என் மலர்tooltip icon

    இந்தியா

    • சோனியா காந்திக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • சோனியா காந்தி நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கிறேன்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது 79-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • அமலாக்கத்துறை 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது 6,444 பணமோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
    • 3,345 வழக்குகளை வருமான வரி துறையே திரும்பப்பெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் என்டிஏ அரசு 2014-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிரங்களை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    அதன்படி 2014 முதல் தற்போதுவரை, அமலாக்கத்துறை 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது 6,444 பணமோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் 2,416 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதே காலகட்டத்தில் 11,106 சோதனைகளை நடத்தியுள்ளது.

    ஆனால் இந்த 11 ஆண்டுகளில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் 56 வழக்குகளில் 121 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

    அதேநேரம் வருமான வரி துறை, இந்த 11 ஆண்டுகளில், 13,877 வழக்குகளைப் பதிவு செய்து 9,657 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த வழக்குகளில் 522 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். 963 பேர் குற்றவாளி அல்ல என விடுவிக்கப்பட்டனர். மேலும் 3,345 வழக்குகளை வருமான வரி துறையே திரும்பப்பெற்றது.

    பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.30,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், 2025-26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.15,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 2005 முதல் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 8,100 வழக்குகளில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

    • எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்
    • அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் SIR குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்

    இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை அவை தொடங்கும் முன் நடைபெற உள்ளது.

    காலை 9. 30 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது விவாதத்தில் என்ன பதிலளிப்பது என்பது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.  

    • இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதங்களால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
    • விமானப் ஊழியர்களும் சில பயணிகளும் சேர்ந்து பறவையைப் பிடிக்க முயன்றனர்.

    விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதங்களால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் பெங்களூருவில் இருந்து வதோதரா புறப்படவிருந்த இண்டிகோ விமானம் ஒன்றிற்குள் புறா ஒன்று பறந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    பெங்களூருவில் இருந்து வதோதராவுக்குச் செல்லவிருந்த இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னதாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக இன்ஸ்டாகிராம் பதிவுகள் தெரிவிக்கின்றன.

    வைரலான வீடியோவில், அந்தப் புறா விமானத்தின் உட்புறத்தில் உள்ள பயணிகள் இருக்கைகளுக்கு மேலே, வெளியேறும் வழியைத் தேடிப் பறந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

    விமானப் ஊழியர்களும் சில பயணிகளும் சேர்ந்து பறவையைப் பிடிக்க முயன்றனர். இதனால் விமானத்தில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

    இந்தப் புறா, விமான நிலையத்தின் கேட் திறந்திருந்த போது அல்லது பயணிகள் ஏறும் போது விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்தச் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு பயணி "விமானத்தில் ஒரு திடீர் விருந்தாளி " என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். 

    • திரித்துக் கூறுவதில் மாஸ்டரான பிரதமர் மோடி இதற்கு பதிலளிப்பாரா?..
    • 2005-ஆம் ஆண்டு கராச்சிக்குச் சென்ற அத்வானி, ஜின்னாவின் கல்லறையில் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகள் இவை

    பாராளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்த விவாதத்தின்போது ஜவஹர்லால் நேரு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளுக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பதிவில்,நேரு திருப்திப்படுத்தும் அரசியல் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், திரித்து பேசுவதில் மாஸ்டரான பிரதமர் மோடி இதற்கு பதிலளிப்பாரா?..

    1940 மார்ச் மாதம் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானத்தை முன்மொழிந்த நபருடன் எந்த இந்தியத் தலைவர் கூட்டணி அமைத்தார்? அது பாஜகவின் சியாம பிரசாத் முகர்ஜிதான்.

    2005 ஜூன் மாதம் கராச்சியில் ஜின்னாவை எந்த இந்தியத் தலைவர் பாராட்டினார்? அது எல்.கே. அத்வானிதான்.

    2009-ஆம் ஆண்டு தனது புத்தகத்தில் ஜின்னாவைப் புகழ்ந்த இந்தியத் தலைவர் யார்? அவர் பாஜகவின் ஜஸ்வந்த் சிங்" என்று பதிவிட்டுள்ளார்.

