search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி மொழி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் பரவியது.
    • அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை.

    டெல்லியில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டத்தில், இந்தியில் வழங்கப்பட்ட நிதிஷ் குமாரின் பேச்சை மொழிபெயர்க்க கோரினார் டி.ஆர்.பாலு. அதற்கு, "இந்தி நம் தேசிய மொழி; அனைவரும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்று நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    "இந்தியாவை இந்துஸ்தான் என்று அழைக்கிறோம். ஆங்கிலம் பிரிட்டிஷாரால் திணிக்கப்பட்ட மொழி. இந்தி மொழி நமக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்"என்று கூறியுள்ளார் நிதிஷ்குமார். இதனையடுத்து சில தலைவர்கள் அவரை அமைதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் பேசி அமர்ந்தபிறகு யாரும் அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    இந்திய நாட்டை இந்துஸ்தான் என்று அழைப்பதற்கு காரணமுண்டு. இந்துஸ்தான் என்பது இமயமலைக்கும் இந்து சகாராவுக்கும் இடையில் உள்ள நிலம். அதேநேரம், இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கபட்டுள்ளன. பேசும் மக்கள் தொகையில் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்து இருக்கின்றன.

    இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 22 மொழிகள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள். இந்தி இந்தியாவின் "தேசிய" மொழி அல்ல, ஆனால் ஒரு "அதிகாரப்பூர்வ" மொழி. இந்தியாவில் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை.

     


    இதேபோன்று, மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குற்றம்சாட்டுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகவே, ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தை பொறுத்தே இருக்க வேண்டும். மொழியை கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று திணிப்பது இருக்க கூடாது.

    எனவே, இந்தி தேசிய மொழி, அதனை தெரிந்து வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்ற தொனியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியிருந்தால் அது ஏற்புடையதல்ல. காரணம், இந்தி தேசிய மொழி அல்ல. அதேநேரம், ஒரு மொழியை கற்பது, தெரிந்துவைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம்.

    அந்த வகையில், இந்தியை திணிப்பதுதான் தவறு... விருப்பப்பட்டு கற்பது என்பது ஏற்புடையதே...

    • இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா?
    • இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

    கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    இந்தி பேசாதவர்

    இந்தியர் இல்லை என்று

    அரசமைப்பில் இருக்கிறதா?


    இந்தியா என்ற நாடு

    இந்தி என்ற

    சொல்லடியில்தான் பிறந்ததா?


    எல்லா மாநிலங்களிலும்

    புழங்குவதற்கு

    இந்தி மொழியென்ன

    இந்தியக் கரன்சியா?


    இந்தி பேசும் மாநிலங்களிலேயே

    இந்தி கல்லாதார் எண்ணிக்கை

    எவ்வளவு தெரியுமா?


    வடநாட்டுச் சகோதரர்கள்

    தமிழ்நாட்டுக்குள் வந்தால்

    தமிழ் தெரியுமா என்று

    தெள்ளு தமிழ் மக்கள்

    எள்ளியதுண்டா?


    சிறுநாடுகளும்கூட

    ஒன்றுக்கு மேற்பட்ட

    ஆட்சிமொழிகளால்

    இயங்கும்போது

    இந்தியாவை

    ஓர் ஒற்றை மொழிமட்டும்

    கட்டியாள முடியுமா?


    22 பட்டியல் மொழிகளும்

    ஆட்சிமொழி ஆவதுதான்

    வினாத் தொடுத்த காவலர்க்கும்

    விடைசொன்ன

    தமிழச்சிக்குமான ஒரே தீர்வு


    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

    • பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா.
    • விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார்.

    "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

    இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?

    பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

    • இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது- அமித் ஷா
    • நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது- உதயநிதி

    இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரமளிக்கும் ஊடகமாக இந்தி மாறும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ், வளமான ஆட்சி மொழியாக இந்தி உருவெடுக்கும்'' என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'எக்ஸ்' (டுவிட்டர்) வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    ''இந்திதான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது- பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது'' என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய மந்திரி அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம்தான் இந்தக் கருத்து.

    தமிழ்நாட்டில் தமிழ்- கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது.

    இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் தகவல் தொடர்பு மையம் என எழுதப்பட்டிருந்தது.
    • இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் தகவல் தொடர்பு மையம் என எழுதப்பட்டிருந்தது.

    இந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்ட அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது. இதில் தமிழுக்கு பதில் இந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில் அதன் மேலே ஆங்கிலம், தமிழிலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது.

    இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர். பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு இந்தியால் எழுதி ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை இன்று கிழித்து அகற்றினர்.

