என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என்றும் அனைவரும் இணைந்து அதிமுக தேரை இழுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    35-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

    தமிழகத்தின் கோரிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கனிவுடன் கேட்டார். இணக்க முறையில் வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்ததால் தமிழகத்திற்கு ரூ. 5000 கோடி வரை வர வேண்டும், அதனை வழங்க அழுத்தம் தரப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினைக்கு எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும், திமுக எதிரி கட்சியாக உள்ளது. திமுகவின் போராட்டம் வெற்று போராட்டம் ஆகிவிடும்.

    குடிநீர் பிரச்சினையில் அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கேரள அரசு முன் வந்தது நல்லது. தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம், அனைவரும் இணைந்து அதிமுக தேரை இழுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டெல்லியில் இன்றிரவு நடைபெற்ற பாஜக மேலிட ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக மத்திய முன்னாள் மந்திரி ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்றிரவு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பாஜகவின் தேசிய செயல் தலைவராக மத்திய முன்னாள் மந்திரி ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டதாக அறிவித்தார்.
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்திய சாமியார் இன்று ஜீவசமாதி அடையும் முயற்சிக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
    போபால்:

    காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கடந்த பாராளுமன்ற தேர்தலில் முதன்முறையாக மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டார்.

    இந்த தேர்தலில் திக்விஜய் சிங் வெற்றி பெறுவார் என அம்மாநிலத்தில் உள்ள நிராஞ்சனா அகாடா மடத்தை சேர்ந்த ஜீயர் பாபா வைராகியானந்த் கிரி என்பவர் முன்னர் ஆரூடம் கூறியிருந்தார். அவரது வெற்றிக்காக சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்திய அவர், இந்த தேர்தலில் திக் விஜய் சிங் வெற்றி பெறாமல் போனால் நான் ஜீவசமாதியாகி என் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது சாத்வி பிராக்யா சிங்கிடம் திக்விஜய் சிங் சுமார் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    இதையடுத்து, உள்ளூர் மக்களால் ‘மிர்ச்சி பாபா’ என்றும் அழைக்கப்படும் பாபா வைராகியானந்த் கிரி முன்னர் வாக்குறுதி அளித்தவாறு ஜீவசமாதி அடையப் போவதாக தனது சீடர்களிடம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, போபால் மாவட்ட கலெக்டருக்கு தனது வழக்கறிஞர் மூலமாக கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியிருந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.11 மணிக்கு நான் ஜீவசமாதி நிலையை அடைய தீர்மானித்திருக்கிறேன். இதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு இன்று காலை போபால் நகருக்கு திரும்பினார்.

    போபால் கலெக்டர் தருண் குமார் பித்தோட் உத்தரவின்படி அந்த ஓட்டலை முற்றுகையிட்ட போலீசார் அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்து விட்டதாக மிர்ச்சி பாபாவின் வக்கீல் இன்று மாலை தெரிவித்துள்ளார்.
    பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்திற்கு பயன்தராது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், பலகட்ட போராட்டங்களை நடத்துவது என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் சார்பாக வருகின்ற 23-ம் தேதி நடைபெறுகின்ற மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்திற்கு பயன்தராது. இதுவரை நரேந்திர மோடியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் விரும்பாத நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எந்த பிரச்சனைக்கும் தீர்வு முயற்சி செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தமிழகத்தின் வாழ்வுரிமையை அடமானம் வைத்து விட்டு வருகின்றனர்.


    இதனால் தமிழக மக்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    சமூக பதற்றம் மற்றும் சாதிய மோதல்களை தூண்டிவிடும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசி வருகிறார். அவர் இதுபோன்ற பேச்சுக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் ராஜராஜ சோழன் ஆட்சியில் யார் நிலங்களையும் யாரும் பறிக்கவில்லை. மாபெரும் வரலாற்று மன்னனை இழிவுபடுத்தி குறுகிய வட்டத்திற்குள் அடக்குவது ஏற்க முடியாதது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காந்தி இந்து தீவிரவாதி என்று பேசிய திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே” என்று கூறிய கமல் மீது புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக கமல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.


    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார்.

