என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், டி.ரத்னவேல் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. திமுக உறுப்பினர் கனிமொழியின் பதவிக்காலமும் அதே தேதியில் முடிவடைய இருந்த நிலையில், அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

    ஆகவே அடுத்த மாதம் 24-ம் தேதிக்குள் 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் இதற்காக தேர்தல் நடத்த உயர்மட்ட ஆலோசனைகள் நடந்து இருப்பதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    விரைவிலேயே தேர்தல் தேதி குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கூட்டணி கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கர்நாடகாவில் தேவேகவுடா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளதாக சுமலதா எம்.பி. கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகர் அம்பரிசின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த காலங்களில் அம்பரிஷ் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வந்தார். அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த தொகுதியில் தனக்கு டிக்கெட் வேண்டும் என்று சுமலதா காங்கிரசிடம் கேட்டு வந்தார்.

    ஆனால், இந்த தொகுதியை கூட்டணி கட்சியான தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கேட்டது. அந்த கட்சிக்கு தொகுதி விட்டுக் கொடுக்கப்பட்டது.

    அதில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுமலதா சுயேச்சையாக நின்றார். அவருக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளித்தது. இதில் சுமலதா வெற்றி பெற்றார்.

    இதுகுறித்து சுமலதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் தேர்தலில் நின்ற போதே வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஜனதா தளம் (எஸ்.) வேட்பாளர் நிகில் என்னை போலவே அரசியல் அனுபவம் இல்லாதவர்.

    ஆனால், அவரது குடும்பத்தில் உள்ள தலைவர்கள் மிகுந்த அரசியல் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் நடந்து கொண்ட விதம்தான் எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

    குறிப்பாக பெண்களை பற்றி அவர்கள் இழிவாக பேசியதன் மூலம் பெண்கள் ஓட்டு அவர்களுக்கு கிடைக்காமல் போனது.

    குமாரசாமி பேசும்போது சுமலதா முகத்தில் கணவர் இறந்த துக்கத்தை கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார். இது, எவ்வளவு புண்படுத்தும் வார்த்தை. இதுபோன்ற செயல்கள்தான் அவர்களை தோற்கடித்தது.


    மாண்டியா தொகுதி மக்கள் என்னை சுயேச்சையாக போட்டியிட வற்புறுத்தினார்கள். பாரதீய ஜனதா ஆதரவு அளித்தது. ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்தார்கள். அவர்களும் என்னை ஆதரித்தார்கள்.

    இந்தியாவிலேயே எனது தொகுதியில் மட்டும் தான் காங்கிரஸ்- பாரதீய ஜனதா தொண்டர்கள் ஒரே வேட்பாளருக்காக ஒருங்கிணைந்து வேலை செய்த நிகழ்வு நடந்தது.

    என்னை காங்கிரசில் சேரும்படி இப்போது யாரும் அழைக்கவில்லை. எந்த தலைவரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.

    பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி என்பது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. கர்நாடகாவில் 19-ல் இருந்து 21 தொகுதிகள் வரை பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மிகப்பெரிய கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடம்தான் கிடைத்து இருக்கிறது. இதற்கு கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம். அவர்கள் ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்க கூடாது. அதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை.

    காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் ஜனதாதளம் தொண்டர்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதேபோல் ஜனதா தளம் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரிக்கவில்லை.

    இதேபோன்ற நிலைதான் மாநிலம் முழுவதும் நிலவியது. காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணியை மக்கள் வெறுப்புடன் பார்த்தனர். காங்கிரஸ் மட்டும் தனியாக நின்றிருந்தால் 10 தொகுதிகள் வரை வென்று இருக்கும்.

    மாண்டியா தொகுதி காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி ஆகும். அதை ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுத்தார்கள்.

    அதேபோல் மைசூர், தும்கூர் தொகுதிகளிலும் காங்கிரசுக்கு வாய்ப்பு இருந்தது. கூட்டணி கட்சிக்கு கொடுத்ததால் வெற்றி பெற முடியவில்லை.