    • ஆங்கில எழுத்தால் ‘சகயோக்’ எனவும், தமிழ் எழுத்தால் ‘சகயோக்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
    • எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் ‘சகயோக்’ என்றுதான் வாசிக்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மையத்தில் தமிழ் மொழியில் 'சேவை மையம்' என பெயர்ப்பலகை எழுதப்பட்டு இருந்தது. அதுபோல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அந்தப்பெயர் மொழி பெயர்க்கப்பட்டு ஒன்றின் கீழ், ஒன்றாக எழுதப்பட்டு இருந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் என்று பெயர்ப்பலகையில் இந்தி எழுத்தால் 'சகயோக்' என பெரிதாக எழுதி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் 'இன்பர்மேசன் சென்டர்' என்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்தால் 'சகயோக்' எனவும் தமிழில் 'சேவை மையம்' என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தால் 'சகயோக்' என்றும் எழுதப்பட்டுள்ளது.

    இதை எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் 'சகயோக்' என்றுதான் வாசிக்க முடியும்.

    இதே போன்று இந்த சேவை மையத்தின் அருகில் காசி சங்கமம் என்ற பெரிய விளம்பரப் பதாகையில் அனைத்தும் இந்தி மொழியில் பெரிதாக எழுதப்பட்டு ஒரே ஒரு வாசகம் மட்டும் தமிழ் எழுத்தில் மிகவும் சிறியதாக எழுதப்பட்டுள்ளது.

    இதன் அர்த்தம் என்ன? தமிழ் மறைப்பா? இந்தி திணிப்பா? யாருக்கும் புரியவில்லை. பயணிகள் குழம்பி போய் நிற்கிறார்கள்.

    • தாய் மொழிக்கு பிறகு ஆங்கிலமே பிரபலமான மொழியாக, வழக்கமான மொழியாக இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை இருக்கிறது.
    • இந்தியை மூன்றாவது மொழியாக விரும்பி ஏற்கலாம், ஏற்காமலும் இருக்கலாம் அல்லது பிற மாநிலங்களில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்கலாம்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிக்கே முதல் இடம். அந்த வகையில் நம் தமிழகத்தில் தாய்மொழி தமிழுக்குத்தான் முதலிடம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இந்திய அளவில் பெரும்பாலான மாநிலங்களில், ஏன் உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் தான் பொது மொழியாக, இணைப்பு மொழியாக இருக்கிறது. எனவே அவரவர் தாய் மொழிக்கு பிறகு ஆங்கிலமே பிரபலமான மொழியாக, வழக்கமான மொழியாக இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை இருக்கிறது.

    இந்தியை மூன்றாவது மொழியாக விரும்பி ஏற்கலாம், ஏற்காமலும் இருக்கலாம் அல்லது பிற மாநிலங்களில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்கலாம். இதில் கட்டாயப்படுத்துதல் என்பது இதுவரை இல்லை. இனிமேலும் கட்டாயம் கூடாது. உதாரணத்திற்கு புதிய கல்வி கொள்கையில் இந்த நோக்கம் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்தி திணிப்பு என்பதில் எந்த உண்மையும் இல்லை.

    ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி சட்டமந்திரிகள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டில் நீதி மன்றங்களில் சாதாரண மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழிகளையே பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதோடு சட்டப்படிப்புகள் தாய்மொழியில் படிக்க வேண்டும், அதற்கு சட்டப்படிப்பை தாய்மொழியில் உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் நிலை இப்படி இருக்க, இந்தி திணிப்பு என்பதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. மத்திய அரசு இதில் எந்த விதத்திலும் மாறுபடவில்லை என்பது மக்களுக்கு நன்கு புரியும்.

    தற்போது உள்ள அரசியல் சூழலில் தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது வாக்கு வங்கிக்காக, இந்தியை பயன்படுத்திக் கொள்வது, அரசியல் ஆக்குவது மக்களுக்கு நன்கு புரிந்து இருக்கிறது, தெரிந்திருக்கிறது. இந்த உண்மை நிலையை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் தி.மு.க., தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது?
    • தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும் தி.மு.க.வா தமிழர்களை முன்னேற்றப்போகிறது?

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. தீர்மானம் மட்டும் போடத்தான் இந்த ஆட்சியா? தமிழக அரசின் இருமொழி கொள்கை என்பது என்ன? ஆங்கிலம் கட்டாயம், ஆனால் தமிழ் கட்டாயம் இல்லை என்பதுதானே? அதனால்தான் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற பெயரில் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை தமிழே படிக்காமல், படிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். இது தமிழ்மொழிக்கு செய்யும் துரோகம் இல்லையா?

    தமிழக அரசு செலவில் தமிழ்மொழியை படிக்காமலேயே, கல்லூரி வரை படிக்க வசதியாக, அரசு செலவில் இயங்கும் அரசு பள்ளிகள் பட்டியல் உண்மையா? இல்லையா? பயிற்றுமொழியாக உருது மொழியில் 56 பள்ளிகள், மலையாள பள்ளிகள் 50, தெலுங்கு பள்ளிகள் 35, கன்னட பள்ளி 1, இதுதவிர பாடமொழியாக உருது மொழியில் 204 பள்ளிகள், மலையாள மொழியில் 50 பள்ளிகள், தெலுங்கு மொழியில் 234 பள்ளிகள், கன்னட மொழியில் 60 பள்ளிகள் அரசு செலவில் இயங்குகின்றன. தமிழ்மொழியை நீக்கிவிட்டு பிற மொழிகளை சொல்லித்தரும் அரசு இந்தியை மட்டும், விருப்பம் உள்ளவர்கள் படிக்க அனுமதி மறுப்பது ஏன்? கல்வியில் ஏன் அரசியல் செய்கிறீர்கள்?