    “கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி” என்று திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் நிறுவனர் நாராயணன் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில், கோட்சே பற்றி பேசிய கமல் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரிய போது, இது தொடர்பாக தலைவர்கள் பேசக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதனை மீறி தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி அசோக்நகர் போலீசார் திருமாவளவன் மீது கலகம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம்153, 505 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்தை உழைப்பால் உயர்ந்தவர் என்று பாடபுத்தகத்தில் வைத்திருப்பது வேண்டு மென்றே செய்தது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

    நெல்லை:

    கூடங்குளத்தில் அணுக் கழிவை புதைக்கக்கூடாது எனவும், அணுக்கழிவால் மிகப்பெரிய ஆபத்து உள்ளது எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.

    இதைத்தொடாந்து பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தமிழ்நாட்டை பாதிக்கின்ற திட்டங்களையே செயல்படுத்தி வருகிறார்கள். இந்த மண்ணை அழிக்கின்ற நச்சு பொருட்களை தான் கொண்டு வருகிறார்கள். விவசாய நிலத்திற்கு அடியில் கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு எரிவாயு கொண்டு செல்கின்ற திட்டம், மீத்தேன் திட்டம், ஆலை கழிவுகளை ஆற்றில் கலக்கின்ற திட்டம், ஸ்டெர்லைட் திட்டம், அணுஉலை பூங்கா என்று ஆபத்தான திட்டங்களை கொண்டு வந்து உள்ளனர்.

    அணுக்கழிவை இங்கே புதைக்க மாட்டோம் என்று கூறினார்கள். தற்போது இங்கே அணுக்கழிவை புதைக்க முடிவு செய்துள்ளனர். இந்த அணுக்கழிவு பாதுகாப்பானது என்று சொல்கின்ற அறிஞர்கள் தங்களுடைய வீட்டின் அருகில் அல்லது அவர்களுடைய சொந்த நிலத்தில் அல்லது அவர்கள் வாழுகின்ற மாநிலத்தில் இந்த கழிவை புதைத்து கொள்ளலாம். ஏன் இங்கு புதைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த அணுகழிவு பாதுகாப்பானது என்றால் டெல்லி பாராளு மன்ற வளாகத்தில் இதை புதைக்கலாம் அல்லவா?. இந்த கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தியாகின்ற மின்சாரத்தை பயன்படுத்துகின்ற கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இதை புதைக்கலாம் அல்லவா? ஏன் இங்கே புதைக்க வேண்டும்? என்று நினைக்கிறீர்கள்.

    எங்கள் தமிழ் கலாசாரத்தை தடுக்கவேண்டும் என்பதற்காக ஜல்லிக்கட்டை நிறுத்திய போது எப்படி போராடி வெற்றி பெற்றோமோ? அதைவிட இதில் எங்கள் தாய் மண்ணை காப்பாற்ற வேண்டும். எங்கள் மக்களை அழிக்கின்ற இந்த அணுக்கழிவு மையத்தை அமைக்க விடமாட்டோம். அணுக்கழிவு மையத்தின் அருகில் இருப்பது அணு குண்டு மீது இருப்பதற்கு சமம் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். எனவே இந்த அணுக்கழிவு மையம் அமைப்பதை என்ன விலை கொடுத்தாவது தடுப்போம். இது எங்கள் போராட்டத்தின் ஆரம்பம் தான். இனி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்தை உழைப்பால் உயர்ந்தவர் என்று பாடபுத்தகத்தில் வைத்திருப்பது வேண்டு மென்றே செய்தது. திரைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாடபுத்தகத்தில் வைப்பது சரியல்ல. கமல்ஹாசன் சிறுவயது முதலே நடித்து அவரைவிட மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். கலைத்துறையில் ரஜினியை விட கமல்ஹாசனே அதிகம் சாதனை படைத்துள்ளார். கலைத்துறையில், விளையாட்டு துறையில் உழைப்பால் உயர்ந்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். உலக அளவில் சாதனை படைத்த தமிழர் சுந்தர்பிச்சை கூட உழைப்பால் உயர்ந்தவர்தான்.


    நடிகர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சரியாக செயல்படவில்லை. சர்க்கார் படபிரச்சினையின் போது நடிகர் பாக்கியராஜ் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரது தலைமையிலான அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    தென்னக ரெயில்வேயில் ஆங்கிலமும், இந்தியும்தான் பேச வேண்டும் என சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது மறைமுகமாக இந்தியை திணிப்பதாக உள்ளது. ஒரே மொழி, ஒரே நாடு என்பது இந்திய இறையாண்மையை சிதைக்கும் செயல்.

    தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்று ப. சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களின் எண்ணத்தை யாரும் கணிக்க முடியாது. மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப வியூகங்கள் அமைத்தும் வேட்பாளர் தேர்வு செய்தும் , தேர்தல் பணியாற்றினால் வெற்றி பெறலாம். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதால், சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி விட முடியாது.

    இன்னும் பல போர்க் களங்களை நாம் காண வேண்டியது உள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும். முதலில் நாம் காணவிருப்பது உள்ளாட்சி தேர்தல். அதன் பிறகு சட்டமன்ற தேர்தல். உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று சபதம் ஏற்று பணியை தொடங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் நாம் ஒற்றுமையாக இருந்து பாடுபட்டால் 200 இடங்களில் நம்முடைய கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப் பேற்பது உறுதி.


    தமிழகத்தைப் பொறுத்த வரை இந்திரா காந்தி காலத்தில் தி.மு.க.விடம் தொடங்கிய கூட்டணி தற்போது வரை வலிமையான கூட்டணியாக இருந்து வருகிறது. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னை:

    சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதனிடையே மோடி தலைமையிலான பாஜக அரசில் மத்திய மந்திரியாகி இருக்கும் ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு சென்றுள்ளார்.

    செய்தியாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போது அவருடன் அமர்ந்திருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது செல்போனை அங்கிருந்த டேபிளில் வைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்புக்குப் பின், மத்திய அமைச்சருக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனை கட்சிக்காரர்கள் சூழந்து கொண்டனர். 

    சால்வையுடன் பொக்கேவையும் கொடுத்துவிட்டு, சில வார்த்தைகள் பேசியுள்ளார். இந்நிகழ்வு முடிந்த பின், டேபிளில் வைத்திருந்த தன் செல்போனை அவர் மீண்டும் எடுக்க நினைத்தபோது, அங்கிருந்த செல்போனைக் காணவில்லை. 

    இதையடுத்து அந்தப் பகுதிகளில் தமிழிசை உள்ளிட்ட கட்சியினர் தேடியும் செல்போனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கூட்டத்தில் யாரேனும் திருடியிருக்கக் கூடும் என்பதால், இதுதொடர்பாகத் தமிழிசை தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருடப்பட்டது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    டாக்டர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக அவர்களை மிரட்டும் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
    மேற்கு வங்காளத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், டாக்டரின் கவனக்குறைவால்தான் நோயாளி இறந்தார் என்று நோயாளியின் உறவினர்கள் மருத்துவம் பார்த்த ஜூனியர் டாக்டரை பலமாக தாக்கினர்.

    இதனால் படுகாயமடைந்த ஜூனியர் டாக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜூனியர் டாக்டர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மற்ற டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் கடந்த மூன்று நாட்களாக பணியை புறக்கணித்துள்ளனர்.

    இதனால் நோயாளிகள் சிகிச்சையின்றி தவித்து வருகின்றனர். எமர்ஜென்சி நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் காத்துக்கிடக்கின்றனர்.

    ஆகவே, ஜூனியர் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சுகாராத்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதை விட்டுவிட்டு டாக்டர்களை மிரட்டும் மம்தா, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    பா.ஜனதா தலைவர் முகுல் ராய் இதுகுறித்து கூறுகையில் ‘‘டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக, அவர்களை மம்தா மிரட்டுகிறார். அவரது நடவடிக்கை ஹிட்லரை போன்று சர்வாதிகாரப் போக்காக உள்ளது. இது அவமானகரமானது. முதல்அமைச்சராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் தனது வேலையில் மம்தா தோற்றுவிட்டார். இதற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

    மேற்கு வங்காள மாநில பாஜக துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் மஜும்தார் கூறுகையில் ‘‘இப்படித்தான் டாக்டர்கள் போராட்டத்தை கையாள்வது?. போராட்டத்திற்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு டாக்டர்கள் மீதும், பாஜக, மற்ற கட்சிகள் மீது குற்றம் சாட்டுகிறார். அவரால் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாவிடில், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.