    இதேபோல் வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகளை கூட்டணிக்கு கொடுத்து விட்டார்கள். அங்கெல்லாம் பாரதீய ஜனதா வென்று விட்டது.

    காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே தடு மாற்றத்துடன் செல்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்கள் முகத்தில் மகிழ்ச்சியே காணவில்லை. இது ஒரு பொருந்தாத திருமணமாக இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.

    மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட நிகில் 2½ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டே சென்று விடுவேன் என்று மந்திரி குட்டராஜு கூறினார்.

    மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை விட்டே சென்று விடுவேன் என்று மந்திரி ரேவன்னா கூறினார்.

    ஆனால், அவர்கள் சொன்னதை எதையும் செய்யவில்லை.

    இவ்வாறு சுமலதா கூறினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.
    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தது. 38 பாராளுமன்ற தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்தது.

    22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. 13 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிவாகை சூடியதால் சட்டமன்றத்தில் அந்த கட்சியின் பலம் அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் இம்மாதம் 3-வது வாரத்தில் சட்டமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தி.மு.க., காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று  ஆலோசனை மேற்கொண்டார். இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட வாரியாக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முறியடிப்பது எப்படி? என்பது குறித்து வியூகங்கள் வகுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். ஆட்சி தொடர்ந்து நடைபெறுவதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற ஆகஸ்டு மாதம் இறுதியில் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதுதொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு தற்போதே தயாராக இருக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகங்கள் அமைத்து செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நடந்தது.
    வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில், மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 22 தொகுதிகளில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த பின்னடைவு குறித்து விவாதிக்க கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மந்திரிகள் கூட்டத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று கூட்டினார். கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர், மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டி உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை நாங்கள் விரும்பவில்லை. ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்த விவரங்களை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோருகிறோம்.

    இதற்காக ஒரு போராட்ட இயக்கம் தொடங்கப் போகிறோம். அதை மேற்கு வங்காளத்தில் இருந்து தொடங்குவோம்.

    எதிர்க்கட்சி வரிசையில் உள்ள 23 கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு நீங்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் கூட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தடை செய்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலில், பணம், ஆள்பலம், அமைப்புகள், ஊடகம், அரசாங்கம் ஆகியவற்றை பயன்படுத்தித்தான் பா.ஜனதா வெற்றி பெற்றது. மேற்கு வங்காளத்தில் 18 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு இடதுசாரி கூட்டணியே காரணம். இருப்பினும், எங்கள் ஓட்டு வங்கியை 4 சதவீதம் அதிகரித்துள்ளோம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
    சட்டமன்றத்தை திமுக கைப்பற்றும் நாள் தான் கருணாநிதிக்கு செலுத்தும் மனப்பூர்வமான அஞ்சலி என்று கருணாநிதி பிறந்த நாள் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. இதனுடன் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

    இதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:- 

    மக்களவை தேர்தல் வெற்றி அனைவரும் சேர்ந்து சாதித்த சாதனை. சரித்திரம் எவ்வாறு திரும்பியுள்ளது என்பதை திமுகவின் வெற்றி காட்டுகிறது.

    தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை. கருணாநிதி இடத்தில் அவரது மகன் நான் இருக்கிறேன். சட்டமன்றத்தை திமுக கைப்பற்றும் நாள் தான் கருணாநிதிக்கு செலுத்தும் மனப்பூர்வமான அஞ்சலி.

    திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு இனிதான் வேலை அதிகமாக உள்ளது. திமுக வென்றதால் பயன் என்னவெனில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக போராடுவோம். கல்விக்கடனை நீக்கவும், கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வரவும் போராடுவோம்.

    இந்தி திணிப்பை எதிர்ப்பதில் சமரசமே இல்லை. என்றைக்குமே எதிர்ப்போம்.  இந்தி திணிப்புக்கு எதிராக பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் போராட தயாராக இருக்கிறோம். இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக கூட்டணி தலைவர்கள் தயாராக உள்ளோம். இன்னும் சில தினங்களில் போராட்டத்திற்காக ஒன்றுகூட உள்ளோம் தயாராக இருங்கள். 