    50 ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் தி.மு.க., தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது?

    தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும் தி.மு.க.வா தமிழர்களை முன்னேற்றப்போகிறது? ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார். தமிழுக்கு எதுவுமே செய்யாமல் தமிழுக்காக போராட்டம் என்ற பொய்ப் பிரசாரத்தை இன்னும் எத்தனை நாள் தி.மு.க. சொல்லிக்கொண்டு இருக்கும்? இந்தி எதிர்ப்பு போர் தி.மு.க.வை 1967-ல் அரியணை ஏற்றியது. இப்போது காலம் மாறிவிட்டது. அதே இந்தி எதிர்ப்புதான் தி.மு.க.வின் வீழ்ச்சிக்கும் காரணமாகப்போகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
    • இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்த கட்சி தி.மு.க. நாங்கள் சொல்லும் ஒரு வார்த்தை இந்தி தெரியாது போடா.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பாரதிய ஜனதாவை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 6 மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் மற்றும் மாணவர் அணியினர் குவிந்தனர்.

    மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாணவர் அணி செயலாளர் டாக்டர் எழிலரசன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினார்.

    தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் எப்போதும் இந்தி திணிப்புக்கு எதிராக போராடுவோம். மீண்டும் ஒரு மொழிப்போர் சூழலை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டாம். தொடர்ந்து இந்தி திணிப்பை மேற்கொண்டால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம். முதல் கட்ட போராட்டம் இன்று நடந்துள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 2019-ம் ஆண்டு நிலை தான் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்படும்.

    மோடி, அமித்ஷா நினைப்பது போல இங்கு நடப்பது அ.தி.மு.க. ஆட்சி அல்ல. இப்போது தமிழகத்தை ஆட்சி செய்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.

    இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்த கட்சி தி.மு.க. நாங்கள் சொல்லும் ஒரு வார்த்தை இந்தி தெரியாது போடா. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு துவக்கமாக இருக்கும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கவில்லை என மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். எப்போதும் நுழைய விட மாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்படும்போது அவரிடம் நிருபர்கள், "டெல்லியில் போராட்டம் எப்போது நடத்தப்படும்" என்று கேட்டனர். அதற்கு அவர், "தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்து அறிவிப்பார்" என்று பதிலளித்தார்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், இரா.கிரிராஜன், கனிமொழி சோமு, இளைஞர் அணி துணை செயலாளர்கள் தூத்துக்குடி ஜோயல், ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, கருணாநிதி, எபிநேசர், மோகன், பரந்தாமன், பிரபாகர்ராஜா, மயிலை வேலு, மாவட்ட செயலாளர்கள் இளைய அருணா, மாதவரம் சுதர்சனம், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, தா. இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன், பகுதி செயலாளர்கள் சேப்பாக்கம் மதன் மோகன், காமராஜ் அன்புதுரை, வி.எஸ்.ராஜ் கண்ணன், ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மாவட்டத் தலைவர் வெற்றி வீரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் க.கோவிந்தசாமி, இளைஞர் அணி அமைப்பாளர்கள் பொன் இளவரசன், எஸ்.கிருஷ்ணன், தி.நகர் லயன். சக்திவேல், மயிலை வேலு, சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி.பி. சிதம்பரம், சேப்பாக்கம் ரகமத்துல்லா உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது.
    • 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணமலை பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை. திமுக அரசின் கபட நாடகம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம்.

    மேலும், இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அரபு, சீனம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ரஷியா, ஆங்கிலம் ஆகியவை உள்ளன.
    • ஐக்கிய நாடுகள் தலைமை செயலகத்தின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகள் உள்ளன.

    ஜெனீவா:

    ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 மொழிகள் தவிர இதர மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் சார்பில் ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பன்மொழி பயன்பாட்டை முன்மொழியும் இந்தத் தீர்மானத்தில் இந்தி, உருது மற்றும் வங்க மொழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்திய அரசு இதனை வரவேற்பதாக ஐ.நா.விற்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    பன்மொழி பயன்பாடு என்பது ஐ.நா.வின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐ.நா. பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என கூறினார்.

    தமிழகத்தில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழில் அறிவிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
    தமிழகத்தில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழில் அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இந்தி மொழியை ஏன் கற்க கூடாது?. ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ளதான். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது. மொழியை மொழியாக கையாள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்தது.

    அத்துடன் வழக்கு விசாரணை வரும் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    ×