என் மலர்
தேர்தல் செய்திகள்
திருச்சி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுகுறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு எம்.பி.யை தவிர தமிழ்நாட்டில் இருந்து சென்ற மற்ற எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பேசினோம். இக்கட்டான இந்த சூழலை சமாளிக்க தமிழ் நாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என நான் கூட மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், டெல்லி சென்று குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.1000 கோடி நிதி கேட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சமே இல்லை என அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் பாராளுமன்றத்தில் கூறியதுதவறு. அவர் அளித்த தகவல்களும் தவறானவை. முதல் முறையாக பாராளுமன்றம் வந்துள்ளார். அடுத்தடுத்து பேசும்போது, இதுபோன்ற தவறுகளை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்.
நீதிபதிகள் நியமனம், அரசியலுக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதில் மத்திய மாநில அரசுகள் தலையிடக்கூடாது. ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. அ.ம.மு.க. என்ற கட்சி கடந்த தேர்தலுடன் முடிந்து விட்டது. அதில் இருந்து தங்க தமிழ் செல்வன் விலகி தி.மு.க.வில் சேர்ந்துள்ளார். அவர் வாழ்க, வளர்க.
இந்தியாவில் நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அவ்வாறு இணைத்தால் மகிழ்ச்சி. திருச்சி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசியுள்ளேன். நான் ஏற்கனவே எம்.பி. யாக இருந்தபோது புதுக்கோட்டை நகராட்சிக்கு குடிநீர் லாரி வாங்கி கொடுத்தேன். தற்போது அது பயன் பட்டு வருகிறது. அதுபோல, இப்போதும் திருச்சி மாநகராட்சி, புதுகை நகராட்சிக்கு குடிநீர் லாரிகளை வாங்கி கொடுக்கலாம் என திட்ட மிட்டுள்ளேன்.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து. கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் பங்கீடு குறித்து கட்சிகளின் தலைமைகள் தான் பேசி முடிவு செய்யும்.
உள்ளாட்சி, சட்டப் பேரவை தேர்தல்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருப்பதால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? என்பது சந்தேகமே. பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கும் கூறவில்லை. என்னுடைய வெற்றிக்கு தி.மு.க- காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு பங்கு உண்டு.

நாங்குநேரி தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், இடைத்தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம். வேலூர் பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வர வாய்ப்புள்ளது. இவற்றில் ஒரு வேளை தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல்லில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் என்ன செய்ய போகிறார்கள்? பாருங்கள் என்பதை கையால் ‘சொடக்கு’ போட்டு மிரட்டல் விட்டதை பார்த்தோம். பாராளுமன்றம் நடக்கும்போது பல இருக்கைகள் காலியாக விட்டு விட்டு தி.மு.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவராக சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது போன்று படம் பிடித்து இங்கே அதை குடும்பத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி ஏதோ பெரிய சாதனைகளை நிகழ்த்தி விட்டதாக காட்டிக்கொள்கிறார்கள்.

பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மை நிலையை விளக்கவேண்டியது எங்கள் கடமை...
பெரும்பான்மையான பாரத தேச மக்கள் வாக்களித்து மீண்டும் மோடி அரசு அரியணை ஏற்றிருக்கும் சூழலில் துர்திர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாத சூழ்நிலையில் நமது மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் யாருமில்லையே என்பதே உண்மை நிலை.
சென்ற முறை தமிழ் நாட்டின் பிரதிநிதியாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமாரி தொகுதிக்கு மட்டும் 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மக்கள் நல திட்டங்களையும் தமிழகம் முழுவதும் பல லட்சம் கோடி மதிப்பில் சாலை பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் பல நடைபெற்றும் பல ஆண்டுகளாக பேசப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, சென்னையில் மருத்துவ பூங்கா மையம் இவையெல்லாம் வழங்கியபோதும், இந்த முறை ஒரு பா.ஜனதா உறுப்பினரை கூட தேர்ந் தெடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு. அதனால்தான் தமிழகம் இழந்ததை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் ஜன நாயக கடமை. அதே வேளையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி போல் மோடி அரசுக்கு தானே வாக்களித்தீர்கள் அவரை கேளுங்கள் என்று அநாகரிகமாக பேசாமல் தமிழகம் மத்திய அரசு ஜனநாயக ரீதியாக பங்கு பெறாததால் ஆளும் அரசில் தமிழக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பங்குபெற முடியாமல் இருப்பதுதான் உண்மை நிலை.
எல்லோருக்கும் எல்லாம் வழங்குவதை ஜனநாயகம் என்று பேசுபவர்கள் கடந்த காலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது குடும்பத்தினருக்கு மட்டுமே குறிப்பிட்ட துறைகளை போராடி, வாதாடி ஆதாயம் பெற்று திகார் வரை சென்ற வரலாறு மக்களுக்கு தெரியும்.
மோடி அரசு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் ஜனநாயக கடமை ஆற்றும் என்பதை யாரும் சொல்லி தர தேவையில்லை, அதனால்தான் பெரும்பான்மை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மதுரை:
அ.ம.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் அக்கட்சியில் டி.டி.வி.தினகரனுக்கு அடுத்த இடத்தில் செயல்பட்டவர். கடந்த சில நாட்களாக இவரது நடவடிக்கை டி.டி.வி.தினகரனுக்கு பிடிக்கவில்லை.
இதற்கிடையில் தங்க தமிழ்செல்வன் பேசியதாக வெளியான ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த தினகரன் விரைவில் தங்கதமிழ்செல்வனை கட்சியை விட்டு நீக்குவேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையம் வந்த தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை அழித்து அ.ம.மு.க. வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது. என்னை பற்றி ஆடியோ, வீடியோ அனுப்புவது டி.டி.வி. தினகரனின் தலைமை பண்புக்கு அழகல்ல. அவர் தலைமை என்ற பண்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறார்.

நான் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை. யாரும் என்னை அணுகவும் இல்லை. கொள்கை இல்லாத அ.ம.மு.க.வுக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து என்ன பயன்?. அ.ம.மு.க.வில் இருந்து பாதிக்கும் மேற்பட்டோர் வெளிவந்து விட்டனர். தொடர்ந்து முழுமையாக வெளிவருவார்கள். இந்த கூடாரம் கலையுமா? என்பது தொண்டர்களின் கையில்தான் உள்ளது.
அனைத்திலும் தோல்வி பெற்றபின் அவற்றை மறுப்பது ஏன்?. ஊடகங்களையே தவறாக கூறும் தலைவர்தான் இப்போது இருக்கும் டி.டி.வி.தினகரன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி:
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திருச்சியில் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று தெரிவித்தார். அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கே.என்.நேருவின் பேச்சுக்கு பதில் அளித்த, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கூட்டணி சூழ் நிலைக்கு ஏற்ப அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்றார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறுகையில், கே.என். நேருவின் கருத்து தி.மு.க.வின் கருத்தாகி விடாது. அவர் எனக்கு நல்ல நண்பர். ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை என்றார். இதனால் கே.என்.நேருவின் பேச்சு தி.மு.க-காங்கிரஸ் இடையே திடீர் மோதலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருத்துக்கு கே.என்.நேரு விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரசுக்கு அதிக இடம் பெறவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தென் சென்னை மாவட்டத்தில் அதிக இடங்கள் பெற வேண்டும் என அந்த மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் நாளிதழ்களில் வந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியினருக்கே அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் உள்ள நிலையில், தி.மு.க. வினருக்கும் அந்த எண்ணம் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே அப்படி பேசினேன். நான் கூறிய கருத்து தி.மு.க.வின் கருத்து அல்ல. எனது தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்டே பேசினேன். சாதாரண தொண்டன் என்ற அடிப்படையில் இதனை தெரிவித்தேன்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, அனைத்து கட்சிகளுடனும் அனுசரித்து போக வேண்டும் என்ற கருத்தை கட்சி தலைமையிடம் தெரிவித்தவன் நான்.
கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்த போதே காங்கிரசார் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்தும், தி.மு.க. குறித்தும் பல்வேறு விமர்சனங்களை செய்துள்ளனர். இருப்பினும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு தான் நாங்கள் இப்போது வரை கூட்டணியில் உள்ளோம். கூட்டணி என்பது தலைமை எடுக்கும் முடிவு.
காங்கிரசார் பேசி வரும் கருத்துகளால் எந்தவித பிளவும் வந்து விடக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தலைமைக்கு தெரியப்படுத்துவோம்.
திருச்சி மாநகராட்சியில் கடந்த முறை 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவியை கொடுத்து விட்டு, நாங்கள் கைகட்டி கொண்டு நின்றோம். இம்முறை திருச்சிக்கு மேயர் பதவியை கொடுப்பது குறித்து தி.மு.க. தலைவர் முடிவெடுப்பார். தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று நான் பேச வில்லை. தலைவரின் முடிவுக்கு கட்டுப்படும் மாவட்ட செயலாளராக என்றுமே நான் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி:
திருச்சி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
தேர்தலில் தோல்வி அடைந்த போது எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் தெரிந்த பின் வருத்தப்படவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை மாற்ற வேண்டும். ஓட்டுச் சீட்டு முறை வேண்டும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என்பது ஒரே கட்சி ஆட்சி அமைப்பதற்காக தான். மாநில கட்சிகளை இல்லாமல் செய்வதற்காக ஒரே தேர்தல், ஒரே தேசம் என்று கூறுகின்றனர்.