    ஆட்சி பொறுப்பில் இருந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம் என சபதம் ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு தொடர்பாக பூத் வாரியாக ஆய்வு செய்ய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீர்மானித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் 421 இடங்களில் போட்டியிட்டு வெறும் 52 இடங்களில் மட்டுமே ராகுல் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    இதனால் மாநில கட்சிகளின் துணையுடன் மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற ராகுலின் கனவு தகர்ந்து போனது. அது மட்டுமின்றி பாராளுமன்றத்தில் 10 சதவீதம் இடங்களைப் பெறாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது.

    சுமார் 3 மாதங்கள் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்தும் 2014-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற 44 இடங்களை விட இந்த தடவை கூடுதலாக 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது என்பதால் ராகுல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார். தேர்தல் தோல்வியால் மிகவும் விரக்தி அடைந்த அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தோழமை கட்சிகளின் தலைவர்களும் சமரசம் செய்ததைத் தொடர்ந்து அவர் மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி 17 மாநிலங்களில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள நிலையில் அந்த மூன்று மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் தோற்று இருப்பது ராகுலுக்கு புரியாத புதிராக உள்ளது. எனவே இவற்றுக்கெல்லாம் விடை காண வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக உள்ளார்.


    காங்கிரஸ் போட்டியிட்ட 421 தொகுதிகளில் 369 தொகுதிகளில் தோல்வி அடைந்ததோடு பல தொகுதிகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்தது. பெரும்பாலான தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் வாக்குகள் வித்தியாசம் மிக, மிக அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் பூத் வாரியாகவும் காங்கிரசுக்கு வாக்குகள் அதிகமாக கிடைக்கவில்லை என்பதை ராகுல் உணர்ந்துள்ளார்.

    ஒவ்வொரு தொகுதியிலும் எந்தெந்த பகுதி பூத் கமிட்டிகளில் காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டால்தான், காங்கிரஸ் கட்சியை முன்பு போல அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ராகுல் வந்துள்ளார். எனவே பூத் கமிட்டி வாரியாக காங்கிரசுக்கு கிடைத்த வாக்குகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 421 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ராகுல் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அந்த உத்தரவில், “நீங்கள் ஒவ்வொரு பூத்திலும் பெற்ற வாக்குகள் விபரங்கள் கொண்ட படிவம்-20 பட்டியலை தேர்தல் ஆணையம் உங்களுக்கு கொடுத்திருக்கும். அந்த படிவம்-20 பட்டியலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ஜூன் 7-ந்தேதிக்குள் அனுப்பி வையுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களுக்கு பூத் வாரியாக கிடைத்த வாக்கு விவர பட்டியலை அனுப்பி வருகிறார்கள்.

    அந்த பட்டியலை வைத்து காங்கிரஸ் தலைமையிடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு, எங்கெங்கு காங்கிரசுக்கு குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது என்ற அறிக்கை தயார் செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் நிர்வாகத்திலும், செயல்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வர ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    காங்கிரசின் தோல்விக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் நடந்த தில்லு முல்லும் ஒரு காரணமாகும் என்று காங்கிரசில் ஒருசாரார் கூறி வருகிறார்கள். ஆனால் காங்கிரசில் மற்றொரு சாரார், மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்து இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். என்றாலும் பூத் வாரியான ஓட்டுகளை மின்னணு எந்திர முடிவுகளுடன் மீண்டும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

    பூத் வாரியாக கிடைத்த வாக்குகளை மீண்டும் சரி பார்ப்பதன் மூலம் மின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு நடந்துள்ளதா? என்பதை உறுதிபடுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கருதுகிறார்கள். இதனால் பூத் வாரியாக வாக்குப்பதிவை ஆய்வு செய்யும் காங்கிரசின் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கிடையாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
    சிவகாசி:

    சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தி திணிப்பு என்பது தமிழகத்தில் நடக்காது. அறிஞர் அண்ணாவின் இருமொழி கொள்கைதான் எங்களுடைய நிலைப்பாடு. அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. இந்தியை படிக்கலாம். ஆனால் இந்தியை திணிக்க முடியாது. கட்டாய பாடமாக கொண்டு வர முடியாது. அப்படி ஒரு நிலை வந்தால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக அதை எதிர்த்து போராடுவார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்த தி.மு.க. நடந்து முடிந்த தேர்தலில் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதற்கு அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதி தான் காரணம். இனி வரும் தேர்தலில் எங்களுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்.

    அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கிடையாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு மத்திய மந்திரி என்ற நிலை இருப்பதாக தெரிகிறது. ஆனால் எங்கள் கட்சியில் பல மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் 2 அல்லது 3 மத்திய மந்திரி பதவிகளை எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கவில்லை. வாங்க கூடாது என்றும் நாங்கள் நினைக்கவில்லை. முதல்-அமைச்சர் உத்தரவிட்டால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு சென்று களப்பணியாற்ற தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருப்பதாக ஒரு பத்திரிகையில் தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 2015-ம் ஆண்டு மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினார். அதில் இருந்து மின்வெட்டு இல்லாத மாநிலமாக, ஏன் மின்மிகை மாநிலமாக தமிழகத்தை வைத்திருக்கிறோம்.

    தொழிற்சாலைகளில் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்தாமல், ஜெனரேட்டர் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியதாக தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

    கடந்த மாதம் 27-ந் தேதி காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 100 மெகாவாட்டாக திடீரென குறைந்துவிட்டது. அதனால் தொழிற்சாலைகளில் அன்று மட்டும் 4 மணி நேரம் ஜெனரேட்டரை பயன்படுத்துமாறு கூறி இருந்தோம். அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கிய பிறகு தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம்.

    மழை பெய்யும்போதும், காற்று வீசும்போதும் மட்டும் பாதிப்புகள் இருந்தால் மின்தடை ஏற்படுகிறது. அப்போதும், மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    இந்த ஆண்டுக்கு தேவையான மின்சாரம் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒரு ஆண்டாக ஒரு யூனிட் நிறுத்தப்பட்டு இருந்தது. கடந்த 10 நாட்களாக அங்கு மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் இருந்து 800 மெகாவாட் மின்சாரம் கிடைத்து கொண்டிருக்கிறது. தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருப்பதால் அனல் மின்நிலையத்தை பராமரிப்பு பணிக்காக தற்போது நிறுத்தி வைத்திருக்கிறோம். மின்சாரம் பற்றாக்குறை என்று பொதுமக்களிடையே பீதியை கிளப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறார்கள்.

    எதிர்க்கட்சியின் பொய் பிரசாரம் காரணமாக பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. கல்வி கடனை ரத்து செய்வோம் உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டுமென்பதால்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உத்தரபிரதேசத்தின் கான்பூரில் சங் பரிவார் அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
    கான்பூர்:

    உத்தரபிரதேசத்தின் கான்பூரில் சங் பரிவார் அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மகத்தான அதிகாரத்தை பெற்றிருக்கின்றன. அதற்காக அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. அரசு எந்த நேரத்தில் தடுமாறினாலும், அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆக்கபூர்வமான அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும்’ என்று தெரிவித்தார். 

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மற்றொரு கூட்டத்தில் மோகன் பகவத் பங்கேற்றார். அதில் அவர் உரையாற்றும்போது, சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வருமாறும், கல்வியறிவின்மை, போதைப்பொருள், குடிப்பழக்கம் போன்ற சமூக தீமைகளை அகற்றுமாறும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை கேட்டுக்கொண்டார். மேலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஆணவத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.
    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் கார் கடந்து செல்கிறபோது, ஜெய்ஸ்ரீராம் என மக்கள் கோஷமிடுவது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விடுகிறது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் கார் கடந்து செல்கிறபோது, ஜெய்ஸ்ரீராம் என மக்கள் கோஷமிடுவது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்படி கோஷமிடுகிறவர்களுடன் அவர் மோதுகிற சூழலும் உருவானது.

    இதையொட்டி மம்தா பானர்ஜி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பா.ஜனதா கட்சியை சாடி உள்ளார்.