    சிபிஐ (எம்) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் சுஜன் சக்ரபோர்ட்டி கூறுகையில் ‘‘இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அவர் கவனம் செலுத்துகிறாரா? அல்லது இந்த பிரச்சையை அரசியலாக்க விரும்புகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    அம்மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா ‘‘சட்டம்-ஒழுங்கை சரியாக நிலை நாட்டுவதுதான் மாநில அரசின் வேலை . அதேவேளையில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

    முதல்வரான மம்தா, இந்த பிரச்சனையை சில கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாஜக தனது தேர்தல் செயல்திறன் அடிப்படையில் அதன் உச்சநிலைக்கு இன்னும் வரவில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கட்சி அலுவலகத் தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அமித் ஷா கட்சித் தலைவர்களிடயே பேசும்போது, ‘‘303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையோடு நாம் வெற்றி பெற்றிருந்தாலும் வெற்றிக்கான உச்சத்தை இன்னும் அடையவில்லை. 2014-ம் ஆண்டு பா.ஜ.க தேசிய ஆலோசனை கூட்டத்தில் பேசியபோதும் இதை நான் கூறினேன், தற்போதும் கூறுகிறேன் நம் கட்சி இன்னும் சிறந்த நிலையை அடைய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

    கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நாம் நம்மையே அர்ப்பணிக்க வேண்டும் என கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    2014-ம் ஆண்டு, ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் பாஜக இரண்டு நாள் தேசிய நிர்வாக கூட்டத்தில் உரையாற்றும்போது, 2014 பொதுத் தேர்தலுக்கு பிறகு பாஜக அதன் உச்சநிலையை அடைந்ததாக மக்கள் பலர் கூறினர், ஆனால் அது அவ்வாறு இல்லை. 2017-ம் ஆண்டு உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்த போதும் பாஜக தனது உச்சநிலையை அடைந்துள்ளது என கருத்துக்கள் வந்தது. ஆனால் அப்போதும் அவ்வாறு இல்லை.

    "அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. முதல் மந்திரிகள் ஆட்சி செய்யும்போதுதான், அதன் உச்சத்தை அடையும். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பாஜக-விற்கு தொண்டர்கள் உள்ளனர்" என அமித் ஷா கூறினார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் பாஜக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
    இப்போது சொல்லமாட்டேன், சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

    பொள்ளாச்சி:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,

    வேலூர் தொகுதியில் சிலர் செய்த சதியின் காரணமாக அந்தத் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. எனவே 39 தொகுதிகளில் தேர்தல் நடந்திருக்கின்றது. அந்த 39 தொகுதிகளில், ஒரேயொரு தொகுதியைத் தவிர்த்து, அதிலும் தேனி தொகுதியை அவர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

    எனவே 38 இடங்களில் நம்முடைய அணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

    எனவே நாடாளுமன்றத்தின் தேர்தல் மட்டுமல்ல 22 தொகுதிகளில் நடை பெற்றிருக்கக்கூடிய சட்ட மன்றத்தின் இடைத்தேர்தல். அந்த 22ல் 13 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றோம். ஆளும்கட்சியாக இருக்கக் கூடிய அ.தி.மு.க 9 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றது.

    தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடிய வில்லையே, ஆட்சியை அவர்கள் தக்கவைத்துக் கொண்டார்கள். எனவே இது அ.தி‌.மு.க.விற்கு தானே வெற்றி என்று சொல்லுகின்றார்கள்.

    நான் கேட்கின்றேன், சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில், 22 இடங்களில் நடைபெற்றது. அந்த 22ல் தி.மு.க வெற்றி பெற்றது 13 இடங்கள், ஆளும் கட்சியான இருக்கக்கூடிய அ.தி.மு.க வெற்றி பெற்றது 9 இடங்கள் 13 பெரியதா, 9 பெரியதா. இந்தக் கணக்கு கூட அவர்களுக்குத் தெரியவில்லையா?

    விரைவில் நாம் தான் ஆட்சி பொறுப்பில் அமரப் போகின்றோம் அதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை, ஆட்சிக்கு வர முடிய வில்லையே என்று அதனை கேலி செய்து, தலையங்கங்கள் தீட்டி, ஊடகங்களில் அதனை விவாதப் பொருளாக்கி பேசிக் கொண்டிருக்கக்கூடிய இந்த செய்திகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

    அப்படி விமர்சனம் செய்து கொண்டிருக்கக்கூடிய, அவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லுகின்றேன். கவலைப்படாதீர்கள் உங்கள் கவலையையும் நாங்கள் விரைவில் தீர்த்து வைக்கப் போகின்றோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது. அது தான் இன்றைக்கு இருக்கக் கூடிய உண்மை.

    எவ்வளவோ பிரச்சனைகள் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்றது. அந்தப் பிரச்சனைகளைப் பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று நான் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை விட்டிருக்கின்றேன். இதுநாள் வரையில் எந்த பதிலும் கிடையாது. இதற்கிடையில் அவர்கள் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கின்றார்கள்.

