரிழந்து 3 நாட்களுக்கு பிறகு அவரது வளர்ப்பு நாய் கோவா உயிரிழந்து விட்டது. மனிதர்களை விட நாய்கள் தங்கள் எஜமானர்களிடம் விசுவாசம் கொண்டவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் உயிரிழந்ததாக பரவும் செய்தி பொய்யானது என்று மும்பை காவல் ஆய்வாளர் சுதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


    • ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
    • அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    அதன்படி இப்பல்கலைக்கழகம் இனிமேல் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும்.

    • ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
    • ரத்தன் டாடா உடல் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    மறைந்த ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி 11,000 வைரக் கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.

    • ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ஜெருசலேம்:

    பிரபல இந்திய தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது மறைவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவின் பெருமைமிகு மகனும், நமது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சாம்பியனுமான ரத்தன் நேவல் டாடாவின் இழப்பிற்காக நானும் இஸ்ரேலில் உள்ள பலரும் துக்கப்படுகிறோம். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் பதிவிட்டுள்ளார்.

    • அவரது தனிப்பட்ட சாதனைகள், மதிப்புகள் சமூகத்தில் ஈடு இணையற்றவை.
    • டாடா பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    அவரது உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு ரத்தன் டாடா உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. ரத்தன் டாடா மறைவை அடுத்து ஜாகுவார் லேண்ட் ரோவர் வலைதளத்தில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அட்ரியன் மார்டல் பதிவிட்டுள்ளார்.

    அதில், "திரு. ரத்தன் டாடா மரணத்தால் ஒட்டுமொத்த ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) குடும்பமும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது தனிப்பட்ட சாதனைகள் மற்றும் மதிப்புகள் சமூகத்தில் ஈடு இணையற்றவை. மேலும் அவர் எங்கள் வணிகம் மற்றும் பிராண்டுகளில் விட்டுச் சென்ற முத்திரை மற்ற எந்த நபரையும் விட அதிகம் ஆகும்."

    "2008 ஆம் ஆண்டு ரத்தன் டாடா ஜாகுவார் லேண்ட் ரோவரை வாங்கிய அவரின் ஒருமித்த கனவுக்கு நன்றி. அன்று துவங்கி நாம் இதுவரை அடைந்திருக்கும் எல்லாவற்றுக்கும் அவருடைய அசைக்க முடியாத ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பு இன்றி சாத்தியமில்லை. அதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்."

    "திரு. டாடா எங்களை ஒரு அசாதாரண பயணத்தில் வழிநடத்தினார். அவர் நம் வரலாற்றில் நம்பமுடியாத புதிய அத்தியாயங்களைத் தூண்டினார். அவரது நம்பிக்கையான வழிகாட்டுதலின் கீழ், டாடா பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்."

    "ஜாகுவார் லேண்ட் ரோவரில் உள்ள அனைவரின் சார்பாகவும், அவரது குறிப்பிடத்தக்க தலைமைத்துவத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ரத்தன் டாடா இறந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீபோல பரவியது.
    • தேசத்தின் அடையாளமான ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழில் அதிபருமானவர் ரத்தன் டாடா உடல் நலக்குறைப்பாடு காரணமாக நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் இசை நிகழ்ச்சி நடுவே ரத்தன் டாடாவின் மறைவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பையில் உள்ள நெஸ்கோ திறந்தவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி இரவு நடத்தப்பட்டது. குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இசை நிகழ்ச்சியை கண்டுகளித்து கொண்டிருந்தனர். அப்போது ரத்தன் டாடா இறந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீபோல பரவியது.

    டாடாவின் மறைவை அறிந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்து இசை நிகழ்வை பாதியிலேயே நிறுத்தினர். பின்னர் அவருடைய படத்தை திரையிட்டு டாடாவின் மரண செய்தியை அறிவித்தபோது பொதுமக்களும் தங்கள் கொண்டாட்டாங்களை உடனடியாக நிறுத்தியபடி மவுனமாக இருந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டும் இறுதி மரியாதை செலுத்தினர். தேசத்தின் அடையாளமான ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

    • ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்.
    • இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.

    தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், ரட்டன் டாடாவின் மறைவு குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. இந்தியா மற்றும் பிரான்சில், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வையால் தொழில்கள் மேம்பட்டன.

    அதையும் தாண்டி, அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் ரத்தன் டாடா நினைவுகூறப்படுவார்.

    அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது இரங்கல் செய்தியின் இறுதியில் ஓகே, டாடா பை பை என பதிவிட்டிருந்தார்.
    • இவரது பதிவைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.

    தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அடுத்த தலைமுறையின் தொழில் முனைவோர் இந்தியாவின் மிகவும் எளிமையான தொழிலதிபருடன் தொடர்பு கொள்வதைத் தவறவிடுவார்கள். வணக்கங்கள், ஐயா. ஓகே, டாடா பை பை என பதிவிட்டிருந்தார்.

    இவரது பதிவைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். செய்திகளில் இருப்பதற்கான வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாதீர்கள் என ஒருவரும், இது பொருத்தமற்றது என மற்றொருவரும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா சர்ச்சையை ஏற்படுத்திய பதிவை நீக்கினார்.

    ×