என் மலர்
தேர்தல் செய்திகள்
தர்மபுரி:
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம் பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு கூறுகளாக இருந்த அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்து பொதுக்குழுவை கூட்டி இரட்டை தலைமை என்று முடிவு செய்யப்பட்டு இன்று ஆட்சியும், கட்சியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம். அவரது கருத்தை வரவேற்று குன்னம் ராமசந்திரன் எம்.எல்.ஏ. ஊடகங்களிடம் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். எம்.எல்.ஏ.க் களின் கருத்துக்களால் அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் இருவரும் வெளியில் கருத்துக்களை கூறியது கண்டிக்கத் தக்கது.
பாராளு மன்ற தேர்தலில் தோற்று, அ.தி.மு.க. வுக்கு தற்போது பல்வேறு சோதனைகள் வந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.
சட்டமன்ற உறுப்பினர்களின் இதுபோன்ற கருத்துக்களால் எதிரிகளுக்கு, துரோகிகளுக்கு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமைந்துவிடும்.
இவர்களுடைய கருத்துக்களால் துரோகிகள் இன்று சசிகலா தான் அ.தி.மு.க.வுக்கு தலைவராக வரவேண்டும் என்று பேசி வருகிறார்கள். எனவே இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.
பா.ஜனதா கூட்டணி மந்திரி சபையில் அ.தி.மு.க. சேருவது குறித்து அ.தி.மு.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மபுரி:
முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளருமான பழனியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகளை பதவி ஆசை காட்டி அ.தி. மு.க.வில் இணைத்து வருகின்றனர். தலைவர்கள் தான் தங்கள் சுயநலத்திற்காக சென்றுள்ளனர். யார் சென்றாலும் அ.ம.மு.க. வீறு நடைபோட்டு செல்லும்.
ராஜன் செல்லப்பா அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அப்போதே நாங்கள் வலியுறுத்தினோம். ஒற்றை தலைமையை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் ஆகியோர் முன்பு கூறிய கருத்தை மீண்டும் நான் நினைவு படுத்துகிறேன். அ.தி.மு.க.விற்கு பொதுச் செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் சசிகலா தான் வரவேண்டும் என்று அவர்கள் முன்பு குரல் கொடுத்ததை தற்போது அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்த பிறகு தான் அ.தி. மு.க.வில் பிளவு ஏற்பட்டது. அதன்பின்னர் கூவத்தூருக்கு சென்று 122 எம்.எல். ஏ.க்கள் துணையோடு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சந்தர்ப்பத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். தற்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

ராஜன்செல்லப்பாவை விட்டு ஓ.பன்னீர்செல்வம் பேச சொல்கிறார். டெல்லிக்கு செல்லும்போது ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக செல்கிறார்கள்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றபோது ஓ.பன்னீர்செல்வம் மகன் மட்டும் எப்படி வெற்றி பெற்றார்? ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.விற்கு உள்ள 3 சீட்டுகளில் ஒரு பதவி அன்புமணி ராமதாசுக்கு வழங்கி விட்டால் மீதம் உள்ள 2 பதவிகளை பா.ஜனதா கேட்கலாம். அ.தி.மு.க.வை வழிநடத்த டி.டி.வி. தினகரனால் மட்டுமே முடியும்.
நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். தோல்வியை கண்டு துவளாமல் சுறு சுறுப்புடன் கட்சி பணி ஆற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்தால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அ.தி. மு.க. வீறுகொண்டு எழுந்து மகத்தான வெற்றியை பெறுவோம். அ.தி.மு.க.வை வீழ்த்த பலர் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் நாம் வாக்கு சேகரிக்க சென்ற இடத்திலும் மக்களிடம் எதிர்ப்பு இல்லை.
குடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அடிப்படை வசதிகளை தமிழகமெங்கும் நன்கு மேம்படுத்தி கொடுத்துள்ளனர். நேரடியாக மக்களிடம் தொடர்பு கொண்டவர்களாக உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். அதனால் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். காலம் தாழ்த்தாதீர்கள். உங்களுக்குள் யார் பதவிக்கு தகுதியான நபர் என்பதை தேர்வு செய்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.
திருப்பரங்குன்றத்தில் சிறு,சிறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை தவற விட்டு விட்டோம். இனிமேல் மீண்டும் அதுபோன்ற ஒரு தவறை நாம் செய்து விடக்கூடாது. அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சியின் கட்டுப்பாடுகளை நாம் காப்பாற்ற வேண்டும். தோல்வியால் தொண்டர்கள் சோர்ந்த விடக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை:
த.மா.கா. மாநில செயலாளர் சிலுவை இல்ல திருமண விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தீட்டிய திட்டங்களை முதல்- அமைச்ச
எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த அரசுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் செயலாற்றுவோம்.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.- அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் வகையில் வியூகம் வகுத்து செயல்படுவோம்.
வருகிற 16-ந்தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றிபெற்றுள்ளனர். இவைகள் அனைத்துமே மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். நீட்தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் தள்ளுபடி, மாதந்தோறும் ரூ.6000 போன்ற வாக்குறுதிகளை யாராலும் நிறைவேற்ற முடியாது.
நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்ததால் இதனை சொல்லவில்லை. ஆனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி கூறி பொய்யான வெற்றியை பெற்றுள்ளனர்.
எங்களுக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு படிப்பினையாகும். இதன்மூலம் வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் புதிய உத்வேகத்துடன் பணியாற்றி மக்கள் மனதில் இடம்பெறுவோம்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை வேண்டும் என ராஜன்செல்லப்பா கூறிவருகிறார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. அவரது தலைமையின் கீழ் அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்குள் எவ்வித குழப்பமும் இல்லை.

இடையில் சிறுசிறு பிரச்சினைகள் எழும்போது கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சச்சரவைப்போல பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அவரது கருத்தை வெளியில் சொல்லாமல் அதற்குரிய இடமான செயற்குழுவில்தான் கூறியிருக்கவேண்டும்.
அ.தி.மு.கவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி தண்ணீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரச்சனையை எதிர்க் கட்சியினர் பார்த்துக்கொள்வார்கள் என்று பேசியது பொறுப்பற்ற பேச்சு. அ.தி.மு.க.வில் நிலவும் ஒற்றை தலைமை, இரட்டைத் தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய போவதை இது காட்டுகிறது.

கட்சி, இயக்கம், அமைப்பு என்றாலே இதுவரை ஒரு தலைமை மட்டுமே செயல்பட்டு வந்திருக்கிறது. இரட்டை தலைமை என்பது ஒத்து வராது. தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகாவில் மேகதாது அணை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுவோம் என்று கூறவில்லை. தவறான தகவலை தொடர்ந்து தமிழக முதல்வர் பேசி வருகிறார். இந்த பிரச்சினையில் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ராகுல்காந்தி மீது பழியை போடுகிறார்.
தமிழகத்தில் இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி நடைபெறும் என்று விவசாயிகள் நம்பியிருந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் வேதனை அடையச் செய்துள்ளது. ஆணைய உத்தரவுப்படி 9 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை, மத்திய அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை.
அதற்கு பதிலாக அவர்கள் தங்களுடைய கட்சி தலைமை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆட்சியை கலைத்தாலும் புதுச்சேரியில் செயல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஆனால் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன்? மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி, 8 வழிச்சாலை திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான செயல்பாட்டையே அரசு எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் அரசு ஆய்வு செய்து முறையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.