    அங்கு என்ன நடந்தது, அவர்கள் என்ன பேசினார்கள், என்பதை பற்றி நமக்கு கவலை இல்லை, அது நமக்கு தேவையுமில்லை, அவசியமும் கிடையாது. சட்டமன்றத்தை ஏன் கூட்டத் தயங்குகிறார்கள். என்ன காரணமென்றால், 13 இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றதை தொடர்ந்து, தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 101. காங்கிரஸ் கட்சியில் 7 உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 உறுப்பினர். எனவே, 101யையும், இந்த 8யையும் சேர்த்தீர்கள் என்றால் 109 சட்டமன்ற உறுப்பினர்கள்.

    எனவே, சட்டமன்றத்தை கூட்டினால் என்ன ஆகுமோ என்று, கூட்டுவதற்கு பயப்படுகின்றார்கள்.

    தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவி ஏற்று வைத்து முடித்ததும். பத்திரிகை நிருபர்கள் வெளியில் என்னிடத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்திருக்கிறீர்களே என்ன ஆகும் என்று கேட்டார்கள்? பொறுத்திருங்கள் என்று சொன்னேன். கொடுத்திருக்கின்றோம், என்ன நடக்கின்றது, என்ன நடக்கப் போகின்றது, என்று இப்பொழுது கூட உங்களிடத்தில் நான் சொல்ல மாட்டேன்.

    ஆனால், உங்களுக்கு நல்லது நடக்கக்கூடிய, இந்த நாட்டிற்கு நல்லது நடக்கக்கூடிய, நம் இனத்திற்கு நல்லது நடக்கக்கூடிய சம்பவம் நடக்கப் போகின்றது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. நீங்கள் விரும்புகின்ற வகையில் விரைவில் நடக்கப் போகின்றதா, இல்லையா என்று பாருங்கள்.

    எந்த நம்பிக்கையோடு, எந்த எதிர்பார்ப்போடு, தி.மு.க.வின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவினைத் தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றீர்களோ. அதேபோல், சட்டமன்றத்தின் இடைத்தேர்தலில் ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்தக்கூடிய அளவிற்கு அந்த வெற்றி வாய்ப்பினை தேடித்தந் திருக்கின்றீர்கள்.

    அந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்கள் அத்துனை பேருக்கும் மீண்டும் மீண்டும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், ஆ.ராசா எம்.பி., ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி திமுக நகர பொறுப்பாளர் வரதராஜன், எம்.பி.க்கள் சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன், சுப்புராயன், கணேசமூர்த்தி, சின்ராஜ், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்பாலாஜி, ஜெயராமகிருஷ்ணன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    நாகர்கோவில்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தை போன்று எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததால் மற்ற மாநிலங்களில் பாரதீய ஜனதா பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு மத்திய பிரதேசத்தில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களை கூற 30-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை நீட்டிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கை தொடர்பாக விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தையும் உடனே கூட்ட வேண்டும்.

    5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது வேடிக்கையாக உள்ளது.

    சென்னை உள்பட 20 மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் போன்றவை நடைபெற்றும் காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை. 9.19 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பிய பிறகு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும்போது தான் காவிரியில் தண்ணீரை திறப்பார்கள் போல் உள்ளது. இதன் காரணமாக 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாமல் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடனடியாக காவிரியில் தண்ணீர் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.1500-க்கு விற்றது தற்போது ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும். அ.தி.மு.க.வை தற்போது அமித்ஷா தான் இயக்கி வருகிறார். மாநில அரசுக்கு வளர்ச்சித்திட்டங்களில் அக்கறை இல்லை. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக பாரதீய ஜனதாவுடன் உள்ளனர். இதன் மூலம் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதா அ.தி.மு.க.வுக்கு எதிராக பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்.


    13 எம்.எல்.ஏ. தொகுதிகளை அ.தி.மு.க.விடம் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வழங்கி உள்ளனர். மக்கள் இந்த ஆட்சியை ஏற்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

    கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது. மாநில அரசு அதனை தடுத்து நிறுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? என்பது சந்தேகம் தான். மக்களை சந்திக்க அ.தி.மு.க. அஞ்சுகிறது. கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பது எங்கள் கருத்து. 1964-ல் கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றாகத் தான் இருந்தது.

    நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மலையடிவாரங்களில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×