    அதில் அவர், “ ஜெய் சியாராம், ஜெய்ராம்ஜி கி, ராம் நாம் சத்யா ஹை போன்றவை மத மற்றும் சமூக சித்தாந்தங்களை கொண்டுள்ளன. இந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் பா.ஜனதா கட்சி மதத்தையும், அரசியலையும் கலந்து, தவறான வழியில் ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை தங்கள் கட்சி கோஷமாக ஆக்கி விட்டது” என சாடி உள்ளார்.

    மேலும், “ இது வேண்டும் என்றே வெறுப்பு சித்தாந்தத்தை வன்முறை மூலம் விற்பனை செய்யும் முயற்சி ஆகும். இதை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” எனவும் கூறி உள்ளார்.
    உள்ளாட்சி தேர்தலில் 50-க்கு 50 என்று பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கி அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்று சீமான் பேசியுள்ளார்.

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சி சார்பில் பாளையங்கோட்டையில் நேற்று இரவு மே18 வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழர்களின் வரலாறு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். 13 கோடி தமிழர்கள் இருந்தபோதிலும் தங்களது உரிமையை பெற்று வாழ முடியவில்லை. தமிழ்ஈழ விடுதலையை இன்று வரை விமர்சிக்கிறார்கள். கல்லில் இருக்கும் தெய்வங்களை வழிபடுவது தவறு என்று கூறியவர்கள் இன்று நம்மை அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள்.

    நமது பழம் பெருமையை பேசுவது தவறல்ல. படிப்பினை, வரலாற்றை படிக்காதவன் வரலாற்றை படைக்க முடியாது. எனவே புறநானூற்று தமிழனை பார்த்து வீரத்துடனும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.

    காசு இருக்கும் இடத்தில் கூடாதீர்கள். கொள்கை இருக்கும் இடத்தில் கூடுங்கள். நாங்கள் தோற்றாலும் வீரர்கள். நீங்கள் ஜெயித்தாலும் வீழ்ந்தவர்கள். பள்ளி, கல்லூரி, நீதிமன்றங்களில் இருந்து நமது தாய்மொழியை வெளியேற்றினார்கள். இன்று இந்திமொழியை திணிக்கப் பார்க்கிறார்கள். நாம் வீரவேகத்துடன் பேசுவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவி வருகிறது. இது நடக்குமா என்று அவர்கள் பேசுவது ‘வெட்டிப்பேச்சு’. ஆனால் நாங்கள் பேசுவது வெற்றி பேச்சு.

    இன்னும் அதிகபட்சம் அவர்கள் 7 ஆண்டுகள் ஆள்வார்கள். அதன் பிறகு நாங்கள் அறியணையில் அமர்வோம். புரட்சி என்பது மேல் இருப்பது கீழ் வரும். கீழே இருப்பது மேல் வரும். நாங்கள் புரட்சிகர போராட்டத்தை முன் எடுத்துள்ளோம்.

    தேர்தல்தான் முடிந்துள்ளது. தேடல்கள் முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் 50-க்கு 50 என்று பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கி அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறோம்.

    தி.மு.க. தமிழர்களை காக்க தவறிவிட்டது. தமிழ்தேசம் உருவாக்கிய பிரபாகரனை திராவிட திருவாளர்களே தோற்கடிக்க காரணமாக இருந்தார்கள்.

    தமிழகத்தை அழிக்க கொண்டு வரப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு திராவிட கட்சிகளே அனுமதி கொடுத்தன. எனவே அவர்களை புறந்தள்ளி விட்டு தமிழர்களுக்கான ஆட்சியை நாம் அமைக்க வேண்டும்.

    நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 17 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். தூய கட்சியை, நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என்ற உணர்வோடு இவர்கள் வாக்களித்து உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதீய ஜனதாவை காரணம் காட்டி நம்மை வீழ்த்தி விட்டார்கள். மத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறியே பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது. அதை அவர்கள் கட்டி விட்டால் அவர்களது அரசியல் முடிந்து விடும். இந்த 5 ஆண்டில் ராமர்கோவில் கட்டாவிடில் நாங்களே மோசடி வழக்கு போடுவோம்.