மோடி இருக்கிற வரை நாம் ஆட்சிக்கு வர முடியாது என ஒரு சிலர் கூறி வேறு கட்சிக்கு தாவுகின்றனர். ஒரு சிலர் குழம்பி போய் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்கிறார்கள். அது போன்றவர்களிடம் ஒரு முடிவு எடுத்து இந்த கட்சி தேறும் என நினைத்தால் இருங்கள். இல்லையென்றால் வேலையை பார்த்து விட்டு செல்லுங்கள் என தெரிவித்து விட்டேன்.
நான் வசிக்கிற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நமக்கு 14 ஓட்டுகள் தான் விழுந்துள்ளது. எனக்கு தெரிந்த நபர்களே 100 பேர் வரை வாக்களித்திருப்பார்கள். நம்முடைய வாக்குகள் எங்கே போனது என்று தான் கேள்வி.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு தானே சென்றிருக்க வேண்டும் என நீங்கள் கேட்பீர்கள். அதை கேட்காமல் இருப்பதற்காகத்தான் தி.மு.க.வுக்கு மாற்றிவிட்டனர். தி.மு.க. வாக்கு வித்தியாசத்தை பார்த்தாலே தெரியும். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். அதேபோல் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் வரும். அதிலும் போட்டியிடுவோம்.
தண்ணீர் பிரச்சினையால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். 1,100 வாக்குச்சாவடிகளில் நமக்கு பூஜ்யம் விழுந்தது எப்படி? என்பதை முறையிட உள்ளோம். அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். சிலர் கட்சியை விட்டு சென்றார்கள் என்ற செய்தி வரும். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். வரும் தேர்தல்களில் அ.ம.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் நான்கிலும் தோற்றது.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு தே.மு.தி.க, நாளை ஆலோசனை நடத்துகிறது.
அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்துக்கு வரும் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் பட்டியலை தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும், காங்கிரசுக்கு எத்தனை காலம்தான் பல்லக்கு தூக்குவது என தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு பேசிய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே.என்.நேருவின் பேச்சு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் தற்போது சாலை பயணத்தில் இருக்கிறேன். கே.என்.நேரு என்ன பேசினார் என்ற முழு விவரம் எனக்கு தெரியாது. விவரம் தெரியாமல் அதைப் பற்றி பேசக் கூடாது.

ஒருவேளை தி.மு.க. தனித்து போட்டி என்ற நிலைப்பாடு எடுத்தால், அதைப் பொறுத்து நாங்கள் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






