என் மலர்
செய்திகள்

மம்தா எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பார்க்கிறார்- மத்திய மந்திரி கடும் தாக்கு
மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஒடுக்கியது போன்று ஒடுக்கப்பார்க்கிறார் என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பாட்னா:
கிரிராஜ் சிங் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஆவார். இவர் பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கன்னையா குமாரை விட 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.
மத்திய மந்திரியாக பொறுப்பேற்றப்பின் பீகார் மாநில பாஜக கட்சி தலைமையகத்திற்கு வந்த கிரிராஜ் சிங் கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரிராஜ் சிங் கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜக-வின் வெற்றி மம்தா பானர்ஜிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் போன்று ஜனநாயகத்திற்கு விரோதமாக எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் மம்தா பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது நரேந்திரமோடியை பிரதமர் என கூற மறுத்ததோடு மட்டுமல்லாமல் காலாவதியான பிரதமர் என கூறியுள்ளார்.

மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்குபெறாமல் அந்த அமைப்பை பலன் அற்ற அமைப்பு என குற்றஞ்சாட்டியுள்ளார். இத்தகைய மனப்பான்மையுடன் மேற்கு வங்காள முதல்வராக செயல்படும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெகு விரைவில் முடிவுக்கு வரும்.
இவ்வாறு மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