    திராவிடத்துக்குள் தமிழர்கள் அடங்கி இருக்க முடியாது. தமிழர்களுக்கு என்று தனித்துவம் உண்டு. இந்தியா என்ற நாடு உருவாகுவதற்கு முன்பே தமிழர்கள் தனி கொடியுடன் ஆட்சி நடத்தியவர்கள். இனி எங்களுக்கான வரலாற்றை நாங்களே படைப்போம். இந்த நேரத்தில் நாம் தமிழர் படை திரண்டு விட்டது. ஓட்டுக்கு காசு வாங்குவது அவமானம் என்ற காலம் வரும். அப்போது இந்த படை உறுதியாக வெல்லும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதிய கல்விக்கொள்கையில் இந்தியை திணிக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள பா.ஜ.க.வின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அம்பலமாகியுள்ளது.

    1960களில் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என்று உருவான அச்சத்தை போக்குவதற்கு அன்று பிரதமராக இருந்த பண்டித நேரு, மக்களவை தி.மு.க.வின் இரு உறுப்பினர்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.கி. சம்பத்தை டெல்லியில் தேடி கண்டுபிடித்து தமது அலுவலகத்திற்கு வரச் சொல்லி, கலந்து பேசி நான்குமணி நேரத்தில் இந்தி பேசாத மக்களுக்கான உறுதிமொழியை கடிதம் மூலமாக சம்பத் வீட்டுக்கே அனுப்பியிருந்தார்.

    நாடாளு மன்றத்தில் தி.மு.க.வின் பலம் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோது அவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் நேரு எழுதிய உறுதிமொழி கடிதத்தின்மூலம், “இந்தி பேசாதமக்கள் விரும்பும்வரை ஆட்சிமொழியாக இந்தியோடு ஆங்கிலமும் கூடுதல் மொழியாகவும், இணை மொழியாகவும் தொடர்ந்து நீடிக்கும். இது எவ்வளவு காலம் நீடிக்கும்என்பதை முடிவு செய்யும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடாமல் இந்தி பேசாத மக்களிடமே விடுவேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அண்ணா கருத்து கூறும்பொழுது, “திராவிடத்தின்வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அரசியல் தஸ்தா வேஜிகளாகும்” என்று கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    மேலும் மக்களவையில் பிரதமர் நேரு உரையாற்றும்பொழுது, “எந்த மொழியையும் எவர் மீதும் திணிக்கக்கூடாது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளும் சம அந்தஸ்துடன் நடத்தப்படவேண்டும். இந்தியாவில் எந்த ஒரு மொழியும் மற்ற மொழியை தாண்டி, தேசிய மொழியாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று மிக தெளிவாக 1960 ஏப்ரல்24 அன்று குறிப்பிட்டிருந்தார்.

    இத்தகைய உறுதி மொழிகளை வழங்கியதற்கு காரணம் நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேரு என்கிற ஜனநாயக ஜாம்பவான் பதவி வகித்ததுதான். ஆனால் இன்று அசுர பலத்தோடு அதிகாரத்தில் அமர்ந்திருக்கிற, ஜனநாயக உணர்வே இல்லாத பிரதமர் மோடி இத்தகைய உறுதிமொழிகளை காப்பாற்றுவார்என்று எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் தேர்தல் வரை பதுக்கிவைக்கப்பட்டிருந்த புதிய கல்விக் கொள்கை என்கிற பூனைக்குட்டி இப்போது வெளிவந்துவிட்டது.


    தமிழகத்தை பொறுத்த வரை இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு வழங்கிய உறுதிமொழி தொடர்ந்து காப்பாற்றப்படவேண்டும். நேரு வழங்கிய உறுதி மொழிக்கு எதிர் காலத்தில் ஏதாவதுஆபத்து ஏற்பட்டால் அதை தடுக்கவே அன்று பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் ஆட்சி மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தார்கள். இச்சட்டத் திருத்தத்தின்படி நேருவின் உறுதிமொழிக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையும் மீறி புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மும்மொழி திட்டத்தை புகுத்தி இந்தி மொழியை கட்டாயப்படுத்தி திணிக்க முயன்றால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தவேண்டி வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×