    2005-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்ற அத்வானி, ஜின்னாவின் கல்லறையில் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகள் இவை, "வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்கள் பலர் உள்ளனர்.

    ஆனால், உண்மையில் வரலாற்றை உருவாக்கியவர்கள் மிகச் சிலரே. முகமது அலி ஜின்னா அத்தகைய அரிதானவர்களில் ஒருவர்.

    பாகிஸ்தான் அரசியலமைப்புச் சபையில் அவர் ஆற்றிய உரை ஒரு கிளாசிக். ஒவ்வொரு குடிமகனும் தங்கள் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் உள்ள ஒரு மதச்சார்பற்ற தேசத்தை அவர் வலியுறுத்தினார்" என்று எழுதியிருந்தார். 

    • ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்
    • சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.

    பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' குறித்து நாடாளுமன்றத்தில் இன்று 10 மணி நேரம் நடைபெற்ற விவாதம், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே பெரும் வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது.

    சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இப்போது வந்தே மாதரத்தை நாட்டில் பிளவை ஏற்படுத்த ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதன்போது வந்தே மாதரம் தேசிய கீதம் ஆகாததற்கு நேருவே காரணம் என மக்களவையில் மோடி வசை பாடினார்.

    இதற்கிடையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரும் எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், பிளவுபடுத்தும் சக்திகள் வந்தே மாதரத்தை பிரிவினையை உருவாக்கப் பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த நபர்கள் இன்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய அதே பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்றும் பாஜகவை விமர்சித்தார்.

    மேலும் "சுதந்திர போராட்டத்தால் பங்கேற்காதவர்கள் இன்று வந்தே மாதரம் பற்றி பேசுகிறார்கள். ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதார் பேசுகையில், வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப் பாடல் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்திற்கு உந்துசக்தி அளித்த மில்லியன் கணக்கான மக்களால் பாடப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து.

    உதாரணமாக, சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.

    இளம் வயதில் குதிராம் போஸ் தன் உயிரைத் தியாகம் செய்தபோது, இன்று உள்ள ஆளும் கட்சியின் மூதாதையர்கள் கருணை மனுக்களை எழுதுவதில் மும்முரமாக இருந்தனர்" என்று விமர்சித்தார்.

    இந்த விவாதத்தை அரசு நடத்துவதற்கு மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள தேர்தலே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார். 

    • நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதே ஆண்டுகள்தான் மோடி பிரதமர் பதவியில் உள்ளார்.
    • நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதர விவாதம்

    இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு நடப்பாண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதனை கொண்டாடும் வகையில் இன்று மக்களவையில் 10 மணிநேரம் சிறப்பு விவாதம் நடத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதுபோல இன்று மக்களவையில் வந்தே மாதரம் குறித்த சிறப்பு விவாதத்தையும் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்களும் இதுகுறித்து உரையாற்றினர். ஆனால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அந்த சிறப்பு விவாதத்தை தவிர்த்தனர். தொடர்ந்து வந்தே மாதரம் சிறப்பு விவாதம் தொடர்பாக மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். 

    மக்களவையில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, 

    "மேற்குவங்கத்தில் தேர்தல் வருவதனால்தான் வந்தே மாதரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக. நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதர விவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

    கடந்த காலம் பற்றி பேசியே பாஜக அரசியல் செய்கிறது. நேரு குறித்து குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி. நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதே ஆண்டுகள்தான் மோடி பிரதமர் பதவியில் உள்ளார். ஆனால் இன்னும் நேருவை குறைகூறுகிறார் மோடி. அவர் இஸ்ரோவை உருவாக்கவில்லை என்றால், மங்கள்யான் வந்திருக்காது. அவர் AIIM-களைத் தொடங்கவில்லை என்றால், கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்தியிருக்க முடியும்?


