search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி-எடப்பாடி சந்திப்பு தமிழகத்துக்கு பயன்தராது- வேல்முருகன் பேட்டி
    X

    மோடி-எடப்பாடி சந்திப்பு தமிழகத்துக்கு பயன்தராது- வேல்முருகன் பேட்டி

    பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்திற்கு பயன்தராது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், பலகட்ட போராட்டங்களை நடத்துவது என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் சார்பாக வருகின்ற 23-ம் தேதி நடைபெறுகின்ற மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்திற்கு பயன்தராது. இதுவரை நரேந்திர மோடியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் விரும்பாத நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எந்த பிரச்சனைக்கும் தீர்வு முயற்சி செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தமிழகத்தின் வாழ்வுரிமையை அடமானம் வைத்து விட்டு வருகின்றனர்.


    இதனால் தமிழக மக்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    சமூக பதற்றம் மற்றும் சாதிய மோதல்களை தூண்டிவிடும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசி வருகிறார். அவர் இதுபோன்ற பேச்சுக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் ராஜராஜ சோழன் ஆட்சியில் யார் நிலங்களையும் யாரும் பறிக்கவில்லை. மாபெரும் வரலாற்று மன்னனை இழிவுபடுத்தி குறுகிய வட்டத்திற்குள் அடக்குவது ஏற்க முடியாதது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×