    நீங்கள் நேருவைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதால், ஒரு காரியத்தைச் செய்வோம். அந்த விவாதத்திற்கென ஒரு நேரத்தை ஒதுக்குவோம். அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பட்டியலிடுவோம், அதைப் பற்றி விவாதிப்போம், இதை அதோடு முடித்துக்கொள்வோம். நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பற்றி விவாதிப்பது போல, உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாக, நேருவைப் பற்றி விவாதிப்போம்.

    நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் பல பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளனர், அரசு அதை கவனிக்கவில்லை. இப்போது இதைப்பற்றி விவாதிப்பது ஏன்?. இந்த அரசு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் புறக்கணித்துவிட்டு கடந்த காலத்தையே திரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறது." என்று பேசினார். 

    • இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது.
    • டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

    நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

    இந்நிலையில், பணியாளர்கள் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இதுவரை ரூ.827 கோடி திருப்பித்தந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வரும் டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்துள்ளது.

    மேலும், பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ நிறுவனம் 48 மணி நேரத்தில் பயணிகளின் 4500 உடமைகளை திருப்பித் தந்துள்ளது.

    பயணிகளின் 9000-க்கும் மேற்பட்ட லக்கேஜூகளில் 4,500 லக்கேஜ்கள் திருப்பி தரப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இன்று நாடு முழுவதும் சுமார் 1800 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது.
    • உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, 2022-ம் ஆண்டு பொதுக்குழுவால் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ். சூரியமூர்த்தி சென்னை 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதேவேளையில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது.

    உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாலாஜி, சூரிய மூர்த்தி அ.தி.மு.க.வின் உறுப்பினரே இல்லை என்றும் உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சி விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியாது என்ற எடப்பாடி தரப்பு வாதத்தையும் ஏற்று சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டார்.

    இதனையடுத்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சூரிய மூர்த்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.
    • இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

    வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பாராளுமன்றத்தின் சிறப்பு விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் சிறப்பு விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * புனித பாடல் குறித்த விவாதத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.

    * இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய பாடல் வந்தே மாதரம்.

    * வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.

    * தலைமுறைகளைக் கடந்து உத்வேகம் அளித்து வருகிறது வந்தே மாதரம் பாடல்.

    * வந்தே மாதரம் பாடலில் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலையின்போது தற்செயலாக அமைந்து விட்டது.

    * வந்தே மாதரம் பாடலால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.

    * இந்த விவாதத்தின் மூலம், எதிர்கால சந்ததியினர் வந்தே மாதரம் குறித்து கற்பிக்கப்படுவர்.

    * இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.

    * God Save the Queen பாடலை இந்தியர்கள் பாட வேண்டும் என பிரிட்டிஷார் விரும்பினர்.

    * பிரிட்டிஷாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் அமைந்தது.

    * இந்தியர்களின் உறுதியை பறைசாற்றும் பாடலாக வந்தே மாதரம் விளங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது.
    • எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி.

    கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.

    இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். இந்த வழக்கில் திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது. 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது.

    எர்ணாகுளம் கோர்ட் அளித்த தீர்ப்பையடுத்து, நடிகர் திலீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,

    இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை வைத்து எனது தொழில் வாழ்க்கையை அழிக்க சதி நடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார்.

    இந்த வழக்கில் சுமார் 80 நாட்கள் திலீப் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் திலீப் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இந்த வழக்கில் சாட்சிகளிடம் 4½ ஆண்டு விசாரணை நடந்தது.

    கொச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு நடிகை காரில் சென்ற போது, ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் உள்பட சிலர் அந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மலையாள பிரபல நடிகர் திலீப்-க்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 10.7.2017 அன்று நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை 8.10.2018 அன்று எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தொடங்கியது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி நடிகர் திலீப் கடந்த 2018-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் 4½ ஆண்டு விசாரணை நடந்தது.

    நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை எர்ணாகுளம் கோர்ட் இன்று வழங்கியது. தீர்ப்பில்,

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை. திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.

    6 நபர்களை குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் திலீப் A8 என்பதால் விடுவித்து உத்தரவிட்டது. A1 - A6 என 6 பேர் குற்றவாளிகள் என உத்தரவிட்டது.

    ×